திருப்பலி முன்னுரை
தவக்காலத்தின்
இரண்டாம் ஞாயிறான இன்று இறைவன் ‘மலை’ அனுபவத்தைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறார். மலை அனுபவம் என்பது கடவுளின் மாட்சியின் அனுபவம். இறைபிரசன்னத்தை வெளிப்படுத்தும் அனுபவம். திருவிவிலியத்தில் பல்வேறு இடங்களில் மலை அனுபவம் குறிப்பிடப்பட்டுள்ளது. மோரியா மலையில் ஆபிரகாமும், சீனாய் மலையில் மோசேயும், கார்மேல் மலையில் எலியாவும் இறைவனின் மாட்சியைக் கண்டார்கள். தாபோர் மலையில் கடவுளின் மாட்சியானது வெளிப்படுத்தப்படுகிறது. இயேசு பாடுகளின், இறப்பின், உயிர்ப்பின் வழியாகப் பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை வாழ்வைக் கொடுக்க இருக்கிறார் என்பதன் சிறந்த அடையாளமே தாபோர் மலை அனுபவம். நம் வாழ்வுக்குத் தாபோர் மலை அனுபவமும், கல்வாரி மலை அனுபவமும் மிகவும் முக்கியமானவை. தாபோர் மலையில் இயேசுவின் முகம் ஒளியாகப் பிரகாசித்தது, ஆடை
வெண்மையாய் மின்னியது, மோசேயும், எலியாவும் உடனிருந்தனர், பேதுரு உடனிருந்தார், விண்ணகத் தந்தையின் குரல் ஒலித்தது, சீடர்கள் தங்கள் முகத்தை மூடிக் கொள்கின்றனர். கல்வாரி மலையில் இயேசுவின் முகம் காயப்பட்டிருந்தது, ஆடை களையப்பட்டு நின்றார், இரண்டு கள்வர்கள் இயேசுவோடு உடனிருந்தனர், பேதுரு இயேசுவை விட்டு ஓடிவிட்டார், படை வீரர்களின் ஏளனக் குரல் ஒலிக்கிறது, கதிரவன்
தன் முகத்தை மூடிக் கொள்கிறான். இவ் வாறு இயேசுவின் மாட்சியில் நாம் பங்கு பெற வேண்டுமென்றால், தாபோர் மலை மற்றும் கல்வாரி மலை அனுபவத்தைப் பெறவேண்டும். நம் வாழ்க்கையில் இன்பமான மற்றும் துன்பமான நேரங்களில் இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்து, அவரது மாட்சியில் பங்குகொள்ள வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக
முன்னுரை
இன்றைய
முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆபிராமிடம் ‘வானத்து விண்மீன்களைப் போல உன் வழி மரபினரும் இருப்பர்’
என்றார். ஆபிராம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டார். நாமும் ஆண்டவர்
மீது நம்பிக்கை கொண்டு வாழும்போது, நாம் செய்வது அனைத்திலும் ஆண்டவர் வெற்றி தருவார். நமது தந்தை ஆபிராமைப் போன்று ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் தூய பவுல், ‘நமக்கு விண்ணகமே தாய்நாடு, அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்’ என்றும்,
‘ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்’ என்றும்
கூறுகின்றார். இன்னல்கள், இக்கட்டுகள், துன்பங்கள் அனைத்திலும் இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவில் நிலைத்து வாழ
அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் அனைவரும் இக்காலத்திற்கேற்ப விவேகத்தோடும், முன்மதியோடும் செயல்படவும், உம் பணியைச் செய்வதற்குத் தேவையான உடல் நலம் கொடுத்து வழிநடத்தவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எம்மோடு
வாழும் ஆண்டவரே! தவக்காலத்தில் உமது பாடுகளைப் பற்றி அதிகமாகத் தியானிக்கும் நாங்கள் அனைவரும் உடன்வாழும் சகோதர-சகோதரிகளுக்குச் சிந்தனையால், சொற்களால், செயல்களால் தீங்கிழைக்காதிருக்க
வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்களோடு
பயணிக்கும் ஆண்டவரே! மருத்துவமனைகளிலும் எமது இல்லங்களிலும் தெருவோரங்களிலும் முதியோர் இல்லங்களிலும் உடல் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரின் தனிமையையும் போக்கிடத் தேவையான நல்ல மனத்தை எங்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
4. நல்ல
ஆயனான ஆண்டவரே! எம் பங்கிலும் உலகிலும் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை ஆசிர்வதியும். அறிவியல் உலகில் ஞானத்தோடு வாழவும், ஒவ்வொரு
நாளும் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் வளரவும், பொறுப்புணர்வோடு செயல்படவும், இவர்களின் எதிர்காலம் சிறக்கவும், நீரே அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.