news-details
சிறப்புக்கட்டுரை
மீண்டும் வேண்டும் பணியிட ஒழுக்கம்!

பணியிடங்களில் முதலாளி - தொழிலாளி, உயர் அதிகாரி - ஊழியர், மேலாண்மை நிர்வாக அதிகாரி - பணியாளர்கள் என்ற உறவுமுறை பணித்தளத்திற்காகக் கட்டமைக்கப்பட்ட சமூக உறவுமுறை. எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்தாம். ஆயினும் படிப்பு, திறமை, நிர்வாக ஆளுமை எனப் பல தளங்களின்மீது இந்தப் பொறுப்புகள் கட்டமைக்கப்படுகின்றன.

ஒரு நிறுவனத்தில் கிடைக்கும் ஊதியத்தை விட, நன்மதிப்பும் நற்பெயரும் நம்பிக்கையுமே விலையேறப்பெற்ற பெரும் பேறாகக் கருதிய பணியாளர்கள் கடந்தகாலத் தலைமுறையினர். வர்க்கபேதமின்றி அன்பாய் உறவாடுவதும், நேர்மையாய்ப் பணியாற்றுவதும், கடுமையாய் உழைப்பதும், நம்பிக்கையாய் துணை இருப்பதும் இவர்களின் அளவுகோலாக இருந்தன.

காலம் செய்த கோலம், உலகமயமாக்கலுக்குப் பிறகு எல்லாத் தளங்களிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு இடையிலான பிணைப்பு, உறவு என்பது பெருமளவில் பேசப்படுவதில்லை; இன்று அவை நலிந்து விட்டன. பணியிட ஒழுங்கு என்பது இன்று காற்றில் பறந்துவிட்டது. நிர்வாகத்திற்குக் கீழ்ப்படிதல், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுதல், தவறு இழைக்கும்போது அல்லது தவறும்போது கொடுக்கப்படும் அறிவுரைகளுக்கும் அறவுரைகளுக்கும் இணங்கிச் செல்வது என்பதெல்லாம் இன்று காண்பது அரிது.

இத்தகைய சூழலில், அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பணியிடங்களில் நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதாவது, “பணியிடங்களில் கீழ்மட்ட ஊழியரை அலுவலகப் பணிகளுக்காக முதுநிலை ஊழியர் கண்டிப்பதை வேண்டுமென்றே செய்யப்படும் அவமானமாகக் கருதி குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாதுஎன்பதுதான் அந்தத் தீர்ப்பு.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள தேசிய மனநல நிறுவனத்தின் இயக்குநர் மீது அங்குப் பணியாற்றும் பெண் உதவிப் பேராசிரியர் ஒருவர் உயர் அதிகாரிக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதை அறிந்த இயக்குநர், அந்தப் பெண் உதவிப் பேராசிரியரைத் தனது அறைக்கு அழைத்துபுகார் மனு அனுப்புவதற்கான அலுவலக நடைமுறைகள் உங்களுக்குத் தெரியாதா? எப்படிப் புகார் அனுப்பினீர்கள்?’ எனக் கூறி கண்டித்துள்ளார்; அதைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதி அந்தப் பெண் உதவிப் பேராசிரியர், இயக்குநர் தன்னைப் பலர் முன்னிலையில் சத்தம் போட்டு பேசி அவமானப்படுத்திவிட்டதாகவும், அதனால் தனக்கு மனவேதனை ஏற்பட்டதோடு மருத்துவ ரீதியில் தனக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவு 504(BNS. 352)-இன்படி திட்டமிட்டு அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின்கீழ் இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டு காலம் தண்டனை தரும் இந்த வழக்கை இரத்து செய்யும்படி உயர் நீதிமன்றத்தை அணுகினார் இயக்குநர். ஆனால், உயர் நீதிமன்றமோஇது ஒரு தீவிரமான பிரச்சினை; முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்எனக் கூறி இயக்குநரின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆகவே, இயக்குநர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சஞ்சய் கரோல், சந்திப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமர்வானது, “அலுவலகங்களில் மூத்தவர்கள் அவர்களுக்குக் கீழ் உள்ள ஊழியர்களை அலுவலகப் பணிகளுக்காகக் கண்டிப்பது என்பது வேண்டுமென்றே அவமதிக்கும் செயல் ஆகாது; வேலை செய்யும் இடத்தில் கண்டிப்பது என்பது, நிர்வாகச் செயல்பாட்டின் ஒரு பகுதி; அதற்காகக் கிரிமினல் வழக்குத் தொடர்ந்தால் அது அலுவலகங்களில் பேண வேண்டிய பொது ஒழுங்குக் கட்டமைப்பைச் சீர்குலைத்துவிடும்என்று அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.

முன்பெல்லாம் தவறு செய்யும் ஊழியர்களை நிர்வாகம் முதலில் கடுமையாக எச்சரிக்கும்; தொடர்ந்து தவறு செய்தால் தண்டனை அளிக்கும், இடை நீக்கம் செய்யும்; அதன் பிறகும் தவறுகள் தொடர்ந்தால் பணிநீக்கம் செய்வது போன்ற நடைமுறைகள் இருந்தன. ஆனால், இப்போது பணியிடங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஊழியர்களுக்கு மேலோட்டமாகச் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவர்களுடைய நடத்தையை மேன்மைப்படுத்திக்கொள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அறிவுரைகள் பிடிக்காவிட்டால் ஊழியர்கள் வெளியேறுவார்கள்; அறிவுரையைப் பின்பற்றாவிட்டால் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். இதுதான் நடைமுறையாக இருக்கிறது.

ஆயினும், அண்மைக் காலங்களில் பணியிடங்களில் ஊழியர்கள் காலதாமதமாகப் பணிக்கு வருவதும், கைப்பேசிகளில் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதும், சக ஊழியர்களுடன் நீண்ட நேரம் அரட்டை அடிப்பதும், பணிச் செயல்பாடுகளைத் தாமதப்படுத்துவதும் போன்ற ஒழுங்கீனங்கள் அதிகமாகவே நிகழ்கின்றன. இது ஏதோ ஒன்றிரண்டு அலுவலகங்களில் மட்டுமல்லாது, எல்லாப் பணித்தளங்களிலும் நடக்கும் பொதுவான செயல்பாடுகளாகவே இன்று கணிக்கப்படுகின்றன.

இத்தகைய சூழல்களில், அரசு அல்லது தனியார் பணித்தளங்களில் மேல்மட்ட அதிகாரிகள் தங்களின் கீழ் செயல்படும் பணியாளர்களைப் பணியின் நிமித்தமாகக் கண்டிக்கும்போது, தவறை உணர்த்தும்போது, அறிவுரைகள் கூறும்போது அல்லது உயர் அதிகாரிகள் கடிந்துகொள்ளும்போது, சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும், மதத்தின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குற்றம் சுமத்துவது இன்று வாடிக்கையாகிப் போனது. இத்தகைய குற்றப் பின்னணியில் எழும் உண்மைத்தனத்தைக் கண்டறிய வேண்டியதும் அவசியமாகிறது.

பொது இடங்களிலும் பணித்தளங்களிலும் ஊழியர்களின் நன்னடத்தையும் சுயஒழுக்கமும் முக்கியத்துவம் பெறுகின்றன. பணித்தளத்தின் நன்மதிப்பையும் இலக்கையும் நோக்கத்தையும் செயல்பாட்டையும் பாதிக்கும் எந்த ஒரு செயலும் ஊழியர்களால் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய நிலை தொடரும்போது ஊழியரின் பணி, செயல்திறன், நன்னடத்தை ஆகியவை கேள்விக்கு உட்படுத்தப்படுவது எதார்த்தமே. இது பணித்தளத்தின் மேன்மையையும், உற்பத்தித் திறனையும் செயல்பாட்டையும் அதன் இலக்கையும் நிலைநாட்டுவதாகவே அமைகிறது.

ஆகவே, அலுவலக விதிமுறைகளுக்கு உள்பட்டு ஒழுக்கத்துடனும் பணித்திறனுடனும் நடந்துகொள்ளும் ஊழியர்களுக்குக் கண்காணிப்பும் உயர் அதிகாரிகளின் கண்டிப்பும் அவசியம் இருக்காது. ஆயினும், எல்லாப் பணியாளர்கள் மத்தியிலும் பணித்தள ஒழுக்கச் செயல்பாடுகள் மீண்டும் மலர வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பு.