news-details
சிறப்புக்கட்டுரை
இரண்டு இடது கால்கள் (கண்டனையோ... கேட்டனையோ...- 31)

கடந்த ஒரு மாதத்தில் சமூக ஊடகங்களில் அதிகம்அடிபட்டதுபோப் பிரான்சிஸ் பெயராகத்தான் இருக்கும். பிப்ரவரி 14-ஆம் நாள் மூச்சுக்குழாய் பிரச்சினை ஏற்பட்டு அவர் ஜெமெல்லி மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டவுடன், புதியகன்டென்ட்கிடைத்த உற்சாகத்தில் உரோம் நகரில் களமிறங்கிய உலக ஊடகங்கள், பிரான்சிஸின் உடல் பிரச்சினை என்ன? அவர் பிழைப்பாரா? மாட்டாரா? அடுத்த போப் யார்? இப்போது யார் வத்திக்கானை நிர்வாகம் செய்வது? ‘கான்க்ளேவ்என்றால் என்ன? சுவிஸ் கார்டுகள் ஒத்திகை பார்ப்பது உண்மையா? என்றெல்லாம் பலவற்றை ஆராய்ச்சி செய்து செய்திகள் வெளியிட, இரவில் தூக்கம் வராத நம் ஊர் சமூக ஊடகர்கள்போப் இறந்து விட்டார் - கண்ணீர் அஞ்சலிஎன்றும், ‘இல்லை, இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்-கடவுளுக்கு நன்றிஎன்றும் மாற்றி மாற்றி உளறிக் கொண்டிருந்த காலகட்டத்தில், நான் பல நாள்களுக்கு முன்பே அமேசான் கிண்டிலில் தரவிறக்கம் செய்து, பிறகு படிக்கலாம் என்று கிடப்பில் போட்டிருந்தHope: The Autobiographyஎன்ற பிரான்சிஸ் அவர்களின் தன் வரலாறு நூலைப் பொறுமையாக வாசித்து முடித்தேன்.

இது போப் பிரான்சிஸ் Carlo Mussoஎன்கிற இத்தாலிய பத்திரிகையாளரோடு இணைந்து எழுதியது. வெளியீடு: Randon House. ஜனவரி 25 அன்று வெளியான Hope, பதவியில் இருக்கும் ஒரு போப்பாண்டவர் வெளியிடும் முதல் தன் வரலாறு நூல் என்று விளம்பரப்படுத்தியுள்ளது. 80 நாடுகளில், பல்வேறு மொழிகளில் இந்நூல் கிடைக்கிறது. மூலமொழி இத்தாலி. நான் வாசித்தது Richard Dixon மொழிபெயர்ப்பில் வந்துள்ள ஆங்கிலப் பதிப்பு

கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக திருத்தந்தை பிரான்சிஸ், பத்திரிகையாளர் கார்லோவுடன் நிகழ்த்திய பல்வேறு உரையாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளHopeஒரு முழுநீள தன் வரலாறு நூல் அல்ல; இதைMemoirஎன்று வகைப்படுத்துகிறார்கள். அதாவது, சில ஆதார வாழ்க்கை நிகழ்வுகளின் நினைவுகூரல்கள்  அல்லது டைரி குறிப்புகள் என்று சொல்லலாம் - selective life story.

பிரான்சிஸின் குடும்பம் அர்ஜென்டினாவுக்குக் குடிபெயர்ந்தது, அவரின் குழந்தைப் பருவம், தந்தையின் இறப்பு, இறை அழைத்தல், இயேசு சபைத் துறவியாக வார்த்தைப்பாடு, Buenos Aires ஆயர் பணி, திருத்தந்தையாகத் தேர்வு போன்ற முக்கிய நிகழ்வுகளுடன் அவரின் சிறுவயது ஆசை கள், வருத்தங்கள், ஆர்வங்கள், தடுமாற்றங்கள், ஆன்மிகச் சிந்தனைகள், நிலைப்பாடுகள் போன்ற human interest அம்சங்களையும் சரிவிகிதத்தில் சேர்த்து, ஒரு நாவலுக்குரிய கதைமொழியில், விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டுள்ளHope- வாசிக்கும் கத்தோலிக்கர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸின் papacy ஆட்சிக்காலத்தைப் புரிந்து கொள்ள சில சன்னல்கள் திறக்கும்.

திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் கடவுளின் செயல்பாட்டைப் பார்க் கிறார். நூலின் முன்னுரையில் அவரே கூறுவது போல, “I don’t recall anything in which You are not there.” திருத்தந்தை பிரான்சிஸின் வாழ்க்கை நூல் ஓர் எதிர்நோக்குப் பயணத்தின் கதை  (The book of my life is the story of a journey of hope).  இறந்த பின் posthumous ஆக வெளியிடத் திட்டமிட்டு ஆரம்பித்த  ‘Hopeதன் வரலாறு நூலைத் திருத்தந்தை பிரான்சிஸ், ‘எதிர்நோக்கின் யூபிலி ஆண்டு 2025’-இன் தொடக்கத்தில், தான் உயிரோடு இருக்கும்போதே வெளியிட முடிவெடுத்ததில் ஆச்சரியமில்லை.

Hopeநூலை ஒட்டிNational Catholic Registerஎன்னும் அமெரிக்க இணையப் பத்திரிகையில், Matthew McDonald என்பவர் எழுதியுள்ளஏன் பிரான்சிஸ் பீட்சாவை விரும்புகிறார்? டிவியை வெறுக்கிறார்? - போப் பற்றி 12 தகவல்கள்என்ற கட்டுரையை விரும்பி வாசித்தேன். அதில் ஆறு தகவல்களின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவம், ‘நம் வாழ்வுவாசகர்களுக்காக இங்கே. மீதம் 6 அடுத்த கட்டுரையில்.

1. கசாப்பு - மருந்து - சாக்லேட்

போப் பிரான்சிஸின் இயற்பெயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ. ஹோர்கே ஒரு சாதாரண குடியேறி குழந்தைA migrant childஎதிர்கால மேன்மையின் ஆரம்ப அடையாளங்கள் எதுவும் அவரின் வளர் பருவத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. நம் குழந்தைகளுக்கு JCB இயந்திரம் போல, பல எளிய விசயங்கள் அவரைக் கவர்ந்திருக்கின்றன. மார்க்கெட்டில் வெள்ளை மேலுடை தரித்து, நிதான கரங்களால் கறிகளை வெட்டிப் போடும் கசாப்புக்கடைக்காரர் அவருக்கு ஒரு ஹீரோவாகத் தென்பட்டிருக்கிறார். ‘எதிர்காலத்தில் நான் ஒரு கறிக்கடை வைத்து நிறையப் பணம் சம்பாதிக்கப் போகிறேன்.’ சற்று வளர்ந்த பிறகு மருத்துவம். மாநில வேதியியல் நிறுவனத்தில்உணவு அறிவியல்படித்த காலத்தில், படிப்பின் ஒரு பகுதியாகச் சாக்லேட்டுகளின் rancidity - கெட்டுப்போகும் தன்மையைச் சாப்பிட்டுப் பார்த்து சோதிக்க வேண்டும் என்று கூறியபோது, ஹோர்கேவின் தலையில் பல்பு எரிந்து, ‘கண்ணா, லட்டு தின்ன ஆசையா?’ என்று யோசித்து, ‘நான்   சாக்லேட் அனலிஸ்ட்டாகப் போகிறேன்என்று கூறியிருக்கிறார்.

2. சண்டைக்காரர்

இளம்பருவத்தில்ஹோர்கே சண்டை விரும்பியாக இருந்துள்ளார். வேதியியல் நிறுவனத்தில் பயின்றபோது, அவர் வகுப்பில் இரண்டு மக்குப் பையன்கள் இருந்தார்கள். வாத்தியார் எது கூறினாலும், தலையில் ஏறாத கேசுகள். எப்போதும் மற்ற மாணவர்கள் அவர்களை வம்பிழுத்துக் கொண்டிருப்பார்கள்... ஹோர்கே உள்பட. ஒருமுறை அவர்களில் ஒருவனுக்கும் ஹோர்கேவுக்கும் சண்டை வந்து விட்டது. சண்டை என்றால் தண்ணீர்க் குழாயடி வகை கிடையாது. படத்தில் பார்ப்பது போன்ற ஆக்ஷன்! ஹோர்கே வாட்டசாட்டமான ஆள். ஒரே அடியில் அவனைத் தரையில் வீழ்த்திவிட்டார். ‘அவனுக்குத் தலையில் அடிபட்டுவிட்டது. அவன் சிறிது நேரம் எந்த உணர்வும் இல்லாமல் மயக்கமாகக் கிடந்தான்என் செயலை நினைத்து நான் அவமானப்பட்டேன்.’

அன்று மாலை ஹோர்கேவின் தந்தை அவரை அந்த மாணவனின் வீட்டிற்குக் கூட்டிச் செல்ல, அங்கே ஹோர்கே அவனிடம் மன்னிப்புக் கேட்டார்.

பின்னாள்களில் அவர் Buenos Aires பேராயராக இருந்தபோது, அந்த மாணவனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது அவர் ஒரு பிரபல நற்செய்தி ஊழியர். ஐந்து குழந்தைகள். ‘அவர் மிகவும் கனிவுள்ள மனிதராக இருந்தார்என்று ஹோர்கே தன் ஒரு காலசண்டையாளனைநினைவுகூர்கிறார்.

3. இரண்டு இடது கால்கள்

ஹோர்கேவுக்குக் கால்பந்து மிகவும் பிடித்த விளையாட்டு. அர்ஜெண்டினாவில் கால்பந்து பிடிக்கவில்லை என்று சொன்னால் தூக்கில் போட்டு விடுவார்கள். கோல் கீப்பராக விளையாடியிருக்கிறார். ஆனால், அவ்வளவு பிரமாதமான ஆட்டக்காரர் கிடையாது. ‘என் போன்ற ஆள்களை Pata dura என்று அழைப்பார்கள்என்று ஹோர்கே சொல்கிறார்Pata dura என்றால்இரண்டு இடது கால்கள் கொண்ட கால்பந்து ஆட்டக்காரர்என்று அர்த்தம். அவர்களுக்கு என்ன ஆட வரும்? பந்தை கிழக்கே அடித்தால், அது மேற்கே போகும். ‘எனக்கு ஒழுங்காக விளையாட வராது என்பது எனக்கு ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. கால்பந்து விளையாடுவதை நான் மிகவும் விரும்பினேன்என்கிறார்.

4. திருப்புமுனை

1953-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் நாள். பதினாறு வயது ஹோர்கே, அம்மா கொடுத்த ஒரு வேலையை நிறைவேற்ற போய்க்கொண்டிருந்தார். வழியில் ஆலயம். ஹோர்கே உள்ளே போனார். அங்கே ஓர் அருள்பணியாளர் ஒப்புரவுத் தொட்டிலில் அமர்ந்திருந்தார். “அந்தக் கோவிலுக்கு நான் ஒவ்வொரு ஞாயிறு திருப்பலிக்கும் செல்வேன். ஆனால், அவரை நான் முன்பு அங்குப் பார்த்ததில்லை.” உள்ளுணர்வால் தூண்டப்பட்டு, ஹோர்கே அவரிடம் ஒப்புரவு அருளடையாளம் செய்தார். அருள்பணியாளர் மிகக் கனிவுடன் ஹோர்கேவை நடத்தினார்.

அதன்பிறகு, நான் பழைய ஹோர்கே அன்று என்று எனக்குத் தோன்றியது. அன்று கோவிலை விட்டு வெளியேறியபோது, நான் நிச்சயம் ஓர் அருள்பணியாளராகப் போகிறேன் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.”

5. இறை அழைத்தல்

ஹோர்கேவின் குடும்பத்தினர் சராசரி கத்தோலிக்கர்கள். எல்லாச் சமயக் கடமைகளையும் செய்தார் கள். ஆனால், ரொம்ப ஈடுபாடுள்ள கிறித்தவர்கள் என்று சொல்ல முடியாது. ஹோர்கே பிறந்து ஒன்றரை வருடம் கழித்துதான் அவருக்குத் திருமுழுக்கு வழங்கப்பட்டது.

ஹோர்கேவுக்கு 18 வயது இருக்கும்போது, அவர் படுக்கையறையைத் தூய்மை செய்யச் சென்ற அவர் அம்மா அங்கேகாணக்கூடாதசிலவற்றைக் கண்டு அதிர்ந்து போனார் - இறையியல் புத்தகங்கள்! அதுவும் சில புரியாத இலத்தீன் மொழியில்.

மருத்துவர் ஆகப் போகிறேன் என்றுதானே நீ என்னிடம் சொன்னாய்?”

ஆம் அம்மா, ஆன்மாக்களின் மருத்துவன்.”

ஹோர்கே மறைமாவட்டக் குருகுலத்தில் சேர்ந்தபோது, அம்மா அவரைக் கொண்டுவிடச் செல்லவில்லை. அங்கு இருந்தபோது ஒருமுறை கூட அவரைச் சந்திக்க வந்ததில்லை. பின்னாளில் ஹோர்கே மறைமாவட்டக் குருகுலத்தை விட்டு விலகி,   இயேசு சபையில் சேர்ந்தபோது, இந்த முறை அவருடைய அம்மா உடன் சென்றார். ஆனால், ஹோர்கே அருள்பணி வாழ்வைத் தேர்ந்தெடுத்ததில் அவர் அம்மாவிற்கு முழு சம்மதம் என்று சொல்ல முடியாது.

6. தொடரும் வருத்தங்கள்

சிறு வயதில் உடன் படிக்கும் மாணவன் ஒருவன் ஹோர்கேவின் சைக்கிளைக் கடன் வாங்கி, எங்கோ கொண்டு போய்விட்டு, வண்டிக்குச் சிறிய பாதிப்பைச் செய்துவிட்டான். ஹோர்கேவுக்கு பயங்கர கோபம். ‘வண்டியைச் சரிசெய்ய முழு தொகையையும் கொடுஎன்று சொல்லி அவனைக் கட்டாயப்படுத்தி வசூலித்தார். இது ஒரு பெருந்தன்மையற்ற, அநியாயச் செயல் என்ற எண்ணம் அவரை உறுத்திக் கொண்டே இருந்தது.

59 ஆண்டுகளுக்குப் பின் 2009-இல், அவர்   Buenos Aires - பேராயராக இருந்தபோது, அந்த முன்னாள் வகுப்புத் தோழனை அழைத்து, “நான் அன்று செய்த செயலுக்காக என்னை மன்னித்து விடுஎன்று கூறினார்.

இரண்டு இடது கால்களும், ஒன்றரை நுரையீரல்களும் கொண்ட ஒரு மனிதர்தான், 2000 ஆண்டு பழமையான ஒரு நிறுவனத்தின் சிந்தனைகளை நவீனப்படுத்தி, அதன் அக்கறைகளையும், முன்னெடுப்புகளையும் உத்தரவாதமாக மாற்றி அமைத்துள்ள மகத்தான திரு அவைத் தலைவர் என்று உணரும்போது, இந்தக் கடவுளை வியக்காமல் இருக்க முடியவில்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)