இறைவேண்டல் வாழ்வு என்பது பல மலர்களால் ஆன ஒரு மாலையைப் போன்றது. அல்லது பல உணவு வகைகள் நிறைந்த விருந்தைப் போன்றது. அனைத்துக் கூறுகளும் இணைந்திருந்தால்தான் அது முழுமையடையும். சில கூறுகள் நிறைவாகவும் சில கூறுகள் குறைவாகவும் இருந்தால், இறைவேண்டல் வாழ்வு குறையானதாகவும், ஏன் சில வேளைகளில் பிழையானதாகவும் மாறிவிடலாம். எனவே, நம் வாழ்வு குறையற்றதாக, நிறைவானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வோம்.
ஒருவருடைய
இறைவேண்டல் ஆர்வத்தை, ஆழத்தை அவரது வாழ்வு மூலம் மட்டுமே நாம் அறிய முடியும். அவர் எவ்வளவு நேரம் இறைவேண்டலில் செலவழிக்கிறார் என்பதிலிருந்து அல்ல; எனவேதான், பவுலடியார் தொடக்கக்காலக் கிறித்தவர்களுக்கு இந்த எச்சரிக்கையை வழங்கினார்: “உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள்”
(எபே 5:15). நம்முடைய இறைவேண்டல் வாழ்வு நிறை வாழ்வா? என்பதனைச் சில அடையாளங்களால் அறிந்துகொள்ளலாம், இறைவார்த்தை வழியாகவே:
1. இடறல்கள் இல்லா வாழ்வு:
இறைவேண்டல் வாழ்வு வாழ விரும்புகிறவர்கள், சான்றுபகர விரும்புகிறவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு குறிப்பு அவர்களின் வாழ்வு இடறல்கள் அற்றதாக இருக்க வேண்டும் என்பது. “கடவுள் நம்மை ஒழுக்கக் கேட்டிற்கு அல்ல; தூய வாழ்வுக்கே அழைத்தார்”
(1தெச 4:7) என்னும் வாக்கிற்கேற்ப, ஒழுக்கம் நிறைந்த, தூய வாழ்வே சான்று பகரும் வாழ்வாகும். பவுலடியாரின் இந்த அறிவுரை அதனை நினைவுபடுத்துகிறது. “தூய
ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள். அப்போது, ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்” (கலா
5:16).
குடி,
போதை, தொலைக்காட்சி, அலைப்பேசி என அடிமைப்படுத்தும் பழக்கங்கள் எதுவுமின்றி
வாழ்வது நல்லதொரு சான்று வாழ்வு. “நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்”
(கலா 5:13). அன்புக்கு மட்டுமே அடிமைகளாய் இருக்கலாம் என்பதே பவுல் தரும் சலுகை.
பணத்தின்
மீதும், பொருள்கள் மீதும் பற்றுகொண்ட நுகர்வு வாழ்வும் இன்று ஓர் இடறலே. எனவே, “பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள்” (எபி
13:5) என்னும் இறைவாக்கை மனத்தில் கொண்டு வாழ்வது அவசியம்.
2. சமூக அக்கறையுள்ள வாழ்வு:
இறைவேண்டல் வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் சமூக நல்லிணக்கம் பேணுபவர்களாக, அனைவருடனும்
நல்லுறவு கொண்டவர்களாக வாழ்தல் அவசியம். “நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்”
(மாற் 9:50) என்னும் இயேசுவின் சொற்படி வாழ அழைக்கப்படுகிறோம். பவுலடியாரும் “உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள்”
(உரோ 12:18) என்று அறிவுரை கூறுகிறார்.
தன்னலமின்றி
பிறருடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டு வாழ்வதே இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வு என்ற செய்தியை “அடுத்தவருடைய நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள்”
(உரோ 15:2) என்னும் இறைவாக்கில் பார்க்கிறோம். இதே செய்தியை ஒரு வேண்டுகோளாக மீண்டும் வைக்கிறார் பவுல்: “மன ஒற்றுமை கொண்டிருங்கள்.
அமைதியுடன் வாழுங்கள். அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்”
(2கொரி 13:11).
3. இறையச்சம் நிறைந்த வாழ்வு:
இறையச்சமே ஞானத்தின் தொடக்கம் என நாம் அறிவோம்.
இறைவனுக்கு அஞ்சி வாழ்வதே நிறைவாழ்வு. “இவ்வுலகில் நீங்கள் அந்நியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள்”
(1பேது 1:17) என்கிறார் பேதுரு. திருத்தூதர் யாக்கோபு “கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள். அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப் போகும்”
(யாக் 4:7) என்கிறார்.
4. அன்பு நிறைந்த வாழ்வு:
நிறைவாழ்வின் அடித்தளம் அன்பே. அதை அருமையாகக் கூறுகிறார் பவுலடியார்: “நம்பிக்கையின் வழியாகக் கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக”
(எபே 3:17). அந்த அன்பு எதில் அடங்கியிருக்கிறது என்னும் கேள்விக்குத் தன் திரு மடலில் விடை தருகிறார் யோவான்: “நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது. அந்தக் கட்டளை நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்தது தான். அதைக் கடைப்பிடித்து வாழுங்கள்”(2யோவா 1:6).
5. கனி தரும் வாழ்வு:
நூறு மடங்கு பலன் தரும் நல்ல நிலத்தில் விழுந்த விதையைப் போல நம் வாழ்வு அமைந்தால், அதுவே சிறந்த இறைவேண்டல் வாழ்வு. “நீங்கள் மிகுந்த கனி தந்து, என் சீடராய் இருப்பதே தந்தைக்கு மாட்சியளிக்கிறது” (யோவா
15:8) என்றார் ஆண்டவர் இயேசு. கடவுள் நமக்குத் தந்த பணியை நன்கு ஆற்றுவதே நம் கடமையாகட்டும். “நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்” (யோவா
17:4) என்ற இயேசுவின் பணிவாழ்வு நமக்கு எடுத்துக்காட்டான வாழ்வு. “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்
1:38) என்று கூறி, தன்னையும் தன் மகனையும் அர்ப்பணித்த அன்னை மரியாவின் வாழ்வு கனி தந்த வாழ்வு. “ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி, என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்”
(திப 20: 24) என்று கூறி, அவ்வாறே வாழ்ந்த பவுலடியாரின் வாழ்வு கனி நிறைந்த வாழ்வு.
“நமது வாழ்வே நம் இறைவேண்டலாக மாறட்டும். நம் வாழ்வில் இறைவன் மாட்சி அடையட்டும்” (யோவா
15:8), ஆமென்.