ஒருவர் எவ்வளவுதான் இறைவேண்டல் செய்தாலும் வழிபாடுகளில் பங்கேற்றாலும், அவரிடம் சாதி உணர்வு இருந்தால், அவரது ஆன்மிகம் போலியானதே. இன்னும் சொல்லப்போனால், அவர் கிறித்தவரே அல்லர். காரணம், சாதி மறுப்பே கிறித்தவத்தின் நிபந்தனை. ஆம், ஒருவர் தனது சாதியை மறுக்காதவரையில் அவர் முழுமையான கிறித்தவராக இருக்க முடியாது.
சாதி
உணர்வு பல தீமைகளைக் கொண்டிருக்கிறது.
‘சாதிப் பிளவுகள் மனித மாண்பின் மறுப்பு’
‘சாதி மானுட ஒற்றுமைக்குப் பகை’
‘கிறித்தவர்களிடையே சாதி உணர்வு கிறித்தவ உறவின் பிறழ்வு’
‘சாதி ஆன்மிகத்தின் பிழை’
‘சாதிய உணர்வு நற்செய்தி அறிவிப்புக்குத் தடை’
மேற்காணும்
திடுக்கிடும் கருத்துகளையெல்லாம் கூறியவர் யார் தெரியுமா? திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால். ஆம்,
17.11.2003 அன்று தமிழ்நாடு ஆயர்கள் உரோமையில் திருத்தந்தையைச் சந்தித்தபோதுதான் அவர் இந்தக் கருத்துகளின் மூலம் தமது மனக்குமுறலை வெளியிட்டார்.
தமிழ்நாடுத்
திரு அவை - விவிலியப் பணிகள், திருவழிபாட்டுப் பணிகள், கல்வி-சமூகப் பணிகளின் வழியாக மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக எண்ணிக்கொள்கிறது. ஆனால், உண்மையில் இங்குச் சாதியம் புரையோடிப் போயிருக்கிறது. திரு அவை மேலாண்மையின் மேல்மட்டத்திலிருந்து அடிவரையில் சாதியம் வேரூன்றியிருக்கிறது என்பது நம்மீது வைக்கப்படும் மறுக்க இயலாத குற்றச்சாட்டு. சாதியம் ஒரு சாபக்கேடு, ஓர் இடறல், ஓர் ஆன்மிகப் பிழை என்பதை நாம் உணரவில்லை. எனவேதான், திருத்தந்தை நம் கண்களைத் திறக்க வேண்டியதிருந்தது.
சாதியம்
கிறித்தவத்தோடு ஒன்றி வாழ முடியாது. காரணம், சாதியம் அடிப்படையிலேயே மனிதர்களைப் படிநிலையாகப் பிரிக்கிறது. கிறித்தவமோ ஒரே தந்தையின் பிள்ளைகளாக இணைக்கிறது. “நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம். ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்” (உரோ
12:5) என்கிறார் பவுலடியார்.
பவுலைப்
பொறுத்தவரையில் சாதியம் என்பது ஒரு பாவம். கிறித்தவர்களைப் பிரிக்கின்ற எதுவுமே பாவம்தானே! அவர் தருகின்ற பாவங்களின் பட்டியலைப் பாருங்கள். “ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லிசூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை” (கலா
5:19-21). எனவே, சாதிய உணர்வு கொள்வோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடையப்போவதில்லை என அவருடன் சேர்ந்து
நாமும் கூறலாம்.
கொரிந்து
நகரக் கிறித்தவரிடையே பிளவுகள் இருப்பதை அறிந்து வருந்தினார் பவுல். “நீங்கள் சபையாகக் கூடிவரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடிவந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல”
(1கொரி 11:18, 20) என்றார் அவர். இத்தகைய தெளிவு நமக்கும் தேவை. சாதிய உணர்வோடு நற்கருணை அருந்துவது தவறு. கோவிலிலேயே சாதிய வழியில் மக்கள் பிரிக்கப்பட்டிருந்தால், அது எவ்வளவு பெரிய கேடு!
எப்போது
நாம் திருமுழுக்குப் பெற்றோமோ, அப்போதே புதுப்படைப்பாக மாறிவிட்டோம். அப்போதே நமது பிளவுகள் நீங்கி, நம்மில் ஒன்றிப்பு நிகழ்ந்துவிட்டது. “நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே. தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே, ஆண்டவர் ஒருவரே. நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே. திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே”
(எபே 4:4-6) என்று விளக்குகிறார் பவுல். “இனிமேல் நாங்கள் யாரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை. ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்” (2கொரி
16-17) என்னும் இறைமொழிகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.
சாதிய
முறையின் மிக மோசமான நீட்சி தீண்டாமை, சிலரை ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று
ஒதுக்கிவைப்பது. அவர்களுடன் உண்டாலோ, உறவாடினாலோ அது நம்மைத் தீட்டுப்படுத்துகிறது என்னும் எண்ணம் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால், இறைவார்த்தை தீண்டாமையை எதிர்க்கிறது. “தன்னிலேயே எப்பொருளும் தீட்டானது அல்ல என ஆண்டவர் இயேசுவுடன்
இணைந்து வாழும் எனக்குத் தெரியும். இது என் உறுதியான நம்பிக்கை”
(உரோ 14:14) எனத் துணிந்து அறிவிக்கிறார் பவுல். “கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள்” (உரோ
15:7) என்பது அவரது அறிவுரை.
தொடக்கக்
காலத் திரு அவையினர் தங்களுக்குள் எந்தப் பிளவுகளும் இன்றி ஒன்றி வாழ்ந்தனர் என்னும் செய்தி நமக்கு ஆறுதலும் ஊக்கமும் தருகின்றது. “நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்”
(திப 4:32) என்று வாசிக்கிறோம். அவர்களைப் போலவே ஏன் நாமும் வாழக்கூடாது? “நீங்கள் கிறிஸ்துவின் உடல். ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்” (1கொரி
12:27) என்னும் பவுலடியாரின் வாக்கை நினைவில் கொள்வோம்.
‘சாதிவெறிதான் தவறு, சாதிய உணர்வு தவறல்ல’ என எண்ணிக்கொள்வோர் நம்மிடம் உண்டு.
வெளிப்படுத்தப்படாத சாதி வெறிதான் சாதி உணர்வு என்பதை அவர்கள் உணர்வதில்லை. என்றாவது ஒருநாள் அந்த உணர்வு வெறியாக வெளிப்படலாம். கிறித்தவரிடம் இருக்க வேண்டியது ‘நாம் எல்லாரும் ஒன்று’ என்னும் உணர்வுதான்.
சாதிய
உணர்வோடு நாம் நல்ல கிறித்தவராக வாழமுடியாது. விண்ணகத் தந்தையாம் இறைவனை நோக்கி மன்றாட இயலாது. எனவே, நம் மனத்திலும் வாழ்விலும் சாதியை மறுப்போம்.
சாதிய
எண்ணங்களை அகற்றி, ‘பிற சாதி’ என அழைக்கப்படுவோருடன் நட்புறவு கொண்டாடி
நாம் கிறித்தவர் என அறிக்கையிடுவோம். சாதி மறுப்பு
சமத்துவ வாழ்வே கிறித்தவ இறைவேண்டலின் நிறைவு என்பதை உணர்வோம்.
“தந்தையே, எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக” (யோவா
17:21) என்னும் இயேசுவின் ஏக்கத்தை நிறைவேற்றுவோம்.