“இறைவார்த்தையின்படி வாழ்ந்தவர்களே புனிதர்கள்” என மறைந்த திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் வலியுறுத்திக் கூறுகிறார். இறைவார்த்தையினின்று புறப்பட்டு வரும் சுடரொளி போன்று ஒவ்வொரு புனிதரும் இறையடியார்களும் விளங்குகின்றனர். இயேசுவின் பாதச்சுவட்டைத் தன் வாழ்வில் பதித்து புனிதம் பெறுகின்றனர். “தூயோராய் இருங்கள்; ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நான் தூயவர்” (லேவி 19:2) என்ற இறைவாக்கின்படி, கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப தூய வாழ்வு வாழ்ந்து, தூய்மையான நெறிமுறைகளால் தங்களை அலங்கரித்து நடமாடும் புனிதர்களாய், மாமனிதர்களாய் வாழ்ந்து தடம்பதித்துச் சென்றவர்கள்தான் புனிதர்கள். அத்தகையவர்களின் வரிசையில் இடம்பெறுபவருள் ஒருவர்தான் இறை ஊழியர் லூயி மரி லெவே!
முகவை
மாவட்டத்தின் விசுவாச வாழ்வின் விளக்காக வாழ்ந்து, செம்மண் புனிதர் அருளானந்தரின் அடிச்சுவட்டில் தடம்பதித்து, ‘சின்ன அருளானந்தர்’ என்ற
பெயருக்குச் சொந்தக்காரராக இருப்பவர் சருகணியின் புனிதர், மேற்கத்திய சூரியன் அருள்தந்தை லூயி மரி லெவே!
பிறப்பும் இளமைப்
பருவமும்
06.04.1884-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ரென் மாவட்டத்தில் இலாவி என்ற ஊரில், திருவாளர் ஜோசப் லெவே, திருமதி. ஜூலியானா லெபினே என்ற தம்பதியருக்குப் பத்தாவது குழந்தையாய், மண்ணின் மாணிக்கமாய் பிறந்தார். ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்’ என்பது போல, குடும்பத்திலேயே சிறப்பான பண்புகளுடன் வளர்க்கப்பட்டார். இறையுறவு, பிறர் உறவு, இறைவார்த்தையைப் படித்து வாழ முயற்சித்தல் போன்றவற்றுடன் செபம் செய்தல், செபமாலை செபித்தல் போன்ற ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தி வளர்க்கப்பட்டவர்.
பிரான்ஸ்
நாட்டில் சிறப்பாகப் பணிபுரிந்து வரும் இயேசு சபைக் குருக்களின் வாழ்வு அவரை ஈர்த்ததால் இறைப்பணி செய்ய ஆர்வம் கொண்டு, 06.10.1906-இல், பெல்ஜியத்தில் உள்ள இயேசு சபையில் தன்னை இணைத்துக் கொண்டார். டூலூஸ் மறைமாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் நவ துறவியாகப் படித்துவிட்டு
தமிழ், ஆங்கிலம் மொழிப் பயிற்சி
பெறுவதற்காக ஓராண்டு கொடைக்கானலில் உள்ள செண்பகனூரிலும், மேலும் இரண்டு ஆண்டுகள் மெய்யியல் பயிற்சியும் பெற்றபின், நான்கு ஆண்டுகள் களப்பணிக்காகப் (Regeney) பாளையங்கோட்டைக்கும்,
இறையியல் பயிற்சிக்காக இரண்டு ஆண்டுகள் டார்ஜிலிங் மாவட்டத்திலும் பயிற்சிகளை முடித்து, 13.01.1920-இல் குருத்துவ அருள்பொழிவு பெற்றார். அதன்பின் ஆண்டாவூரணி பங்குப்பணியாளராக சிவகங்கை மண்ணில் தன் அடிச்சுவடுகளைப் பதித்தார்.
1921-1943 வரை முத்தாய்ப்பான
பணிகளைச் செய்தார். பின் 1943 - 1956 வரை மக்கள் வியந்து போகும் வகையிலே ஆக்கப்பூர்வமான பணிகளை ஆவலோடும் ஆனந்தமாகவும் செய்து மக்களின் மனத்தைக் கொள்ளை கொண்டார். பின்னர் சருகணியின் சரித்திரமாய் இம்மண்ணிற்குப் பணிவிடை புரிய வந்தவர் ஆன்மிகக் குருவாக இருந்து, ஓய்வுக்காக வந்தவர் ஓயாது பணிபுரிந்து, ஓங்கு புகழோடு உயர்ந்து நிற்கிறார் நம் அனைவர் மனத்திலும்!
குருத்துவ வாழ்வியல்
அருள்பொழிவு
நாளில் இறைவன் தந்த புனிதப்படுத்தும் பணி, மேய்ப்புப் பணி, போதனைப் பணி என்னும் முப்பெரும் பணிகளிலும் தடம் பதித்தவர். இறைவார்த்தை பரவிட, இறைப்பணிகள் தொடர்ந்திட இறக்கும் வரையும் தன்னை இயக்கியவர். நற்செய்தியின் விழுமியங்களை எட்டுத்திக்கும் பறைசாற்றி குருக்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து குன்றின் மேலிட்ட தீபமாய் ஒளிர்ந்தவர்.
பங்குப் பணித்தளத்தில்
“இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்” (1தெச
5:17) என்ற இறைவாக்கின்படி, அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து செபம் செய்துவிட்டு திருப்பலி நிறைவேற்றும் இவர், பின் ஒப்புரவு அருள்சாதனம், செபமாலை, சிலுவைப்பாதை போன்ற ஆன்மிகச் செயல்களால் இறையுறவில் திளைத்திருப்பவர். இறைவனின் பிரசன்னத்தால் ஒவ்வொரு நாளும் அரும்பெரும் செயல்களைச் செய்தவர்.
நற்கருணை ஆண்டவரின் நல்லாசிர் பெற்று, நாளெல்லாம் இறையுறவில் மூழ்கி இயேசுவைச் சுவாசமாக்கியவர்.
ஞாயிறு
திருப்பலியின் மகத்துவத்தை மக்கள் அறிய வீடு வீடாக, தெருத் தெருவாகச் சென்று, மக்களை அழைத்து வந்து திருப்பலியின் மேன்மையை உணர்த்தியதோடு, செபம் சொல்ல, செபமாலை செய்ய மக்களை ஊக்கப்படுத்தியவர். திருப்பலி முடிந்தபின்னும் இறைமக்களோடு நேரத்தைச் செலவிட்டு ‘இயேசுவே, அன்பின் அரசரே! உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்’ என்ற
மந்திரத்தை மக்களுக்கு ஊட்டியவர். ஆழமான போதனைகளால் மக்களை இறைவன்பால் ஈர்த்தவர். புனித அருளானந்தர்மீது அளப்பரிய பக்தி கொண்டவர். அவர் வழித்தடத்தில் தன் பாதையை அமைத்துக் கொண்டவர். செப, தவ, தான, தர்மங்களால் கருணையாளர் ஆனவர். “எனக்கு வலுவூட்டுகிற ஆண்டவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு”
(பிலி 4:13) என்ற புனித பவுல் அடியாரின் கூற்றை நம்பியவர். அவருக்கு வலுவூட்டும் சக்தியாக இருந்தது செபம் மட்டுமே. சோதனைக்கு உள்பட்டபோதெல்லாம், கதவு, சன்னல்களை அடைத்துக் கொண்டு ஐந்து முடிச்சு கொண்ட சாட்டையால்
தன்னை அடித்துக் கொண்டு சோதனைகளை வென்றவர்.
பண்பு நலன்களின்
செயல்
வீரர்
அன்பு,
மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, சாந்தம், விசுவாசம் போன்ற ஆவியின் கொடைகளால் தன்னை அலங்கரித்துக் கொண்டவர். குழந்தைக்குரிய மனநிலையுடன் வாழ்ந்தவர். வானகத்தின் திறவுகோலான எளிமையை வாழ்வாக்கியவர். இறையன்பின் சாயலை மக்களிடமும் இயற்கையிடமும் கண்டு நட்புக் கொண்டு வாழ்ந்தவர்.
ஆடு,
மாடு வளர்ப்புப் பிராணிகளுக்கு நோய் வந்தாலும் செபித்து, புனித நீர் தெளித்துச் சுகப்படுத்தியவர். யார் வீட்டில் எது நடந்தாலும் பங்குப் பணியாளராக மட்டுமல்ல; குடும்ப உறவினர்போல் கலந்துகொண்டு அனைவரையும் மகிழ்விப்பவர். கொடுப்பதில் இன்பம் கண்டு, அனைவருக்கும் குறிப்பாக, ஏழைகளுக்குக் கொடுத்து வாழ்வதில் நிறைவு பெற்றவர்.
அறிவார்ந்த
தோழமை, ஆதிக்கமில்லாத அணுகு முறை, சாதி வேறுபாடில்லாத உறவு, கலாச்சார ஒற்றுமை போன்ற விழுமியங்களில் மையம் கொண்டு, உயர்ந்த செயல்பாடுகளால் மக்களைக் கவர்ந்தவர். மக்களிடமிருந்து வரும் ஒவ்வொரு கடிதத்தையும் வாசித்து, உருக்கமாய் செபித்து, செபத்தின் வெளிப்பாடாக பதில் கடிதம் தவறாது அனுப்பியவர்.
மக்களால் கொடுக்கப்பட்ட
செல்லப்
பெயர்கள்
லெவே
சாமி, தாத்தா சாமி, மழைச்சாமி, வெள்ளக்காரச் சாமி, ஆண்டாவூரணியின் ஆதவன், சருகணியின் சகாப்தம், முகவையின் முகவரி, மேற்கத்திய சூரியன் எனப் பல்வேறு அடைமொழிகளில் சிவகங்கைச் சீமையில் பவனி வந்தவர். இத்தகைய மாமனிதர் வாழும்போதே இறைத்துணையால் புதுமைகள் செய்யும் சிறப்பு வரம் பெற்றவர். எல்லோராலும் வணக்கம் செலுத்தத் தகுதியுள்ளவர். திரு அவையில் புனிதர் என்னும் அங்கீகாரம் பெற்று, உலக மக்கள் அனைவரும் போற்றும் புனிதப் பட்டம் பெறும் காலம் இதோ கனிந்து வருகிறது. அதற்காகச் செபிப்பதோடு, தந்தை லூயி மரி லெவேயின் ஆன்மிகத்தோடு அவரின் புனிதமான நற்பண்புகளால் நம் மனத்தை நிறைத்து, அவரின் வழித்தடங்களை நமது வாழ்வின் தடங்களாக்கி நாமும் புனிதம் பெறுவோம்; புது வாழ்வு வாழ்வோம்!