news-details
சிறப்புக்கட்டுரை
தந்தை லெவே அவர்களின் பாதையில்.... பகிர... பகிர்ந்து வாழ்ந்திட...

“ஓ சேசுவே, அன்பின் அரசே!

உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்!”

எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் 2025 யூபிலி விழாவைத் திரு அவையோடு இணைந்து கொண்டாடும் இவ்வேளையில், சருகணி இறை சமூகத்தில் செயல்படும்லெவே நண்பர்கள் குழு 22-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதும், இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்களின் 52-வது விண்ணகப் பிறப்பு விழாவும் ஒன்றிணைவதும் மகிழ்ச்சி பொங்கும் தருணம்.

நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன் (2திமொ 1:12). தந்தை லெவே அவர்களின் வாழ்வுப் பயணத்தில் எடுத்துக் கொண்ட அதே இறை வார்த்தை ஒளியில் லெவே நண்பர்கள் குழு தனது பயணத்தைத் தொடங்கி, தொடர்ந்து பயணித்து வருகிறது.

லெவே நண்பர்கள் குழுஇறைவனை, அவரது வார்த்தையை நம்பி ஏழை, எளிய மக்களுக்கு அன்பாக, மகிழ்ச்சியாக, நம்பிக்கையோடு அன்புச் செயல்களைச் செய்து கொண்டிருப்பதை அனைத்து மக்களும் அறிவர். இந்த நேரத்தில் அன்புச் செயல்கள் பற்றிய புரிதல்களை ஆய்வு செய்து பார்த்துக் கொள்வது நமது பணிகளுக்குப் புதிய மற்றும் உண்மையான அர்த்தங்களைத் தரமுடியும்.

அதாவது, ஒரு நபரின் மிக அழகிய சொத்து என்பது தலை நிறைய அறிவைக் கொண்டிருப்பது அல்ல; மாறாக, இதயம் நிறைய அன்பைக் கொண்டிருப்பது; செவிமடுக்கும் காது மற்றும் மற்றவர்களுக்கு உதவத் துடிக்கும் கரங்களைக் கொண்டிருப்பது!

கலாத்தியர் 6:9-10-இல்நன்மை செய்வதில் மனம் தளராதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால் தக்கக்காலத்தில் அறுவடை செய்வோம்.” ஆகையால் காலம் கனியும்போதே எல்லாருக்கும் சிறப்பாக, நம்பிக்கை கொண்டோரின் குடும்பத்தினருக்கும் நன்மை செய்ய முன்வருவோம்.

நாம் இறந்தபின் நமக்குக் கடவுள் தீர்ப்பு வழங்குவார். அந்தத் தீர்ப்பு எப்படி அமையும் என்பதை இயேசுவே நமக்குத் தெரிவித்துள்ளார். மத்தேயு 25:35-36-இல், “நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்எனவும், “இவ்வாறு மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (மத் 25:40) என்று தெளிவாக நமக்குக் கூறிவிட்டார் நம் கடவுள்.

நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிக் காண்போம். அவர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ் (1955-2011). இவர் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் புகழின் உச்சத்தில் இருந்த போது கணையத்தில் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

மருத்துவர்கள் இதனைக் குணப்படுத்த முடியாது என்று கூறிவிட்டனர். அப்போது, “பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை இறுதியில்தான் அறிந்து கொண்டேன். இதோ இந்த மரண நேரத்தில் என் முழு வாழ்வையும் திரும்பிப் பார்க்கும்போது, வாழ்வில் எனக்குக் கிடைத்த அங்கீகாரம், பணம், புகழ் எல்லாமே செல்லாக் காசாக, அர்த்தமற்றதாக, மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உணர்ந்தேன். ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நடித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம். உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவி, நண்பர்களுக்கு அன்பை வாரி வழங்குங்கள்; உங்களை நீங்கள் மகிழ்வாக வைத்துக் கொள்ளுங்கள்; அனைவரையும் மனமார அன்பு செய்யுங்கள்என்கிறார்.

அன்பில்லா வாழ்வும், நம்பிக்கையும் வறண்டு போகும். வாழ்வுக்கு எது முக்கியமானதோ, அதனையே இயேசு போதித்தார், வாழ்ந்தார். அதுதான் அன்புஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், “முழு இதயத்தோடு செய்யும் ஒவ்வோர் அன்புச் செயலும் மக்களைக் கடவுளிடம் மிக நெருக்கமாகக் கொண்டு வருகிறதுஎன்று புனித அன்னை தெரசா கூறுவது, அவரது வாழ்வில் இருந்து வடித்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்.

அவ்வாறே, “செபம் செய்து பாருங்கள், நீங்கள் கடவுள் அருகில் போவீர்கள்; சேவை செய்து பாருங்கள், கடவுளே உங்கள் அருகில் வருவார்என்ற அன்னை தெரசாவின் வார்த்தைகள் நம் பணிகளுக்கு உரமூட்டுவதாய் உள்ளன.

கடவுளின் அன்பைக் கிரேக்க மொழியில்அகாப்பேஎன்று கூறுவர். எவ்வித நிபந்தனைகளும், எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செய்யும் அன்பு; பகிர்ந்தளிக்கும் அன்பு என்று அதற்குப் பொருள்.

ஆகவே, நாம் நன்மைகள் செய்ய முடியும். ஆனால், அவை சரியானதாக, இறைவனுக்கு உகந்ததாக அமைய என்ன செய்ய வேண்டும்? என்பதைக் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இறுதியாக, “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5:16) என்கிறது திருவிவிலியம். எனவே, “பெயருக்கு வாழாமல், பெயர் சொல்லும் அளவுக்கு வாழ்வோம்.”

நீங்கள் செல்லும் இடமெல்லாம் அன்பு மற்றும் இரக்கம் என்ற காலடித்தடங்களை விட்டுச் செல்லுங்கள்என்ற திருத்தந்தையின் கூற்றுக்கிணங்க பிறரை அன்பு செய்ய, இரக்கம் காட்ட அவர்களுக்கு உதவிசெய்ய முன்வருவோம்.

- லெவே நண்பர்கள் குழு, சருகணி