news-details
சிறப்புக்கட்டுரை
தந்தை லெவே இயேசுவின் கோதுமை மணி

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான், அது பலன் கொடுக்கும் (யோவான் 12:24) என்ற இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப, தான் வாழ்ந்தபோதும், சருகணி மண்ணிலே துயில் கொண்ட பின்பும் இயேசுவின் கோதுமை மணியாக மாறி, மக்களின் வாழ்க்கையோடு கலந்து, மடிந்து இன்றும் பலன் அளித்துக் கொண்டு இருக்கின்றார் நம் சருகணியின் சகாப்தமான இறை ஊழியர் லூயி மரி லெவே.

தந்தை அவர்கள் விண்ணகப் பிறப்பு அடைந்து 51 ஆண்டுகள் கடந்தாலும், அவரின் பரிந்துரையை நாடி ஒவ்வொரு நாளும் சருகணியின் மண்ணை நோக்கி மக்கள் சாதி, இன, மத பேதமின்றி வந்து செல்கின்றார்கள். இன்றளவும் அவரது கல்லறையில் தங்களது விண்ணப்பங்களை, மன்றாட்டுகளை வைத்துச் செபித்த பின்பு, ஒவ்வொரு மாதமும் லெவே தினமாக 21-ஆம் தேதி சாட்சியம் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக, புற்றுநோயிலிருந்து, சிறுநீரகக் கல் அடைப்பிலிருந்து, பார்வை குறைபாட்டிலிருந்து, தீராத தலைவலி மற்றும் கண் வலியிலிருந்து குணத்தைப் பெற்றுச் செல்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் மற்றும் திருமண வரனுக்காகக் காத்திருப்போர், அவரின் பரிந்துரையால் குழந்தைச் செல்வத்தையும், நல்லதொரு வரம் கிடைத்தவர்களாய் அவருக்கு நன்றி செலுத்த சருகணி நோக்கி மக்கள் ஒவ்வொரு நாளும் வந்து செல்கின்றனர்.

தந்தை வாழ்ந்தபோதே விவசாயிகளின் காப்பாளனாய், மழைக்காக மக்கள் காத்திருந்தபோது தந்தை லெவேயிடம் வந்து, “ஐயா, மழையில்லாமல் பயிர்கள் வாடுகின்றன; எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்என்று கூறியபோது, உடனே மக்களின் கண்ணீரைப் போக்க செபமாலையுடன் முழந்தாள்படியிட்டுச் செபிப்பார். உடனே அல்லது மூன்று நாள்களுக்குள் மழை வரும். மக்களும் மன நிம்மதியுடன் தங்கள் இல்லம் திரும்புவார்கள்.

விவசாயிகள் தங்களின் பயிர்களைப் பூச்சி, எலி, புழுக்கள் கடித்துத் தின்றால், நாசப்படுத்தினால் உடனே தந்தை லெவேயிடம் ஓடி வருவார்கள். அவரும் பனையோலையில் செபத்தை எழுதி மந்திரித்துக் கொடுத்து அனுப்புவார். தங்களின் நிலத்தில் அந்த மந்திரித்த ஓலையைக் கட்டியவுடன், பூச்சி மற்றும் எலியின் தொல்லையிலிருந்து பாதுகாக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.

இன்றளவும் மக்கள் தங்கள் நிலத்தில் விதைப்பதற்கு முன்பு, லெவே சாமியின் கல்லறையைத் தரிசித்து, விதைகளைக் கல்லறை மீது வைத்துச் செபித்த பின்புதான் விதைக்கச் செல்வார்கள். பயிர்களைப் பூச்சி, புழு அழித்தால், ஓலைகளை வாங்கிச் சென்று கட்டுவார்கள். இன்றும் பல ஊர்களிலிருந்து விவசாயிகள் வந்து செல்வதுண்டு.

நான் செய்யும் செயல்களை, என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்கள்என்றார் இயேசு (யோவான் 14:12). தந்தை லெவே அவர்கள் இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டவராய் வாழ்ந்தார். அதனால்தான் இந்த மண்ணிலே துயில் கொண்டு பல புதுமைகளைத்தான் அன்பு செய்த மக்களுக்காகச் செய்து கொண்டு இருக்கிறார்.

வாருங்கள், சருகணியை நோக்கி!

தந்தை லெவே அவர்களின் பரிந்துரையை

நாடுங்கள், இறையருளைப்

பெற்றுச் செல்லுங்கள்!