மோடி அரசின் மற்றுமொரு பட்ஜெட்! வழக்கம்போல இலட்சக்கணக்கான கோடிகளில் அறிவிப்புகள். நம் வாய்களில் நுழையாத பெயர்களில் திட்டங்கள். ஒவ்வொரு முறையும் தவறாமல் உச்சரிக்கப்படும் திருக்குறள். ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியையாகக் கண்டிப்புடனும் கறாராகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து, தனக்கு மட்டுமே பொருளாதாரம் தெரியும் என்ற அதிகாரத் தோரணையில் பேசுகிற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர்களது ஒவ்வோர் அறிவிப்பினையும் முதல்முறையாக அறிவதுபோல வியப்பும் பெருமிதமுமாக முகபாவம் காட்டி மேஜையைத் தட்டிக்கொண்டே இருக்கும் பிரதமர்.
தலைப்புச்
செய்திகளைக் கைப்பற்றி முக்கியச் செய்திகளை இருட்டடிப்புச் செய்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ள மோடிமயமாக்கப்பட்ட ஊடகங்களின் கையில் ‘லட்டு’ போல ஒரு செய்தி. “இனிமேல் 12 இலட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை” என்ற
அந்த அறிவிப்பை இந்தியாவில் உள்ள அனைத்துக் காட்சி மற்றும் செய்தி ஊடகங்களும் 48 மணி நேரம் இடைவிடாமல் ஒளிபரப்பு செய்துகொண்டே இருந்தன. எங்குப் பார்த்தாலும் அதே பேச்சு. தொலைக்காட்சிகள் அனைத்திலும் அதனைப் பற்றியே விவாதங்கள். அந்த அறிவிப்பைப் புகழ்ந்தே பேட்டிகள். பட்ஜெட்டைப் பற்றிப் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் வேறு எதுவும் இல்லை என்பதைப் போன்ற ஒரு பொதுஜனப் பிரமையை உருவாக்கியதில் மோடி அன்ட் கம்பெனி ஓரளவு வெற்றி பெற்றனர் என்பதும் உண்மை. அந்த மாயத்தோற்றம் சரியா? பட்ஜெட் ஆவணங்கள் மூடி மறைத்திருக்கும் அவலங்களும் அசிங்கங்களும், அழுகிப்போன பொருளாதார இரணங்களும், அவற்றால் சாதாரண மக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளும் வேதனைகளும் எப்போது வெளிச்சத்திற்கு வரும்?
வேதப்புத்தகத்தைப்
படிக்கின்றவரை பார்த்து பரவசமாக நிற்கின்ற மக்களுக்கு, அவர் கைகளில் வேதப்புத்தகம் மட்டுமல்ல, அவரது கக்கத்தில் கன்னக்கோலும் இருக்கிறது என்பதை நாமாவது கூறி புரிய வைப்போம். மோடி அரசின் கடந்தகாலச் செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு ஒரு செய்தி புதிதல்ல. அவர் எப்போதும் கூறியதைச் செய்ததில்லை. செய்யப் போவதைக் கூறியதில்லை. இதற்கு ஓராயிரம் உதாரணங்களைக் கூற முடியும். இதற்கு அவரது அரசின் பட்ஜெட்டும் விதிவிலக்கல்ல. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் அப்படியே செலவு செய்யப்படும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு பட்ஜெட்டை எடுத்துக்கொள்வோம். அரசு அறிவித்த வருவாயைவிட,
அரசு பெற்ற வருவாய்
ரூ. 42,000 கோடி குறைவு. திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மதிப்பீடு செய்யப்பட்ட வரி வருவாயை விட ரூ. 27,000 கோடி குறைவு.
திட்டச்
செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஓர் இலட்சம் கோடிக்கு அதிகமாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குறைத்துக் கொண்டார்கள். மூலதனச் செலவுக்காக ஒதுக்கப்படுவதாகப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தொகையில் சுமார் ஓர் இலட்சம் கோடி ரூபாயைச் செலவு செய்யவே இல்லை. இந்தப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட எந்தத் துறையில் மோடி அரசு கைவைத்தது என்பதுதான் மிகப்பெரிய கொடுமை. சுகாதாரம், கல்வி, சமூக நலம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, நகர்புற வளர்ச்சி போன்ற முக்கியமான துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளைத்தான் மோடி அரசு குறைத்தது. அது மட்டுமின்றி பட்டியலினப் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள், பட்டியலினப் பிற்படுத்தப்பட்ட இளம் சாதனையாளர்களுக்கான சிறப்புத் திட்டங்கள், பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பழங்குடி மக்களுக்கான சிறப்புத் திட்டங்கள் போன்ற விளிம்புநிலை மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத்தான் மோடி அரசு குறைத்தது.
கடந்த
ஆண்டு மிகப்பெரிய விளம்பரங்களுடன் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கு இந்த
ஆண்டு போதிய ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அவற்றுக்கான ஒதுக்கீட்டின்படி செயல்படுத்தப்படுமா? என்பது நமக்கு அடுத்த ஆண்டுதான் தெரியவரும்.
ஆண்டுக்கு
ரூ. 12 இலட்சம் வருமானம் ஈட்டுவோர் வருமான வரி கட்டத் தேவையில்லை என்ற அறிவிப்பை அத்தகைய வருமானம் உள்ளவர்கள் வரவேற்பார்கள். நாமும் வரவேற்கிறோம். 140 கோடி இந்தியர்களில், 7 கோடி மக்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதாகவும், அதில் இரண்டு கோடி நபர்கள் இந்த அறிவிப்பால் பயன்பெறுவார்கள் என்றும் கூறுகிறார்கள். அதனால் அரசுக்கு ஓர் இலட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் கூறுகிறார்கள். இந்த ஓர் இலட்சம் கோடியை எந்த வருவாய் மூலம் ஈடுகட்டப் போகிறது என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை.
நம்மால்
ஒன்று மட்டும் நிச்சயமாகக் கூற முடியும். மோடி அரசு இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களுக்கும், மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் எந்தக் கூடுதல் வரியையும் விதிக்கப்போவதில்லை. ஏற்கெனவே
அவர்கள் கட்டி வந்த வரிகளைக் குறைத்து, அவர்களுக்குப் பல சலுகைகளைத் தொடர்ந்து
செய்து வரும் மோடி அரசு, எப்படி அவர்கள்மீது புதிய வரிகளை விதிக்க முடியும்? ஆண்டுக்கு ரூ. 4,500 கோடியினைப் பெரும் முதலாளிகளிடம் இருந்து நன்கொடையாகத் திரட்டும் பா.ச.க.வின் அரசு அவர்கள் மீது வரி விதிக்காது என்பது நமக்கும் தெரியும்.
இந்த
அரசில் வரி கட்டுவதற்கென்றே பிறந்து வாழும் மக்கள் சமூகத்தின் அடித்தட்டிலும் நடுத்தர வர்க்கத்திலும் வாழும் மக்கள்தாம். அவர்கள்
அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களின்மீதும் விதிக்கப்படும் வரிகள்தாம் இன்று இந்திய அரசின் கோரப்பசிக்குத் தீனியாக உள்ளது.
இரண்டு
கோடி மக்களுக்கு மட்டுமே பயன்படும் ஓர் அறிவிப்பினைச் செய்துவிட்டு, அதனால் இந்தியாவின் பொருளாதாரமே நிமிர்ந்து உட்கார்ந்து விடும் என்று பேசுகிற இவர்கள் யாரை ஏமாற்ற நினைக்கின்றனர்?
கடந்த
பத்து ஆண்டுகளாகத் தொழிலாளர்கள் பெற்று வரும் ஊதியங்களில் மாற்றம் இல்லை என்பதை அரசின் பொருளாதார அறிக்கையே கூறுகிறது. அதே அறிக்கை கடந்த பதினைந்து ஆண்டுகளில் இல்லாத பெரும் இலாபங்களை இந்தியக் கார்ப்பரேட் கம்பெனிகள் இந்த ஆண்டு குவித்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும், எந்த நிறுவனமும் தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியங்களையும் சலுகைகளையும் கூட்டவே இல்லை என்பதையும் தெரிவிக்கிறது. இவர்களுக்கு மேலும் மேலும் சலுகைகள் வழங்குவதன் மூலம் புதிய முதலீடுகள் வரும், வேலைவாய்ப்புகள் பெருகும், ஊதிய விகிதங்கள் கூடும் என்றெல்லாம் கூறி, அவர்களுக்கு இலாபம் தரும் வகையில் ரூபாய் இரண்டு இலட்சம் கோடி கார்ப்பரேட் வரிச்சலுகையை மோடி அறிவித்தார். ஆனால், கார்ப்பரேட் கம்பெனிகள் கட்டிய வரிதான் குறைந்ததே தவிர, எந்தப் புதிய முதலீடுகளும் வரவில்லை, வேலைவாய்ப்பும் பெருகவில்லை. இந்தியாவில் முதன்முறையாக மோடி ஆட்சியில் மட்டும்தான் கார்ப்பரேட் கம்பெனிகள் கட்டும் வரிகள் குறைவாகவும், தனி நபர் கட்டும் வரிகள் அதிகமாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.
நாட்டின்
மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் நாளொன்றுக்கு ரூ. 150-க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். இந்த மக்களுக்கு இந்தப் பட்ஜெட்டில் என்ன இருக்கிறது என்று பா.ச.க.
நண்பர்கள் நாட்டுக்குக் கூற வேண்டும். உணவுப் பொருள்களின் விலைவாசிகள் விண்ணைத் தொடுகின்றன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன.
கல்வி,
மருத்துவம் போன்ற வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அவர்களிடம் பணம் இல்லை. கடன் சுமையால் உயிர் வாழவே போராட வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் விவசாயிகளுக்குக் கடன் நிவாரணமும் இல்லை; அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச விலைக்கான உத்திரவாதமும் இல்லை. சிறு குறு தொழில்களுக்குச் சலுகை காட்டுங்கள் என்று கேட்டால் ரூ. 500 கோடி வரவு - செலவு செய்யும் நிறுவனங்களையும் சிறு தொழில் நிறுவனங்கள் என்று அறிவிக்கும் மோடி அரசின் கொடுமையை எங்கே போய் கூறுவது? சிறு தொழில்களுக்கான சலுகைகளையெல்லாம் அந்தப் பெரிய நிறுவனங்களே கைப்பற்றிக்கொள்ளும் என்கிற அடிப்படை உண்மை கூட இந்த அரசுக்குப் புரியாதா?
இந்தியப்
பொருளாதாரத்தின் உந்துசக்தியாக விளங்குகின்ற தமிழ்நாடு, கர்நாடகம் அனைத்து சமூக வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதலிடத்தைப் பெற்றிருக்கின்ற கேரளா போன்ற தென் மாநிலங்கள் ஒன்றிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது என்ன நியாயம்?
பட்ஜெட்
தயாரிக்கும் உயர்மட்ட 90 அதிகாரிகளில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் இல்லை என்று கூறுகிறார்களே! இதுதான் சமூக நீதியா? உயிர் காக்கும் மருந்துகளுக்கு இறக்குமதி வரிச்சலுகை என்று பெரிதாக அறிவித்தார்கள். ஆனால், உள்ளே போய் பார்த்தால் இறக்குமதி செய்யப்படும் பிளாட்டினம், தங்க நகைகள், வைரம், விலை உயர்ந்த நவரத்தினங்கள்... இவற்றுக்கெல்லாம் வரிச்சலுகை அறிவித்துள்ளீர்களே! அது யாருக்காக?
எலான்
மஸ்க்குக்காக எலெக்டிரிக் கார்களின் மீதான வரிக்குறைப்பு, டிரம்பைத் திருப்திப்படுத்த அமெரிக்க இறக்குமதி ஹார்லி மோட்டர் சைக்கிளுக்கு வரிக்குறைப்பு, வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கின்றவர்களுக்கு வரிச்சலுகை... ஏழை மாணவர்களின் கல்விக்கடன் வண்டிகளைத் தள்ளுபடி செய்யக்கூடாதா?
மகாத்மா
காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒதுக்கீடு கூட குறைந்துகொண்டே வருகிறதே! இது யாருக்கான அரசு?
உற்பத்தியைக்
கூட்டாத, வேலைவாய்ப்புகளைப் பெருக்காத, அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைக்காத, விவசாயிகளின் துயர் நீக்காத, ஏழைகளின் கண்ணீர் துடைக்காத இந்தப் பட்ஜெட்டால் யாருக்குப் பயன்?