news-details
ஆன்மிகம்
எதிர்நோக்கின் அடையாளங்கள் (எதிர்நோக்குடன் பயணிக்கும் திரு அவை-8)

5. இளையோரைக் காக்க அழைப்பு

இளையோரின் கனவுகளும் விருப்பங்களும் பொய்த்துப் போகாதபடி, அவர்கள் ஏமாறாத வண்ணம் அவர்களைக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை. ஏனெனில், எதிர்காலம் அவர்களின் உற்சாகத்தைப் பொறுத்தே அமைகின்றது. பேரழிவுகள் ஏற்படும்பொழுதும், மக்கள் தேவையில் உள்ளபோதும், யாரையாவது அவசரத்தில் தூக்கிவிட வேண்டும் என்று எண்ணும்போதும் ஓடோடி வந்து நமக்கு உதவுகிறவர்கள் இளைஞர்கள். எனவே, அவர்களுடைய ஆற்றலை எப்பொழுதும் நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். வாழ்வில் அவர்கள் உயரும்பொழுது வேலைவாய்ப்பை வழங்குவதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ‘கனவுகள் நனவாகாதுஎன்கிற சூழ்நிலை வரும்பொழுது, இயல்பாகவே அவர்கள் தளர்ச்சி அடைவார்கள். எனவே, அவர்களுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய தார்மீகப் பொறுப்பு.

குறிப்பாக, போதைப்பழக்கங்களில் மூழ்கி, ஆபத்தை எதிர்நோக்கி இருக்கக்கூடிய இளைஞர்கள், தற்காலிக இன்பத்தைத் தேடக்கூடிய இளைஞர்கள் இருளிலிருந்து மீட்கப்பட வேண்டும். அழுகையிலிருந்து  அழகிய வாழ்வை நோக்கி நகர வேண்டும். அதற்காக ஒவ்வொரு செயலிலும் நம்முடைய அக்கறையையும், கரிசனையையும் காட்டுவதற்கு முன்வர வேண்டும்.

இளையோருடன் நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும். ஏனென்றால் இன்றைய நம்பிக்கையே இளைஞர்கள்தாம். எனவே, மிகப் பெரிய இடைவெளியைப் பெரியவர்களும் இளைஞர்களோடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். மாறாக, நமது அருகாமைதான் அவர்களுடைய மகிழ்ச்சி நிறைந்த வாழ்வின் அடையாளம் என்பதை நம் உடனிருப்பு வழியாக நாம் வெளிப்படுத்த முன் வருவோம். அன்பியங்களில் உள்ள இளைஞர்களை ஒன்று கூட்டி அன்பிய நிர்வாகிகள் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆலோசனையும் ஆற்றுப்படுத்துதலும் உற்சாகமும் வழங்கலாம்.

6. புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க அழைப்பு

தங்கள் குடும்பங்களுக்கு நலமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்னும் சிந்தனையோடு தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறுகின்ற புலம்பெயர்ந்தவர்கள் நம்மிடம் புகலிடம் தேடி வரும்பொழுது நாமும் அவர்களுக்கு நமது பொறுப்புணர்வுடன் கூடிய மாண்புடன் வாழ்வதற்கான உரிமையைக் கொடுப்பதற்கான மனநிலைகளோடு அவர்களை வரவேற்க வேண்டும்.

போர்களாலும் வன்முறைகளாலும் இடம்பெயர்கிற மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து வழிநடத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும் கல்வி பயிலக்கூடிய வாய்ப்பையும் வேலைவாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டும். உறைவிடத்தை அமைப்பதற்கான வழிமுறைகளையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நம் சமூகம் தயாராக இருக்க வேண்டும். அவர்களை வரவேற்க நமது இதயக் கதவுகளை அகலத் திறந்து வைத்திருக்க வேண்டும். நம்முடைய இடத்தைத் தேடி வருகிறவர்கள் ஒருபோதும் எதிர்மறைச் சிந்தனையோடு வாழாமல், நமது நேர்மறை அணுகுமுறையினால்  அவர்களுக்கு அடைக்கலமாக இருப்போம்.

இயேசு கூறியதுபோலஅந்நியனாக இருந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டீர்கள் (மத் 25:35,40) என்கிற அந்த வார்த்தைக்குச் செயல் வடிவம் கொடுத்து, எப்பொழுதும் புலம்பெயர்ந்தோருக்குப் புகலிடமாக இருக்க இந்த யூபிலி ஆண்டில் நாம் துணை நிற்போம். நமது பக்கத்து வீடுகளில் வந்து குடியேறி இருக்கிற மக்களுக்குவந்தேறிஎன்று பெயரை வைத்து, அவர்களைத் தரக்குறைவாக நினைக்காமல் நாம் அனைவருமே பயணிகள்தான்; அதிலும் குறிப்பாக, நாம் ஒவ்வொருவரும் திருப்பயணிகள் என்பதை மனத்தில் நிறுத்துவோம். எனவே, ஒருவரையொருவர் சொந்தம் கொண்டாட அழைக்கப்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்துகிற அற்புதமான ஆண்டு யூபிலி ஆண்டு என்பதையும் மனத்தில் கொண்டு, நம்மைத் தேடி வந்திருக்கக்கூடிய மக்களை மதிப்பதற்குக் கற்றுக்கொள்ள நாம் முடிவெடுப்போம்.

7. முதியோரைப் பேண அழைப்பு

தனிமையிலும், கைவிடப்பட்ட நிலையிலும் இருக்கின்ற முதியவர்களுக்கு எதிர்நோக்கின் அறிகுறிகள் தேவைப்படுகின்றன. அவர்களின் இருப்பு, வாழ்க்கை அனுபவங்கள், ஞானம், அவர்களின் பங்களிப்புகள் இவற்றையெல்லாம் போற்றுவது நம் அன்பியச் சமூகத்தின் கடமையாகும்.

ஞானத்தை, நல்ல ஆலோசனைகளை மூத்த தலைமுறையினர் நமக்குத் தரும்பொழுது, அதை மகிழ்வாக ஏற்கப் பழகிக்கொள்ள வேண்டும். நன்றி உணர்வோடு குறிப்பாக, தங்களுடைய குழந்தைகள், பேரக்குழந்தைகளின் அன்பில் ஆதரவைக் காணும்பொழுது அவர்கள் இன்னும் மகிழ்கிறார்கள். எனவே, பேரக்குழந்தைகளும் தங்களின் வேர்களை அடையாளம் கண்டு கொண்டு, முதியோர்களுடைய துன்ப துயரங்களில் தூணாக, துணையாக இருக்க அவர்களும் பழகிக்கொள்ள வேண்டும். பெற்றோரும் பெரியவர்களை மதிப்பதற்கான வழிமுறைகளைப் பேரக்குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க முன் வர வேண்டும். போட்டி போட்டுக்கொண்டு அவர்களைப் பராமரிப்பது என்பது யூபிலி ஆண்டின் மிக முக்கியமான ஒரு செயல்பாடு என்பதையும் அன்பியக் குடும்பங்களில் உணர வேண்டும், உணர்த்த வேண்டும்.

8. வறியவர்களைச் சொந்தம் கொண்டாட அழைப்பு

நம் வாழ்வில் அன்றாடம் வறியவர்களைச் சந்திக்கின்றோம். அவர்களிடமிருந்து நம்முடைய கண்களைத் திருப்பிக்கொள்ள வேண்டாம். உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் இருக்கின்ற மனிதர்களை நாம் கண்டுகொண்டு அவர்களுடைய தேவைகளைச் சந்திக்க வேண்டும். புறக்கணிப்பது என்பது நமது கிறித்தவச் சமூகத்தின் பார்வைக்கு முரணான தாகும். வறியவர்களைப் பற்றிப் பேசப்படுகிற ஆவணங்கள் எல்லாம் ஆவணங்களின் அடியிலேயே இருந்து விடுகின்றன என்பதுதான் இன்றைய அரசியல் சூழலாக இருக்கிறது. ஏழைகள் குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள். ஆனால், அவர்களும் எளிய மனிதர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. மில்லியன் கணக்கிலே பசியால் வாடுகிற மக்கள் வாழ்கிற இந்த உலகத்தில்தான், மில்லியன் கிலோ கணக்கில் உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுகின்றன என்பது வருத்தத்திற்குரிய அன்றாட அனுபவமாக இருக்கிறது. எனவே, நமது அன்பியத்தில் வறுமையின் காரணமாகக் கல்வி கற்க முடியாமல் அல்லது அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாமல் இருக்கக்கூடிய சகோதரர்களுக்கு நம்மாலான உதவிகளை இணைந்து நாம் செய்யும் பொழுது, நிச்சயமாக வறியோர் பணியில் நாமும் வளமையைக் கொண்டுவரக்கூடிய பங்காளிகளாக மாறுகிறோம் என்பதை இந்த யூபிலி ஆண்டில் உணர்ந்து கொள்வோம்.

நிறைவாக, தண்ணீரும் உணவும் இல்லாமல் இருப்பவர்களை நினைவுகூர்வோம். பசி என்பது ஓர் இடறல், மானுட உடலில் காணப்படும் ஆறாத புண். நம் மனச்சாட்சியை நுணுக்கமாக ஆய்ந்து பார்க்க வேண்டும். ஆயுதங்களுக்கும் இராணுவச் செலவுகளுக்கும் செலவிடும் பணத்தைக் கொண்டு வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் உலகத் தலைவர்கள் ஈடுபட வேண்டும் என்று ஒரு பக்கம் இருந்தாலும், நாமும் மாண்புக்குரிய வாழ்வைத் தேடுகிற மக்களுக்கு உற்ற துணையாய், பக்கபலமாய் இருந்தால், நிச்சயமாக இந்த யூபிலி ஆண்டு பொருளுள்ள ஆண்டாக அமையும் என்பதை அன்பியங்களில் உணர்ந்து நம்பிக்கையோடு இந்த யூபிலி ஆண்டைச் சிறப்பிக்க முன்வருவோம்.