1845-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் நாள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த புனித ஜான் ஹென்றி நியூமன், கத்தோலிக்கத் திரு அவையில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொள்ள விரும்பி அன்றைய மாலைப்பொழுதில், அவரது இல்லம் வந்திருந்த அருள்பணி. தோமினிக் பங்பேரியிடம் தனது பாவங்களை அறிக்கையிட்டு, ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்கும் தனது விருப்பத்தைத் தெரிவிக்கின்றார்.
நீண்ட
நெடிய அவரது ஒப்புரவு அருளடையாளம் அன்றைய இரவுவரை நீடித்ததால் இரவில் உறங்கிவிட்டு மீண்டும் மறுநாள் அதனைத் தொடர்ந்து தனது பாவங்கள் அனைத்தையும் அறிக்கையிட்டு, அதற்கு மன்னிப்புப் பெற்று, கத்தோலிக்கத் திரு அவையின் முழு உறுப்பினராகத் தன்னை இணைத்துக்கொள்கின்றார்.
அவர்
இத்தகைய மனமாற்றம் அடைந்து, கத்தோலிக்கத் திரு அவையைத் தழுவியதால் அவரது நண்பர்கள் அவரை விட்டுச் சென்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் என்னும் உயர் வாய்ப்பினை இழந்தார். அங்குப் படித்து ஆய்வு செய்யும் வாய்ப்பும் உதவிகளும் அவருக்கு மறுக்கப்பட்டன. ஆனால், அவரது உள்ளத்தில் மிகச்சிறந்த அமைதி நிரம்பியிருந்தது. அவரது மனமாற்றத்தின் காலகட்டத்தில் மிகப்பெரும் போராட்டங்களை, இழப்புகளைச் சந்தித்த சூழ்நிலையிலும், அவை அனைத்தையும் முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்தார். அவரது மனமாற்றத்தின் அனுபவத்தைப் புத்தகமாக எழுதுகின்றார்.
இதயம் இதயத்துடன்
பேசுவதே
மனமாற்றம்
‘Heart speaks to Heart - Cor ad Cor Luquitur’என்னும்
அவரது புத்தகத்தில், ‘நாம் இறைவனை முதலில் அன்பு செய்யவில்லை; இறைவனே நம்மீது முதலில் அன்பு கொண்டு தமது அன்புச் செயல்களைத் துவங்கினார். அவர் நம்மீது கொண்ட உச்சத்தின் வெளிப்பாடு தமது அன்பு மகனை இவ்வுலகிற்கு அனுப்பியது (யோவா 3:16); அவரது அன்பினால், உண்மையினால் நாம் நிரப்பப்பட்டு, அதனை மற்ற சகோதர-சகோதரிகளுக்கு வழங்கிட வேண்டும். இறைத்தந்தையின் இதயமும் அவரது இரக்க மற்றும் அன்புச் செயல்களும் தம் இதயத்தோடு பேசுவதை அதிகமாய் அனுபவித்த தருணமே அவரது மனமாற்றத்திற்குக் காரணமாய் அமைந்தது’
என்று குறிப்பிடுகிறார்.
இறைத்தந்தையின்
இதயம் நம்மோடு பேச, அவருக்குச் செவிமடுக்க நாம் விரும்புவதே மனமாற்றத்தின் முதல்படியாக அமைகின்றது. புனித யோசேப்பு ஆண்டில் (2020) வெளிவந்த ‘ஒரு தந்தையின் இதயத்தோடு’
என்னும் திருத்தூது மடலில் திருத்தந்தை பிரான்சிஸ், மனமாற்றத்தை ‘அருளிற்கெல்லாம் மிகப்பெரிய அருள்’ எனக் குறிப்பிடுகின்றார். மனமாற்றம் என்பது தன் திட்டத்தை, விருப்பத்தை, விருப்பத் தேர்வுகளை விடுத்து இறைத் திட்டத்தையும், இறையன்பையும், பிறரன்பையும் முன்னிறுத்துவதும், அதற்குச் செவிமடுத்தலுமே. தன்னோடும் சக மனிதரோடும், இயற்கையோடும்
இறைவனோடும் உள்ள உறவினைப் புதுப்பிப்பதும்கூட. இந்த அருளின் காலமான தவக்காலம் மனமாற்றத்திற்கான வாய்ப்புகளை
வழங்குகின்றது.
புனித
ஜான் ஹென்றி நியூமன், மனமாற்றத்தின் - ஆன்மிக வாழ்வின் மிகப்பெரும் தடையாக இருப்பது கடவுளின் இரக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் நமது பாவத்தையும் அதன் குற்ற உணர்வையும் இறுகப் பற்றிக்கொள்வதே என்று குறிப்பிடுகின்றார். டான்டே என்னும் இத்தாலிய எழுத்தாளர் ‘Divine Comedy’ என்னும் கதை-கவிதையில் மனமாற்றத்தை இறைவனின் இரக்கம் என்னும் ஆற்றில் இறங்கி, நமது பாவங்கள் கழுவப்படுவது போன்று உருவகித்து எழுதுகின்றார். இறைவனின் இரக்கத்தைப் பெற நமது மன இறுக்கங்களுடன் பாவத்தின்
நினைவுகள் கழுவப்பட வேண்டும். மனமாற்றத்திற்குத் தடைகள் பல உள்ளன. அவற்றைக்
கடந்து மனமாற்றத்தை நமதாக்க வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் மனமாற்றத்தின் தடைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார்:
1. வலுவின்மையை எதிர்மறையான கண்ணோட்டத்தோடு
காண்பது
எனது
குற்றங்கள், பாவங்கள், வலுவின்மை இவற்றினை எதிர்மறையான மனநிலையோடு காண்கின்றபொழுது, இறைவனின் இரக்கத்தையும் அவரின் மன்னிப்பின் ஆற்றலையும் குறைவாக மதிப்பிடுகின்றோம். எனது வலுவின்மை, பாவச் சூழல்கள், குற்றங்கள் இவற்றைவிட, இறைவனின் இரக்கம் அளப்பரியது என்பதை உணர வேண்டும். பவுல் அடியார் தனது வலுவின்மையை, பாவத்தை நினைத்து வேதனையுற்ற பொழுது வலுவின்மையில்தான் கடவுள் வல்லமை நிறைவாய் வெளிப்படுகின்றது என்பதை உணர்ந்து கொண்டார் (2கொரி 12:9). எனது வலுவின்மையில், ஆன்மிகப் போராட் டத்தில் இறைவன் உடனிருக்கின்றார், தாங்குகின்றார் என உணர்தல் அவசியம்.
2. குறுக்கு வழிகளில் மனமாற்றத்தின்
தீர்வுகளைத்
தேடுவது
மனமாற்றத்திற்கான
தீர்வுகளை நாம் குறுக்கு வழியில் அடைந்திட இயலாது. மனமாற்றத்திற்கான பாதை உள்ளத்தின் நிலைப்பாட்டிலும் தீர்க்கமான முடிவுகளிலும் மனவுறுதியிலும் சற்றும் தளராத தொடர் முயற்சியிலும் வெளிப்படுகின்றது. மன மாற்றத்தின் முயற்சியில்
தொந்தரவுகள், மனச் சோர்வுகள். பிறரின் விமர்சனங்கள், கேலியான வார்த்தைகள், நமது உற்சாகத்தைக் குறைக்கும் பிறரின் மனநிலைகள், எதிர்மறை எண்ணங்கள் இவற்றைக் கண்டு விலகிச் சென்றால் மனமாற்றம் சாத்தியப்படுவதில்லை. அவற்றை எதிர்நோக்கி, துணிச்சலோடும் நம்பிக்கையோடும் தளராத எதிர்நோக்கோடும் தொடர்ந்து பயணித்தல் அவசியம்.
3. அச்சம்
கொள்ளுதல் / துணிச்சலற்ற மனநிலை
மனமாற்றம்
என்பது அவ்வளவு எளிதாக அமைகின்ற ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு தொடர் முயற்சி. உள்மன ஆழத்தில் நடக்கும் ஒரு பிரளயம், போராட்டம்.
அதனை வெளிப்படுத்திட துணிவு வேண்டும். சாதாரண துணிவு அல்ல; மாறாக, படைப்புத் திறன் மிக்க துணிவு அவசியம். நமது ஆற்றல் அனைத்தையும் ஒன்றிணைத்து அச்சத்தைத் தவிர்த்து ஒரே மனம் கொண்ட நபராய் - பிளவுபடாத உள்ளத்துடன் இம்முயற்சியில் முனைகின்ற பொழுது மனமாற்றம் நிகழும். லூக்கா 5:17-26-இல் முடக்குவாதமுற்ற மனிதரை நான்கு நண்பர்கள் இயேசு அமர்ந்திருந்த வீட்டின் கூரையின் வழியாக இறக்கி, படைப்புத்திறன் மிக்க துணிவுடன் செயல்பட்டதால் அந்த நபருக்குக் குணம் கிடைத்தது. நாமும் குணம்பெற, மனமாற்றம் பெற அத்தகைய ஆக்கப்பூர்வமான துணிச்சல் அவசியம்.
4. சோம்பல் / காலம் கடத்துதல்
இதுவே
தகுந்த காலம் - இதுவே அருளின் நாள்! எனவே, மனமாற்றத்தின் வாய்ப்பினை - இன்று வேண்டாம் ‘நாளை பார்த்துக்கொள்ளலாம்’ என்று
நினைப்பது மனமாற்றத்தின் மிகப்பெரிய தடை. மனமாற்றத்திற்கான வாய்ப்புகள், நேரங்கள் கிடைத்தும் அதனைத் தள்ளிப்போடும் மனநிலையைத் தவிர்ப்போம். யோனா நினிவே நகரில் மனமாற்றத்தின் செய்தியினை, ஆண்டவரின் வார்த்தைகளை இறைவாக்குரைத்த உடனே குழந்தைகள், பெரியவர்கள், அரசன், அவனது அரசாங்க உறுப்பினர்கள், கால்நடைகள் என அனைவரும் சாக்கு
உடை அணிந்து, சாம்பல்மீது உட்கார்ந்து மனமாற்றத்தை வெளிப்படுத்தினர். ஆகவே, மனமாற்றத்திற்கான வாய்ப்பினை நழுவவிட வேண்டாம்; அதற்காக உழைப்போம். தன்னலத்திலிருந்து பிறர்நலம் நோக்கி இயங்குவோம் (அனைவரும் உடன்பிறந்தோர், 98). பிறரை இகழ்ந்து பேசுகின்ற, கோபப்படுத்துகின்ற அவர்களின் மகிழ்வினைக் குறைக்கின்ற வார்த்தைகளைக் குறைத்து நன்மையானவற்றை மிகுதியாக்குவோம் (அனைவரும் உடன்பிறந்தோர், 223).
இத்தவக்காலத்தில்
மனமாற்றம் என்னும் மிகப்பெரும் அருளைப் பெறுவோம்.