காத்திட கடவுளுண்டு, கலங்கிட வேண்டாம்!
இரண்டு
இளம் உள்ளங்கள் மகிழ்வோடும் துணிவோடும் ஒரு குடும்பத்தை அமைக்க முடிவெடுப்பது என்பது எத்துணை அழகான சாட்சியம்! குருத்துவம், துறவறம் போன்று உண்மையும் உறுதிப்பாடும் கொண்ட ஓர் இறை அழைத்தலே திருமணம். திருமணம் என்பது மனித உறவுகளிலேயே மிக நெருக்கமான, அழகான இலக்கணம்! அந்த இலக்கணத்தில் தம் இறை முத்திரையைப் பதிக்க மூவொரு கடவுளின் இறைமகன் அந்தத் திருமணத்தில் கலந்துகொள்கிறார். கலிலேயாவின் கானாவில் நிகழ்ந்த ஒரு திருமணத்தில் ஏற்பட்ட குறையையும், அந்தக் குறை தீர்க்கப்பட்ட அழகையும் நாம் இன்று சிந்திக்கிறோம்.
யூத
மக்களிடையே பொதுவாக, திருமண நிகழ்வு ஏழு நாள்கள் நடைபெறும். இந்த ஏழு நாள்கள் வெறுமனே உண்டு குடிப்பதற்காக அல்ல; மாறாக, உறவுகளைப் பகிர்ந்திட, உதவிகள் புரிந்திட, உறுதுணையாக இருக்கிறோம் என்பதை உணர்த்திட ஒன்றாய் கூடினர். இந்த மனநிலையில்தான் இயேசுவின் சீடர்கள், இயேசு, அவருடைய தாய் முன்னரே அழைப்புப் பெற்றுச் செல்கின்றனர். பொதுவாக, திருமணங்களில் உணவு வேளையில்தான் சில பற்றாக்குறைகள் நிகழ்வதுண்டு. அவ்வாறு குறைகள் ஏற்படும்போது அவற்றைப் பகிரங்கப்படுத்தி, பெரிதாக்கி வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பவர்களும் உண்டு. கானாவில் நடந்த திருமணத்திலும் உணவு வேளையில் இரசம் தீரப்போவதையும், அதனால் திருமண வீட்டார் எதிர்கொள்ளப் போகும் அவமானத்தையும் உணர்ந்த மரியா, இயேசுவிடம் விரைந்து சென்று, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்கிறார்
(யோவா 2:3). இந்த ஒற்றை வரி வார்த்தையால் உளம்நிறை மகிழ்ச்சியை அக்குடும்பத்திற்கு அள்ளிக் கொடுக்கிறார் அன்னை மரியா. “நம் நலத்திற்குக் காவலராக இருக்கும் அன்னை மரியா தன் குழந்தைகளின் தேவை குறித்து அக்கறையுள்ளவர்களாகச் செயல்படுவதன்மூலம் அத்தேவை அனைத்தையும் நிறைவு செய்பவராகவும் இருக்கிறார்” என்னும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்று உண்மை என்பது இங்கே எண்பிக்கப்படுகிறது. மரியா இயேசுவிடம் பரிந்துரைத்ததை ஓர் அழகான இறைவேண்டல் என்கின்றனர் இறையியல் வல்லுநர்கள். செபம் என்றதும், ‘இது வேண்டும், அது வேண்டும்’
என்ற நீண்ட பட்டியல் ஒன்று நம் உள்ளத்தில் விரியும். கடவுளிடம் நீண்ட பட்டியல்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதில், உள்ளத்தைத் திறந்து, உண்மைகளைச் சொல்வது அழகான, உயர்வான செபம். இந்தச் செபத்தைச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. இப்படி ஒரு செபத்தைச் சொல்வதற்கு ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையை அன்னை மரியா வெளிப்படுத்திய ஒற்றை வார்த்தையில் காண முடிகிறது.
அன்னை
மரியா திருவிவிலியத்தில் அதிக வார்த்தைகள் ஒன்றும் பேசவில்லை. ஆனால், அவர் பேசிய ஒருசில வார்த்தைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. யோவான் நற்செய்தியாளர் மரியாவைப் பற்றி இரண்டு குறிப்புகளைத் தருகிறார். ஒன்று, கானா திருமணம்
(2:1-12). இரண்டு, சிலுவையடியில் (19:25-27). இயேசு தம் பணி வாழ்வை ஆரம்பிக்கும் வகையில் முதல் அருளடையாளத்தை இயேசு செய்வதற்கு அன்னை மரியாவே தூண்டுதலாக இருந்தார். அதுபோன்று தம் பணி வாழ்வில் இறுதியில் அதாவது கல்வாரி மலைமீது சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருந்தபோது சிலுவை அருகில் இயேசுவின் தாய் நின்று கொண்டிருந்தார். துன்ப வேளையில் ஆறுதல் தரும் அன்னையாக, அன்னை மரியா இருக்கிறார் என்பதை இவ்விரு நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துகின்றன.
கானா
திருமண நிகழ்வில் இரண்டு சொற்றொடர்களை மட்டுமே அன்னை மரியா உச்சரித்தார். ஒன்று, ‘திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது’; மற்றொன்று,
‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்.’ அன்னை மரியா கூறிய இரண்டாவது கூற்று, கானா திருமண விழா பற்றிய நிகழ்ச்சியின் மையச் சிந்தனையாக அமைகின்றது. ‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’ என்னும்
கூற்றில் ஆண்டவர் நம்மிடம் சொல்வனவற்றையெல்லாம் செய்வதே சரியான வழி. நமக்கு விருப்பமானதைத் தெரிவு செய்து செயலாற்றிவிட்டு, பிடிக்காததை விட்டுவிடுவது என்பது மரியா நமக்குத் தரும் அழைப்பு அல்ல. வாழ்வில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதைப்போன்ற தருணங்களில் மரியா கூறிய இந்த நான்கு சொற்களும் நம் வாழ்வில் அடித்தளமாக மாறினால், நாமும் வல்ல செயல்களைக் காணமுடியும்.
தம்
தாயின் உதவி செய்யும் உணர்வையும், வருந்துவோரின் துன்பத்தைத் தன் துன்பமாக உணரும் பரிவுள்ளத்தையும் கண்ட இயேசுவால் தாயின் விண்ணப்பத்தை மறுக்க முடியுமோ? இதுதான் அன்னை மரியாவின் அழகு! இதுவே அவரது இலக்கணம்! குறைகள் உருவானதும் வந்து நிற்பவர் அன்னை மரியா. அவரது பரிந்துரையால் புதுமைகள் நிகழும்.
இத்திருமண
நிகழ்வில் நம் சிறப்புக் கவனத்துக்குரியவர்கள் பணியாளர்கள். “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று
இயேசு சொன்னதும் ‘இயேசு என்ற இந்த இளைஞர் என்ன செய்துவிடுவார்?’ என்றும் எண்ணியிருக்கலாம். காரணம் அவர் இதுவரை வெளிப்படையாக எவ்வித வல்ல செயலையும் செய்திருக்கவில்லை. ஆனால், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டதும் பணியாளர்கள், ‘தாயின் தாலாட்டுக் குரலில் கட்டுண்டு நம்பிக்கையோடு கண்ணுறங்கும் குழந்தையைப்போல்’ இயேசுவின்
சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் தொட்டிகளை நிரப்ப ஆரம்பித்தனர். அதுவும் தொட்டியில் விளிம்புவரை தண்ணீரை நிரப்பினர். எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை தண்ணீரை நிரப்பினார்களோ, அப்போது அந்தத் தண்ணீர் திராட்சை இரசமாக மாறியது எனலாம்.
கடவுள்
என்பவர் நிறைவானவர், அவரிடம் குறையொன்றுமில்லை. இதன் காரணமாக, கடவுள் தம்மால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் நிறைவாக, எந்தக் குறையுமின்றி இருக்க விரும்புகிறார். “கடவுளின் பிரசன்னம் நன்மைத்தனங்களால் நிறைந்துள்ளது” எனும்
தூய பேசிலின் வார்த்தைகள் இங்கே நினைவு கூரத்தக்கவை. தந்தையின் வழியில் இயேசுவும் குறைவில்லா வாழ்வு வழங்க வந்தவர். அதையும் நிறைவாக வழங்க வந்தவர் (யோவா 10:10). ‘காத்திட கடவுளுண்டு, கலங்கிட வேண்டாம்’
என்ற நம்பிக்கை வரிகளை நினைவூட்டுகிறது கானா திருமண நிகழ்வு. தேவையில் நமக்குத் துணையாக வருபவராகவும் தக்க வேளையில் நமக்கு உணவளிப்பவராகவும் இயேசு நம்மோடு இருக்கிறார்.
இன்றைய
முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களை ஒரு மேலான வாழ்விற்கு, ஒரு மகிழ்ச்சியின் கொண்டாட்டத்திற்குக் கடவுள் அவர்களை அழைத்துச் செல்கிறார். கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே உள்ள உறவு புதுப்பிக்கப்படுகிறது. எருசலேம் தன்னுடைய போர் தோல்விகளாலும் அந்நியப் படையெடுப்புகளாலும் சீரழிக்கப்பட்டது. அதனால் அவர்களுக்குக் கிடைத்த பெயர்கள் ‘கைவிடப்பட்டவள்’, ‘புறக்கணிக்கப்பட்டவள்.’
கடவுளின் பார்வையால் இவர்களின் பெயர்கள் மாற்றம் பெறுகின்றன. ‘எப்சிபா’
- அவளில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், ‘பெயுலா’
- மண முடித்தவள் என்று இறைவன் வழங்கும் புதிய பெயர்கள் எருசலேம் பெறும் புதிய வாழ்வையும் புதிய உறவையும் குறிக்கின்றன. எனவே, புதிய இஸ்ரயேல் மக்களாகிய நாம் மகிழ்ச்சியின் மக்கள். இம்மகிழ்ச்சி இயேசு நம்மோடு இருப்பதால் என்றும் எங்கும் நிறைவாகக் கிடைக்கும். மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் நம் கடவுள் நம்மில் மகிழ்கிறார் (எசா 62:5).
இறுதியாக,
இன்றைய வார்த்தை வழிபாடு நமக்கு உணர்த்தும் செய்தியை அறிய முற்படுவோம். தன் மகன்மீது கொண்ட நம்பிக்கையினால் ‘அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’ என்று
பணியாளர்களைப் பார்த்துக் கூறிய அன்னை மரியா இறைவனை எந்தளவுக்கு நம்ப வேண்டும் என்ற அழைப்பை நமக்குத் தருகிறார். நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை அன்னை மரியா எடுத்துக்காட்டுகிறார்.
ஏழைகள்,
ஒதுக்கப்பட்டோர், இரந்துண்போர், ஆதரவற்றோர் இவர்கள் கடைசிப் பந்தியில் உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்த சூழலில், எப்போதாவது ஒருமுறை மட்டும் கிடைக்கும் இரசம் இவர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்பது மரியாவின் கவலை. எனவேதான் இயேசுவிடம் முறையிட்டு முன்பு பரிமாறப்பட்டதைவிடச் சிறந்த இரசத்தைப் பெற்றுக் கொடுக்கிறார். வேறு யாரும் கவலைப்படாத வேளையில் மரியாவின் பார்வை மட்டும் இவர்கள்பால் விழுகிறது. எனவே, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளாக’ பயணிக்கும்
இச்சிறப்பு யூபிலி ஆண்டில், யாருடைய பார்வையும் படாத ஏழைகள்பால் நம் பார்வை படவேண்டும் என்பதை மரியாவின் செயல் நமக்கு உணர்த்துகிறது.
இயேசுவின்
வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, தொட்டியில் விளிம்பு வரை தண்ணீரை நிரப்பிய பணியாளர்களின் செயல், தயக்கத்தோடும் எரிச்சலோடும் ஈடுபாடின்றியும் செயல்படாமல் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மனநிறைவைத் தருவதோடு, வாழ்வில் பல மாற்றங்களையும் புதுமைகளையும்
உருவாக்கும் எனும் பாடத்தை நம் மனத்திலே பதிக்கிறது.
நிறைவாக,
திருமண விழாவில் பரிமாறப்பட்ட சாதாரண இரசம் தீர்ந்துவிட, இயேசு அருளிய புதிய இரசம் சுவைமிக்கதாய் இருந்தது (2:10). தீர்ந்துவிட்ட பழைய இரசம் யூத முறைமைகளைக் குறித்து நிற்கிறது. அவை அர்த்தமற்றுப் போய்விட்டன. அவை இனி தேவையில்லை. அவற்றிற்குப் பதில் இயேசு புதிய முறைமைகளை, வாழ்க்கை நெறிமுறைகளைத் தருகிறார். இயேசு தரும் புதிய முறைமைகள் யூத முறைமைகளைவிட மிகவும் சிறந்தவை, வாழ வைப்பவை. ஆகவே, பழைய மரபுகளை விட்டுவிட்டு இயேசு தரும் புதிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இந்நிகழ்வு நமக்கு வழங்கும் மற்றுமொரு மேலான அழைப்பு.
ஆகவே,
இயேசு சொல்வதையெல்லாம் நாம் செய்தால், தண்ணீர் இரசமாய் மாறியதைப் போல், நமது வாழ்வும் பல வகைகளில் மாறும்.
பிறரின் துயர் துடைக்கும் பணியில், அன்னை மரியாவைப்போல பயணிக்க இறைவனிடம் மன்றாடுவோம்.