இரயில் பயணம் எப்போதுமே சுவாரசியமானதுதான். சிறுவயதில் மலை மற்றும் வயல்களுக்கிடையே வளைந்து நெளிந்து நகரும் ஆயிரம் கால் இராட்சசப் பூச்சி போன்ற பிரமிப்பைத் தந்தது தூரத்தில் ஊர்ந்து செல்லும் இரயில் வண்டி. சிறுபிள்ளைகளுக்கு அந்த இரயில் பெட்டிகளில் பயணிக்கும் எல்லாருமே உறவினர்கள் ஆகிவிடுகின்றனர், கையைத் தூக்கி ‘டாட்டா’ காட்டும்போது. சிறுவயதில் இரயில் வண்டி எத்தனை பெட்டிகளை இழுத்துச் செல்கின்றது என்பதை வைக்கோல் போர்வையின் முதுகிலே சவாரிச் செய்துகொண்டே பார்த்து மகிழ்ந்ததையும் மறக்க முடியாது.
என்னதான்
இரயில் வண்டி தூரத்தில் பெயர் சொல்லி அழைப்பது போன்று சத்தம் போட்டுக் கொண்டே சென்றாலும்,
அதில் என்றாவது ஒருநாள் பயணிக்க வேண்டும் என்ற
பேரார்வம் என்றுமே இருந்தது. வளர்ந்து பலமுறை இரயில் வண்டியிலே பயணித்திருந்தாலும்
ஒவ்வொரு முறையும் அது ஒரு புது அனுபவத்தைத் தந்துகொண்டே இருக்கும். ஒவ்வோர் இரயில்
வண்டியும் பல ஆயிரம் மனிதர்களை மட்டுமல்ல, பல ஆயிரம் கதைகளையும் சுமந்து செல்கின்றது.
சமீபத்தில்
சென்னை - நாகர்கோவில் செல்லும் ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சில் பயணித்தேன். பொங்கல் விடுமுறை
என்பதால் வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்யாமலேயே பலரும்
கிடைத்த இருக்கைகளிலே அல்லது இடங்களிலே தங்களை நிரப்பிக் கொண்டார்கள். முதியவர்கள்,
இளையவர்கள், பெண்கள் என்று எல்லாரும் இந்த இடைச்செருகல்களில் உண்டு. ‘இது முன் பதிவு
செய்து பயணிக்கக்கூடிய பெட்டிதானா?’ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. ஒருசிலர், ‘கொஞ்சம்
ஒதுங்கி உட்காருங்களேன்’ என்று சொல்லி கிடைத்த இடத்தில் அமர்ந்து
கொண்டார்கள். சிலர் இடம் கேட்டும் கடுகு பொட்டித் தெறித்த பதிலும் பார்வையுமே கிடைத்ததால்,
வழியிலேயே பெரும் கூட்டம் நின்று பயணித்தது. அவர்களைக் கடந்து கழிவறைக்குச் செல்லும்
பெண்கள், குழந்தைகளுக்கு அப்பெருங் கூட்டம் அசௌகரியத்தைத் தந்தது.
குழந்தைகளின்
துள்ளல், மின்விசிறிகளின் அலறல், விழிப்பேச்சு, நண்பர்களின் நச்சரிப்பு, அரசியல் கிசுகிசு,
மொபைலில் சத்தமாக ‘இன்ஸ்டாகிராம்’ சிரிப்பு, இடையிடையே ‘தண்ணீ பாட்டில்,
தண்ணீ பாட்டில்...’ என்னும் அழைப்பு, காணாமல் போன தண்ணீர் பாட்டில் என்னும் பெயர் கொண்ட
சிறுவன் ஒருவனைப் பெற்றோர் கூட்டத்தில் தேடி அலைவதுபோல. நடமாடும் மனிதக்கடைகள், உணவுப்
பதார்த்தங்கள், விதவிதமான பாடல்களைப் பாடி
யாசகம் கேட்கும் மேடை கிடைக்காத சங்கீத மேதைகள், துப்புரவாளர்கள், காய்கறி-பழ வியாபாரிகள்...
என்று ஒவ்வொரு பயண நிறுத்தத்திலும் தாவி ஏறும் அன்றாடங்காய்ச்சிகள். இரயில் வண்டியின்
ஓட்டத்தில் பல கறைபடிந்தக் கதைகளும் வலி நிறைந்த அனுபவங்களுமே கூட இழுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த
இரயில் பயணத்தைப் போன்றதுதான் இந்த அல்காரித அபத்தங்களும். ‘அல்காரிதம்’ (algorithm) என்பதை ‘தானியங்கி நெறிப்பாட்டு முறை’ என்று மொழிபெயர்க்கலாம். இரயில் பயணத்தின்போது நமக்குத்
தேவையானதை யாரோ ஒருவர் நம் இருக்கையிலேயே கொண்டு வந்து தருகின்றார். அவர் தருவதை நாம்
உண்ண வேண்டியுள்ளது. அந்த உணவுப்பொருளின் சுவை, தரம் பற்றிய கேள்வி கேட்க முடிவதில்லை.
ஆயிரம் உரையாடல்கள் பல்வேறு மொழிகளில் நம் செவிப்பறையைத் தட்டிக்கொண்டே இருக்கின்றன.
அதில் எது சுவாரசியமோ அதை நாம் உற்றுக்கவனிக்க முடிகின்றது. எங்கோ திரும்பத் திரும்ப
ஒலிக்கும் பாடல் பயணம் முழுவதும் நம் நாவில் ஒட்டிக்கொள்கின்றது.
எங்கெல்லாம்
இரயில் நிற்கின்றதோ, அந்த இடத்தில் பிரபலமானவைகள் நமக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
மதுரை என்றால் மல்லி, கோவில்பட்டியென்றால் முறுக்கு, திருநெல்வேலியென்றால் அல்வா!
நாம்
யாருடனாவது பேசினால் அந்த நபருடனான உரையாடல் இரயில் நிறுத்தம்வரை நீள்கின்றது. யாரை
வாஞ்சையோடு பார்க்கின்றோமோ, அவர் அடிக்கடி நம் கண்முன்னே வந்து செல்கின்றார். இந்தப்
பொறிமுறைதான் (mechanism) இன்று சமூக ஊடகங்களையும் இயக்குகின்றது.
டிஜிட்டல், மனிதன் ஒவ்வொருவரையும் ஆள்கின்றது. இந்த இரயில் பயண நிகழ்வுகள், நம்மோடு
பயணிக்கும் மனிதர்கள், நம் கண்முன்பாக வலம் வரும் உணவுப் பதார்த்தங்கள், நாம் கேட்கும் பாடல்கள், அருகிலிருப்பவர் அடிக்கடிப்
பேசும் கருத்தியல்கள், சன்னல் வழியே காணும் கலர் காட்சிகள், அடிக்கடி வரும் இரயில்
நிறுத்தங்கள்... இப்படி எல்லாமே யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்று வேண்டுமென்றே வடிவமைத்த
மேடை நாடக ஸ்கிரிப்டின் அடிப்படையில் அரங்கேறுகின்றது என்போமானால், நம் உணர்வு நிலை
என்ன? இப்படியாகத்தான் சமூக ஊடக ‘அல்காரிதம்’ செயல்படுவதாகக்
கருதப்படுகின்றது. உடைத்துச் சொல்ல வேண்டுமென்றால், நம்மை யாரோ அல்லது ஏதோ ஒன்று உளவுப்
பார்த்து நமக்கு உதவி செய்கின்றோம் என்ற போர்வையில் நம் மூளையைச் சலவை செய்கின்றது
எனலாம்.
நாம்
எதை வாங்குவது? எதைப் பார்ப்பது? யாருக்கு வாக்கு செலுத்துவது? எதை நாம் விவாதப் பொருளாக
எடுத்துக்கொள்வது? எதைச் சிந்திப்பது? இப்படி எல்லாமே அல்காரிதத்தின் மாயாஜாலக் குமிழிக்குள்
(filter bubble) மாட்டிக்கொண்டதன் விளைவு என்கின்றார்கள்.
ஒரே
கருத்து அல்லது செய்தி மீண்டும் மீண்டும் நமக்குப் பரிந்துரைக்கப்படுவதால் (eco-champer) நாம் அதனையே உண்மை என ஏற்றுக்கொண்டாக
வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றோம். ஒரு குறிப்பிட்ட சிந்தனை, ஒரு குறிப்பிட்ட
பார்வை, ஒரு குறிப்பிட்ட விருப்பநிலை, ஒரு குறிப்பிட்ட உலகத்தின் ஒற்றைப் பிரஜையாக
(silos) நம்மை மாற்றிவிடுவதும் இந்த அல்காரிதம்தான்.
இந்த அல்காரித சூட்சமத்தைத் தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்தி உலக வர்த்தக வித்தகர்கள்
இலாபம் பார்க்கின்றனர், பெரும் அரசியல் கட்சிகள் ஆட்சிக் கட்டிலிலே அமர்கின்றனர், கருத்தியல்வாதிகள்
சமூகக் கட்டமைப்பை உடைத்து மறுசுழற்சிக்கு அல்லது வெகுசன மக்களின் சிந்தனையை மாற்றியமைக்க
(social engineering) துடிக்கின்றனர்.
இந்தச்
சமூக ஊடக அல்காரித சூட்சமத்தை அறிந்து வாழ்வது என்பது நம் இரயில் பயணத்தில் நாமே ஓட்டுநரும்
நாமே நடத்துநரும் நாமே பயணியும் நாமே பயணமும் என்ற நிலை உருவாக உதவும்.