அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!
நாம்
அனைவரும் திருநீற்றை நெற்றியில் பூசிக்கொள்ளும் பரிகாரச் சடங்கின் வழியாக, தவக்கால ஆண்டுத் திருப்பயணத்தை நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் தொடங்க உள்ளோம். நமது அன்னையும் ஆசிரியையுமான திரு அவை, கடவுளின் அருளுக்கு நமது இதயங்களைத் திறந்திட அழைத்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்து பாவத்தின் மீதும் சாவின் மீதும் கொண்ட பாஸ்கா வெற்றியை மிகுந்த மகிழ்வோடு நாம் அனைவரும் கொண்டாட விரும்புகிறது. இதுவே, “சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?” (1 கொரி 15: 54-55) என்று பவுலடியாரை அறைகூவலிடத் தூண்டியது. உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டவரும் பின்பு உயிர்த்தெழுந்தவருமான இயேசு கிறிஸ்துவே நமது நம்பிக்கையின் இதயமாகவும் எதிர்நோக்கின் உறுதிமொழியாகவும் உள்ளார். இது, தம் அன்பார்ந்த மகனில் முன்பே நிறைவேறிய நிலைவாழ்வு எனும், கடவுளின் பெரிய வாக்குறுதியாக அமைகிறது (யோவா 10:28; 17:3).
யூபிலி
ஆண்டின் அருளில் நாம் பங்கெடுக்கும் இத்தவக்காலத்தில், ‘எதிர்நோக்கின் அடிப்படையில் நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம்’ என்றால்
என்ன? என்பதைக் குறித்தும் கடவுள் தம் இரக்கத்தால் நம் எல்லாருக்கும் தனிப்பட்ட விதத்திலும் குழுவாகவும் விடுக்கும் மனமாற்றத்திற்கான அழைப்பினைக் குறித்தும் ஒரு சில சிந்தனைகளை விவரிக்க ஆசைப்படுகிறேன்.
முதன் முதலாக,
பயணம்
மேற்கொள்வது:
இந்த யூபிலி ஆண்டின் விருதுவாக்கான ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ விடுதலைப்
பயண நூலில் விவரிக்கப்பட்டுள்ள வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிய இஸ்ரயேல் மக்களின் நெடிய பயணத்தை நம்மில் தூண்டி எழுப்புகிறது. அடிமைத்தளையிலிருந்து விடுதலையை நோக்கிய கடினமான இந்தப் பாதை, இறைவனால் விரும்பப்பட்டதும் வழிநடத்தப்பட்டதுமாய் உள்ளது. அவர் தம் மக்களை அன்பு செய்பவராகவும் எப்பொழுதும் அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கின்றார். நாம் வாழும் இந்நாள்களில் நம்முடைய சகோதர சகோதரிகள், தங்களுக்கும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் சிறந்ததொரு வாழ்வை அமைத்துக்கொள்ள அவலம் மற்றும் வன்முறை போன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துச் செல்ல நினைக்கும் அவர்களை நினைக்காமல், திருவிவிலியத்தினுடைய விடுதலைப் பயணத்தைச் சிந்தித்துப் பார்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆகவே,
மனமாற்றத்திற்கான முதல் அழைப்பு என்பது நாம் அனைவரும் இந்த வாழ்க்கையில் திருப்பயணிகள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்து வருகிறது. நம் அனைவரின் வாழ்வு, இந்தக் கருத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதைப் பற்றி, சற்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ள ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். ‘நான் உண்மையிலே பயணத்தை மேற்கொள்கிறேனா? இல்லை, பயத்தினாலும் எதிர்நோக்கின்மையாலும் செயலற்றவனாகவோ அல்லது என்னுடைய சுகமான வட்டத்தை விட்டு வெளியே வரமுடியாமல் தயக்கம் கொண்டவனாகவோ அதனால் நகர முடியாமல் அப்படியே தேங்கியே நிற்கிறேனா?’
நம்முடைய
அன்றாட வாழ்க்கையைப் புலம்பெயர்ந்தவரோடு அல்லது வெளிநாட்டவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அதன் வழியாக அவர்களுடைய அனுபவங்களில் எப்படி நாம் நம்மையே ஒன்றிணைத்துக் கொள்வது? என்ற படிப்பினையைப் பெறவும், இதன் வழியாகக் கடவுள் நம்மிடம் தந்தையின் இல்லத்தை நோக்கிச் சிறந்த முறையில் நம் திருப்பயணத்தில் முன்னேற எதை எதிர்பார்க்கிறார் என்று கண்டுணர்ந்துகொள்வதும் நமக்கான சரியானதொரு தவக்காலப் பயிற்சியாக அமையும். வழிப்போக்கர்களாகிய நம் எல்லாருக்கும் இது சிறந்ததோர் ஆன்மிகச் சோதனையாகவும் அமையும்.
இரண்டாவதாக, இணைந்து
பயணித்தல்:
கூட்டொருங்கியக்கத் திரு அவையாக இருக்க, இணைந்து பயணிக்க நாம் அழைக்கப்படுகிறோம். கிறித்தவர்கள் தனிமையாகப் பயணிக்கும் பயணிகளாக அல்லாமல், மற்றவர்களுடன் ஒன்றிணைந்து நடக்க அழைக்கப்படுகின்றோம். தூய ஆவியார் நம்மைப் பின்னால் கொண்டுவந்து நாம் சுயநலவாதிகளாக இல்லாமல் கடவுளையும் நமது சகோதர-சகோதரிகளையும் நோக்கி நடந்திட உந்தித் தள்ளுகிறார். இணைந்து
பயணித்தல் என்பது கடவுளின் பிள்ளைகள் என்ற பொதுவான மேன்மையின் அடித்தளத்தில் நம் ஒன்றிப்பை ஒருங்கிணைந்து பார்ப்பதாகும் (கலா 23: 26-28). அதாவது, ஒருவர் மற்றவருடன் இணைந்து நடப்பதும், எவரையும் தள்ளாமலும் மிதித்து விடாமலும், கோபம் மற்றும் வெளிவேடத்தால் எவரையும் பின்னால் விடாமலும் ஒதுக்கிவிடாமலும் இருப்பதாகும். நாம் அனைவரும் அன்பிலும் பொறுமையிலும் அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு ஒற்றை இலக்கை நோக்கி உறுதியோடு ஒரே திசையில் பயணிப்போம்!
இத்தவக்காலத்தில்
நம்முடைய வாழ்க்கையில், நம் குடும்பங்களில், பணித்தளங்களில் மற்றும் பொது இடங்களில் நாம் மற்றவருடன் ஒன்றாக இணைந்து நடப்பதற்கும், அவர்களுக்குச் செவிமடுப்பதற்குப் பதிலாக நம்முடைய
தேவைகளைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கும் சோதனையிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தகுதி உள்ளவர்களா? என்பதைக் குறித்து கடவுள், நம்மைச் சுய பரிசோதனை செய்ய அழைக்கிறார்.
இறையாட்சிப்
பணியில் பங்குபெறும் நாம் ஆயர்களாக, குருக்களாக, துறவிகளாக, பொதுநிலையினர்களாக மற்றவர்களோடு இணைந்து செயலாற்றுகிறோமா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். நம் அருகில் இருப்பவரோடும் தூரத்தில் இருப்பவரோடும் ஆக்கபூர்வமான உடல் மொழிகளில் வரவேற்கும் மனநிலையை வெளிப்படுத்துகிறோமா? குழுமங்களில் நானும் ஒருவர் என மற்றவர்கள் பங்கெடுக்கச்
செய்கிறோமா? அல்லது அவர்களைத் தனித்து வைக்க முயற்சித்திருக்கிறோமா? இதுவே மனமாற்றத்தின் இரண்டாம் அழைப்பாகும். அது கூட்டொருங்கியக்கத்திற்கான அழைப்பாகும்.
மூன்றாவதாக, எதிர்நோக்கின்
அடிப்படையில்
நாம்
அனைவரும்
இணைந்து
பயணிப்போம்:
ஏனெனில் வாக்குறுதியை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். யூபிலியின்
மையக்கருத்தான ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது’ (உரோ
5:5) என்பது, பாஸ்காவின் வெற்றியை நோக்கி நமது தவக்காலத் திருப்பயணத்தின் இலக்காக அமையவேண்டும். ‘நம்பிக்கை விடுதலை அளிக்கும்’
என்ற தனது திருமடலில் திருத்தந்தை 16-ஆம் ஆசிர்வாதப்பர் நமக்குக் கற்பித்ததைப் போன்று மனிதனுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவை. “சாவோ, வாழ்வோ வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமைமிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்த படைப்போ, நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை”
(உரோ 8:38-39), என்று கூற உறுதித்தன்மை தேவைப்படுகிறது. என் நம்பிக்கையாம் கிறிஸ்து உயிர்த்துவிட்டார்; அவர் மாட்சியில் வந்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்; சாவு வெற்றியாய் உருமாற்றம் பெற்றுள்ளது. ஆகவே, கிறித்தவர்களின் நம்பிக்கையும் சிறந்த எதிர்நோக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பில் அடங்கியுள்ளன.
இதுவே,
மனமாற்றத்தின் மூன்றாவது அழைப்பு. கடவுளையும் நிலைவாழ்வாகிய அவரது சிறந்த வாக்குறுதியையும் நம்பும் எதிர்நோக்கிற்கான அழைப்பாகும். ஆண்டவர் எனது பாவங்களை மன்னிக்கிறார் என்று உறுதிகொள்கிறேனா? மீட்புக்காக ஆவலாய் இருந்து அதை அடைவதற்குக் கடவுளின் உதவியைக் கேட்கிறேனா? வரலாற்றின் நிகழ்வுகளை விளக்குவதற்கும் நீதிக்கும் சகோதரத்துவத்துக்குமான அர்ப்பணத்தை என்னில் தூண்டுவதற்கும் நமது பொது இல்லத்தைப் பராமரிப்பதற்கும் மற்றும் அதன் வழியாக எவர் ஒருவரும் தனித்துவிடப்பட்டதாய் உணராமல் இருக்கவும் என்னைச் செயல்படத் தூண்டும் எதிர்நோக்கை உறுதிபட அனுபவிக்கின்றேனா?
சகோதரிகளே,
சகோதரர்களே, கிறிஸ்து இயேசுவில் நமக்குக் கிடைக்கப்பெற்ற கடவுளின் அன்பிற்காக நன்றி. ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது’
(உரோ 5:5) என்பதில்தான் நாம் உறுதி அடைந்துள்ளோம். நம்பிக்கை என்பது ஆன்மாவின் உறுதியான நிலையான நங்கூரம். அதுவே எல்லாரும் மீட்படைய திரு அவையை இறைவேண்டல் செய்யத் தூண்டுகிறது (1திமோ 2:4). விண்ணக ஆட்சியில் தனது மணவாளன் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் ஆவலைக் கொடுக்கிறது. இதுவே, அவிலா திரேசாவின் இறைவேண்டலாகவும் இருந்தது: “நம்பிக்கை கொள், ஓ மனமே, நம்பிக்கை
கொள். நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது. விழிப்பாய் இருங்கள், ஏனெனில், நிலையானவற்றைக் குறித்து உங்களது பொறுமையின்மை சந்தேகத்தை வலுப்பெறச் செய்தாலும், குறுகிய ஒன்றை நீண்டதாக மாற்றினாலும், அனைத்தும் விரைவாகக் கடந்து செல்கிறது”
(கடவுளுக்கு ஆன்மாவின் ஆச்சரியக் குறியீடுகள் 15:3).
நம்பிக்கை
எதிர்நோக்கின் அன்னையாம் கன்னி மரியா நம் அனைவருக்காகவும் பரிந்து பேசி, தவக்காலத் திருப்பயணத்தில் நம்மோடு இணைந்து பயணம் மேற்கொள்வாராக.
(உரோமை,
தூய யோவான் ஆலயம் இலாத்திரன் பேராலயம், 6 பிப்ரவரி 2025, மறைச்சாட்சிகளான பால் மீக்கி மற்றும் அவருடைய தோழர்கள் நினைவு தினத்தன்று கொடுக்கப்பட்டது.)