‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ எனும் மையக் கருத்துடன், இந்த யூபிலி ஆண்டு 2025-இன் இரண்டாவது பெருவிழா அண்மையில் வத்திக்கானில் நடைபெற்றது, பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் உலகெங்குமுள்ள கத்தோலிக்க இராணுவப் படையினர், காவல்துறையினர், பாதுகாப்புக் காவலர்கள், போக்குவரத்துக் காவல்துறையினர், ஓய்வுபெற்ற இராணுவப் படையினர், இராணுவ மையங்கள், இராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் பணிபுரிவோர், இராணுவத்தில் ஆன்மிகப் பணிபுரிவோர் மற்றும் இவர்களின் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
அவர்களுக்குத்
திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், மறையுரையில் “தாய் நாட்டைப் பாதுகாத்தல்,
சமுதாயத்தில் பாதுகாப்பை உறுதிசெய்தல், சட்டம்-ஒழுங்கு மற்றும் நீதியை நிலை நாட்டுதல்
என்ற சமூக மற்றும் அரசியல் வாழ்வின் பல்வேறு நிலைகளில் பொதுமக்களைத் தீமையிலிருந்து
பாதுகாக்கும் மேன்மையான பணி உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது” என்றும்; “சமூக வாழ்வை அச்சுறுத்தும் பல்வேறு வகையான வன்முறைகள்
மற்றும் குற்றங்கள் நிகழும்போது, நீங்கள்தான் முன்னின்று அவற்றை எதிர்த்துப் போராடுகிறீர்கள்.
மேலும், இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது முன்வந்து மீட்புப்பணி புரியும், சுற்றுச்சூழலைப்
பாதுகாக்கும், கடலில் தத்தளிப்போரை மீட்கும் பணியில் ஈடுபடும், தங்களைத் தாமே பாதுகாத்துக்கொள்ள
முடியாத நிலையிலுள்ளோரைப் பாதுகாக்கும், அமைதியை நிலைநாட்டும் இம்மகத்தான பணியைப் புரியும்
உங்கள் அனைவரையும் நான் நன்றியோடு நினைவுகூருகிறேன்” என்றும்
கூறினார்.
அன்றைய
ஞாயிறு நற்செய்திப் பகுதியான லூக்கா 5:1-11-இல் தங்கள் வலைகளை அலசிக் கொண்டிருந்த சீமோன்
பேதுரு மற்றும் அவருடைய கூட்டாளிகளை இயேசு, கருணைக்கண் கொண்டே பார்க்கிறார். கடவுளின்
மூன்று குணங்களான நெருக்கம், பரிவு, கனிவு இவற்றைக் கொண்டே அவர்களை அணுகுகிறார். இரவு
முழுவதும் பாடுபட்டு உழைத்தும் ஒரு மீனும் கிடைக்காமல் கவலையோடும் சோர்வோடும் இருந்த
சூழலிலும் அவர்களுக்கு ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது’ என்பதை
உறுதிப்படுத்துகிறார்.
இந்த
நற்செய்திப் பகுதியில் இயேசு பணியாற்றுவது போலவே, கத்தோலிக்க இராணுவப் படையினர், காவல்துறையினர்,
பாதுகாப்புக் காவலர்கள், போக்குவரத்துக் காவல்துறையினர், ஓய்வுபெற்ற இராணுவப் படையினர்,
இராணுவ மையங்கள், இராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் பணிபுரிவோர், இராணுவத்தில் ஆன்மிகப்
பணிபுரிவோர் அனைவரும் தத்தம் பணிகளைச் செய்ய அழைக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டார்.
மேலும்,
பல்வேறு துன்பச் சூழல்களில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை இயேசு கிறிஸ்துவின் கருணைக்கண்
கொண்டு காண இயேசு அவர்களை அழைப்பதாகக் குறிப்பிட்ட அவர், “உங்களது சீருடைப் பணியில்
உங்களை உருவாக்கிய சுயஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு, உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துக்காட்டும்
சின்னமாக உங்களது; அது உங்கள் ‘நாட்டையும் நாட்டு மக்களையும் நான் பாதுகாப்பேன்’ என்று நீங்கள் எடுத்த உறுதிமொழியை நினைவூட்டுகிறது.
தோல்வியில்
கவலையிலிருந்த சீமோன் பேதுருவின் படகிலேறி அமர்ந்து தம் உடனிருப்பை வெளிப்படுத்திய
இயேசுவைப்போல, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட, பாதுகாப்பற்றோருக்கு பாதுகாப்பளிக்க, சமூகத்தில்
பல்வேறு தீமைகளால் பாதிக்கப்படும் மக்களைக் கருணைக் கண்கொண்டு பார்த்து, அவர்களின்
வாழ்க்கைச் சூழலில் இறங்கி, அவர்கள் சார்பாக நீங்கள் தீமையை எதிர்த்துப் போரிடுவது
பொதுசேவை செய்யும் உலக மாந்தருக்கெல்லாம் ஓர் உன்னத எடுத்துக்காட்டு” என்றார்.
மேலும்,
“உங்கள் பாதுகாப்புப் பணி வாயிலாக தீமையின் ஆதிக்கத்தை எதிர்த்து அதிக மனிதாபிமானமும்,
நீதியும், சகோதர அன்பும் நிறைந்த உலகை நம்மால் உருவாக்கி, நம் பிள்ளைகளுக்கும், அவர்களின்
பிள்ளைகளுக்கும் விட்டுச்செல்ல முடியும்.
உங்களது
பணியில் கிறிஸ்துவின் பிரசன்னமாக, உங்களுடன் உடன் பயணிக்கும் ஆன்மிக வழிகாட்டிகளை இனம்
கண்டுகொண்டு அவர்களது உதவியை நாடத் தவறாதீர்கள். ஒழுக்கம் மற்றும் ஆன்மிக வழிகாட்டல்
தந்து, நற்செய்தியின் அழைத்தலுக்கேற்ப பொதுநலனைப் பேணும் உங்கள் பணி சிறக்க, அவர்களது
சேவை உங்களுக்குத் தேவை என்பதையும் மறவாதீர்கள்” என்றார்.
அவ்வாறே,
“உயிர்களை ஆதரிப்பதும் பாதுகாப்பதும் வளர்ப்பதுமே மனுக்குலத்திற்கு நீங்கள் ஆற்றும்
சேவையின் நோக்கம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்; இறுதியாக, கவனமாக இருங்கள்.
தேவையில்லாப் போர் மற்றும் சண்டையைத் தூண்டும் தீய ஆசைக்கு எதிராகக் கவனமாக இருங்கள்.
அதிகாரம் மற்றும் போர்க்கருவிகளின் சத்தம் எனும் மாய வலைக்குள் விழாதவண்ணம், கவனமாக
இருங்கள். பாதுகாக்கப்பட வேண்டிய நட்பு நாடுகள் மற்றும் போர்தொடுக்க வேண்டிய எதிரி
நாடுகள் என்ற உலகப் பிரிவினைவாதங்கள், உங்கள் உள்ளத்தில் வெறுப்பு எனும் நஞ்சை விதைத்து
விடாவண்ணம் கவனமாக இருங்கள். உலக மக்கள் அனைவரும் சகோதர-சகோதரிகளாக வாழ விரும்பும்
விண்ணகத் தந்தையின் அன்புக்குத் துணிச்சலான சாட்சிகளாக விளங்குங்கள். நாம் அனைவரும்
சேர்ந்து அமைதி, நீதி, சகோதரத்துவம் நிறைந்த புதிய வரலாற்றை உருவாக்க முனைவோம்” என்றார்.
இந்த
யூபிலி ஆண்டில் நம் மறைமாவட்டம், பங்குத்தளங்கள் மற்றும் குடும்பங்களில் இராணுவப் படை,
காவல்துறை, பாதுகாப்புக் காவலர்களைச் சிறப்பிக்க நாம் அழைக்கப்படுகிறோம். மக்கள் பாதுகாப்புப்
பணிபுரியும் இருபால் பணியாளர்களுக்காகவும், அவர்கள் குடும்பத்தாருக்காகவும், பணி ஓய்வு
பெற்றோரின் நலனுக்காகவும், பணியில் இருக்கும் போது வீரமரணம் அடைந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும்
ஒருநாள் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி, அவர்களுக்கு மரியாதை செய்வது நலம். இப்பணியில்
ஈடுபடுவோர் நம் பங்கிலிருந்தால், பல்வேறு நிகழ்வுகளுக்கு அவர்களைச் சிறப்பு விருந்தினராக
அழைத்து மரியாதை செய்யும்போது, பங்கிலுள்ள சிறுவர்-சிறுமியர், இளையோர்-இளம் பெண்களுக்கு
இப்பணியின் மீதுள்ள ஆர்வமும் மரியாதையும் அதிகமாகும். பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர் நம் குடும்பத்தினராகவோ,
நம் உறவினர்களாகவோ இருந்தால், அவர்களை அடிக்கடித் தொடர்புகொண்டு நம் அன்பு, அக்கறை,
நன்றி இவற்றைத் தெரிவித்து அவர்களை அவர்களது பணியில் உற்சாகப்படுத்துவோம்!
நீதி,
நேர்மை, பொதுநலம் இவற்றை மட்டும் கருத்தில் கொண்டு சுயநலமின்றி, அச்சமின்றி, தியாக
உணர்வோடு பணிபுரியும் இவ்வகைப் பாதுகாப்பு அலுவலர்களை நாம் காணவோ, அவர்களைப் பற்றி
அறியவோ நேரிடும்போது, அவற்றை நம் குடும்பத்தில், உறவினர்களிடத்தில், நண்பர்களிடத்தில்,
நம் சமூக வலைதள இடுகைகளில் பகிர்ந்து, அவர்களைப் பற்றிய நல்லெண்ணம், நம்பிக்கை, எதிர்நோக்கு
மற்றும் அன்பு மேலோங்கிப் பரவ வழிசெய்வோம். தங்கள் பணிநிறைவுக்குப் பின்னோ, பணியில்
ஏற்பட்ட விபத்தால் பணியை விடுத்து வீட்டில் இருக்கும் பாதுகாப்பு அலுவலர்கள் பலர்,
அதீத மன உளைச்சலால் (Post Traumatic Stress
Disorder) பாதிக்கப்பட்டுள்ளார்கள்
என்று புரிந்துகொண்டு அவர்களை இரக்கத்தோடு பேணுவோம்.
நிகழும்
இந்த யூபிலி ஆண்டில் ஆண்டவர் நம் உள்ளங்களையும் இல்லங்களையும் எதிர்நோக்கால் நிரப்புவாராக!