news-details
ஆன்மிகம்
எழுச்சியா... ஏமாற்றமா? (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 1)

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பின்னைய 60 ஆண்டுகாலத் திரு அவை வரலாற்றில் மிகப் பெரும் எழுச்சிகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திய ஒரு சிறப்பு நிகழ்வு உண்டு என்றால், அது 16-வது சாதாரண ஆயர் மாமன்றக் கூடுகைதான். அதன் உச்ச நிகழ்வு 2023-2024 எனும் இரு ஆண்டுகளிலும் அக்டோபர் திங்களில் கூட்டியக்கத் திரு அவை (அதாவது இணைந்து பயணிக்கும் திரு அவை) எனும் ஆய்வுப் பொருளை மையப்படுத்தி உரோமையில் நடந்தேறியது.

முன்னைய மாமன்றக் கூடுகைகளிலிருந்து இது பல வகைகளில் வேறுபட்டிருந்தது. இதற்கான முன் தயாரிப்பு இரு ஆண்டுகள் நீடித்தன. அந்த முன் தயாரிப்பு முன்பு எந்த மாமன்றக் கூடுகைக்கும் இல்லாத வகையில் திரு அவையின் அடிநிலையிலிருந்தே தொடங்கப்பட்டது. அதாவது, முன்பு நடந்தேறிய பல்வேறு ஆயர் மாமன்றங்களுக்கான தயாரிப்புப் பெரிதும் ஆயர்கள், இறையியலாளர்கள், இறையியல் கல்வி நிறுவனங்கள் என்பனவற்றின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது. ஆனால், இந்த 16-ஆம் மாமன்றத்திற்கான தயாரிப்பு அவற்றினின்று வேறுபட்டு, பங்குகளில் செயல்படும் அன்பியங்கள், திருத்தூதுக் குழுமங்கள், ஏனைய குழுக்கள் என்பனவற்றில் உறுப்பினர்களாக இருந்த சாதாரண பொதுநிலையினரின் கருத்துகளைக் கேட்டறிதலில் இருந்தே தொடங்கப்பட்டது.

இக்கலந்துரையாடலின் தனி ஒரு சிறப்பு, அதில் பங்கேற்க அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் திரு அவையின் வாழ்விலும் செயல்பாடுகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டும் அல்ல; மாறாக, அவர்களுள் பலர் அவற்றில் அதிகம் அல்லது அறவே பங்கேற்காது ஒதுங்கியிருந்தவர்கள், தங்கள் மாறுபட்ட கருத்துகளை எடுத்துரைக்காது அதுவரை மௌனம் காத்தவர்கள் அல்லது மௌனம் ஆக்கப்பட்டவர்கள். இத்தகையோரிடமும் கருத்துக் கேட்கும் முயற்சியும் சில இடங்களில் முன்னெடுக்கப்பட்டது. இது முன்பு ஒருபோதும் இல்லாத நடைமுறை.

இம்முயற்சிகளின் விளைவாக பெரும்பான்மையான பங்குத்தளங்களிலும் பல்வேறு குழுமங்களிலும் இருந்து மக்கள் தங்கள் எண்ணங்களையும் ஏமாற்றங்களையும் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் துணிந்து எடுத்துரைத்தனர்ஆயர்களும் அருள்பணியாளர்களும் மக்கள் குரலுக்குச் செவிமடுக்கவும், அவர்களுடன் இணைந்து சிந்திக்கவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

இறுதியாக உரோமையில் நிகழ்ந்த மாமன்றக் கூடுகைகளில் பங்கேற்றவர்களும் முன்னையக் கூடுகைகளிலிருந்து பல வகைகளில் வேறுபட்டவர்களாக இருந்தனர். முன்னைய மாமன்றக் கூடுகைகளில் பங்கேற்றவர்கள் பல்வேறு நாட்டு ஆயர் பேரவைகளின் பதிலாள்களும், வத்திக்கான் பேராயங்களின் தலைவர்களும் திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட வேறுசில ஆயர்களுமே. பங்கேற்ற சில இறையியலாளர்கள் வாக்குரிமையற்ற வெறும் அறிவுரையாளர்களாகவே அவற்றில் செயல்பட்டனர். ஆனால், இந்த 16-ஆம் ஆயர் மாமன்றக் கூடுகையில்தான் முதன்முறையாக கலந்துரையாடலில் பங்கேற்கவும் வாக்களிக்கவும் திருத்தந்தை நியமித்த பல அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர் என்போரும் சம உரிமையுடன் கலந்துகொண்டனர். திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட இரு மாமன்றத் துணைச் செயலர்களுள் ஒருவர் பிரான்ஸ் நாட்டினராகிய அருள்சகோதரி நத்தாலி பெக்கார் என்பவர். மேற்கூறிய புதிய நடைமுறைகள் காரணமாக 16-ஆம் ஆயர் மாமன்றக் கூடுகையை ஆயர்கள் மாமன்றம் என்பதைவிட, அனைத்துலகத் திரு அவை மாமன்றம் என்றே நாம் கருதலாம்.

இத்தகைய புதுவகை உறுப்பினர்களும் மாமன்றக் கலந்துரையாடல்களில் பங்கேற்றதால் கூட்டியக்கத் திரு அவை பற்றிய ஆயர் மாமன்றக் கூடுகை திரு அவையின் வருங்கால வாழ்க்கை, வழிபாட்டு முறை, உறவுகள், பணிகள் என்பன பற்றிய புதிய பல பார்வைகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்கும்; அவற்றால் திரு அவையின் செயல்பாடுகளிலும் அமைப்புகளிலும் அதிரடி மாற்றங்கள் முடிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனும் எதிர்நோக்கும் திரு அவையில் முற்போக்காளர் பலரிடம் எழுச்சி கண்டது. அதற்கு மாறாக, மரபு மிகைப்பற்றாளர் பலரிடம் அதுபற்றிய அச்சமே நிலவியது.

மாமன்ற வரலாறு

16-ஆம் சாதாரண ஆயர் மாமன்றக் கூடுகை, 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெறும் என்றும் அதன் ஆய்வுப் பொருள் கூட்டியக்கத் திரு அவை: ஒன்றிப்புறவு, பங்கேற்பு, திருத்தூதுப் பணி என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் 2020-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் நாள் அறிவித்தார். 2021, செப்டம்பர் 7-ஆம் நாள் மாமன்றத்தின் மையப் பொருளை விளக்கிய தயாரிப்பு ஏடும், கலந்துரையாடலுக்கான கேள்விகளை உள்ளடக்கிய கையேடும் வெளியிடப்பட்டன. அக்டோபர் 2-ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் ஆயர் மாமன்றக் கூடுகைக்கான முன்னேற்பாட்டுச் செயல்பாடுகளை முன்னறிவித்து, அப்பணிகளைத் தொடங்கியும் வைத்தார். மாமன்ற நடைமுறை மூன்று படிநிலைகளைக் கொண்டதாக அமையும் எனவும், மூன்று ஆண்டு காலம் நீளும் எனவும் அவர் அறிவித்தார். அந்த மூன்று படிநிலைகளும் பின்வருவன:

1. அக்டோபர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை மறைமாவட்டங்கள் அளவிலான கலந்துரையாடல்கள்.

2. செப்டம்பர் 22 முதல் மார்ச் 23 வரை கண்டங்கள் அளவில் கருத்துச் சேகரித்தல்.

3. 2023 அக்டோபர் 4 முதல் 29 வரை மாமன்றக் கூடுகை. இந்த ஒரு மாதக் கூடுகையுடன் மாமன்றம் முடிந்துவிடும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாமன்றக் கூடுகையின் இரண்டாம் அமர்வு 24, அக்டோபரிலும் தொடரும் என 22 அக்டோபர் 16-ஆம் நாள் திருத்தந்தை அறிவித்தார்.

மேற்கூறிய மூன்று கட்ட நடைமுறை முன்னைய மாமன்றக் கூடுகைகளிலிருந்து இந்த மாமன்றக் கூடுகை மிகவும் வேறுபட்டதாக இருக்கும் என்பதை உணர்த்தியது.

இரு நீண்ட ஆண்டுகளாக அனைத்துலகத் திரு அவையின் எல்லா இடங்களிலும் அன்பியங்கள், பங்குப் பணிக்குழுக்கள் என்பனவற்றில் தொடங்கி மறைமாவட்டம், நாடு, கண்டம் என எல்லாத் தளங்களிலும் நிலைகளிலும் எண்ணற்ற கருத்துரைகள், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. பங்கு மக்களின் பரிந்துரைகள் மறைமாவட்ட அளவில் பத்து பக்க ஏடுகளாகச் சுருக்கப்பட்டன; அவை நாடளவில் பத்து பக்கங்களாகவும், பின்பு கண்டங்கள் அளவில் பத்து பக்கங்களாகவும் சுருக்கப்பட்டன. அச்சுருக்கங்கள் தொகுக்கப்பட்டு 2023, அக்டோபர் 4 தொடங்கி 29 வரை உரோமையில் தொடர்ந்த மாமன்றக் கூடுகைகளில் கலந்தாய்வு செய்யப்பட்டன.

வாக்களிக்கும் உரிமையுடன் மாமன்றக் கூடுகைகளின் முதல் அமர்வில் பங்கேற்றோர் மொத்தம் 364 பேர். அவர்களுள் இருவர் பொதுநிலையினர், 12 அருள்பணியாளர்கள், 53 பெண் துறவியர்.

மாமன்றக் கலந்தாய்வு முடிவுகள் 42 பக்க அறிக்கையாகச் சுருக்கப்பட்டு, திருத்தந்தையிடம் தரப்பட்டு, அக்டோபர் 29-ஆம் நாள்மறைத்தூதுப் பணியில் கூட்டியக்கத் திரு அவை: தொகுப்பு அறிக்கை (முஅ) எனும் தலைப்பில் 40 பக்கங்களைக் கொண்ட ஏடாக வெளியிடப்பட்டன.

மாமன்றத்தின் இரண்டாம் அமர்வு அக்டோபர் 02 - 26 நாள்களில் நடைபெற்றது. அதில் 368 பேர் வாக்குரிமையுடன் கலந்துகொண்டனர். அவர்களின் கலந்துரையாடல் முடிவுகள் கூட்டியக்கத் திரு அவைக்காக ஒன்றிப்புறவு, பங்கேற்பு, மறைத்தூதுப் பணி - இறுதி ஆவணம் (இஅ) எனும் தலைப்பில் 65 பக்க ஏடாக அக்டோபர் 26-இல் திருத்தந்தை பிரான்சிசின் தொடக்கக் குறிப்புடன் வெளியிடப்பட்டது.

எண்ணற்ற மக்களின் பொன்னான நேரம் மற்றும் பெரும் பொருள் செலவுகளை ஏற்படுத்திய மாமன்றக் கலந்துரையாடல்கள் இறுதியாக என்னதான் பெரிதாகச் சாதித்துள்ளன எனும் கேள்வி எல்லாருடைய உள்ளங்களிலும் எழுந்துள்ளது. எனவே, தொடரும் கட்டுரைகளில் நாம் மாமன்ற அறிக்கையைச் சற்று ஆழமாக ஆய்வுசெய்து, திருத்தந்தையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தமிழ்நாடு திரு அவை உள்பட தலத் திரு அவைகள் என்னென்ன பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்? என்னென்ன மாற்றங்களையும் புதிய முயற்சிகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கண்டறிய முயல்வோம். ஏனெனில், மாமன்றம் அருமையான புதிய பல பார்வைகளையும் அவற்றைச் செயல்படுத்த ஆக்கபூர்வமான பல பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. அப்பரிந்துரைகள் அதிகார முறையிலானவை எனவும் அவற்றை, ‘தலத் திரு அவைகளும் திரு அவைகளின் ஒன்றியங்களும் சட்டத்திலும் இவ்வேடுகளிலும் தரப்பட்டுள்ள பாடங்களைத் தெளிதேர்வு செய்து முடிவெடுக்கும் முறைமைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகின்றனஎனவும் மாமன்ற இறுதி அறிக்கையுடன் திருத்தந்தை பிரான்சிஸ் இணைத்துள்ள குறிப்பில் ஆணையிட்டுள்ளார்.

(தொடரும்)