news-details
சிறப்புக்கட்டுரை
சமூக-அரசியல் பார்வை தரும் நம் வாழ்வு

ஊடகம் என்பது சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் அதன் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அங்கம்; மனிதகுலத்தின் செயற்பாட்டின் கருவி; ஒரு சமூக நிறுவனமான ஊடகம். அச்சமூகத்தின் அறிவையும் அதன் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையும் வளர்த்தெடுக்கக்கூடியது - ‘உலகை ஆளும் ஊடகம்நூலில் அருள்முனைவர் இராஜசேகரன்.

நம் வாழ்வின் பொன்விழா மலருக்குக் கட்டுரை ஒன்று எழுதக் கேட்டபோது, நம் வாழ்வின் முதன்மை ஆசிரியரின் ஊடகம் பற்றிய நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்தபோது அச்சு ஊடகமான நம் வாழ்விற்கும் அவரின் கருத்து பொருத்தமாயிருக்கும் என்பதனால் இக்கட்டுரையில் எடுத்தாள நேர்ந்தது.

சமூகச் செயல்பாடுகளை, அச்சமூகத்தின் கலாச்சாரத்தை, சமூகத்தின் அரசியல்-பொருளாதார வாழ்வை, எண்ணங்களை உலகுக்குத் தந்து உலகைச் செம்மைப்படுத்தும் பணியைச் செய்வது ஊடகங்கள். இன்றைய வணிகக் கலாச்சாரத்தால் குடிமக்கள் வெறும் நுகர்வோராய் மாறிவிட்ட நிலையில், உலகமயம், தாராளமயம் என்னும் பொருளாதார முழக்கங்கள் மக்களைக் கீழ்ப்படுத்தி அடிமையாக்கி, சிந்திக்கும் திறனை மழுங்கடித்து வரும் சூழலில், ஊடகங்கள் தமக்குரிய பணியைச் செய்திட முடியுமா? என்ற கேள்வியும் எழத்தானே செய்யும்!

எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்று பாரதி பாடிய பாட்டின் இன்றைய பொருத்தம் என்ன? பாரதி கண்ட சக்தி யாரை அடிமைப்படுத்த? யாரைக் கவ்விக் குதறலாம்? என்று வலம் வரும் சூழலில், ‘நம் வாழ்வுஎன்னும் எளிய ஊடகம் தமிழ்ச் சமூகத்தில் இன்னும் இளமை மாறா எழிலோடு உலா வருதல் உண்மையிலேயே சிறப்புக்குரியதே.

நம் வாழ்வுஎன்ற இதழ் தோற்றுவிக்கப்பட்டமைக்கு நம் திரு அவையின் தொலைநோக்குப் பார்வை காரணமாய் இருந்திருக்கலாம்; மறைமாவட்டந்தோறும் நடத்தப்பட்ட பல்வேறு இதழ்கள் இருந்த காலத்து, ஒரு பொது இதழ் வேண்டும் என்ற எண்ணம் திரு அவையாருக்கு எழுந்தபோதுநம் வாழ்வுஉதயமானது. ‘நம் வாழ்வுஎன்ற இவ்விதழ் கத்தோலிக்கர் வாழ்வுக்காக மட்டுமானதாக இருந்திருக்க முடியாது. ‘நம்என்று உள்ளடங்கிய பதம் இச்சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாகத்தான் இருந்திருக்கும் என்பது உண்மையாக இருக்கும் என நம்பலாம்.

ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வ இதழ், கிறித்தவ வாழ்வு பற்றி மட்டும் பேசி முடித்துவிடலாமா? கிறித்தவ மறையை உள்ளீடாக மட்டும் வைத்து நடத்திவிடலாமா? மறை சார்ந்த செய்திகளைத் தாண்டி, மக்கள் அறிவுறுத்தும் கடமை இல்லையா? ஆயர் பேரவையால் நடத்தப்பெறும் காட்சி ஊடகம் இன்று பக்திமார்க்கமான வழியை மட்டுமே காட்டி நடத்தி வருகையில், ‘நம் வாழ்வுஎன்ற அச்சு ஊடகமும் அப்படியே இயங்கலாமா?

கத்தோலிக்கத் திருமறை அல்லது கிறித்தவத்துள் இயங்கும் பல்வேறு பிரிவுகள் அனைத்தும் தனித்த அடையாளங்களுடன் செயல்பட்டாலும், இவை அனைத்தும் தனித்தீவுகள் அல்ல; இவை அனைத்துமே இச்சமூகத்தில்தான் இயங்குகின்றன. சமூகத்துள் இயங்கும் திரு அவை சமூகத்திற்காக இயங்கும்போதுதான் கிறித்தவம் உலகிலே தோன்றியதற்கான ஏற்புடைமை புலனாகும். மதங்கள் பேசும் ஆன்மிகம் வெறும் அரூபமானது அல்ல; மாறாக, மக்களிடம் முன்வைக்கப்பெறும் ஆன்மிகம் பன்முகப் பரிமாணங்களை உடையது. ஆன்மிகத்தின் வளர்ச்சி என்பது ஒரு நபர், தான் சார்ந்த சமூகம் பற்றிய அனைத்து வகை பண்புகளை, அச்சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளை, அச்சமூக வரலாற்றுத் தடங்களை, அச்சமூகத்தில் வாழ்ந்து மறைந்த பெரியோரை, சமூக வளர்ச்சிக்கு எதிராக நிற்கும் சக்திகளைப் பற்றிய புரிதல் இருத்தல் வேண்டும். ‘வையத்து வாழ்வாங்கு வாழ்வோர்என்போர் இப்புரிதல்களைப் புரிந்து கொண்டோர் என்பதுதான்.

நம் வாழ்வுநமக்குத் தந்தது என்ன?

நம் வாழ்வுமிகப்பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கப் பெற்றாலும், தொடக்கக் காலத்தில் மிகப்பெரிய அளவில் சமூக-அரசியல் பிரச்சினை பற்றிய கட்டுரைகள் வெளிவரவில்லை. சென்னையைச் சேர்ந்த திரு. இராணி சேவியர் அவர்கள், மிகுந்த அரசியல் பற்றியத் தெளிவு பெற்றவர்கள் எல்லாம் ஆரம்பக் காலங்களில் மிகப்பெரிய பங்களிப்புச் செய்தார்கள். மறைந்த பேராயர் ஆரோக்கியசாமி அவர்கள் காலத்தில்நம் வாழ்வுகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலுக்கு இடம்பெயர்ந்தபோது நம் வாழ்வின் உள்ளடக்கத்தில் சிறு தொய்வு ஏற்பட்டது. எண்பதுகளுக்குப் பின்புநம் வாழ்வுஅரசியல் பற்றிய பாய்ச்சலை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

எண்பதுகளின் துவக்கத்தில் குமரி மாவட்டத்தின் மண்டைக்காட்டில் வெடித்த மதக்கலவரம்! இக்கலவரத்தில் பத்து மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை... தொடர்ந்து குமரி மதவாதிகளின் தொடர் கருத்தியல் பரப்பலால் வகுப்புவாதிகளின் தேர்தல் சோதனைக்கூடமாய் மாறிப்போனமை... கிறித்தவர்களை அரசியல் பக்கம் இழுத்துச் சென்றது. குமரி மண்ணில் தூவப்பட்ட வகுப்புவாதத்தின் பின்பு சமூக, அரசியல், பண்பாடு என்ன என்பது பற்றிய கேள்விகள் எழுந்தபோது, இவை பற்றிய கேள்விகளுக்குநம் வாழ்வுவிளக்கம் அளித்தது.

இதே காலகட்டத்தில் நம் வாழ்வின் ஆசிரியராக இருந்த அருள்பணி. வின்சென்ட் சின்னதுரை அரசியல், சமூகம், கலாச்சாரக் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளித்தார். திரு அவை பற்றிய விமர்சனங்கள் கூட நிறைய வெளிவர வாய்ப்பு இருந்தது. தொடர்ந்து பணியேற்ற அருள்பணி. ஆனந்தம் (இன்றைய மேதகு சிவகங்கை ஆயர்) அவர்கள், கொடைக்கானலில் பங்குப் பணியாளராகப் பணியாற்றிய காலத்தில்கூட மதவாத அரசியலுக்கு எதிராகவும் சிறுபான்மையினர் நலம் பேணவும் சில முன்னெடுப்புகளை எடுத்தார் என்பது வரலாறு.

இதே காலகட்டத்தில்தான் இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. ஈழத் தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் எழுந்த ஆதரவு நிலை தொடர்பாகநம் வாழ்வுதன் பங்கை அளித்தது. தமிழ்நாடு எல்லை தாண்டி, பல சர்வதேசப் பிரச்சினைகளும் எழுப்பப்பட்ட நிலையில் அவையெல்லாம் நம் வாழ்வில் பிரதிபலித்தன.

தேர்தல் காலங்களில் மதச்சிறுபான்மையினரை, மதவாத சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைக்க வேண்டியது கட்டாயம் என்பன பற்றிய செய்திகளெல்லாம் நம் வாழ்வில் இடம்பெற்றபோது, ‘நம் வாழ்வுநம் மதச் சிறுபான்மையினரின் அரசியல் நிலைப்பாட்டுக்கான வழிகாட்டும் இதழாயிற்று.

இக்காலகட்டத்தில் நம் வாழ்வின் முதன்மையாசிரியர்களாகப் பணியாற்றிய தஞ்சை டோமி, மற்றும் குடந்தை ஞானி இருவருக்கும் மதவாத அரசியல் பற்றிய தெளிவு அதிகமாக இருந்தது.

இந்திய மதவாத அரசியல் மதச் சிறுபான்மையினரை முன்வைத்து நடத்தப்பட்டது என்பதால்வகுப்புவாத கருத்தியல், அது ஏற்படுத்தப்போகும் விளைவு, மதவாதத்தின் இலக்காகிய மத அடிப்படைவாதம் என்பன பற்றியெல்லாம் நான் எழுதிய கட்டுரைகள் ஏராளம் வெளிவந்தன. மதவாதம், குறிப்பாக பெரும்பான்மை மதவாதம் இந்தியச் சமூகத்திற்குள் ஊடுருவி என்ன செய்யும் என்பது பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் வெளிவந்தன.

2014-இல் எழுந்த மோடியின் ஆட்சிநம் வாழ்வுகட்டுரைகளால் மிகவும் விமர்சிக்கப்பட்டன. வகுப்புவாதம், அதன் விளைவு வகுப்புவாத அரசியல் பாசிசமாக வளர்த்தெடுக்கப்பட்ட முறைநம் வாழ்வுபோல் எந்த ஊடகமும் ஏன் இடதுசாரிகளின் ஊடகங்கள், சமயச் சார்பற்ற இயக்கங்கள் என்பன எவையும் மிகத் தைரியமாக மக்கள் அறிவுறுத்தும் வண்ணம் எழுதவில்லை. சிறுபான்மையினரின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. இப்பிரிவினரின் அரசியல் பங்கேற்பை மறுத்தது. அவர்தம் வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்பட்டன; வழிபாட்டுரிமை கேலி செய்யப்பட்டது; நாளும் அச்சுறுத்தப்பட்ட மக்களிடம், சமய உரிமை என்பது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றெனவும், இவை சிறுபான்மை மதம் சார்ந்த, மக்களின் மாண்பு சார்ந்த செய்திகள் எல்லாம்நம் வாழ்வுகட்டுரைகள் மூலம் மக்களுக்குத் தரப்பட்டன.

இந்துத்துவம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் பெரும்பான்மைவாதம், கலாச்சாரத் தேசியம் என்பனவெல்லாம், இந்திய அரசு உறுதி செய்த சனநாயக விழுமியங்களுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டங்களுக்கும் எதிரானது என்ற உண்மையைநம் வாழ்வுகட்டுரைகள் உரக்கவே எடுத்துரைத்தன.

இந்தியக் கிறித்தவர்கள் அரசியல்படுத்தப் பெறாதவர்கள் என்ற குறை உண்டு. இஸ்லாமியர்கள் போன்று நாம் தாக்கப்படுகின்ற போதெல்லாம் வெகுண்டெழும் குணம் கிறித்தவர்களுக்கு இல்லை. ஆயினும், அநீதிக்கு எதிராக, உண்மையின் சார்பாக நாம் எப்போதும் குரல் கொடுக்க வேண்டும் எனநம் வாழ்வுவலியுறுத்தத் தவறியதில்லை.

இவ்வாறாக, நம் மக்களைச் சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார வழியில் முறைப்படுத்தநம் வாழ்வுசிறிய முயற்சியை மேற்கொண்டது என்பதனை எவரும் மறுக்க இயலாது.