news-details
சிறப்புக்கட்டுரை
மும்மொழிப் போர்வையில் ஒரே மொழி!

தமிழ்நாடு மீண்டும் ஒரு மொழிப்போரைத் தொடங்கும் வண்ணம் ஒன்றிய அரசு திட்டமிட்டு காயை நகர்த்தி வருகின்றது. மொழி என்னும் வலுவான பண்பாட்டுக் கருவியைத் தளராமல் கூர்மைப்படுத்தி வரும் தமிழ்நாடு இப்போதும் தமிழ் மரபைக் காத்து வருவதில் உறுதியைக் காட்டி நிற்பதைப் பார்க்க முடிகிறது.

மும்மொழியா? இருமொழியா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டு வரும் இன்றைய போக்கினை வெறும் மொழிப்பிரச்சினை என்று சுருக்கிவிடல் கூடாது. சுருக்கிப் பார்க்கும் போக்கு இந்நாட்டின் புவிசார் அரசியல் பற்றிய தெளிவற்ற நிலையையே குறிக்கும்.

ஒன்றுஎன்பது வெறும் எண்ணைக் குறிப்பதன்று; ‘ஒன்றுஅல்லதுஒற்றைஎன்பது பன்மையை மறுப்பது; பன்மையை மறுப்பது என்பது சனநாயகத்தை மறுப்பது. சனநாயகத்தை மறுப்பது என்பது எதேச்சதிகாரத்தை ஏற்பதாகும். சுருங்கக் கூறுவதென்றால், பாசிசத்தின் திறவுகோல் இங்குதான் உருவெடுக்கிறது என்பதாகும்.

ஒன்றிய அரசு மாநில அரசுகளின் தலைவர் (Master) என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். மாநில அரசுகளோடு ஒன்றிய அரசு மேற்கொள்ளும் எதேச்சதிகாரப் (Authoritarian) போக்கையும் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு சனநாயகத்தையும் உரையாடலையும் வழிமுறையாகக் கொள்ள வேண்டும். அச்சுறுத்தக் கூடாது. மிரட்டல் செய்யக் கூடாது - நன்றி: ‘டெக்கன் ஹெரால்டு 18.02.2025.

அண்மையில் எழுந்தமும்மொழியா? இரு மொழியா?’ என்ற விவாதத்திற்குடெக்கான் ஹெரால்டுஆங்கில நாளிதழ் தந்த விமர்சனப் பார்வை இது. இன்று ஒன்றிய அரசால் எழுப்பப்பட்டுள்ள இப்பிரச்சினையின் அடிநாதமே இங்குதான் உள்ளது. பன்மொழி பேசும் இந்தியாவில்ஒரு மொழியே ஆட்சி மொழிஎன்று கூறுவதும், அதைத் திணிக்க முயல்வதும் பன்மைக் (Plural) குணமிக்க இந்தியாவின் தன்மையை மறுப்பதாகும்.

ஒன்றுபட்ட இந்தியாவின் ஒருமையைக் காக்க ஒற்றைமொழி தேவைஎன அன்றைய தேசியத் தலைவர்கள் விரும்பியிருக்கலாம். ஏன், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நமது பெருந்தலைவர்களில் பலர் இச்சிந்தனை கொண்டிருந்தவர்கள்தாம். சுதந்திரம் பெற்ற இந்தியா ஒன்றுபட்ட இந்தியாவாக நீடித்து நிற்க  இந்தி பயன்படும் எனத் தேசத்தந்தை மகாத்மா உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடே தேசம் முழுக்க கிளை பரப்பிய இந்திப் பிரச்சார சபாக்கள்.  ‘ஒன்றுபட்ட இந்தியாவுக்குபொதுமொழி அல்லது அலுவல் மொழி ஒன்றின் தேவையை இவர்கள் உணர்ந்ததால், அரசமைப்புச் சட்டத்தில் கூட அதை இடம்பெறச் செய்திருக்கலாம். அரசமைப்புச் சட்டத்தில் இந்தி அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அரசமைப்பைக் காட்டி, இதனை நியாயப்படுத்தினாலும் இது இந்தியப் பன்முகத் தன்மைக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானதே.

தமிழ்நாடு எப்போதுமே இந்தித் திணிப்பை எதிர்த்து வந்துள்ளது. இந்தி மொழிக் கட்டாயமாகும் என்று காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அறிவித்தபோது 1965-ஆம் ஆண்டு மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்தது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் போராட்டத்தில் தங்களைத் தியாகம் செய்தபோது ஒன்றிய அரசு, மக்கள் ஏற்கும்வரை இந்தி மொழி அறிமுகமாகாது என்று அறிவித்த உறுதிமொழியின் காரணமாகப் போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழ்நாடு தனித்து நின்று போராடிய இம்மொழிப் போர் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. ஒன்றிய அரசுசமக்ரா சிக்ஷா அபியான்என்ற திட்டத்தை அங்கீகரிக்க வற்புறுத்துகிறது. தமிழ்நாடு ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட இருமொழிக் கொள்கையில் உறுதிகாட்டவே, இத்திட்டத்தை ஏற்காத தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதி ரூ. 2,150 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்காமலிருக்கிறது. ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியசமக்ரா சிக்ஷா அபியான்திட்டத்தை ஏற்றுக்கொள்வதும், ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்பதும் மும்மொழியும் ஒன்றாகிய இந்தியை ஏற்பதும் கட்டாயமாகும் என்பதாலேயே இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டின்கல்விக் கொள்கைஎன்பதில் தமிழ்நாடு உறுதிகாட்டுகிறது. தமிழ்நாட்டின் இந்த நிலைப்பாட்டிற்காக நிதி மறுக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாக அறிவிப்பது அராஜகத்தின் உச்சம்.

கல்வி, மாநில அரசின் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளபோது, கல்வி அமைப்பை ஒழுங்குபடுத்திச் சில நடைமுறைகளை NCTE, NECRT, U.G.C போன்ற உயர் கல்வி நிறுவனங் கள் மூலம் சில பரிந்துரைகளை வைக்கலாம். மாநிலங்களில் இப்படிப்பட்ட கல்விமுறைதான் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நினைக்குமானால், இப்போக்கு சனநாயகத்திற்கும், சனநாயகம் காக்க உருவான அரசமைப்புச் சட்டத்திற்கும், மாநிலச் சுயாட்சிக்கும் எதிரானது. ஏற்கெனவே பல்கலைக்கழக நிதிக்குழுவின் புதிய வரைவில், மாநிலக் கல்வியின் ஓர் அங்கமாகிய பல்கலைக் கழகங்களில் சுயாட்சி மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகிறது. உயர் கல்வியில் மாநில அதிகாரத்தில் குழிபறிக்க நினைக்கும் ஒன்றிய அரசு, மும்மொழிக் கொள்கையை அங்கீகரிக்க மறுக்கும் தமிழ்நாட்டை அவதூறுகளால், பாகுபாட்டால் ஒதுக்கி ஒரங்கட்ட முனைகிறது.

மொழி பற்றிய ஒன்றிய அரசின் போக்கை வெகு விழிப்போடு உற்றுநோக்குவது தமிழ் மக்களின் கடமையாகும். இது வெறும் மொழி பற்றிய பிரச்சினை அல்ல; வகுப்புவாத அரசு என்பது, தன் ஆட்சியதிகாரத்தின் மூலம் ஒரு தேசிய இனத்தின் மீது நடத்தும் மிகப்பெரிய தாக்குதலாகும். ‘திராவிடம்என்ற அடையாளத்தோடு தமிழ்நாடு முன்வைக்கும் சித்தாந்தத்தின் அடிப்படை, இன்றைய ஒன்றிய அரசின் சித்தாந்தப் போக்கிற்கு முற்றிலும் எதிரானது. திராவிடம் பேசும் கருத்திய லும், இந்துத்துவம் பேசும் கருத்தியலும் முரண்பட்டவை என்பதால், தமிழ்நாட்டைத் திட்டமிட்டு வஞ்சித்து வருகிறது.

காசித் தமிழ்ச்சங்கம்என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை ஒன்றுதிரட்டி, வாரணாசியில் சங்கமிக்க நடத்தப்பெறும் விழாவிற்கு என்ன பொருள்? வாரணாசியில் கூட்டப்பெறும் இந்தச் சங்கமம் பற்றி தமிழ்நாடும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமை வியப்பையே தருகிறது. உதயநிதியின் சனாதனம் பற்றிய பேச்சு பிரிவினைவாதமாகவும் இந்து மதத்திற்கு எதிரானதாகவும் பிரதமர் மோடி  அவர்களாலே பரப்புரை செய்யப்பட்டதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். செல்லுமிடமெங்கும் தமிழின் பெருமையைப் பேசும் பிரதமரின் இரட்டை முகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசியக் கல்விக்கொள்கையைத் தமிழ்நாடு முழுமையாக மறுத்துவிட்ட நிலையில், தேசியக் கல்விக்கொள்கை தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துவதாகக் கூறி மக்களைத் திசை திருப்புகிறது.

ஒன்றியக் கல்வி அமைச்சரின் கருத்தில் இருக்கும் முரணையும் நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒன்றிய அரசின் கேந்திரியப் பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி போன்ற மொழிகளையும் ஓர் அறிக்கையில் அப்போதைய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அறிவித்ததோடு நிறுத்திவிட்டு, இப்போது அம்மொழிகளுக்குப் பதிலாக, சமஸ்கிருதம் இடம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் நிலையில், உலகளாவிய வாய்ப்புகளைப் பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய மொழிகள் புறக்கணிக்கப்பட்டு, அவ்விடத்தைச் சமஸ்கிருதம் மூலம் நிரப்ப முயல்வது என்ன நியாயம்?

அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைமுறைக்கு வந்த ஒரு நிகழ்வு ஒன்றிய அரசின் உண்மை முகத்தைக் காட்டியது. நாடாளுமன்ற உரைகள் அனைத்தும் உடனடி மொழிமாற்றம் பெறுவதுண்டு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் தாய்மொழிகளில் உரையாடலாம். இம்மொழிகளின் எண்ணிக்கை 21 என்று கூறப்படுகிறது. உறுப்பினர்களுக்குத் தெரிய வைக்கவேண்டும் என்பதே நோக்கம். இப்போது 22-வது மொழியாகச் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை அவையில் எழுப்பிய உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் என்ன பதில் கூறினார் தெரியுமா? சமஸ்கிருதம் அனைத்து மொழிகளின் மூல மொழியாம்! ஆகவே, கேள்வி கேட்க முடியாது!

சபாநாயகரின் பதில் நமக்குத் தரும் செய்தி என்ன? இந்தியாவின் வெறும் எழுத்து மொழியான சமஸ்கிருதம் குறைந்த எண்ணிக்கையில் எழுபதாயி ரம் பேரால் மட்டுமே பேசப்படுகிறது; இது வழக்கு மொழி அல்ல. ‘தேவபாஷைஎன்று மட்டுமே போற்றப்படும் இம்மொழி எப்படி இந்திய மொழிகளின் மூலமொழியாக இருக்க முடியும்? இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழி இந்தியாவில் வழக்குமொழியான திராவிட மொழி களுக்கு எப்படி மூலமொழியாக முடியும்?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த கருத்தியலாளர் குருஜி கோல்வாக்கர், தனதுசிந்தனைக் கொத்து (Bunch of thought) என்ற நூலில், சமஸ்கிருத மொழியை இந்திய மொழிகளின் ஊற்று (Fountain) என்று வர்ணிப்பார். எனவே, இந்திய நாட்டின் ஆட்சி மொழியாகத் தற்காலிகமாக இந்தியை ஏற்றுக்கொண்டாலும், இந்தியாவின் தேசிய மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் சமஸ்கிருதம்தான் இருக்க முடியும் என்ற குருஜியின் யோசனையை இந்துத்துவர்கள் மறுக்க முடியுமா? இன்றைய மும்மொழிக் கொள்கையின் பின்னணியில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்வதற்காகவே இவ்வுண்மைகள் தரப்பட்டன.         

சனநாயகத்தை நம்பாத ஆட்சியாளர்கள், சனநாயகம் தரும் தேர்தல்வழி பெரும்பான்மை வாதத்தைக் கட்டமைத்து, ஒதுக்கலையும் ஒடுக்கலையும் சூழ்ச்சியாகக் கொண்டு செயல்படும் வகுப்புவாத அரசு, சனநாயக நெறிமுறைகளைக் காக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவேதான் அப்பட்டமாக அரசியல்  தர்மத்தை மீறும் வகையில்நிதியைத் தர முடியாதுஎன்று மறுக்கும் அளவுக்கு வன்மம் மேலோங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்தி எனும் மொழிக்கு எவரும் எதிரியாக இருக்க முடியாது. ஒரு மொழி என்ற நிலையில், எவர் கற்றாலும் தடுக்க முடியாது. இந்தியை வளர்க்க என்று உருவாக்கப்பட்டஇந்திப் பிரச்சார சபாஇந்தியா முழுமையும் செயல்பட்டு வரும் வலுவான ஓர் அமைப்பு. தமிழ்நாடு முழுவதும் இந்திப் பாடத் தேர்வுகளை நடத்திவரும் இவ்வமைப்பினைத் தடைசெய்யும் நோக்கு எவருக்குமில்லை. விரும்பியோர் ஒரு மொழியை விரும்பித் தேர்வு செய்வதில் எவருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால், இந்திய மொழிகளுள் ஒன்றான இந்தியை, மக்களில் பெரும் பகுதியினர் பேசுவதாகக் கூறிக்கொண்டு, அம்மொழியைத் தேசிய மொழியாகத் திணிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

ஒற்றையும், ஒரு மொழியும்

1925-இல் உருவான வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ்அமைப்பின் கொள்கைகள் எவற்றையும் இந்திய நாட்டு மக்களும் இந்தியத் தலைவர்களும் இந்துத்து வர்கள் முன்வைத்தக் கோரிக்கைகளை ஒரு கும்பலின் கூச்சலாகவே எடுத்துக் கொண்டனர். வலுவான சமயச் சார்பற்ற பின்னணியைக் கொண்ட மகாத்மாவும், ஜவகர்லால் நேருவும், அறிவர் அம்பேத்கரும் இக்கும்பலின் கொள்கை உயிர் பெறும் என்று நம்பவில்லை.

பன்மையை மறுத்து ஒற்றையை வலியுறுத்திய இக்கும்பல், இராமரை அடையாளப்படுத்தி அயோத்தியில் இராமருக்குக் கோவில் என்றது; பெரும்பான்மை பெறும் நிலையில் அரசமைப்பை மாற்றுவோம் என்றது; காஷ்மீரின் தனி அந்தஸ்துக்கான 370 பறிக்கப்பெறும் என்றது; பொது சிவில் சட்டம் நடைமுறைப்படும் என்றது; மதமாற்றத் தடைச்சட்டம் உருவாக்கப்பெறும்; ஒரே தேர்தல் நடைமுறைக்கு வருகிறது. மதச்சிறுபான்மையினராம் இசுலாமியரின் இருப்பு கேள்விக்குள்ளானது. இவை அனைத்தும் இன்றைய நிதர்சனங்கள்.

ஒரே கலாச்சாரம், ஒரே தேசம், ஒரே சமயம், ஒரே தலைவர், ஒற்றை அரசு சாத்தியமா?’ என்ற கேள்விக்குசாத்தியமேஎன்பதுதான் பதில். ‘ஒற்றைஉண்மையாகும்போது, ஒரே மொழியும் (இந்தி) உண்மையாகும் என்பதில் ஐயமில்லை.

ஒற்றை மறுப்பை எப்படி உறுதிப்படுத்தப் போகிறோம்? ஒன்றிய பா... அரசின் தமிழ்நாட்டுத் தலைவர்களைத் தவிர, தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் மும்மொழித் திட்டத்தையும், தமிழ்நாடு அரசுக்கு அளிக்க வேண்டிய நிதியை மறுக்கும் ஒன்றிய அரசின் போக்கையும் கடுமையாக எதிர்த்து வருவது பாராட்டத்தக்கதே. ஒன்றிய அரசின் மக்களுக்கு எதிரான இத்திட்டங்களை ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்பதே நம் நோக்கம்.

தமிழ்நாடு அரசு தேசியக் கல்வித் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? இவர்கள் குழப்பத்தில் உள்ளனர். அரசியல் நோக்கில் இக்குழப்பத்தைச் செய்கின்றனர். ஏன் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர்? நாடு மாற்றம் பெற்று வருகிறது. உலகம் மாறி வருகிறது. இவர்களுக்கு என்ன வந்தது?”- தர்மேந்திர பிரதான், ‘தி இந்துபிப்.17,2023.

தமிழர்கள் ஒன்றிய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சப்போவதில்லை. தமிழர்கள் உன்னத உயர் குணமுடையவர்கள் (Unique). அரசியல் சாசனத்தின் எப்பகுதியிலாவது மும்மொழித் திட்டம் பற்றிய குறிப்பு உள்ளதா? அப்படியிருந்தால் எடுத்துக் காட்ட முடியுமா? ஒன்றிய அரசு இந்தியக் கல்வி அமைப்பின் மொத்தக் காவலர்களா? தமிழ்நாட்டின் மீது நிகழ்த்தப்பெறும் அச்சுறுத்தலைத் தமிழ்நாடு எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளது - மு.. ஸ்டாலின், நன்றி: ‘தி இந்து 17, பிப். 2025.

மேலும், ‘இந்தியும் சமஸ்கிருதமும் வலிந்து திணிக்கப்படுவதால், இந்திய மொழிகள் யாவும் திட்டமிட்டுச் சிதைக்கப்படுகின்றனஎன்றும், ‘தாய்மொழி மீது கைவைப்பது தேன்கூட்டைத் தொடுவது போன்று ஆபத்தானதுஎன்றும் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், ‘கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்என்றும் தமிழ்நாடு முதல்வர் கூறியிருக்கிறார்.

ஒன்றிய அமைச்சரின் அதிகாரப் பேச்சும், தமிழ்நாடு முதல்வரின் பதில் மொழியும் இக்கட்டுரையின் உட்பொருளை நன்கு உணர்த்தவே செய்யும்.