வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் ஆணுக்கும்-பெண்ணுக்கும் சரி நிகர் சமமான கூலி வேண்டும் என்பதற்காக 1960-களில் அமெரிக்காவில் பஞ்சாலைகளில் எழுபத்தைந்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி, உயிர் துறந்த நாளின் நினைவாகவும், பெண் தொழிலாளர்கள் எழுப்பிய உரிமைக் குரலுக்குக் கிடைத்த வெற்றியாகவும் பிறந்ததுதான் அகில உலகப் பெண்கள் தினம். இந்நாள் ஆண்டுதோறும் அகில உலக அளவில் மார்ச் 8-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வரு கிறது. ஐக்கிய நாடுகள் பெருமன்றம் இந்த ஆண்டை அனைத்துப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் உரிமைகள், சமத்துவம், அதிகாரம் அளித்தல் என்ற கருப்பொருளில் கொண்டாட அழைப்பு விடுத்திருக்கிறது.
ஒரு
தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, மகளாக என ஒட்டுமொத்த உறவிலும்
ஆணுக்குத் துணையாக, இணையாக நிற்பவள்தான் பெண். உலக மக்கள் இனத்தில் ஐம்பது விழுக்காட்டினர் பெண்களே. இருப்பினும், உரிமைகளைப் பெறுவது, வளங்களைப் பகிர்ந்து கொள்வது, வாய்ப்புகளைப் பெறுவது, வன்முறை இன்றிப் பாதுகாப்புடன் வாழ்வது என்பனவற்றில் பெண்களுக்கு உண்மையான சமத்துவமின்மையே காணப்படுகிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, பாலினச் சமத்துவத்தினை அடைய இன்னும் 133 ஆண்டுகள் ஆகும். இத்தகைய சூழலில் தமிழ்நாடு திரு அவையின் பெண்கள் பணிக்குழு ‘பெண்களை ஆற்றல்படுத்தி சம உரிமையை நிலைநாட்டுவோம்’ என்ற
கருப்பொருளில் அகில உலகப் பெண்கள் தினத்தைக் கொண்டாட அழைக்கிறது.
2025-ஆம் ஆண்டு
பாலினச் சமத்துவம் பேணுதல், பெண்களுக்குச் சமூகத்தில் அதிகாரமளித்தல் ஆகிய வற்றின் உலகளாவிய நோக்கமும், யூபிலி ஆண்டின் கூட்டொருங்கியக்கத் திரு அவையின் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற
மையக் கருத்தும் இணைந்து முக்கிய நிகழ்வாக அமைகின்றன.
அகில உலகப்
பெண்கள்
தினத்தினைப்
பொருளுள்ள
வகையில்
கொண்டாட...
• நாடு, நமது மாநிலம், நாம் வாழுமிடம், நமது பங்கு ஆகிய இடங்களிலும், கல்வி, உணவு, பாதுகாப்பு, சுகாதாரம், அமைதி, ஊடகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய தளங்களில் பெண்களின் நிலையை ஆய்வு செய்தல்.
•
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்தல்.
• தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராகப் பெருகி வரும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்.
• பாலினச் சமத்துவத்தைப் பயிற்றுவித்தல் - பாடத்திட்டங்களில், மறைக்கல்வியில், பங்கு அளவிலும் மறைமாவட்ட அளவிலும் பல்வேறு பயிற்சிகளில் பாலின சமத்துவத்தைப் பயிற்றுவித்தல்.
• அதிகாரமளித்தலை ஊக்குவித்தல் - கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சமத்துவத்தைப் பேணுதல், தலைமைத்துவம் வழங்குதல், முடிவெடுக்கும் தளங்களில் பெண்களை அமர்த்துதல், இதன்மூலம் அதிகாரக் கட்டமைப்புகளை மறுவரையறை செய்தல், இளம்பெண்களையும் சிறுமிகளையும் வழிநடத்துதல்.
• பாலினச் சமத்துவத்திற்கான, பாலின நீதிக்கான இயக்கங்களோடு இணைந்து பயணித்தல்.
• சட்ட விழிப்புணர்வு, ஆலோசனை, பாதுகாப்பு, சட்ட உதவி மையங்கள், வன்முறையிலிருந்து தப்பியவர்களுக்குத் தங்குமிடங்கள் போன்ற அவசியமான தேவைகளை அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் உதவியோடு பெற்றுத் தருதல்.
• பெண்களின் பொருளாதாரத் தற்சார்பிற்கான பயிற்சிகளை அளித்து அவர்கள் வாழ்வு வளம் பெற வழிகாட்டுதல்.
• பெண்களின், சிறுமிகளின் உரிமைகளை மேம்படுத்துதல் - அனைத்து வகையான வன்முறை, பாகுபாடு, சுரண்டல் அனைத்தையும் எதிர்த்து, பெண்களின், சிறுமிகளின் முழு அளவிலான மனித உரிமைகளுக்காக இடைவிடாமல் போராடுதல்.
• பாலினச் சமத்துவத்தை ஊக்குவித்தல் - திரு அவையில் பங்குத்தளங்களில், பங்குப் பேரவையில் சமமான எண்ணிக்கையில் பங்கேற்றல், தடைகளை நிவர்த்தி செய்தல், பெண்களின், சிறுமிகளின் குரல்களை உயர்த்துதல், அதிகாரமளித்தலை உறுதி செய்தல்.
• பெண்களின் மாண்பை இழிவுபடுத்தும் ஊடகக் காட்சிகளுக்கு எதிராகத் தணிக்கைக் கோருதல். பெண்களின் மேன்மையை, திறமைகளை வெளிப்படுத்தும் மாற்றுக் காட்சிகளை உருவாக்குதல்.
• பெண்களின் குடும்பம்சார் உழைப்பினை அங்கீகரித்தல், வீடுசார் பணிகளில் ஆண்-பெண் பங்கேற்பை ஊக்குவித்தல்.
சவால்களைத்
தாண்டி திரு அவையிலும் சமுதாயத்திலும் பெண்கள் பல புரட்சிகளை ஏற்படுத்தியுள்ளனர்.
பெண்கள் ஆண்களுக்கு இணையாகப் பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைத்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அலுவலக நியமனப் பணியில் அருள்சகோதரி சைமோனா பணி அமர்த்தப்பட்டுள்ளார். இந்தியாவின் குடியரசு தலைவரான திருமிகு. திரௌபதி முர்மு, கல்விப் போராளியான மலாலா யூசுப் சாய், ஆசிரியரும் சமூக விமர்சகருமான அருந்ததிராய். சுற்றுச்சூழல் ஆர்வலர் மேத்தா பட்கர், அரசியல்வாதி பிரியங்கா காந்தி, மாநில முதல்வரான திருமிகு மம்தா எனப் பெண்கள் சாதித்து வருகின்றனர். சேலம் மாவட்ட ஆட்சியாளர் திருமதி பிருந்தா உள்பட தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் பெண்களே மாவட்ட ஆட்சியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். விண்வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், அதிக நேரம் விண்வெளியில் நடந்து கின்னஸில் இடம்பெற்றுள்ளார். சாதிக்கப் பிறந்தவள் பெண் என்பதை உணர்வோம்!
“இனி உங்களிடையே ஆண் என்றும் பெண் என்றும் இல்லை... கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” என்ற
தூய பவுலடியாரின் வாக்கையும் (கலா 3:28), “ஆணும்-பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி, இவ்வையம் தழைக்குமாம்” என்று
புரட்சிக்கவி பாரதி உரைத்த உண்மையையும் வாழ்வாக்குவோம். பெண்களின் திறன்களை மேம்படுத்தி, சமமான பங்கேற்பை உறுதி செய்வோம்!
‘ஆணுக்கு நிகர் பெண்’ என்ற உயர்ந்த குறிக்கோளோடு பயணிப்போம். உறவில் உயர்ந்து, சமூகத்தில் சிறந்து, பண்பாட்டில் பக்குவமாகி யூபிலி ஆண்டில் பயணிப்போம். பாலினப் பாகுபாடு இன்றிப் பெண்களும் ஆண்களும் ஒன்றிணைந்து சமத்துவம் கொண்ட புதியதோர் உலகு படைப்போம்!
சிந்திப்போம்!
செயல்படுவோம்!! வாழ்க மகளிர் தினம்!! வளர்க பாலினச் சமத்துவம்!!!
- தயாரிப்பு: தமிழ்நாடு ஆயர்
பேரவையின்
பெண்கள் பணிக்குழு, திருச்சி
7. திண்டுக்கல் சாலை, பிராட்டியூர்,
திருச்சி
- 620 009