பிப்ரவரி 14 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினம், அமெரிக்காவில் ஒரு பெரிய வியாபார நாள். நம் ஊர் தீபாவளி மாதிரி! நகைகள், பரிசுப் பொருள்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லேட், பூங்கொத்து, மெழுகு வெளிச்ச இரவு விருந்துகள்... என்று காதலர் தினக் கொண்டாட்டத்தின் விற்பனை அங்கே ஒரு பெரிய பொருளாதாரச் சம்பவம். உணவகங்களில் ரிசர்வேஷன் பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிடும். ஒரு ரோஜாப்பூ ஆயிரம் ரூபாய்க்கு மேல் போகும். 2025-இல் மட்டும் Valentines Day அன்று அமெரிக்கர்கள் 1,500 கோடி டாலர்கள் செலவிட்டார்களாம். காசு இல்லாமல் அங்கே காதலிக்க முடியாது.
நம்
நாட்டில் காதலர் தினக் கொண்டாட்டம் இன்னும் அத்தனை வியாபார வலிமை பெறவில்லை. பச்சைக்
கலர் சட்டை போடுவதா? சிவப்புக் கலர் சட்டை போடுவதா? என்ற குழப்பத்திலேயே நம் பையன்களுக்கு
அந்த நாள் முடிந்துவிடுகிறது. பெற்றோரைப் பொறுத்தமட்டில், காதல் ஒரு கெட்டப்பழக்கம்.
பூங்காக்களில் தாலியோடு சுற்றும் கலாச்சாரத் தடியர்கள், இந்தியாவைக் காதலிக்கப் பாதுகாப்பில்லாத
நாடாக மாற்றிவிட்டார்கள்.
காதலர்
தினம் ‘Romantic Love’-ஐ கொண்டாடுகிறது. அதாவது, காமம் கலந்த
அல்லது அதற்கான கதவுகள் திறந்திருக்கிற அன்பு. காதல், மானுட வாழ்வின் ஹைலைட்! இலக்கியமும்
இதரக் கலைப் படைப்புகளும் காதலையே முதன்மையாகப் பாடுகின்றன. ரோமியோ-ஜூலியட், லைலா-மஜ்னு,
ஷாஜஹான் - மும்தாஜ்.... என்று காலத்தால் அழியாத எத்தனை யெத்தனை காதலர்கள்... காதல்
கதைகள்? இதில் சமீபத்திய வரவு ஜேக் & ரோஸ் (டைட்டானிக்). (நான் கல்லூரி படிக்கும்போது
திருச்சி, சிப்பி தியேட்டரில் நண்பர்களோடு பார்த்தேன். அடுத்த இரண்டு நாள்கள் தூக்கம் வரவில்லை. ‘பெண்ணே, நீ எப்படி
இந்த இழப்பை எதிர்கொள்ளப் போகிறாய்?’)
திருவிவிலியத்தில்
ஒரு முழுநூல் காதல் அன்பிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது - இனிமை மிகு பாடல். “காதல்
நோயால் நான் மிகவும் நலிந்துபோனேன். இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக்கொள்வார்.
வலக்கையால் அவர் என்னைத் தழுவிக்கொள்வார்”
(இபா 2:5-6) போன்ற வரிகளை வைரமுத்து எழுதினார் என்று கூறினால் பலர் நம்பக் கூடும்.
இன்று எடுக்கப்படும் திரைப்படங்களில் பாதிக்கு மேல் காதல் படங்கள். சினிமா பாடல்களில்
10-க்கு 9 காதல் பாடல்களே. மீதி ஒன்று ‘சட்டி சுட்டதடா’ போன்ற
தத்துவ ஒப்பாரிகள்! கவிதையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்; காதல் இல்லையென்றால், தமிழில்
கவிதை இல்லை.
Romantic love, கடவுளால் நம் ஜீன் சரடுகளில் அழுத்தமாக எழுதி வைக்கப்பட்டுள்ள
ஒரு சமாச்சாரம். மனித வாழ்வை அழியாமல் வைத்திருக்கும் மென்நிரல் இது. காமம் ஒரு பெரிய
மானுட ஆற்றல். அது இல்லாமல் கல்யாணம், கத்தரிக்காய் என்று எதுவும் சாத்தியமில்லை. காதல்
அன்பு கொண்டாடப்படுவதில் யாருக்கும் புகார் இருக்கக்கூடாது. ஆனால், சமூகம் அத்தனை கவனிக்காத மற்றொருவகை அன்பும் இருக்கிறது. Platonic love!
நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?
இதில் காமம் கிடையாது. உடல் வேட்கையற்ற, அறிவு மற்றும் ஆன்மிகத் தளத்தில் மட்டும் நிகழும்
ஆழமான, தூய அன்பு. இப்படியோர் அன்பை மேற்கொள்ளவும் மனித மனத்திற்கு கடவுள் திறன் கொடுத்துள்ளார்.
கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோ ‘Symposium’ என்ற நூலில் முதலில் இதைக் குறிப்பிட்டார். அதனால் அவர்
பெயரிலேயே இது ‘Paltonic love’ என்று
அழைக்கப்படுகிறது.
இந்த
ஆன்மிக அன்பிற்குப் பிரபலத் திரு அவை, உதாரணமாக புனித சிறுமலர் தெரேசா - அருள்பணி.
அடால்ஃப் ரோலண்ட் நட்பைக் கூறலாம். தெரேசா பற்றி எல்லாருக்கும் தெரியும். வட்ட முகம்
கொண்ட அழகு புனிதை! யார் இந்த அடால்ஃப் ரோலண்ட்? சுருக்கமாகச் சில தகவல்கள்: இவர் பிரெஞ்சு
நாட்டவர். 1870-இல் பிறந்தார். மறைபரப்புப் பணியில் நாட்டம் கொண்டவர். குருமாணவனாக
இருந்தபோதே கார்மெல் கன்னியர் இல்லத்திற்குச் சென்று தலைமைச் சகோதரியிடம், “எனக்காகவும்,
என் பணிக்காகவும் இறைவேண்டல் செய்ய ஒரு சகோதரியைத் தாருங்கள்” என்று ரோலண்ட் கேட்டிருக்கிறார். அவருக்குத் தரப்பட்ட சகோதரி
தெரேசா.
இருவரும்
கடிதங்கள் பரிமாறத் தொடங்கினார்கள். தெரேசா ரோலண்டுக்கு எழுதிய முதல் கடிதத்தில்,
“எனக்கு ஓர் உதவி செய்வீர்களா? நீங்கள் வைக்கும்
முதல் திருப்பலியில் எனக்காக வேண்டிக் கொள்ள வேண்டும். கருத்து இதுதான்: நான் இயேசுவின்
அன்பில் பற்றியெரிய வேண்டும். பிறர் இதயங்களிலும் அந்தத் தீயை வளர்க்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார். ரோலண்ட் பதிலுக்கு, “என் முதல் திருப்பலியில் மட்டுமல்ல,
என் எல்லாத் திருப்பலிகளிலும் உனக்காக வேண்டிக்கொள்வேன்” என்று
எழுதினார். ரோலண்ட் தெரேசாவை ‘இயேசுவில் என்
இனிய தங்கை’ (my little
sister in Jesus) என்று அழைத்தார். அவரைவிட தெரேசா
மூன்று வயது இளையவர் (பிறப்பு 1873). தெரேசா ரோலண்டை ‘என் ஆன்மாவின் சகோதரனே’ (the
brother of my soul) என்று அழைத்தார்.
ரோலண்ட்
அருள்பணியாளராகப் பட்டம் பெற்றவுடன், “நான் என் முதல் திருப்பலியை உங்கள் இல்லத்தில்
நிறைவேற்றலாமா? என் இனிய தங்கைக்கு அவள் நேசிக்கும் நற்கருணை ஆண்டவரை வழங்குவது எனக்கு
மிகப்பெரிய மகிழ்வைத் தரும்” என்று கேட்டு எழுதினார். இல்லத் தலைவி
அனுமதி வழங்க, அந்த அழகிய நிகழ்வு ஒரு ஜூலை நாளின் முற்பகலில் நடந்தது. கார்மெல் கன்னியர்
இல்லச் சிற்றாலயத்தில், ரோலண்ட் தன் முதல் திருப்பலியை நிறைவேற்றினார். தெரேசா அவருக்குப்
பீடப்பணியாளராக உதவி செய்தார்.
திருப்பலி
முடிந்து ரோலண்ட் தெரேசாவோடு சில நிமிடங்கள் தனிமையில் பேச வாய்ப்பு கிடைத்தது. அதுதான்
இருவருக்கும் இடையில் நிகழ்ந்த முதல் மற்றும் ஒரே நேரடிச் சந்திப்பு. மற்ற எல்லாமே
கடிதங்கள் வழியே. ரோலண்ட் சீனாவுக்கு மறைப்பரப்புப் பணி செய்ய அனுப்பப்பட்டார். செல்லும்
முன், “இனிய தங்கையே, உன் பணியும் என் பணியும் கடவுளால் ஆசிர்வதிக்கப்படும் என்று உறுதியாக
நம்புகிறேன்” என்று எழுதினார். ரோலண்ட் சீனாவுக்குச்
சென்ற பிறகும் இருவருக்கும் இடையே கடிதத் தொடர்பு நீடித்தது. ஒரு கடிதத்தில் தன் அழைத்தல்
கதையை தெரேசா ரோலண்டுக்குக் கூறினார். இது ‘The Story
of a Sou’ (‘ஓர் ஆன்மாவின் கதை’) என்கிற அவருடைய தன் வரலாற்று நூலிலும் இடம்பெற்றுள்ளது.
பதினைந்து
வயதிலேயே தெரேசாவிற்குக் கன்னியர் இல்லத்தில் சேர வேண்டும் என்று ஆசை. ஆனால், விதிப்படி 21 வயது வரை காத்திருக்க வேண்டும்.
தெரேசாவிற்குப் பொறுமையில்லை. மறைமாவட்ட ஆயரிடம் போய் கேட்டுப் பார்த்தார். வயதை அதிகரித்துக்
காட்டுவதற்காக முடியை உயர்த்தி அலங்காரம் செய்து கொண்டு போனார். ஆயர் ஏமாறவில்லை. அனுமதி
கிடையாது என்று கூறிவிட்டார். தெரேசா பிடிவாதம் கொண்ட பெண். அவருக்கு உரோமை நகர் திருப்பயணம்
செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது திருத்தந்தையாக இருந்தவர் 13-ஆம் லியோ. அது
1887-ஆம் ஆண்டு. அந்த வருடம் திருந்தந்தை லியோ அவர்கள் தன் குருத்துவப் பொன்விழாவைக்
கொண்டாடினார். அவரிடமே பேசி அனுமதி வாங்கிவிடுவது என்று தெரேசா முடிவெடுத்தார். உரோமையில்,
போப்பாண்டவர் மாளிகையில் சந்திப்பாளர்கள் வரிசையாக நின்று திருத்தந்தை முன் முழந்தாளிட்டு,
ஆசிர் வாங்கிச் சென்றார்கள். யாருக்கும் பேச அனுமதி இல்லை. தெரேசாவின் முறை வந்தபோது,
அவர் போப்பின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் நிறைந்த விழிகளை உயர்த்தி, “திருத்தந்தையே,
எனக்கு ஓர் உதவி வேண்டும்” என்றார். போப் லியோ ஆச்சரியத்துடன்
அவரைக் குனிந்து பார்த்தார்.
“உங்கள்
பொன்விழாவை முன்னிட்டு நான் 15 வயதிலேயே கார்மெல் கன்னியர் இல்லத்தில் சேர அனுமதி தாருங்கள்” என்று கேட்டார். “பெரியவர்கள் சொல்வதுபடி செய் மகளே” என்றார் போப் லியோ. தெரேசா விடவில்லை. “இல்லை திருத்தந்தையே,
நீங்கள் சரி என்று கூறிவிட்டால் அவர்கள் மறுக்க மாட்டார்கள்.” போப் லியோ “சரி, செல்.
இது கடவுளின் விருப்பம் என்றால் நடக்கும்” என்று
கூறி அனுப்பினார். இந்த நிகழ்வைக் கடிதத்தில் விவரித்துவிட்டு, தெரேசா நகைச்சுவையாக,
“உங்கள் சிறிய தங்கைக்குத் திருத்தந்தையிடமே பேசும் தைரியம் இருந்தது உங்களுக்குத்
தெரியாது” என்று கூறுகிறார்.
ரோலண்ட்
சீனாவுக்குப் போன ஒரு வருடத்தில் அங்கே நிலைமை மோசமாகிறது. அவர் உடல்நலக் குறைவுக்கு
ஆளாகி, இறப்பு வரைக்கும் சென்று மீள்கிறார். நாட்டில் பஞ்சம். குழந்தைகளுக்கு உணவு
கொடுக்க முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர். பசி மக்களைச் செய்யக் கூடாத செயல்களைச்
செய்ய வைக்கிறது. எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை. அங்குத் தொடர்ந்து இருப்பது அவருடைய
உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அப்போது ரோலண்ட், “என் இனிய தங்கையே, எனக்குத் துன்பம்
வரக்கூடாது என்று வேண்டாதே. துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் துணிவை எனக்குத் தரக்கூறி
வேண்டு. ஒருவேளை நான் கொல்லப்பட்டு, மேலே போய் என் பாவங்களுக்காகத் துயருறு நிலையில்
அவதிப்பட வேண்டியிருந்தால், நீ உன் இறைவேண்டல்களால் என்னை விரைவில் விண்ணகம் அனுப்பிவிடு.
அங்குப் போய் நான் உன் வருகைக்காகக் காத்திருப்பேன்” என்று
எழுதுகிறார்.
இதற்டையில்
தெரேசாவிற்குக் காசநோய் வந்து, மிகவும் அவதியுறுகிறார். ஆனால், ரோலண்டுக்கு அவர் எழுதும்
கடிதங்களில் தனது நோய் பற்றி எந்தக் குறிப்போ, புகார்களோ இல்லை.
ரோலண்ட்
சீனாவில் மறைச்சாட்சியாக இறந்து போக வாய்ப்புண்டு என்று தெரேசா எண்ணினார். ஒரு கடிதத்தில்
அவருக்கு நம்பிக்கை தரும் விதமாக “அப்போது நான் உங்கள் அருகில் இருப்பேன். உங்கள் கரத்தைப்
பிடித்துக் கொண்டு நிற்பேன்” என்று எழுதுகிறார். 1897, ஜூலை, 14-ஆம் நாள் தெரேசா ரோலண்டுக்கு எழுதிய
கடைசிக் கடிதத்தில் தன் உடல்நலக் குறைவு பற்றி குறிப்பிடுகிறார். “இப்போது என்னால்
திட உணவு எதுவும் உட்கொள்ள முடியவில்லை. பால் மட்டுமே சாப்பிடுகிறேன். விரைவில் நான்
வாழ்வு தரும் ஊற்றில் என் தாகத்தைத் தணித்துக்கொள்வேன்”
(your little sister for eternity) என்று எழுதி, ‘எல்லாக் காலத்திலும் உன் இனிய தங்கை’ என்று கையெழுத்திடுகிறார்.
1897,
செப்டம்பர் 30-ஆம் நாள் அன்று தெரேசா இறந்து போனார். அந்தச் செய்தி பல மாதங்களுக்கு
ரோலண்டுக்குச் சென்று சேரவில்லை. தெரேசா உயிரோடு இல்லை என்று அறியாமல், ரோலண்ட் அவருக்கு
எழுதிய கடைசிக் கடிதத்தில், சீனாவில் நிறைய பேர் கத்தோலிக்க நம்பிக்கையைத் தழுவுகிறார்கள்
என்று மகிழ்வுடன் குறிப்பிடுகிறார். தான் மறைச்சாட்சியாக இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்
உள்ளதாகவும் கூறுகிறார். “தெரேசா, நான் இறப்பதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. உன்
சிலுவைகளை உன்னைத் தனியே சுமக்க விட்டு விட்டு, நான் முன்பே இறந்து போய்விடுவேனே என்பதுதான்
துக்கமாக இருகிறது” என்று எழுதுகிறார்.
“மறந்து
விடாதே... நீ என் தங்கை. நான்தான் உனக்கு முன் இறக்க வேண்டும். “Au revoir, in the hearts of Jesus and Mary” என்று
கூறி அக்கடிதத்தை முடிக்கிறார். காவியத் துயரம்! வேறு என்ன சொல்ல முடியும்? இந்த இரண்டு
பாச மலர்களும், அவர்களின் பாச மடல்களும், Platonic
Love என்று சொல்லப்படுகிற
ஆன்மிகத் தளத்தில் மட்டும் நிகழ்கிற தூய, உன்னத அன்பிற்குச் சாட்சிகள்.
நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்?
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம்
எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)