news-details
சிறப்புக்கட்டுரை
சருகணியின் சகாப்தம்

இராமநாதபுரத்தில் 13 ஆண்டுகள் பணி செய்து, மக்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்து, இறைப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, சருகணிக்கு ஆன்மிகக் குருவாக மாற்றம் பெற்று வந்தார். தந்தை லெவே அவர்களின் பாதம் சனவரி 31-ஆம் தேதி 1956-ஆம் ஆண்டு சருகணியில் பதிந்தது.

சருகணியில் நடைபெறும் குருக்களின் மாதாந்திரத் தியானத்தில் அவர்களுக்குப் பாவசங்கீர்த்தனம் கேட்கவும், ஆன்மிக ஆலோசனைகள் வழங்கவும் ஆன்மிகக் குருவாக நியமிக்கப்பட்டார். மதுரை உயர் மறைமாவட்டத்தின் கீழ் சருகணி ஒரு மறைவட்டத் தளமாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் முதல் வியாழன் அன்று  சருகணியில் வட்டாரக் குருக்களின் தியானம் நடைபெறும். தியானத்தைத் தந்தை லெவே அவர்கள்தான் வழிநடத்துவார்கள். குருக்களின் தூய்மையான வாழ்க்கை, கடவுளின் அழைப்புக்கேற்ற வாழ்க்கை, மக்களை விசுவாசத்தில் வாழ வழிசெய்தல் எனப் பலவற்றைக் குறித்து அறிவுரை வழங்குவார்.

ஆண்டாவூரணில் 22 ஆண்டுகளும், இராமநாதபுரத்தில் 13 ஆண்டுகளும் கடுமையாக உழைத்த தந்தைக்கு ஓய்வு தேவை எனப் பேராயர் முடிவு செய்து, சருகணிக்கு அனுப்பினார். ஆனால், தந்தை லெவே அவர்கள்ஓய்வுக்கே ஓய்வுகொடுத்து விட்டார். இறைவன் மீதும் மக்கள் மீதும் கொண்ட ஆர்வத்தால் ஒரு பங்குக் குருவைப் போல தொடர்ந்து இறைப்பணியைச் செய்தார். சருகணி அருகில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று திருப்பலி நிறைவேற்றுவார். மக்களின் ஆன்ம தாகத்தை அறிந்து அவர்களுக்குப் பல இறைப்பணிகளைச் செய்துள்ளார்.

திருப்பலி நிறைவேற்ற சைக்கிள், மாட்டு வண்டி மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வார். செக்ககுடி, கடம்பாவூர், உச்சாணி, இரவிய மங்களம், பொன்னலிக்கோட்டை போன்ற பல கிராமங்களுக்கு நடந்தே பலமுறை சென்றிருக்கின்றார். தந்தையின் முயற்சியால் 30-க்கும் மேற்பட்ட சிற்றாலயங்கள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன.

சருகணியில் தந்தையிடம் மழைக்காக வேண்டி பலர் வருவார்கள்; அவர் கையில் செபமாலை ஏந்தி செபித்த உடனே மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கை; அது நடந்தும் இருக்கின்றது. அவரைக் காண்பதற்காகப் பலர் பல மைல் தூரத்திலிருந்து, பல கிராமங்களிலிருந்து வந்திருப்பார்கள்; ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பார்த்து, அவர்களுடன் பேசி, அவர்களுக்கு ஆலோசனை வழங்கி அனுப்புவார். குறிப்பாக, பிள்ளைகளின் எதிர்காலம் சீரும் சிறப்புமாக அமைய பல்வேறு இடங்களுக்குச் சென்று படிக்க கடிதங்களைக் கொடுத்து அனுப்புவார். சாதி, மத, இன வேறுபாடு இன்றி எல்லா மக்களின் வாழ்வாதாரமும் சிறக்க  உழைத்தார்; அது இன்றளவும் பலருடைய வாழ்க்கையில் நினைவு கூரப்பட்டு வருகின்றது.

இவ்வாறு தனது பணிகளைச் செய்த தந்தை அவர்கள் 1973, பிப்ரவரி மாதத்தில் நோய்வாய்ப்பட்டு, சருகணி அருகில் உள்ள ஆரோக்கிய அன்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சேர்க்கப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாகவே தனக்குக் கல்லறையை லூர்து அன்னையின் கெபிக்கு மேற்காகவும், புனித குழந்தை தெரசம்மாள் பீடத்திற்குத் தெற்காகவும் தோண்டக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு தோண்டப்பட்ட கல்லறையைத் தந்தை முன்கூட்டியே புனிதப்படுத்தினார்.

மருத்துவமனையில் இருந்த தந்தை, தான் சருகணியில் இறக்க விரும்பி தன்னைச் சருகணிக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டபடி, சருகணிக்கு அழைத்து வரப்பட்டார். சருகணிக்கு வந்தவுடன் நோயில்பூசுதலைப் பெற்று, மார்ச் 21-ஆம் தேதி மாலை 5.10 மணிக்குஇயேசு மரி சூசைஎன உச்சரித்தவாறு இயற்கை எய்தினார். மறவ நாட்டு மண்ணில் அயராது உழைத்த தந்தை லெவே அவர்களின் உயிர் விண்ணை நோக்கிப் பறந்து விட்டதுமண்ணகப் பிறப்பிலிருந்து விண்ணகத்தில் பிறந்துவிட்டார்.

தந்தையின் இறுதி ஊர்வலத்தில் ஆண்டாவூரணி, இராமநாதபுரம், சருகணி என அவர் பணியாற்றிய ஊர்களிலிருந்தும் சுற்று வட்டாரத்திலிருந்தும் கூட்டம் அலை மோதியது. தந்தை அவர்கள் புனிதப்படுத்திய கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டார்!

தந்தை லெவே அவர்கள் கூறியது போலவே, அவர் இறந்த பின்பும் தொடர்ந்து மக்களுக்காகப் பரிந்து பேசுகின்றார். சாதி, மத, இன பேதமின்றி இறை ஊழியரின் பல புதுமைகள் இன்று இங்கு நடந்து கொண்டிருக்கின்றன. அன்றாடம் அவர் கல்லறைக்குப் பலர் வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். அவருடைய பரிந்துரையால் இறைவனுடைய ஆசியையும் அருளையும் பெற்றுச் செல்கின்றார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் அவருடைய விண்ணகப் பிறப்பு நாளான மார்ச் 21-ஆம் தேதி சருகணி விழாக்கோலம் காண்கிறது. பல ஊர்களிலிருந்தும் மக்கள் தந்தையின் பரிந்துரையை நாடி வருகிறார்கள்; இறைவனுடைய ஆசியைப் பெற்றுச் செல்கிறார்கள்

2016-ஆம் ஆண்டு தந்தை லெவே அவர்கள் இறை ஊழியராக அறிவிக்கப்பட்டார்கள். அவர் விரைவிலேயே அருளாளராக, புனிதராக உயர்த்தப்படுவார் என்று ஒவ்வொரு நாளும் சருகணி இறைச் சமூகம் செபத்தோடு காத்து நிற்கின்றது.

தந்தை லெவே அவர்கள் 17 ஆண்டுகள் தங்கிய குருக்களின் இல்லத்தை லெவே தந்தையின் அருங்காட்சியகமாக மாற்றி, தந்தையினுடைய வாழ்க்கை வரலாறு பற்றிய புகைப்படங்களை எல்லாம் சேகரித்து அருங்காட்சியகத்தில் மக்களுடைய பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகப் பணியானது லெவே தந்தையினுடைய விண்ணகப் பிறப்பின் 50-ஆம் ஆண்டு தொடங்கி, அவருடைய விண்ணகப் பிறப்பின் 51-ஆம் ஆண்டு, பணிகள் நிறைவு பெற்று, சிவங்கை ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் அவர்களால் அர்ச்சித்துத் திறந்து வைக்கப்பட்டது.

அன்பர்களே, சருகணிக்கு வாருங்கள் இறை ஊழியரைக் காண... அவர் பரிந்துரையை நாடுவோம், நலம் பெற்றுச் செல்வோம்!