news-details
ஆன்மிகம்
தவக்காலமும் இந்நூற்றாண்டின் பாவமும்!

இந்த நூற்றாண்டின் பாவம், பாவ உணர்வை இழப்பதுதான்என்று இரண்டாம் உலகப் போரின் கொடூரங்களைத் தொடர்ந்து திருத்தந்தை 12 - ஆம் பத்திநாதர் கூறினார். திருத்தந்தையர்களான புனித இரண்டாம் ஜான் பால், 16-ஆம் பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் அனைவரும் இதை மீண்டும் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

2014 - ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தனது காலை தியானங்களின்போது திருத்தந்தை 12-ஆம் பத்திநாதரின் பிரபலமான சொற்றொடரைக் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ், “பாவ உணர்வை இழப்பது தற்போதைய நாகரிகத்தின் தீமை என்றும், கிறித்தவ இறைநம்பிக்கையை  வலுவிழக்கச் செய்யும் ஒரு தீமைஎன்றும் கூறினார். எனவே, சமீபத்திய காலகட்டங்களில்நான் எந்தத் தவறும் செய்யவில்லைஎன்ற ஒரு கலாச்சாரம் ஒருவரின் செயல்களுக்கான பொறுப்பு குறித்த குற்ற உணர்வு இல்லாததன் மறுக்க முடியாத வெளிப்பாடாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இவை அனைத்தும் மதச்சார்பின்மை மற்றும் சார்பியல்வாதத்தில் (Relativism) உருவான பின்நவீனத்துவத்தின் (Post-Modernism) எதிர்மறை விளைவு.

கடவுள் இல்லாத மனிதநேயம்

Etsi Deus non daretur (கடவுள் இல்லை என்பது போல) என்பது சமகாலச் சமூகத்தை நகர்த்தும் முக்கியக் கொள்கையாகத் தெரிகிறது. பல சந்தர்ப்பங்களில் மற்றும் பல்வேறு வழிகளில் இது திரு அவையால் கண்டிக்கப்பட்டுள்ளது. ‘மதச்சார்பின்மைஎன்பது கடவுள் இல்லாத மனிதநேயத்தை ஆதரிக்கும் கருத்துகள் மற்றும் நடத்தைகளின் இயக்கமாகும். இது செயல் மற்றும் உற்பத்தி வழிபாட்டை (cult of action and production) மட்டுமே மையமாகக் கொண்டது. மேலும், ‘ஒருவரின் ஆன்மாவை இழக்கும்அபாயத்தைப் புறக்கணித்து, நுகர்வோர் மற்றும் இன்பத்தின் போதையூட்டும் உற்சாகத்தில் சிக்கிக் கொள்கிறது. இந்த மதச்சார்பின்மை பாவ உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் இருக்க முடியாது. பாவம் மற்றும் அதன் விளைவுகளைப் பெரிதுபடுத்தாமல் நுகர்வுக் கலாச்சாரத்தையும், இலாப நோக்கையும், நெறியற்ற இன்பத்திற்கான தேடல்களையும் நியாயப்படுத்தி மனிதர்களை மனம்போன போக்கில் வாழ வழிவகை செய்யும். தவறான வழியில் மனிதன் கடவுள் இல்லாத ஓர் உலகத்தை உருவாக்க முடியும் என்ற தவறான நம்பிக்கையில் வாழலாம். ஆனால், இந்த உலகம் அவனுக்கு எதிராகத் திரும்புவதன் மூலம் முடிவடையும் என்ற கசப்பான உண்மையை அடிக்கோடிட வேண்டும்.

சார்பியல்வாதம் மற்றும் தார்மீக மதிப்புகளின் வீழ்ச்சி

சார்பியல்வாதங்களிலிருந்து (Relati vism) பெறப்பட்ட நெறிமுறை அமைப்பின் விளைவாகவும் பாவ உணர்வு எளிதில் குறைகிறது. இது தார்மீக நெறி முறையை (Absolute Ethics/Truth) சார்பியல் வாதமாக்கும் ஒரு நெறிமுறை அமைப்பின் வடிவத்தை எடுக்கலாம். அதன் முழுமையான மற்றும் நிபந்தனையற்ற மதிப்பை மறுக்கிறது. இதன் விளைவாக எந்தச் செயல்கள் நடந்தாலும், அவை நிகழும் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல், தானாகவே தவறாகிவிடாது என்று அது வாதிடுகிறது. இங்கே தார்மீக விழுமியங்களின் உண்மையான திருப்பமும் வீழ்ச்சியும் உள்ளது. சூழல் மற்றும் காரணிகள் மட்டுமே ஒரு செயல் நல்லதா அல்லது கெட்டதா என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளாகத் தவறாகச் சித்தரித்துக் காட்டப்படும். எனவே, பிரச்சினை கிறித்தவ நெறிமுறைகளைப் பற்றிய அறியாமையில் மட்டும் இல்லை; மாறாக, தார்மீக அணுகுமுறையின் அர்த்தம், அடித்தளங்கள் மற்றும் அளவுகோல்களைப் பற்றிய அறியாமையில் உள்ளது. திரு அவையின் புறநிலை உண்மைக் கோட்பாடுகள் (Objective and Doctrinal Truth) சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இத்தகைய போக்கு பாவம் பற்றிய கருத்தைப் பலவீனப்படுத்துகிறது.

மனச்சாட்சியின்மரணம்

மனச்சாட்சி இல்லாதவனுக்கு குற்ற உணர்வும் இல்லை, கற்றலும் இல்லைபலரின் தார்மீக மனச்சாட்சி மிகவும் மேகமூட்டமாகிவிட்டது. மனச்சாட்சி பற்றிய சரியான புரிதல் இல்லை. நவீன மனிதன் மனச்சாட்சியின் கிரகணத்தால் அச்சுறுத்தப்படுகிறான். மனச்சாட்சி பலவீனமடையும்போது, கடவுளின் உணர்வும் மறைக்கப்படுகிறது. இதன் விளைவாக, பாவத்தின் உணர்வும் இழக்கப்படுகிறது. திருத்தந்தை 12 - ஆம் பத்திநாதர், இந்த நூற்றாண்டின் பாவம், பாவ உணர்வை இழப்பது என்பதற்கான காரணத்தை இது விளக்குகிறது. மனச்சாட்சியை இருட்டடிப்பு செய்தல் அல்லது பலவீனப்படுத்துதல் பல பின்வரும் ஆதாரங்களிலிருந்தும் வருகிறது: i) தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் மகிமைப்படுத்துதலுக்கான (personal independence and glorification) சுய விருப்பத்தின் பெயரில் மனிதனைக் கடந்த இறைசக்தி என்ற ஒன்றின் இருப்பை நிராகரிப்பதிலிருந்து; ii) தனிப்பட்ட மனச்சாட்சியால் கண்டிக்கப்பட்டாலும் அல்லது உறுத்தப்பட்டாலும் கூட, பொதுவான மற்றும் வழக்கமான ஒருமித்தக் கருத்து (General and Conventional Consensus) மற்றும் நடத்தையால் விதிக்கப்பட்ட நெறிமுறை மாதிரிகளை ஏற்றுக்கொள்வதிலிருந்து; iii) மனிதகுலத்தின் பெரும்பகுதியை ஒடுக்கும் துயரமான சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளிலிருந்து, சமூகத்தின் சூழலில் மட்டுமே பிழைகள் மற்றும் தவறுகளைக் காணும் போக்கிலிருந்து; iv) இறுதியாககடவுளின் தந்தைமை (God’s Father hood) என்ற கருத்தை இருட்டடிப்பு செய்ததிலிருந்து.

தீவிரத்திலிருந்து தீவிரம்அணுகுமுறை

சிலர் கடந்தகாலத் திரு அவையின் மனப்பான்மைகளை எதிர்மறையான மிகைப்படுத்துதல்களுடன் மாற்ற முனைகிறார்கள்: i) எல்லாவற்றையும் பாவமாகப் பார்ப்பதிலிருந்து எதையுமே பாவமாகக் காணாத ஒரு போக்கு; ii) பாவத்திற்கான தண்டனையின் பயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போக்கிலிருந்து, பாவத்திற்குத் தண்டனையே இல்லை அல்லது தண்டனை வழங்காத கடவுளின் அன்பு என்பதைத் தவறாக அறிவிக்கும் போக்கு; iii) தவறான நம்பிக்கைகளைச் சரிசெய்ய முயற்சிப்பதில் சிலர் தனிப்பட்ட மனச்சாட்சிக்கு அதிக மரியாதை காட்டி, உண்மையைச் சொல்லும் பொறுப்பைப் புறக்கணிக்கும் போக்கு. திருத்த வேண்டிய கடமையில் இருப்பவர்கள் அல்லது இது தவறு என்று திரு அவையின் போதனைகளின் அடிப்படையில் அறிவிக்க வேண்டியவர்கள் அதைச் செய்யாமல், எத்தகைய வார்த்தைகள் பிறருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அதை மட்டும் கூறி நற்பெயர் எடுக்க விழையும் ஆழமற்ற அல்லது வலிமையற்ற மனநிலையிலிருந்து மாற்றம் பெற வேண்டும்.

இறுதியாக...

இன்று மனிதனைத் தாக்கும் கடுமையான ஆன்மிக நெருக்கடியை எதிர்கொள்வதற்கான முதல் வழி, பாவத்தின் சரியான உணர்வை மீட்டெடுப்பதுதான். திரு அவையின் தார்மீக மற்றும் இறையியல் போதனைகளை எப்போதும் நிலைநிறுத்தி, அதற்கு முரணான கருத்துகளை மற்றும் கொள்கைகளைப் பரப்பும் தவறான வாதங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதன் மூலம் மட்டுமே பாவ உணர்வை மீட்டெடுக்க முடியும். பாவம் உண்மையானது. நம் சகாக்கள் மற்றும் நம்மோடு இருப்பவர் கள் அனைவரும் ஒன்றைச் செய்கின்றார்கள் என்பதால் அது சரியாகிவிடாது. இத்தகைய எண்ணங்கள் நம் குற்ற உணர்ச்சிகளைக் குறைக்கலாம்; ஆனால், நாம் செய்த தேர்வுகளுக்கான நமது தார்மீகப் பொறுப்பை அவை பறிக்காது. நமது தார்மீக முடிவுகளுக்குப் பொறுப்பேற்று, கடவுளின் கருணையைத் தேட நமது மனச்சாட்சிபாவ உணர்வைமீட்டெடுக்க வேண்டும். ‘பாவ உணர்வுஎன்பது ஒருவரின் வாழ்க்கையில் பாவத்தைப் பற்றிய துல்லியமான கருத்தாக்கத்தையும் பாவத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இந்த உணர்வு மனிதனின் தார்மீக மனச்சாட்சியில் வேரூன்றியுள்ளது, மேலும், அது அதன் வெப்பமானியாக உள்ளது. இந்தத் தவக்காலம் பாவ உணர்வை இழக்கும் பாவத்தை எதிர்த்துப் போராடவும், கடவுளிடம் திரும்புவதற்காக நம் மனச்சாட்சியைச் சுய பரிசோதனை செய்யவும் நமக்கு உதவட்டும்.

பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால், நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக, நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுளும் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில், அவர் நம்பிக்கைக்குரியவர் (1யோவான் 1:8-9).