news-details
சிறப்புக்கட்டுரை
தலையாட்டிப் பொம்மைகள்

வரலாறு திரும்பும் என்பதே சமகால வரலாறு. தில்லி அரசியல் காலங்காலமாக அதிகாரக் குவிப்பின்  பெரும் அடையாளம். ஆணவப்போக்கு, அழித் தொழிப்பு, அடிமைகளை உருவாக்கல் என்ற தம் மத, இன அரசியலை எவ்விலை கொடுத்தும் தக்க வைப்பார்கள். அது முடியாட்சியில் மட்டுமல்ல, தற்போதைய  குடியாட்சியிலும் தொடர்கிறது என்பதுதான் வேதனை.

பத்தாவது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என். சேஷன் பணியில் சேர்ந்த பின்புதான் தேர்தல் ஆணையம் என்ற அமைப்பே பொதுவெளியில் பேசுபொருளானது. அவர் ஒருவர்தான் ஆளுங்கட்சியின் தேர்தல் தில்லுமுல்லுகளைத் தட்டிக் கேட்டவர். துணிகரத் தேர்தல் சீர்திருத்தங்களை உருவாக்கியவர். தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற சுதந்திர அமைப்பு எனப் பிரகடனப்படுத்தியவர். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாக, எந்தவித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வமைப்பையும் சாராமல் நடத்துபவர் என நடத்திக் காட்டியவர்.

மதிப்பிற்குரிய நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்த காலம். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு, இரு தேர்தல் ஆணையர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, முக்கிய முடிவுகளில் பெரும்பான்மை முடிவு என அவருக்கு அதிரடி காட்டப்பட்டது. அன்று தொடங்கி தற்போது ஓய்வு பெற்ற 25-வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார் வரை முதுகெலும்பு இல்லாத  அதிகாரிகள் ஆளுங்கட்சிக்குத் தலையாட்டியே காலம் தள்ளுகிறார்கள். சமீபகாலமாக பா... நடைமுறைகளில் நீதிபதிகளிலிருந்து தேர்தல் ஆணையர்கள் வரை, ஓய்வுபெற்றவுடன் மாநில ஆளுநர் முதல், ஆணையத் தலைவர் வரை  பரிசாகத் தரப்படும் புதிய கலாச்சாரமும் உருவாகியுள்ளது.

2024 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தில்லி தேர்தல் முடிவுகள் என எல்லா முடிவுகளிலும் பொது மக்கள்வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்கிறதுஎன்ற ஒரு கருத்தை முடிவாகச் கூறுகிறார்கள்தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார், “அதற்கான  வாய்ப்புகள் இல்லைஎன ஒற்றை வார்த்தைகளில் கடந்து  போகிறார்.

இவர்தான் மூன்று ஆண்டு காலம் தலைமைத் தேர்தல் ஆணையராகப்  பணியாற்றி  ஓய்வு  பெற்றிருக்கிறார். இவர் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 31 மாநிலத் தேர்தல்களை நடத்தியவர். ஜம்மு-காஷ்மீர் தேர்தலை வேண்டிய அளவு தள்ளிப்போட்டு வாங்கிக் கட்டிக்கொண்டவர்.

காலச்சக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கி சுழலச் செய்வோம். 2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு செய்யப்படப் போகிற  நாள்கள். தேர்தல் ஆணையர் அருண்கோயல் பதவி விலகுகிறார்; மற்றோர் ஆணையர் அனூப் சந்திர பாண்டே ஓய்வு பெறுகிறார். அருண் கோயல் பதவி விலகல் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதுவரை பதில் இல்லை. தலைமைத் தேர்தல் ஆணையர், பிரதமரின் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணத்திற்கு ஏற்ப ஏழு கட்டத் தேர்தல்களை அறிவிக்கிறார். மகாராஷ்டிரா சட்ட சபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வேண்டும். மகாராஷ்டிரா பா... கூட்டணி அரசு மாதம் மகளிருக்கு வழங்கும் ரூ 1,500-யை, மகாராஷ்டிரா  மகளிரின் வங்கிக் கணக்கில் சேரும் வரை தேர்தல் தேதி அறிவிப்பைத் தள்ளி வைக்கிறது. ஆளும் பா...வின் ஓர் அரசியல் பிரிவாகவே தேர்தல் ஆணையம், ஓய்வு  பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார் காலத்தே செயல்பட்டது. அரசியல் கட்சிகள், கட்சிகளுக்குள் கூட்டணி  என்றால்... பா... கட்சியோ தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்திருந்தது.

தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார் காலத்தே வாக்காளர் பட்டியலில் தவறான சேர்த்தல் மற்றும்  நீக்குதல், சில குழுக்கள் குறிவைத்து நீக்குதல், கடைசியாக மொத்தமாக வாக்காளர்களைச் சேர்த்தல் போன்ற குவிந்த குற்றச்சாட்டுகள், தேர்தல் ஆணையத்தின் குப்பைக் கூடைக்குள் போனது.

2024 மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரா சட்ட சபைத் தேர்தல், தில்லி தேர்தல் என எல்லாத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் கோடிக்கணக்கில் வித்தியாசம் உள்ளது. உச்ச நீதிமன்றம் வாக்குப் பதிவு இயந்திரப் பதிவுகளை அழிக்காதீர்கள் என மென்மை காட்டுகிறது. அதிகபட்சமாகத் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுரை கூறுகிறது. ‘வாக்குப் பதிவு இயந்திரங்களை நம்புங்கள்; தேர்தல் ஆணையத்தை நம்புங்கள்என்கிறதுமக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி,  “இது குறித்து  வழக்கு தொடர்வோம்என அறிவிக்கிறார்.

தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்நாங்கள் எங்கள் வாக்குச் சாவடி முகவர்கள் வழியாகப் பெற்ற வாக்குச்சாவடி ஓட்டுப் பதிவு விவர 17-சி படிவ விவரத்தை எங்கள் இணையத்தில் பதிவு செய்துள்ளோம். தேர்தல் ஆணையமும் அதுபோல் 17-சி படிவ விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்என்று கோரிக்கை வைக்கிறார். தேர்தல் ஆணையம் 17-சி படிவத்தை வாக்குச் சாவடிகளில் அரசியல் கட்சி முகவர்களிடம் வழங்குவதுதான் நடைமுறை எனக் கூறி இணையத்தில் வெளியிட மறுக்கிறது. இது  தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவதில்லை என்பதின் ஓர் அடையாளம். அது பா... விற்கு சாமரம் வீசுகிறது என்பதே நடைமுறை.

2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் தனி நபர் தாக்குதல், வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு வழக்கு, தண்டனை என்ற நடைமுறை வந்தபோது இராகுல் காந்திக்கும் கார்கேவுக்கும் தனிப்பட்ட நோட்டீஸ் அனுப்பிய ஆணையம், பா... தலைவர் நட்டாவுக்கு கட்சி சார்பில் எனத் தன் சுயமுகம் காட்டி கண்டனம் பெற்றது. இதைவிடக் கொடுமை,   தேர்தல் பத்திரங்கள் வழி நிதி திரட்டுவது. இது தேர்தல் முறைகேடுகளுக்கு மூல காரணம்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்  உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்படும் வரை எல்லா விவரங்களையும் வைத்திருந்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் அமைதியாகக் காலம் கழித்தார். அக்காலத்தே அறக்கட்டளை முறைகேடு என மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் பிரதான எதிர்க்கட்சி காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது, தேர்தல் களப் போட்டி சமமின்மை நிலைக்குப் பெரும் அடையாளம். தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார் தேர்தல்களில் பங்கு பெற்று, மக்கள் பிரதிநிதிகளாக மிளிரும் கிரிமினல் வேட்பாளர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார். வெறுப்புப் பிரச்சாரங்கள் உச்சம் பெற்றபோதும், அது தன் எஜமானர்கள் என்பதால் அமைதியாகி காலம் கழித்தார். சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சிகள் எனப் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களைத் தடுக்கவில்லை. அது குறித்து சிறு துரும்பையும் அசைக்கவில்லை. எஜமான விசுவாசம் கண்ணைக் கட்டிவிட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் கூறும் வார்த்தைகளே முத்தாய்ப்பு வரிகள்: “இராஜீவ் குமாரது அணுகுமுறைகள் பாரபட்சமாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் மூலம் பாரபட்சமின்றி தேர்தல்கள் நடத்தப்படாவிடில், நமது  சனநாயகம் ஆபத்திற்கு உட்படுத்தப்படும். இதை மாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்என்கிறார்.

சனநாயகத்தில் தன்னாட்சி அமைப்புகளை முடக்கும்  பா...வுக்குத் தக்கநேரத்தில் இந்திய மக்கள் தம் வாக்குகள் மூலம்  பதில் தருவார்கள். காலம் கனிந்து வரும். வரலாறு திரும்பி வரும்.