news-details
சிறப்புக்கட்டுரை
“தாய்மொழிதான் இன்று எனக்கு இத்தனை உயரங்களைத் தந்திருக்கிறது” (சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான ‘சாகித்ய அகாதமி’ விருதுபெறும் கத்தோலிக்க எழுத்தாளர்!)

சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்வோருக்குச் சாகித்ய அகாதமி விருது மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதியஎண்ட ஆண்கள்என்ற தன் வரலாறு நூலைஎனது ஆண்கள்என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் ப. விமலா அவர்களோடு ஒரு சிறப்பு நேர்காணல்:

வணக்கம்! முதலில் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன். உங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் கூறுங்களேன்.

வணக்கம். என் பெயர் விமலா. நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈஞ்சக்கோடு பங்கைச் சார்ந்தவள். நான் தற்போது குடும்பத்தினருடன்  திருநெல்வேலியில் வசித்து வருகிறேன். எனது பள்ளிப் படிப்பை முடித்ததும் கல்லூரியில் படிக்க மிகவும் விரும்பினேன். ஆனால், நேரடியாகக் கல்லூரி சென்று படிக்க இயலாத சூழ்நிலை. ஆகவே, தொலைதூரக் கல்வி வாயிலாகத் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டு மேற்படிப்பையும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்தேன். அதன் பின்பு சில கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மேற்படிப்புக்காக விண்ணப்பித்தேன். ஆனால், நான் தொலைதூரக் கல்வி படித்ததினால் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் எனக்கு ஆராய்ச்சிப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புது டெல்லியில் இருக்கக்கூடிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் இந்த இரண்டு பட்டங்களையும் சேர்த்து ஆறாண்டுகள் படித்தேன். ஜே.என்.யூ.-வில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றால் இரண்டு மொழிகள் எடுத்து நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டமாக இருந்ததனால் ஓரளவுக்கு மலையாளம் பழக்கமாக இருந்தது. அதனால் ஓரளவுக்குத் தெரிந்த மலையாள மொழியிலும் தாய்மொழி தமிழிலும் ஆய்வு செய்தேன். 2019-இல் ஆய்வை முடித்து வெளியே வரும்போதும், ‘மலையாளம், தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்என்கிற ஓர் ஆய்வு நூலும், அதனைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டுவிவேகானந்தம்என்கிற மலையாள நாவலைத் தமிழிலும் மொழி பெயர்த்தேன். அதற்கு அடுத்ததாக, 2022-ஆம் ஆண்டில் நளினி ஜமீலா அவர்களுடையஎனது ஆண்கள்என்கிற நூலும் வெளியானது. தற்போது இந்த நூலுக்கு எனக்குச் சாகித்ய அகாதமி விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை என் அம்மாவுக்கும் உறவினர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எனது இலட்சியம். தற்போது தமிழிலிருந்து மலையாளத்திற்கு கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தையும் குறுந் தொகையையும் மொழிபெயர்க்கக் கூடிய பணியைச் செய்து கொண்டிருக்கிறேன். அதுவும் விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது.”

இலக்கியத்தில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்?

இலக்கியங்களின் மீதும் குறிப்பாக, வாசிப்பு மீதும் எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். நேரடியாக நான் கல்லூரி சென்று படிக்காததனால் அந்த ஐந்து ஆண்டுகளுக்கான படிப்பையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பிறகு சேர்த்துப் படிக்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழல் எனக்கு ஏற்பட்டது. மற்றொன்று ஜே.என்.யூ.-வில் இருக்கக்கூடிய ஒரு சிறப்பு என்னவென்றால், 24 மணி நேரமும் அதாவது, வாரத்தில் ஏழு நாள்களும் திறந்து இருக்கக்கூடிய நூலகம் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம், எப்போது வேண்டுமானாலும் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இப்படியான ஒரு சூழல் இருந்தது. அங்கிருந்த பாடத்திட்டங்களும் சற்றுக் கடினமானவையாகவே இருந்தன. அடிப்படையான செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தது. அதனால் இன்னும் அதிகமாக, தொடர்ச்சியாக வாசித்தேன். அதிலிருந்து மலையாள நாவல்களை வாசிக்க ஆரம்பித்தேன். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்தேன். இப்படியாக என்னுடைய வாசிப்புப் பழக்கமும். இலக்கியத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்தது.”

மொழிபெயர்ப்பில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள், நன்மைகள் என்னென்ன?

இன்றைய காலகட்டத்தில் AIஎன்கிறஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலகம் எல்லாம் சுருங்கி கைக்குள்ளே வரக்கூடிய அளவிற்கு அறிவியல் வளர்ச்சி இருக்கிறது. பரந்துபட்ட உலகத்தின் அறிவுச் செல்வங்களை எல்லாம் நுகர்வதற்கு நாம் எல்லா மொழிகளையும் படிப்பது என்பது அசாத்தியமானது. ஆகவே, மற்ற மொழிகளில் இருக்கக்கூடிய நல்ல செய்திகளை, வரலாற்றுச் செய்திகளை, இலக்கிய இன்பங்களை நம் மொழியில் நாம் படிப்பதற்கு நமக்கு உதவி செய்யக்கூடிய ஒரு பெரிய கருவியாக இருப்பது மொழிபெயர்ப்பு. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய எல்லா மொழிகளையும் இணைப்பதற்கு மொழிபெயர்ப்பு மிக முக்கியமான ஓர் ஊடகமாக இருக்கிறது. அந்த வகையில் மொழிபெயர்ப்பு என்கிற துறையும் இலக்கியத் துறையிலே மிக முக்கியமான ஒரு துறையாக இருக்கிறது என நான் உணர்கிறேன்.

மொழிபெயர்ப்பில் ஏற்படக்கூடிய சவால்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்போது, பண்பாடு சார்ந்த சிலவற்றை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் ஏற்படும். ஒவ்வொரு நூலில் உள்ள பண்பாடு சார்ந்த சொற்களை அப்படியே மொழிபெயர்ப்பது என்பது மற்றொரு மொழி வாசகர்களுக்குப் புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருக்கும். எனவே, நாம் அதற்கான விளக்கத்தைத் தனியாக அடிக் குறிப்பாகக் கொடுக்க வேண்டிய ஓர் அவசியம் ஏற்படும். எனவே, பண்பாட்டுச் செய்திகளை மொழிபெயர்ப்பதில் அதிகக் கவனமும் தேவைப்படுகிறது.”

இன்றைய இளம் தலைமுறையினரிடம் மொழிப்பற்று இருக்கிறது. ஆனால், மொழிப்புலமை என்பது குறைவுதான். அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நிச்சயமாக, மொழிப்பற்று என்பது அதிகம் நம் மாணவர்களிடமும் நம் மக்களிடமும் இருக்கிறது. ஆனால், தமிழ் படிக்கக்கூடிய மாணவர்களே கேட்பார்கள், ‘தமிழ் படிச்சா எங்க வேலை கிடைக்குது?’ என்று. உண்மையில் நான் சொல்கிறேன், நீங்கள் தமிழைச் சரியாகப் படித்தீர்கள் என்றால், தமிழ் உங்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும்; உங்களுக்கான வாழ்க்கையைத் தரும். உண்மையிலேயே தாய்மொழிதான் நம்மை, நாம் நினைப்பதைவிட மிக அதிக உயரங்களில் கொண்டு சேர்க்கக்கூடிய வல்லமை மிக்கது. அதற்குச் சான்று நான்தான். மொழிதான் இன்று எனக்கு இத்தனை உயரங்களைத் தந்திருக்கிறது. தமிழோடு பிற மொழிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, தமிழை நன்றாகப் படிக்க வேண்டும்; ஆழமாகப் படிக்க வேண்டும்; பிழை இல்லாமல் படிக்க வேண்டும்; சரியாக உச்சரிக்க வேண்டும். எத்தனை மொழிகள் தெரிந்தாலும் தாய்மொழியை நன்கு ஆழமாகப் படித்து உணர்வது என்பதுதான் நமது முதல் கடமையாக இருக்கிறது.”

பேராசிரியர் விமலா அவர்களே, ‘நம் வாழ்வுவாசகர்களுக்கு உங்களது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பல்வேறு நூல்களை மொழிபெயர்ப்பு செய்து தமிழுக்குப் பெருமைசேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறோம்