பள்ளி, கல்லூரிக் காலங்கள் எல்லாருக்கும் பசுமையான நினைவுகளைத் தரும். சில நினைவுகள் காலச் சருகுகளைப்போல அடித்துச் செல்லப்படும்; சில நினைவுகள் ஆலமரம் போல விழுதுவிட்டு காலங்காலமாக நிலைத்து நிற்கும்.
கல்லூரி
படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கியிருந்தோம். எல்லா நாள்களும் வெளியில் செல்ல அனுமதி இல்லை.
விடுமுறை நாள் ஒன்றில் அனைவரும் வெளியில் ‘ஷாப்பிங்’ செல்ல
அனுமதிக்கப்பட்டோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில், காலைப்பொழுது மரங்களை விட்டு பறந்து
செல்லும் பறவைக் கூட்டத்தைப்போல சிலர் விண்டோ ஷாப்பிங், சிலர் நண்பர்கள் வீடு, சிலர்
திரைப்படம், சிலர் பார்க், சிலர் சும்மா பயணம் என்று சிறகடித்துப் பயணித்தோம்.
சூரியன்
கண் சிவந்து மயங்கி விழும் நேரம் பல திசைகளில் பயணித்தவர்கள் தாய்மடி தேடும் பிள்ளைகளைப்
போல ஹாஸ்டல் மடி தேடி திரும்பி வந்து சேர்ந்தார்கள். இரவு சாப்பாட்டு நேரத்தின்போது
நண்பர் ஒருவர் இன்னும் வந்து சேரவில்லை என்பது தெரிய வந்தது. ஹாஸ்டல் வார்டனுக்குச்
செய்தி பறந்தது. ஹாஸ்டல் கல்லெறியப்பட்ட குழவிக் கூட்டைப்போல பரபரப்பானது. நாலாப்பக்கமும்
ஹாஸ்டல் வாசிகள் சிதறிச்சென்று தேடியலைந்தார்கள். கல்லூரி வளாகத்தையே இருள் போர்வையாக
மூடிய போதும் நண்பர் இன்னும் இருப்பிடம் வந்து சேரவில்லை என்ற செய்தி பீதியைக் கிளப்பியது.
ஹாஸ்டல்
வார்டன் கல்லூரி அலுவலர்களை வரவழைத்து விவாதித்த பிறகு காவல்துறைக்குத் தகவல் சொல்லலாம்
என்று முடிவு செய்யப்பட்டது. “பையனுக்குக் காதல் கீதல் எதாவது உண்டா?” கம்பிளைண்ட்
கொடுக்கச் சென்ற ஹாஸ்டல் வார்டனிடம் காவல்துறையினர் கேட்டார்களாம். “அப்படி ஒன்றும்
இருக்க வாய்பில்லைங்க. நல்லா படிக்கிறப் பையன்” என்றாராம்
வார்டன்.
நண்பனின்
வீட்டிற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இரவு முழுவதும் எங்கள் யாருக்கும் தூக்கம் வரவில்லை.
‘எங்கு சென்றிருப்பான்? என்னவாகி இருக்குமோ?’ ஒவ்வொருவரும் தங்கள் கற்பனையின் கடைசி
எல்லைவரை சென்று இரவு நேரக் கதை சொல்லிகள் ஆனார்கள்.
அடுத்த
நாள் காவல்துறையினர் ஹாஸ்டல் வந்து சில விவரங்களைச் சேகரித்துச் சென்றார்கள். இரண்டு
நாள்களான பிறகும் நண்பரைப் பற்றிய செய்தி ஒன்றும் இல்லை. நண்பர் காணாமல் சென்ற மூன்றாம்
நாள் காலை கல்லூரி செல்லத் தயாரான வேளையில், ஹாஸ்டல் எங்கும் மீண்டும் அதே பரபரப்பு
ஒட்டிக்கொண்டது. ‘என்னவாக இருக்கும்?’ என்று மனத்தில் ஆயிரம் கேள்விகளோடு மேல்மாடி
அறை சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன்.
அங்கு
வார்டன், காணாமல் போன என் நண்பரோடு ஹாஸ்டல் வாசல் அருகிலே நின்று பேசிக் கொண்டிருந்தார்.
மாணவர்கள் பலரும் அவர்களைச் சுற்றி நின்றனர். காணாமல்போன நண்பர் திரும்பி வந்து விட்டார்
என்பது மனத்திற்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், ‘எங்கு சென்றார்? என்ன ஆனார்?’ என்ற கேள்விகளுக்கு
மனம் விடை தேடி அலைந்தது.
எல்லாரும்
சூழ நண்பர் பேசத் தொடங்கினார்: “நான் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது
முதியவர் ஒருவர் ஒரு கடிதத்தோடு வந்து என் தோளைத் தொட்டார்.”
ஒரு
திரைப்படத் திகில் கதைக்காட்சியைப் போல கதை நீண்டது.
“தன்
மகன் இராணுவத்தில் பணிபுரிவதாகவும், அவன் எழுதிய கடிதத்தைப் போஸ்ட்மேன் வழியில் பார்த்துக்
கொடுத்ததாகவும். அதை வாசித்துத் தரும்படியாகவும் கேட்டார். நானும் சரி என்று சொல்லி
கடிதத்தில் இருந்ததைத் தெளிவாக வாசித்துக் காட்டினேன். முதியவர் மனம் மகிழ்ந்து கண்டிப்பாக
ஒரு டீ குடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். நானும் முதியவர் ஆசையாகக் கொடுக்கின்றார்
என்று நினைத்து வாங்கிக் குடித்தேன். குடித்த பிறகு என்ன நிகழ்ந்தது என்பது எனக்குத்
தெரியாது. நான் அடுத்த நாள் ஓசூர் பகுதியிலே சாலையோரம் கிடந்தேன்.”
நண்பர்
தன் அனுபவங்களைச் சொல்லச் சொல்ல எல்லாருடைய புருவமும் வியப்பில் வளைந்து நின்றது. நெஞ்சம்
படபடத்தது.
“பிறகு
அங்கிருந்த ஊர் மக்கள் என்னைப் பார்த்துவிட்டு, நலம் விசாரித்து, நான் யார் என்பதைக்
கேட்டறிந்து காசு கொடுத்து இங்கு அனுப்பி வைத்தார்கள்” என்று
முடித்தார்.
யார்
இவரை ஓசூருக்குக் கடத்தியது? ஏன் கடத்தினார்கள்? கடத்தியவர்கள் ஏன் ஓசூரிலே போட்டுச்
சென்றார்கள்? என்ற விடை தெரியாத கேள்விகள் என் சிந்தனைக் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தாலும்,
நண்பர் வந்து விட்டார் என்பது மனநிம்மதியைத் தந்தது (இந்தக் கதையினுடைய மற்றொரு சுவாரசியமான
பகுதியும் இருக்கின்றது; அதனை இந்தக் கட்டுரையின் கடைசியில் சொல்கின்றேன்).
இந்தியாவில்
2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஓர் இலட்சத்திற்கு மேலானவர்கள் கடத்தப்பட்டிருக்கின்றார்கள்
என்று ‘தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்’ (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.
இதன் அடிப்படையில் ஒரு நாளில் இந்தியாவில் மட்டும் 294 பேர் கடத்தப்படுகின்றார்கள்.
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி அல்லது
இணையத் துணையுடன் மொபைல் பயன்பாடு வழியாகப் பலர் கடத்தப்படுகின்றார்கள் என்பது உறுதி
செய்யப்பட்டிருக்கின்றது. இதனை ‘சைபர் கடத்தல்’
(Cyber kidnapping)
என்கின்றோம்.
2024
டிசம்பர் மாதத்தில் சீனாவில் வசிக்கும் பெற்றோருக்கு அமெரிக்காவில் படிக்கின்ற தங்கள்
17 வயது மகன் கடத்தப்பட்டான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடத்தப்பட்ட
சீன மாணவனை ஒரு கும்பல் மிரட்டி, அவனை யாரும் இல்லாத தனிமையான இடத்திற்குப் போகவைத்ததோடு,
அவனை 24 மணிநேரமும் இணையம் வழியாகக் கண்காணிக்கவும் செய்திருக்கின்றது. கடத்தப்பட்ட
பையனை விடுவிக்க கடத்தல்காரர்கள் 66 இலட்சம் ரூபாய் கேட்டு பெற்றோரை மிரட்டியிருக்கின்றார்கள்.
பயத்தில் பதறிப்போன பெற்றோர் மகன் கடத்தப்பட்டதைத் தங்களுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம்
மற்றும் குரல் பதிவு மூலம் உறுதி செய்துவிட்டு, கடத்தல்காரர்கள் கேட்ட 66 இலட்சம் ரூபாயை
அனுப்பியிருக்கின்றார்கள்.
தகவலறிந்த
அமெரிக்கக் காவல்துறை துரித நடவடிக்கையில் ஈடுபட்டு குளிரிலும் உறைபனியிலும் தவித்துக்கொண்டிருந்த
கை சுவாங் (Kai Suang) என்னும் அமெரிக்கவாழ் சீன மாணவரை மீட்டுள்ளனர்.
இன்றும்
பல்வேறு இடங்களில் செயற்கை நுண்ணறிவின் துணையோடு மகன் அல்லது மகள் குரலைப் படி எடுத்து,
அதனைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துப் பிள்ளைகள் கடத்தப்பட்டதாகப் பெற்றோரை நம்பச்செய்து
பணம் பறிக்கும் ஆன்லைன் கொள்ளைக்கூட்டம் அதிகரித்திருக்கின்றது.
இத்தகைய
சைபர் கடத்தல் சம்பவங்களுக்கு நாமும் பல நேரங்களில் துணை போகின்றோம். சமூக ஊடகங்களில்
நம் தனிப்பட்ட தரவுகளைப் பதிவேற்றம் செய்வது, நம்முடைய நகர்வுகளை, பயண விவரங்களை எல்லாரும்
அறிந்துகொள்ளும் விதத்தில் பதிவு செய்வது, தெரியாத நபர்களைச் சமூக ஊடகங்களில் நண்பர்களாக
ஏற்றுக்கொள்வது, தெரியாதவர்களோடு உரையாடுவது, உறுதிப்படுத்தாமல் எதையும் உண்மை என நம்புவது...
முதலில்
குறிப்பிட்ட ஹாஸ்டல் கடத்தல் சம்பவத்தில் சுவாரசியமான சம்பவம் என்னவென்றால், இந்தச்
சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழித்து அந்த நண்பரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது அந்த கடத்தல் சம்பவத்தை நினைவு கூரும்போது அவர் கூறினார், “டேய், நான் ஒன்றும்
கடத்தப்படவே இல்லை. நண்பர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்குப் போனேன். லேட் ஆனதால அங்கேயே
தங்கிவிட்டேன். இந்தச் சூழலை எப்படியாவது சமாளிப்பதற்காக ஒரு பொய் சொன்னேன். நம்ம வார்டனும்
நம்பிவிட்டார்” என்று கூறிச் சிரித்தான்.
கடத்தல்
நாடகங்களை யார், எப்போது, எங்கே அரங்கேற்றுகின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
விழிப்பாய் இருப்பது நல்லது!