இன்று தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு! இன்றைய வாசகங்கள் அனைத்தும் மனமாற்றத்தை மையமாகக் கொண்டமைகின்றன. மனமாற்றம் என்றதுமே, அது பாவத்திலிருந்து மனம் மாறுதல் என்றும், ‘மனம் மாறுங்கள்’ என்னும் அழைப்பு பாவிகளுக்கு மட்டும்தான் என்றும் நினைக்கின்றோம். சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் செய்த பாவங்களை அறிக்கையிட்டு, அவற்றிலிருந்து மனமாறுதல் என்று கருதுகின்றோம். இது உண்மை என்றாலும், கிறித்தவ மனமாற்றம் என்பது ஆண்டவரது அளவு கடந்த அன்பால் கவரப்பட்டு, மனத்தின் உள்ஆழத்திலே பாவத்தை வெறுத்து ஒதுக்கி, ஆண்டவர் காட்டும் அன்புப் பாதையில் நடப்பதாகும். இது ஒரு நாள், இரண்டு நாளில் முடிந்துவிடும் ஒன்றன்று; மாறாக, அன்றாடம் வாழ வேண்டிய வாழ்வு நெறியாகும்.
இயேசு
கலிலேயாவில் தமது பணியைத் தொடங்கும்போது, “மனம் மாறுங்கள்” என்றே
முழங்கினார். அவர் விண்ணேற்றம் அடைவதற்கு முன்னர் போதித்த இறுதிப் போதனையும் ‘மனம் மாறுங்கள்’
(லூக் 24:47) என்பதாகும். திரு அவையின் முதல் திருத்தந்தை புனித பேதுரு பெந்தக்கோஸ்து நாளில் மக்களுக்கு வழங்கிய முதல் அருளுரையும் ‘மனம் மாறுங்கள்’
(திப 2:38) என்பதுதான்.
முதல்
மனிதனாகிய ஆதாமிடம் கடவுள், “நீ எங்கே இருக்கின்றாய்?”
(தொநூ 3:9) என்ற கேள்வி தொடங்கி, இறுதி நூலாகிய திருவெளிப்பாட்டில் இயேசு எல்லாரையும் நோக்கி, “தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும்” (திவெ
22:17) என்ற அழைப்பு முடிய மனிதன் மனம் மாறி புதுவாழ்வு பெறவேண்டும் என்பதுதான் திருவிவிலியத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை இழைந்தோடும் ஆழமான கருப்பொருள். மனம் மாறுதல் என்பது சுயநலத்திலிருந்தும் கடவுளின் கட்டளைக்கு எதிரான கிளர்ச்சியிலிருந்தும் பாதையை மாற்றுதல் ஆகும். மனமாற்றம் என்பது, கடவுளை நோக்கித் திரும்பி வருவதும் அவரிடம் முழுமையாக நம்பிக்கைகொள்வதும் அவரது மன்னிப்பு, கருணை, வழிகாட்டுதல், திட்டம் யாவற்றையும் நாடிச் செல்வதுமாகும். இது ஒரு மனிதனில் நிகழ்கின்ற முழுமையான, தலைகீழ் மாற்றம் எனலாம். விடுதலை இறையியலில் தந்தை எனப் போற்றப்பெறும் குஸ்தாவோ குத்தியரஸ், “மனமாற்றம் என்பது தீவிரமான உருமாற்றம்” என்று
குறிப்பிடுவார்.
இன்றைய
முதல் வாசகத்தில், பாவத்தின் விளைவாக எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்து துன்புற்ற இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாறுவதற்காக ஒரு வாய்ப்பை வழங்குகிறார் கடவுள். பாவத்தின் காரணமாக மக்கள் ‘அழிந்து போகட்டும்’
என அவர் விரும்பவில்லை; மாறாக, “வணங்காக் கழுத்துள்ள” (தொநூ
33:3) அவர்களை மீட்டு, பாலும் தேனும் பொழியும் வளமான நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இஸ்ரயேல் மக்கள்மீது ஆசையோடு வைத்துள்ள கடவுளின் கனிந்துருகும் செயலை என்னவென்று சொல்வது! முரட்டுப் பிடிவாதம் பிடிக்கும் பிள்ளையை அரவணைக்கும் ஒரு தாயைப்போல, தந்தையைப்போல கடவுள் இங்குச் செயல்படுகிறார். கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது கொண்டுள்ள இரக்கச் செயல், அவர்கள் மனம் மாறுவதற்கான ஒரு நல் வாய்ப்பாக அமைகிறது.
“இரக்கமும் அருளும் கொண்ட கடவுள்”
(திபா 103:8) ஒரு தனிமனிதனின், ஒரு சமூகத்தின் விடுதலைக்காக மோசேயைப் பொறுப்பேற்கச் சொல்கிறார். மிதியான் நாட்டில் தன் மாமனார் இத்திரோவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசே முதலில் தயக்கம் காட்டினாலும், கடவுள் அவருக்கு நம்பிக்கையைக் கொடுத்து, அவரது தயக்கத்தை நீக்கி, அவர் வழியாகக் கொணர்ந்த விடுதலை, வரலாறானது. இந்த வரலாற்று அனுபவத்தையே தாவீது இன்றைய திருப்பாடலில் பாடலாகப் பாடுகிறார். ‘குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்ற, நோய்களையெல்லாம் குணமாக்குகின்ற கடவுளுடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே’ என்கிறார் (திபா 103:2,3). பழைய ஏற்பாட்டில் எங்கும் காணமுடியாத அளவுக்கு ஆண்டவரின் அன்பு, கனிவு, பரிவு, இரக்கம் முதலியன இப்பாடலில் வழிந்தோடுவதைக் காணலாம்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலும் மனம் மாறுவதற்கான ஓர் அழைப்பைக் கொரிந்திய மக்களுக்குக் கொடுக்கிறார். பவுல் காலத் தில் கொரிந்திய நகரம் மிகப்பெரிய ஒரு வணிக நகரமாகவும் உரோமையரின் குடியேற்ற நகரமாகவும் விளங்கியது. இங்குப் பல தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்தன.
கொரிந்தியக் கிறித்தவர்களில் பெரும்பாலோர் பிற இனத்தைச் சார்ந்த புதிய கிறித்தவர்களாக இருந்தனர். இம்மக்களிடத்தில் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர்களை ‘நம் முன்னோர்’
(1கொரி 10:1) என்று பவுல் அழைக்கிறார். இதனால் இம்மக்கள் அனைவரும் ஒரே கடவுளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எனவும் இஸ்ரயேல் மக்களின் உண்மை வழித்தோன்றல்கள் என்பதையும் பவுல் தெளிவாக்குகிறார். இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்த நிகழ்வையும் பாலைநிலத்தில் மன்னாவை உண்டு, பாறை நீரைப் பருகிய நிகழ்வையும் விளக்குவதன் மூலம் பழைய இஸ்ரயேல் மக்களுக்கும் புதிய இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவும் தொடர்பை அவர் எடுத்துக்காட்டுகிறார்.
ஆயிரம்
நன்மைகளை அடுத்தடுத்து வழங்கியிருந்தாலும், அந்தப் பராமரிப்பின் கடவுள் ஆற்றிய அருஞ்செயல்களை இஸ்ரயேல் மக்கள் மறந்து போயினர். அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கவும், சிலைவழிபாட்டில் ஈடுபடவும் செய்தனர். இதனால், அவர்கள் கடவுளின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானார்கள். இந்தத் தீமையிலிருந்து விடுதலை பெற முடியாமலும் விரும்பாமலும் தவித்தவர்கள் அவர்தம் வாரிசுகளான புதிய இஸ்ரயேல் மக்கள். இந்தக் கொரிந்து நகர மக்களும் பவுலின் அறிவுரைகளுக்கு எதிராக முணுமுணுக்கவே செய்தனர். எனவே, நம்பிக்கைகொண்ட கொரிந்து நகர மக்கள் ‘சிலைவழிபாடு’ என்னும்
தங்களின் பாவத்திலிருந்து மனமாற்றம் பெற்று, இயேசுவை நோக்கித் திரும்பி வர வேண்டும் என
பவுல் அழைப்பு விடுக்கின்றார்.
இன்றைய
நற்செய்தியிலும் இயேசு மனமாற்றம் குறித்தே போதிக்கின்றார். இரண்டு வரலாற்று நிகழ்வுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. ஒன்று, கலிலேயரைப் பிலாத்து கொன்ற நிகழ்வு; மற்றொன்று, சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டு பேர் இறந்த நிகழ்வு. வரலாற்றில் இது போன்ற விபத்துகளும் இறப்புகளும் நிகழும்போது அவை பாவத்திற்கான தண்டனை என்றே எண்ணப்பட்டன (யோபு 4:17; எசே 18:26; யோவா 9:2-3). இதற்குக் காரணம், பழைய ஏற்பாட்டில் மறுவாழ்வு பற்றி மக்களுக்குத் தெரியாததால் அவர்கள் இக்காலத் தண்டனை பற்றிய விளக்கத்தையே நம்பி ஏற்றுக்கொண்டனர். இதுவே, இவர்களுக்கு இறைவனது நீதியாகவும் தோன்றியது. ஆனால், இயேசுவோ கடவுள் தண்டனை அளிப்பது பற்றி மக்கள் கொண்டிருந்த எண்ணத்தையே மாற்றுகிறார்.
கோவிலில்
பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றதால், அவர்கள் இரத்தம் சிந்தப்பட்ட புனித இடம் மாசுபட்டு விட்டது என்று இயேசுவிடம் வந்து சிலர் கூறுகின்றனர். இச்செய்தியைக் கேட்ட இயேசு, சீலோவாமில் கோபுரம் ஒன்று விழுந்ததால் 18 பேர் உயிரிழந்த நிகழ்வையும் இணைத்து, அழிவினால் பாதிக்கப்பட்டோரைக் குறித்து, ‘அவசரத் தீர்ப்புகள் வழங்க வேண்டாம்’
என்று எச்சரிக்கிறார். பல நேரங்களில் மற்றவர்களைவிட
நாம் மேலானவர்கள் என்ற எண்ணத்திற்கு அடிமைகளாகிறோம். எனவே, பிறர்மேல் தண்டனை விழும்போது, துன்பங்கள் வரும்போது, அது நீதிதான் என்று நினைக்கிறோம். அத்துன்பங்களே நம்மை அண்டும்போது, “கடவுளே ஏன் என்னைத் தண்டிக்கிறீர்? நான் என்ன பாவம் செய்தேன்?” என்று கேட்கின்றோம். இவ்வேளையில், இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுவது: நம் எதிரிகள் செய்யும் தீமைகள், நாம் செய்யும் தீமைகளை விடப் பெரியனவோ அல்லது மோசமானவையோ அல்ல என்பதுதான். மேலும், அனைவரும் மனம் திரும்ப வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம் என்பதை இங்கே இயேசு குறிப்பிடுகிறார். மேலும், இன்றைய நற்செய்தியின் இறுதியில் காணப்படும் அத்திமர உவமை வாயிலாக இறைவனின் காத்திருப்பும் அவரது பொறுமையும் நாம் மனம் மாற வேண்டும் என்பதற்கான கால அளவாகும்.
நிறைவாக,
திருத்தந்தையின் இந்த ஆண்டு தவக்காலச் செய்தியில் முதலாவதாக, மனமாற்றத்திற்கான அழைப்பு என்பது ‘பயணம் மேற்கொள்வது; அதாவது, இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட பூமியை நோக்கிப் பயணம் செய்ததுபோல் நம் வாழ்வும் இறைவனை நோக்கிச் செல்லும் பயணமாக இருக்கவேண்டும். இரண்டாவது, மனமாற்றத்திற்கான அழைப்பு என்பது ‘ஒன்றிணைந்து பயணித்தல்’
ஆகும். இது நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற பொதுவான மாண்பின் அடித்தளத்தில் ஒருவர் மற்றவருடன் இணைந்து நடப்பதும் எவரையும் தள்ளாமலும் மிதித்து விடாமலும் கோபம் மற்றும் வெளிவேடத்தால் எவரையும் ஒதுக்கி விடாமலும் இருப்பதாகும். மூன்றாவது, மனமாற்றத்திற்கான அழைப்பு என்பது ‘எதிர்நோக்குடன் பயணித்தல்’
ஆகும். அதாவது, கடவுளையும் மீட்பு மற்றும் நிலைவாழ்வு குறித்த அவரது வாக்குறுதியிலும் நம்பிக்கை கொண்டு பயணம் மேற்கொள்வதாகும் (தவக்காலச் செய்தி, 06.02.2025).
எனவே,
இந்தத் தவக்காலத்தில் நாம் மனம் மாறுவதற்காக மீண்டும் அவர் பொறுமையோடு காத்திருக்கிறார். மனம் மாற்றம் பெறுவோம், புது வாழ்வு அடைவோம்.