‘இறைவேண்டல்’ என்பது சொற்களைக் கடந்து வாழ்வில் வெளிப்பட வேண்டும். நமது வாழ்வு இறைவனுக்குச் சான்று பகர்வதாக இருக்கும்போது, அதுவே ஓர் இறைவேண்டலாக மாறுகிறது. கடவுளின் தீவிர சாட்சியாக வாழ்ந்து, இறையாட்சியின் அடையாளமாகத் திகழ்வதும் ஒரு சிறந்த இறைவேண்டலே என்பதை நமது இறைவேண்டல் பார்வையில் இணைத்துக்கொள்ள வேண்டும். திருவிவிலியத்தில் இத்தகைய மாற்று வாழ்வியல் சான்றுகளாகப் பலரைப் பார்க்கிறோம்.
1. திருமுழுக்கு யோவான்: இயேசு மக்களோடு ஒன்றாகக் கலந்து இறைப்பணியாற்றிக்
கொண்டிருந்த அதே காலகட்டத்தில், திருமுழுக்கு யோவான் ஒரு தீவிர மாற்று வாழ்வியல் சான்றாக
இருந்தார். அவர் மக்களைவிட்டு விலகி, பாலைநிலத்தில் வாழ்ந்தார். அவர் “ஒட்டக முடியாலான
ஆடையை அணிந்திருந்தார். தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார். வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும்
உண்டு வந்தார்” (மத் 3:4).
இவ்வாறு,
உணவு, உடை, வாழுமிடம், போதனை என அனைத்திலும் தீவிர மாற்று வாழ்வியலாளராக விளங்கினார்.
அவரது வாழ்வும் பணியும் மக்களுக்கு மாபெரும் அறைகூவலாக விளங்கியது. “மக்கள் யோவானை
இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர்”
(லூக் 20:6). அவரைப் பார்த்துப் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அஞ்சினர். ஏன்,
ஏரோது அரசன்கூட அஞ்சினான். காரணம், யோவான் ‘நேர்மையும் தூய்மையும் உள்ளவர்’ என்பதை ஏரோது அறிந்திருந்தான் (மாற் 6: 20).
2. இறைவாக்கினர் கைம்பெண்
அன்னா: கணவனை இழந்துவிட்டால்
வாழ்வே முடிந்து விட்டது என்று கருதி, தங்கள் வாழ்வு வட்டத்தைச் சுருக்கிக்கொள்ளும்
பெண்கள் இன்றளவும் நம்மிடையே உள்ளனர். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த
அன்னா, ஒரு மாற்று வாழ்வியல் சான்றாகவும், இன்றைய பெண்களுக்கு எடுத்துக்காட்டாகவும்
விளங்குகிறார்.
அவரைப்
பற்றிய குறிப்புகளை லூக்கா நற்செய்தியில் பார்க்கிறோம். “ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின்
மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். மணமாகி
ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்த பின் கைம்பெண் ஆனவர். அவருக்கு வயது எண்பத்து நான்கு.
அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி, அல்லும் பகலும் திருப்பணி செய்து
வந்தார்” (லூக் 2:36-37). அவர் கோவிலிலேயே தங்கியிருந்தார்,
நோன்பிருந்தார், மன்றாடினார், திருப்பணி செய்தார் என்னும் நான்கு செய்திகளும் அவரை
ஒரு மாற்றுச் சிந்தனையாளராக, செயல்பாட்டாளராகக் காட்டுகின்றன.
3. தானியேலும் தோழர்களும்: பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் காலத்தில்
அரண்மனையில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத இளைஞர்களில் தானியேலும், அவரது தோழர்களான
அனனியா, மிசாவேல் மற்றும் அசரியாவும் அடங்குவர். மற்ற இளைஞர்கள் அரசரது சிறப்புணவிலும்,
திராட்சை இரசத்திலும் பங்குபெற்றனர். ஆனால், அந்த உணவுகளால் ‘தம்மைத் தீட்டுப்படுத்திக்
கொள்ளலாகாது என்று தம் உள்ளத்தில் உறுதி செய்துகொண்ட’
(தானி 1:8-16) தானியேல், அலுவலர் தலைவனிடம் சிறப்பு அனுமதி பெற்று, மரக்கறி உணவையே
உண்டுவந்தார்.
விரைவு
உணவுகளைச் சுவைத்துப் பழகிவிட்ட இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தானியேலும், அவரது
தோழர்களும் ஓர் அறைகூவலாக இருக்கின்றனர் என்பது கண்கூடு. இயற்கை உணவுகளையும், எளிய
உணவையும் உண்பது இன்றைய தலைமுறைக்குத் தேவையான மாற்று வாழ்வியல் இறைவேண்டல்.
4. இறைவாக்கினர் சாமுவேல்: சாமுவேலின் தாய் அன்னா இறைவனிடம் தவமிருந்து
பெற்ற பிள்ளை சாமுவேல். அவர் குழந்தைக்காக இறைவனிடம் மனங்கசந்து மன்றாடியபோது, “எனக்கு
ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு
ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியே படாது”
(1சாமு 1:11) என்று பொருத்தனை செய்துகொண்டார்.
அதன்படி,
சாமுவேல் பிறந்ததும் அவனைக் கோவிலுக்கு எடுத்துச்சென்று “இவன் தன் வாழ்நாள் முழுவதும்
ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்” என்று கூறி சாமுவேலை இறைப்பணிக்கெனக்
கையளித்தார். தனது குழந்தை இறைவனின் கொடை; எனவே, எனக்குச் சொந்தமல்ல; இறைவனுக்கே சொந்தம்
என்று அர்ப்பணித்த செயல் ஒரு மாற்று வாழ்வியல் செயல்பாடுதானே!
5. தோபித்து: இறந்த யூதர்களின் உடல்களைச் சட்டத்தை
மீறி, யூத முறைப்படி அடக்கம் செய்யும் பணியை மிகவும் துணிவுடன் செய்து வந்தார் தோபித்து
(தோபி 1:18). அவரது இந்தப் பணி மற்ற யூதர்களுக்கு அச்சத்தையும் அறைகூவலையும் தந்தது.
6. இயேசு: தமது காலச் சமய, சமூக, அரசியல் சூழல்களைக்
கடந்து, மாற்றிச் சிந்தித்து, மாற்றிச் செயல்பட்டு, இந்த உலகை மாற்றியவர் இயேசு. அவரது
போதனைகள், நலமளிக்கும் செயல்பாடுகள், ஓய்வுநாள் சட்டம் போன்றவற்றை உடைக்கும் துணிவு,
தலைசாய்க்கவும் இடமின்றி நடமாடும் போதகராகவே வாழ்ந்த வாழ்வு, ஏழைகள், ஒதுக்கப்பட்டோர்,
பெண்கள் ஆகியோருடன் அவர் கொண்டிருந்த பரிவுணர்வு... இவை அனைத்துமே மாற்று வாழ்வியல்
சான்றுகளே.
திருவிவிலியம்
காட்டும் இந்த மாற்று வாழ்வியல் சான்றோரைப் பின்பற்றி, நாமும் பிறருக்கு அறைகூவல் விடுக்கும்
வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும். குறிப்பாக, இன்றைய உலகமயமாக்கப்பட்ட, வணிக நோக்குடைய,
நுகர்வு வெறிகொண்ட சூழலில் மக்களுக்கு மாற்று வாழ்வியலை விடுக்கும் வண்ணம் வாழ்வது
ஒரு சிறந்த இறைவேண்டலே. அந்த வழியில் ஒரு சில பரிந்துரைகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன:
1. இறைச்சி உணவைத் தவிர்த்து, காய்கறி உணவு மட்டுமே
உண்பது.
2. தங்க நகைகள் அணியாமல் வாழ்வது.
3. அலைப்பேசி, தொலைக்காட்சி இல்லாது வாழ்தல்.
4. அதிக ஆடைகள், உடைமைகளின்றி எளிமையாக வாழ்தல்.
5. மணத்துறவு கொள்தல்.
6. பதவி, இடம், பட்டம் இவற்றில் பற்றின்றி வாழ்தல்.
7. சாதியை மறுத்து, அனைவருடனும் நட்புறவுடன்
வாழ்தல்.
8. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் எழுப்புதல்.
9. பிளாஸ்டிக் பொருள்கள், குளிர்பானங்கள் தவிர்த்தல்.
10. மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களில் பங்கேற்றல்.
மேற்கூறியவை
சில மாதிரிகள் மட்டுமே. இன்னும் எத்தனையோ வழிகளில் நாம் மாற்று வாழ்வியல் நடைமுறைகளைச்
செயல்படுத்தலாம். விருப்பமிருந்தால், தீவிர மாதிரிகளாக நாம் திகழலாம். இதுவே சிறந்த
இறைவேண்டலாகும்.