news-details
ஆன்மிகம்
அருளும் மனத்தூய்மையும் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 11)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

மார்த்தா:தந்தையே, கடவுளின் அருள் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் அபரிமிதமாகப் பொழியப்பட்டாலும், அதைப் பெற்றுக்கொள்வது நம்மைப் பொறுத்தது என்று கூறினீர்கள். முக்கியமாக, நம் தரப்பில் இரண்டு செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. முதலாவதாக, கடவுளுக்கும் நமக்கும் இருக்கும் உறவை ஆழப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது குறித்து கடந்த கட்டுரையில் நாம் சிந்தித்தோம். இரண்டாவதாக, மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியிருக்கிறது என்று கூறினீர்கள். கடவுளின் அருளுக்கும் மனத்தூய்மைக்கும் என்ன தொடர்பு உண்டு என்று சொல்ல முடியுமா?”

அருள்பணி:இரு உதாரணங்களோடு ஆரம்பிக்கலாம். கிறிஸ்டினா, உனக்குக் கொஞ்சம் இரும்புத் துகள்கள் தேவைப்படுகின்றன; அவை மண்ணில் கலந்து கிடக்கின்றன என்பது உனக்குத் தெரியும். அப்படியானால் இரும்புத் துகள்களைப் பெற நீ என்ன செய்வாய்?”

கிறிஸ்டினா:ஒரு காந்தத் துண்டை எடுத்து மண்ணில் புரட்டுவேன். அது இரும்புத் துகள்களை ஈர்க்கும் தன்மை வாய்ந்தது. எனக்குத் தேவையான இரும்புத் துகள்கள் கிடைத்துவிடும்.”

அருள்பணி:ஒருவேளை உனக்குக் காந்தத் துண்டு கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஒரு மரக்கட்டையையோ, அலுமினியத் துண்டையோ மண்ணில் போட்டு புரட்டினால் உனக்கு இரும்புத் துகள்கள் கிடைக்குமா?”

கிறிஸ்டினா: எப்படிக் கிடைக்கும் தந்தையே? மரக்கட்டைக்கும் அலுமினியத் துண்டுக்கும் இரும்புத் துகள்களை ஈர்க்கும் தன்மை இல்லையே!”

அருள்பணி:இன்னும் ஓர் உதாரணம்; அகஸ்டின், உங்கள் வீட்டில் இருக்கின்ற தொலைக்காட்சிப் பெட்டியில் பல்வேறு அலைவரிசைகளில் நிகழ்வுகளைப் பார்க்கிறீர்கள். காரணம் என்ன?”

அகஸ்டின்:தொலைக்காட்சிப் பெட்டி இந்த இடத்தில் நம் கண்ணுக்குத் தெரியாத வகையில் உள்ள பல்வேறு விதமான அலைநீளம் உள்ள மின் காந்த அலைகளை ஈர்ப்பதே காரணம் தந்தையே!”

அருள்பணி:இத்தகைய அலைகளை ஒரு குளிர்சாதனப் பெட்டியோ, அலமாரியோ ஈர்க்க முடியுமா?”

அகஸ்டின்:அதெப்படி முடியும் தந்தையே? மின் காந்த அலைகளை ஈர்க்கின்ற தன்மை தொலைக்காட்சிப் பெட்டி, வானொலிப் பெட்டி, அலைப்பேசி  போன்றவற்றிற்கு மட்டுமே உண்டு!”

அருள்பணி: இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத காரியங்கள் விரவிக் கிடந்தாலும், அவற்றை ஈர்ப்பதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால்தான் அவை நமதாகும் என்பதைத்தான் மேற்கண்ட இரு உதாரணங்களும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இது கடவுளின் அருளுக்கும் பொருந்தும். கடவுளின் அருள் எல்லா இடங்களிலும் விரவிக் கிடந்தாலும், அதை ஈர்க்கின்ற தன்மை தூய மனத்திற்கே உண்டு. கறைபடிந்த மனத்தால் கடவுளின் அருளை ஈர்க்க முடியாது. அருள் என்பது கடவுளிடமிருந்து வரும் தூய ஆற்றல்! தூய்மையானதைத் தூய்மையானதுதானே ஈர்க்க முடியும்!”

அன்புச் செல்வன்: தந்தையே, நீங்கள் இதைச் சொல்லும்போது நான் படித்தஈர்ப்பின் விதி (the law of attraction) என்பது என் நினைவிற்கு வருகிறது. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சில அடிப்படையான விதிகளின்படி செயல்படுகிறது. இவைபிரபஞ்ச ஆன்மிக விதிகள் (Cosmic spiritual laws) என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய விதிகளில் ஒன்றுஈர்ப்பின் விதிஎன்பதாகும். நம் மனத்தில் எத்தகைய மனநிலையை ஓட விடுகின்றோமோ, அதற்கேற்ற நிகழ்வுகளையும், மனிதர்களையும் மனம் தன்பால் ஈர்க்கிறது என்பதே ஈர்ப்பின் விதி. நம் சிந்தனை ஒரு காந்தம் மாதிரி! எதை நம் சிந்தனையில் அதிகமாக ஓட விடுகின்றோமோ, அத்தகைய செயல்பாடுகளை அந்தச் சிந்தனை நம் வாழ்க்கைக்குள் கொண்டுவந்து விடுகின்றது. உதாரணமாக, ‘வாழ்க்கையில் நாம் யாரையும் நம்ப முடியாதுஎன்று சதா சிந்தித்துக் கொண்டிருந்தோம் என்றால், நாம் சந்திக்கும் மனிதர்களில் பலர் நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவர்களாகத்தான் இருப்பார்கள். ‘வாழ்க்கையில் ஆபத்து ஏதாவது வந்துவிடுமோ?’ என்று பயந்து பயந்து வாழ்ந்தோம் என்றால், நாம் ஆபத்துகளைச் சந்திப்பதற்கான சூழ்நிலைகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதற்கு மாறாக, ‘மனிதர்கள் நம்பத்தக்கவர்கள்என்று எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருந்தோம் என்றால், நம்பிக்கைக்குப் பாத்திரமான மனிதர்களை அதிகமாக நம் வாழ்வில் சந்திப்போம். ‘என் வாழ்வில் நடப்பவை அனைத்துமே நல்லவை, நலம் பயப்பவைஎன்ற சிந்தனையை நம் மனத்தில் ஆழமாகப் பதியவிட்டோம் என்றால், வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் நலம் பயப்பவையாக, நமக்கு வளர்ச்சியைத் தருபவையாக இருக்கும். நேர்மறையான சிந்தனை நேரிய நிகழ்வுகளையும் நேரிய மனிதர்களையும் நம்பால் ஈர்க்கிறது. எதிர்மறையான சிந்தனை எதிர்மறையான நிகழ்வுகளையும், எதிர்மறையான மனிதர்களையும் நம்பால் ஈர்க்கிறது.”

அருள்பணி: நீங்கள் சொல்வது உண்மைதான்! எனினும், ஈர்ப்பின் விதியை நாம் ஆழமாகப் புரிந்து கொள்வது அவசியம். நாம் எதன்மீது ஆசைப்படுகிறோமோ அது நமக்குக் கிடைத்துவிடும் என்பதல்ல ஈர்ப்பின் விதி; மாறாக, எத்தகையவர்களாக நம்மையும், நம் மனத்தையும் வைத்துக்கொள்கிறோமோ அதற்கு ஏற்பவே நிகழ்வுகளையும் மனிதர்களையும் நம்பால் நாம் ஈர்க்கின்றோம் என்பதே ஈர்ப்பின் விதி! நீங்கள் கொடுத்த அதே உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு மனிதர் தன்னிலே நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவராக இருந்துகொண்டு, ‘எனக்கு நம்பிக்கைக்குரிய நண்பர்கள் வேண்டும்என்ற எண்ண ஓட்டத்தைத் தன்னில் இரவு பகலாக ஓடவிட்டார் என்றால், அவருக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்று கூற முடியாது. இதற்கு மாறாக, தன்னை நம்பிக்கைக்குரியவராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, அதேவேளையில்நம்பிக்கைக்குரிய நண்பர்கள் எனக்கு வேண்டும்என்ற எண்ணத்தைத் தன்னில் ஓடவிட்டார் என்றால், அவர் நம்பிக்கைக்குரிய நண்பர்களைக் கண்டு கொள்வதற்கான வாய்ப்பு உண்டு.”

கிறிஸ்டினா:ஒரு மனிதரின் ஆசைகளுக்கு ஏற்ப அல்ல; மனநிலைக்கு ஏற்பவே ஈர்ப்பு விதி செயல்படுகிறது என்று சொல்கிறீர்கள்! அப்படித்தானே தந்தையே?”

அருள்பணி:ஆம்! இப்போது கடவுளின் அருளுக்கு வருவோம். மனத்தில் வெறுப்பையும் பழிவாங்குதலையும் ஆணவத்தையும் சுமந்து கொண்டு, ‘கடவுளின் அருள் எனக்கு வேண்டும்என்று ஒருவர் இரவு பகலாகச் சிந்திப்பதால் கடவுளின் அருள் அவருக்குக் கிடைத்துவிடுவதில்லை. மாறாக, கடவுளின் அருள் தன்னை வந்தடைகின்ற அளவில் தன்னில் அன்பையும் தாழ்ச்சியையும் மன்னிப்பையும் ஒருவர் உருவாக்கிக்கொண்டார் என்றால், அவர் தேடி ஓடுகின்ற கடவுளின் அருள் அவரைத் தேடி வரும்.”

மார்த்தா:! அதனால்தான் நாம் எல்லா வழிபாடுகளிலும் பாவமன்னிப்புச் சடங்கு என்ற ஒன்றை வைத்திருக்கிறோமா? இச்சடங்கின் உதவியோடு நம் மனத்தைத் தூய்மையாக்கும்போது, நம் மனம் கடவுளின் அருளை ஈர்க்கின்ற ஆற்றல் வாய்ந்ததாக மாறிவிடுகிறது... அப்படித்தானே?”

அருள்பணி:ஆம்! ஈர்ப்பின் விதியின் ஒரு பகுதியாக FABT என்பது குறித்துச் சொல்வது வழக்கம். Feeling, Action, Belief, Thoughts என்பதன் சுருக்கமே FABT. நம் உணர்வுகளை முதிர்ச்சியானவையாகவும், நம் செயல்பாடுகளைச் சிறந்தவையாகவும், நம் ஆழ்மன நம்பிக்கைகளை நேர்மறையானவையாகவும், நம் சிந்தனைகளை உயர்வானவையாகவும் வைத்துக் கொண்டால், கடவுளின் அருளை ஈர்க்கின்ற காந்தமாக நாம் மாறிவிடுகிறோம் என்று அர்த்தம்.”

அன்புச் செல்வன்:தந்தையே, இதற்கு உதாரணமாக அன்னை மரியாவைச் சொல்லலாம் என்று கருதுகிறேன். அவர் தன்னைத் தூய்மையின் உச்சத்தில் வைத்துக்கொண்டதால்தான் கடவுளின் மகனைத் தன் உதிரத்தில் ஈர்க்கின்ற அளவிற்கு உயர்ந்த நிலையில் இருந்தார்; ‘அருள் நிறைந்தவரேஎன்று வானதூதரால் வாழ்த்தப்படும் நிலையில் அவர் இருந்தார்.”

அருள்பணி:அருமையாகக் கூறினீர்கள். அன்னை மரியா பற்றித் திரு அவை நான்கு இறை நம்பிக்கை கோட்பாடுகளைத் தருகிறது: ) மரியா இறைவனின் தாய், ) மரியா பாவமின்றி உருவானார் (Immaculate Conception of Mary), ) மரியாவின் கன்னிமை (The Virginity of Mary), ) மரியாவின் விண்ணேற்பு. இவை அனைத்துமே மரியாவின் தூய்மையோடு தொடர்புடையவை என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.”

(தொடரும்)