news-details
ஆன்மிகம்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 12

பாவத்தின் மீதான வெற்றி ஒரு பெண் வழியாக வருகிறது (தொநூ 3:15) (Victory over sin comes through a woman)

மீட்புப் பணியில் கிறிஸ்துவோடு ஒத்துழைப்பதன் வழியாகச் சாத்தானை வெற்றிக்கொள்வதில் கன்னி மரியா சிறப்பானதொரு பங்களிப்பைத் தருகின்றார்.

1. “எவ்வாறு உலகிலே கிறிஸ்துவின் வருகை படிப்படியாகத் தயார் செய்யப்பட்டு வந்தது என்னும் மீட்பு வரலாற்றைப் பழைய ஏற்பாட்டு நூல்கள் விவரிக்கின்றன. தொன்மை வாய்ந்த இந்நூல்கள் திரு அவையில் வாசிக்கப்பெற்று, பிற்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் ஒளியில் உணரப்பெறும்போது மீட்பரின் தாயான ஒரு பெண்ணின் உருவகத்தைப் படிப்படியாகத் தெளிவாய்க் காட்டுகின்றன (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 55). இந்த அறிக்கைகளோடு இரண்டாம் வத்திக்கான் சங்கமானது மரியா பற்றிய கருத்துருவமானது மீட்பு வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே படிப்படியாக எவ்வாறு வளர்ந்து வந்தது என்பதை நமக்கு உணர்த்துகின்றது. பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களில் மரியா பல இடங்களில் மறைமுகமாக ஏற்கெனவே  குறிப்பிடப்பட்டிருக்கின்றார். ஆனாலும், அவை திரு அவையில் வாசிக்கப்படுகின்ற பொழுதும், புதிய ஏற்பாட்டின் ஒளியில் விளக்கப்படுகின்ற பொழுதும் அந்தப் பழைய ஏற்பாட்டுக் குறிப்புகள் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனமரியாவின் திருவயிற்றிலிருந்து இந்த உலகிற்கு வரவிருந்த கிறிஸ்து பற்றிய பழைய ஏற்பாட்டு வெளிப்பாட்டிற்கு, இந்தத் திருவிவிலிய ஏடுகளை எழுதுவதற்கு மனிதர்களைத் தூண்டியதன் வழியாகத் தூய ஆவியார் தயார் செய்தார்

2. மீட்பரின் தாயை முன்னறிவித்த திருவிவிலிய ஏடுகளிடையே, திருச்சங்கமானது ஆதாம்-ஏவாளின் பாவத்திற்குப் பிறகு அவரின் மீட்புத்திட்டத்தைக் கடவுள் வெளிப்படுத்திய திருவிவிலியப் பகுதிகளைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகின்றது. தீய சக்தியின் மொத்த உருவமான அந்தப் பாம்பிடம் கடவுள் இவ்வாறு கூறுகின்றார்: “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய் (தொநூ 3:15). 16-வது நூற்றாண்டிலிருந்து திரு அவையின் பாரம்பரியத்தால் தொடக்க நற்செய்தி (Protogospel) என்று அழைக்கப்பட்ட இந்த அறிக்கைகள் மனுக்குலத்தின் தொடக்கத்திலிருந்தே பாவத்திலிருந்து அதனை மீட்பதற்கான கடவுளின் விருப்பத்தை நாம் அறிந்துகொள்வதற்கு உதவுகின்றன. திருவிவிலிய ஆசிரியர்களின் சித்தரிப்புகளின்படி, பாவத்திற்கான கடவுளின் முதல் எதிர்வினை உண்மையில் பாவிகளைத் தண்டிப்பதிலில்லாமல், மீட்பிற்கான நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குவதிலும், அவரை ஏளனம் செய்தவர்களையும் நோக்கி அவரின் தாராள குணத்தைக் காட்டியதன் வழியாக, மீட்புப் பணியில் அவர்களைத் துடிப்புடன் ஈடுபடச் செய்வதிலும் இருந்தது.

முதல் மனிதனாகிய ஆதாமுக்கு முன்பே பாம்பின் ஆசைக்கு (சபலத்திற்கு) இணங்கிய பெண்ணின் தனித்தன்மை வாய்ந்த அந்தத் தலைவிதியைத் தொடக்க நற்செய்தியின் வார்த்தைகள் வெளிப்படுத்தினாலும், அதன் பிறகு இறைத்திட்டத்தின் விளைவினால் பெண்ணானவள் கடவுளின் முதல் நண்பராகின்றாள். மனிதனைப் பாவத்தை நோக்கி மயக்கிச் சிக்க வைத்ததில் பாம்பின் முதல் துணையாளியாக இருந்தவள் ஏவாள்தான். இந்தச் சூழ்நிலையை அப்படியே தலைகீழாக மாற்றி, பாம்பின் பகையாளியாக அந்தப் பெண்ணை மாற்றுவேன் என்று கடவுள் அறிவிக்கின்றார்.

3. எபிரேய மூலத்தின்படி, தொடக்க நூலின் பாம்பிற்கு எதிரான செயலை நேரடியாகப் பெண்ணிற்குக் குறித்துகாட்டாமல், திருவிவிலிய ஆய்வாளர்கள் மரியாவின் மகனுக்குத்தான் குறித்துக் காட்டுகின்றார்கள். இருப்பினும், சோதிப்பவர்க்கு எதிரான அந்தப் போராட்டத்தில் அந்தப் பெண் ஆற்றப்போகின்ற பங்களிப்பிற்கு அந்தக் குறிப்பானது முக்கியத்துவம் கொடுக்கின்றது. உண்மையில் அந்தப் பாம்பைத் தோற்கடிக்கக் கூடியவராக அவரின் மகன்தான் இருப்பார்

யார் இந்தப் பெண்? இந்தப் பெண்ணின் பெயர் எந்த இடத்திலும் திருவிவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஏவாளின் பாவத்திற்குப் பரிகாரமாகக் கடவுளால் விரும்பப்பட்ட புதியதொரு பெண்ணைப் பற்றியதொரு பார்வையை நமக்குத் தருகிறது. உண்மையில், பெண்ணின் மதிப்பு மற்றும் பங்கை மீட்டு சாத்தான் மீதான கடவுளின் வெற்றியில் அவளின் தாய்மைப் பணியைச் செய்வதன் வழியாக நிலையற்ற மனுக்குலத்தின் தலைவிதியை மாற்றுவதற்கான பங்களிப்பைத் தருவதற்கு அப்பெண்ணானவள் அழைக்கப்படுகின்றார்.

4. புதிய ஏற்பாடு மற்றும் திரு அவையின் பாரம்பரியத்தின் ஒளியில், அந்தத் தொடக்க நற்செய்தியால் அறிவிக்கப்பட்ட அந்தப் பெண்ணானவள் மரியாதான் என்று நாம் அறிவோம். மேலும், அவருடையவித்தில்தான்பாஸ்கா மறைபொருளில் சாத்தானுடைய சக்தியின் மேல் வெற்றிகொண்ட அவரின் மகனான இயேசுவை நாம் கண்டுகொள்கின்றோம்.

அந்தப் பாம்பிற்கும் பெண்ணிற்குமிடையே கடவுள் வைத்த அந்தப் பகைமையானது இரண்டு வழிகளில்  மரியாவில்  நிறைவேறுவதையும் நாம் காணலாம். கடவுளின் நிறைவான கூட்டாளியாகவும், சாத்தானின் எதிரியாகவும் இருப்பதற்காகப் பாவத்தின் எல்லாக் கறைகளிலுமிருந்து பாதுகாக்கப்பட்டு தூய ஆவியாரின் அருளில் உருவாக்கப்பட்ட அமல உற்பவத்தின் வழியாக மரியா சாத்தானின் பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார். அதோடு, தீய சக்திக்கெதிரான போரில் மரியா முழுமையாகத் தன்னையே அர்ப்பணித்து, அவருடைய மகனின் மீட்புப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இவ்வாறு, அவரின் ஆன்மிக அழகையும், அதிசயிக்கத்தக்க பணியில் அவரின் நெருங்கிய பங்களிப்பையும் எடுத்துக்கூற திரு அவையின் நம்பிக்கை வழியாக மரியாவுக்கு வழங்கப்பட்ட  ‘அமல உற்பவி (Immaculate Conception) மற்றும்மீட்பரின் உடன் உழைப்பாளர் (Co-operator of the Redeemer) போன்ற சிறப்புப் பெயர்கள் அந்தப் பாம்பிற்கும் புதிய ஏவாளுக்கும் இடையேயுள்ள என்றென்றைக்குமான பகைமையைக் காண்பிக்கின்றன.

5. திருவிவிலிய விளக்கவுரையாளர்களும் இறையியலாளர்களும் மரியா, புதிய ஏவாள் என்கின்ற சிந்தனையானது மீட்புத் திட்டத்தின் மீதான தொடக்க நூல் பக்கங்களிலிருந்து மிளிர்கின்ற ஒன்றாகும் என்று கருதுகின்றனர். அந்த ஏட்டில் அவர்கள் ஏற்கெனவே மரியாவுக்கும் திரு அவைக்குமிடையேயான தொடர்பைக் காண்கின்றனர். இங்குத் தொடக்க நூலில் பொதுவானதொரு சொல்லாடலாகப் பயன்படுத்தப்பட்டபெண்என்ற சொல்லானது சிறப்பாக தீயசக்திக்கு எதிரான போரில் பங்குகொள்ள அழைக்கப்பட்டவர்கள் என்கின்ற விதத்தில், நாசரேத்தூர் மரியாவோடு  அவரின் மீட்புத் திட்டச் செயலில் இணைந்து செயல்பட பெண்களைத் தூண்டுகிறது.

ஏவாளைப் போன்று பெண்களும் சாத்தானின் ஏமாற்றுதலுக்குப் பலியாகலாம். ஆனாலும், அவர்களும் மீட்பிற்கான வழியில் கடவுளின் முதல் நண்பர்களாகி மரியாவோடு இணைவதன் வழியாக எதிரியோடு போரிடுவதற்கானதொரு சிறப்பான வலிமையைப் பெற முடியும்பெண்ணுடனான கடவுளின் இந்தப் புரிந்துகொள்ள முடியாத உறவைப் பல்வேறு வழிகளால் இன்றும் நம்மால் காண முடியும். பெண்களின் இடைவிடா தனிச்செபம், திரு வழிபாட்டுப் பக்திமுயற்சி, மறைப்பணி, அன்பிற்கான சாட்சியம், குடும்பத்தில் மறைக்கல்வி, அர்ப்பணிப்பு வாழ்விற்கான இறையழைத்தல் மற்றும் பல.

இவை அனைத்துமே முதல் நற்செய்தியின் மிகவும் உறுதியான நிறைவேற்றத்திற்கான அடையாளங்களாகும். உண்மையில், திரு அவையின் எல்லைகளையும் தாண்டி உலகம் அனைத்திற்கும்பெண்என்ற இந்தச் சொல்லை விரிவுபடுத்தப் பரிந்துரைக்கலாம். இவ்வாறு குறிப்பாக, சாத்தானுக்கும் தீமைக்கும் எதிராகக் கடவுளின் முதல் துணையாளராக அறிவிக்கப்பட்ட மரியாவின் பணியில் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்ற அவரின் (மரியாவின்) தனித்துவமிக்க அழைத்தலானது, மனுக்குலத்தின் மற்றும் ஒவ்வொரு பெண்ணின் அழைத்தலிலிருந்தும்  பிரிக்கமுடியாததாக இருப்பதைத் தொடக்க நற்செய்தியானது காட்டுகின்றது.

மூலம்: Pope John Paul II, Victory over sin comes through a woman, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 31 January 1996, p. 11.