“தன் பணிக்காலங்களில் தனிப்பட்ட நபர்களின் பேராதரவைப் பெறவும், அவர்களின் ஆன்மிகக் காரியங்களில் அக்கறை காட்டவும் தந்தை லெவே தவறியதில்லை. கீழக்கரை, சித்தார்கோட்டை, இராமநாதபுரம், தேவிபட்டணம் போன்ற இடங்களிலிருந்த இஸ்லாமியர்களிடமும் இவர் நல்லுறவு கொண்டிருந்தார்.”
1962, அக்டோபர் 11 முதல்
1965 டிசம்பர் 8 வரை
நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகுதான் திரு அவையில் பொதுநிலையினர் மற்றும் அவர்தம் பங்களிப்பு பற்றிப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு முன்பே (1943-73) வாழ்ந்த இறை ஊழியர் லூயி மரி லெவே சே.ச. பொதுநிலையினரோடு இணைந்து
பணிபுரிந்துள்ளார்.
ஆண்டாவூரணியில்
22 ஆண்டுகளும், 13 ஆண்டுகள் இராமநாதபுரத்திலும், 17 ஆண்டுகள் சருகணியிலும் மறைப்பணியாற்றிய தந்தை லெவேயின் மறை அறிவிப்புப் பணியில் பெருவாரியாக பிரிட்டிஷ் இந்தியாவின் பொதுநிலையினர் பல்வேறு நிலைகளில் பங்கு பெற்றுள்ளனர். ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தம் பள்ளிகளில் பணிபுரிந்த இருபால் ஆசிரியர்கள், பயிற்சி
பெற்ற வேதியர்கள், இவர்களால் உருவாக்கம் பெற்ற கோவில்பிள்ளைகள், உபதேசியார்கள் எனப் பொதுநிலையினரின் பட்டியல் நீள்கிறது.
“எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரில் செய்து, அவர் வழியாய் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்” ( கொலோ
3:17) என்ற பவுல் அடியாரின் கூற்றுக்கு ஏற்ப பணிபுரிந்தார் தந்தை லெவே. இராமநாதபுரத்தில் தந்தை லெவே வாழ்ந்த காலங்களில் (1943-56) பிரான்சில் உள்ள
தன் உறவுகளுக்குத் தன் கைப்பட எழுதிய கடிதங்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதில் காணப்பட்டவையே இக்கட்டுரையின் கருவாய் அமைந்துள்ளன.
தன்
அண்ணன் மகன் இயேசுவின் மரியாவுக்கு மார்ச் 1949-இல் எழுதிய மடலில், “இங்குள்ள வேளாண் மக்கள் அறுவடையிலிருந்து கால் பலன் மட்டுமே பெற்றுள்ளனர். அவர்கள் தாமதமாக நடவு செய்யத் தொடங்கினர். மழை போதுமானதாக இல்லை; மழை இல்லாததால் அவர்களின் அறுவடைகள் அழிந்தன. பெண்கள் வயல்களில் புல் வெட்டி அவைகளைக் குதிரைக்காக இராமநாதபுரம் சென்று விற்கிறார்கள். இப்பணத்தில்
ஒரு நாளைக்குப் போதுமான உணவை வாங்குகிறார்கள். அவர்கள் இராமநாதபுரத்திலிருந்து தாமதமாகத் திரும்பி வருகிறார்கள். மிகவும்
சோர்வாக இருக்கிறார்கள். படிக்கும்
தைரியம் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்து வருகிறேன்”
என்று எழுதியுள்ளார்.
23.10.1953-இல் இயேசுவின் மரியாவுக்கு எழுதிய கடிதத்தில், “தேவிபட்டணம், ஆத்தங்கரை மீனவர்களின் குறைதீர்க்கும் வகையில் தஞ்சாவூரிலிருந்து நரம்பு நூல்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து மீன்வலைகளைப் பின்னினால் அவர்களின் மீன் பிடிப்பு முன்னேற வாய்ப்புகள் அதிகமாகும். இவைகளுடன்
அவர்களுக்கு நல்ல படகும் ஏற்பாடு செய்து கொடுப்பது நமது கடமையாக இருக்கிறது. அவ்வாறு உதவி செய்தால், அவர்கள் பெரிய அளவில் மீன்களைப் பிடிக்கலாம். அவர்களுடைய வாழ்க்கைத்
தரம் உயர வாய்ப்புள்ளது” என்று
எழுதியுள்ளார். இவை தந்தை லெவே அவர்கள் பொதுநிலையினர் மீது கொண்டிருந்த கரிசனையைப் படம் பிடித்துக்காட்டுகிறது.
மேலும்,
சமூகத்தில் பொருள் படைத்த சிலரும் விரும்பி இவரின் அருள்பணியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கப்பல் கேப்டன் திரு. மைக்கேல் கோமஸ். தந்தை லெவேயின் பேருபகாரி. இறைபக்தியும் மனிதநேயமும் கொண்ட கத்தோலிக்கச் செல்வந்தர். மதுரை மறைமாவட்டத்தில் திருத்தந்தையின் விருது பெற்ற முதல் கத்தோலிக்கர் இவர்.
1951-ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் 23 ஆம் நாள் தனுஷ்கோடி குழந்தை இயேசு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அருள்தந்தையர் அடைக்கலம், பொடல், லெவே மற்றும் ஜோக்கிம் கலந்துகொண்டனர் (The New Leader, 13.1.1952). இவர் தனுஷ்கோடியிலிருந்து இலங்கை செல்லும் கப்பலின் தலைவராய் விளங்கினார். இலங்கை கண்டியில் படித்த அன்றைய இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட அரசர் சண்முகராஜ இராஜேஸ்வர சேதுபதியின் புதல்வர்கள் இவர் கப்பலில்தான் பயணிப்பர். இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி இராஜா தினகரனாலும், அவர் மனைவி மாரி என்னும் மேரி நாச்சியாராலும் கட்டப்பட்டிருந்த கிறிஸ்துராஜா தொடக்கப் பள்ளியை ‘ராஜா தினகர் ஆர். சி. பள்ளி’ என்ற பெயர் மாற்றத்துடன் தந்தை லெவேக்கு வாங்கிக்கொடுத்தவர் இவரே. இன்று அதே பெயரில் உயர்நிலைப் பள்ளியாய் உயர்ந்து நிற்கிறது அப்பள்ளி (நன்றி: ‘ஏழைப்பங்காளன் அருள்தந்தை லூயி லெவே சே.ச. D.
கஸ்பார் S.H.J. 21.3.1999).
இத்தகு
செல்வாக்குப் பெற்ற கேப்டன், 1955-இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அவர் உடல் நலிந்து வருவதையும், வேதனையில் துடிதுடிப்பதையும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பதையும், அருளானந்தரின் பரிந்துரைக்காய் ஏங்கி நிற்பதையும் மிகுந்த மனவேதனையோடு தன் அண்ணன் மகள் இயேசுவின் மரியாவுக்கு 07.06.1955-இல் எழுதிய
கடிதத்தில் குறிப்பிடுகிறார். லூர்துநகர் சென்று லூர்து அன்னை கெபியில் கேப்டனுக்காகச் செபிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறார்.
பாம்பனிலிருந்து
இரயில் நிலையத்தில் திரும்பி வரும்போது, இரயில்வேயில் ஓய்வு பெற்ற அதிகாரியைச் சந்திக்கிறார். இவர் ஒரு பிராமண ஐயங்கார். 1914-18 போரில் பொதுப் போக்குவரத்துக் கண்காணிப்பாளராக இருந்தவர். இவருடன் உரையாடும்போது “இந்து, கிறித்தவ மதங்களிடையே குறைந்த வித்தியாசமே உள்ளன. கிறிஸ்துவும் கிருஷ்ணரும் ஒருவரே“ என்கிறார் அவர். ஆனால், தந்தை லெவே அவரிடமிருந்து முரண்படாமல், கிறிஸ்துவின் வல்லமை, உன்னதம், முழுமை போன்றவைகளைப் பற்றிக் கூறி கத்தோலிக்கத் திருமறையை விளக்குகிறார். இதில் சேர நல்லெண்ணம் ஒன்றே போதும் என்று உணர்த்துகிறார். இயேசு கற்பித்த செபத்தை மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டுக்கொள்கிறார். இவர் மனைவியை இழந்தவர். இறக்கும் தருவாயில் தன் மனைவி கேட்டுக் கொண்டதற்கிணங்க 60 வயதாகியும் மறுமணம் செய்துகொள்ளாமல் ஆரோக்கியமாக வாழ்கிறார். “என் மனைவி நல்ல மனசாட்சியுடன் இறந்தார்”
என்கிறார். நல்ல மனசாட்சியுடன் இவ்வுலகை விட்டுச் செல்லும் இந்து மத அன்பர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள் என்று இந்த நிகழ்வினைத் தன் அண்ணன் மகள் இயேசுவின் அன்னை மரியாவுக்கு 17.9.1950-இல் எழுதிய கடிதத்தில் பதிவிடுகிறார்.
இவ்வாறு
தன் பணிக்காலங்களில் தனிப்பட்ட நபர்களின் பேராதரவைப் பெறவும், அவர்களின் ஆன்மிகக் காரியங்களில் அக்கறை காட்டவும் அவர் தவறியதில்லை. கீழக்கரை, சித்தார்கோட்டை, இராமநாதபுரம், தேவிபட்டணம் போன்ற இடங்களில் இருந்த இஸ்லாமியர்களிடமும் இவர் நல்லுறவு கொண்டிருந்தார்.
‘செம்மண் புனிதர்’ அருளானந்தர் திருத்தலம் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டிருக்கும் இவ்வேளையில், சாதி, மதம் கடந்து பொதுநிலையினரோடு நல் லுறவு கொண்டிருந்த சின்ன அருளானந்தர் இறை ஊழியர் லூயி லெவே அவர்கள் விரைவில் புனிதராய் உயர்ந்து நம் உள்ளங்களையும் இல்லங்களையும் பலிபீடங்களையும் அழகு செய்வாராக!