news-details
சிறப்புக்கட்டுரை
போராடும் உலகுக்குக் கடவுளின் பதிலிறுப்பே கிறிஸ்து பிறப்பு!

விவரிக்க இயலாத கொடுமைகளால் பெரும்பான்மையான அடித்தட்டு மக்கள் விடுதலைக்காகவும் நீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் கடவுளைத் தேடிய காலத்தில், ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்ட காலத்தில், விடுதலை நல்கும் மெசியாவின் வருகை நிகழ வேண்டும் என ஏக்கத்தோடு எதிர்பார்த்த காலத்தில் கடவுளின் பதிலிறுப்பே 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த மாபெரும் வரலாற்று நிகழ்வான கிறிஸ்து பிறப்பு! மீட்பு வரலாறும், திருவிவிலிய வரலாறும் இதை உண்மைப்படுத்தி, உறுதிப்படுத்துகிறது.

விடுதலைக்காகவும் நீதிக்காகவும் அமைதிக்காகவும் வாழ்வின் விழுமியங்களுக்காகவும் ஏழை எளிய சராசரி மக்கள் அழுகுரலோடு ஆண்டவரைத் தேடிய காலத்தில் கடவுள் தம் மகனையே உலகின் மீட்புக்காகவும், ஏழைகளின் ஒட்டுமொத்த விடுதலை வாழ்வுக்காகவும் இந்த உலகில் மனிதராகப் பிறப்பெடுக்கச் செய்த நிகழ்வே கிறிஸ்து பிறப்பு நிகழ்வாகும். எனவே, இன்றைய காலகட்டத்தில் நாம் சந்திக்கும் போராட்ட எதார்த்தங்களின் பின்னணியில், அதிலும் குறிப்பாக யூபிலி 2025-இல் எதிர்நோக்கின் காலமாக அழைக்கும் சூழலில் கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

அகில உலகத் திரு அவையின் இன்றைய பயணத்தின் எதார்த்தத்தில் மூன்று மிக முக்கியமான நிலைகளில், குறிப்பாக, கூட்டியக்கத் திரு அவையின் பார்வையில் (SYNODAL HIERARCHY), பொறுப்பும் வெளிப்படைத்தன்மையும் (ACCOUNTABILITY AND TRANSPARENCY), யூபிலி 2025: எதிர்நோக்கின் திருப்பயணிகள் (JUBILEE 2025: A PILGRIMS OF HOPE) எனும் இச்சூழல்களில் திரு அவையின் மிக முக்கியமான நிகழ்வுகளாக மட்டுமல்ல, அவை விடுக்கும் செய்தி இந்தக் காலத்தில் கடவுளின் குரலாகவும், தூய ஆவியாரின் செயல்பாடாகவும் அமைந்திருப்பதாக நாம் காண்கிறோம். போராடும்  உலகுக்குக் கடவுளின் பதிலிறுப்பே கிறிஸ்துவின் பிறப்பு!

கூட்டியக்கத் திரு அவையின் பார்வையில் கடவுளின் பதிலிறுப்பு

கூட்டியக்கத் திரு அவை (SYNODAL CHURCHஎன்னும் மையக்கருத்தில் 2021-ஆம் ஆண்டு அகில உலகம் முழுவதும் தலத் திரு அவைகளின் செவிமடுத்தல் மற்றும் தேர்ந்து தெளிதலின் அடிப்படையில் கூட்டியக்கத் திரு அவையின் பயணமானது ஆரம்பமானது. இப்பயணமானது பங்குகள் நிலையில், மறைமாவட்ட நிலையில், துறவற சபைகளின் பல்வேறு நிலைகளில், தேசிய நிலைகளில் கலந்துரையாடல்களும் கருத்தமர்வுகளும் கருத்துகளுக்குக் காரணமான செவிமடுத்தலும்  வலியுறுத்தப்பட்டன. அதன் அடிப்படையில் தலத் திரு அவைகளுக்கும் அகில உலகத் திரு அவையும், கூட்டியக்கத் திரு அவையாகச் செயல்பட திருவிவிலிய, இறையியல், அருள்பணிப் பார்வையில் தேர்ந்து தெளிதல் நடைபெற்றது.

இதுவரை தலத்திரு அவைகளில் யாருக்கு இன்னும் நாம் செவிமடுக்க மறுத்திருக்கிறோமோ அல்லது மறந்திருக்கிறோமோ அவர்களின் குரலுக்குச் செவிமடுக்கவும், ஆதிக்கத் திரு அவையாக அல்ல, ஆளும் திரு அவையாக அல்ல, அன்பும் உண்மையும் அமைதியும் நீதியும் நிலவும் திரு அவையாக இணைந்து செயல்படவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

2022 -ஆம் ஆண்டு தேசிய நிலையிலிருந்து கண்டங்கள் அளவில் கூட்டியக்கத் திரு அவையின் பாதையில் நம் பார்வையும் பயணமும் விரிவடைந்தது என்றாலும், தலத்திரு அவைகளின் முன் மொழியப்பட்ட கருத்துகளே அங்கும் சிந்தனைக்காகவும் செவிமடுத்தலுக்காகவும் இணைந்து செயல்படும் திரு அவைக்கான முன்னுரிமைகளாக, இறைவார்த்தையின் ஒளியிலும் சமூக எதார்த்தங்களின் பின்னணியிலும் ஆய்வு செய்யப்பட்டன.

இதுவரை நடைபெற்ற 15 அகில உலக ஆயர் மாமன்றங்களில், தொகுப்பறிக்கைகளின் அடிப்படையில் திருத்தந்தை வெளியிட்ட திருத்தூது மடல்களின் பாரம்பரியத்தைக் கடந்து, 2024 அக்டோபர் 02 முதல் 27 வரை உரோமையில் நடைபெற்ற பொதுப்பேரவை மேற்கொண்ட வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் மற்றும் முடிவுகளைத் திரு அவையின் ஆசிரியத்தின் ஏடாகத் திருத்தந்தை அறிவித்திருப்பது கூட்டியக்கத்  திரு அவையின் முதல் மறுமலர்ச்சிக்கான செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது.

தன் அதிகாரத்தின் வெளிப்பாடாக ஓர் ஏட்டினை வெளியிடுவதை விட, பதினாறாம் ஆயர் மாமன்றத்தில் யாவரும் இணைந்து மேற்கொண்ட முடிவுகளையும் வழிகாட்டுதல்களையும் திருத்தந்தை அப்படியே அங்கீகரித்திருப்பது இன்றைய காலகட்டத்திற்குக் கடவுளின் குரலாக ஒலிக்கிறது.

திரு அவை என்பது படிநிலை அமைப்பு என்பதைக் கடந்து, பங்கேற்கும் திரு அவை, பயணிக்கும் திரு அவை, பணியாளர் திரு அவை எனும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பார்வையில் கூட்டியக்கத் திரு அவை, கூட்டொருங்கியக்கத் திரு அவை எனும் எதார்த்தத்தை   ஒரு புதிய வெளிச்சத்தை இன்று உலகில் பாய்ச்சியிருப்பது தூய ஆவியாரின் செயல்பாடு என்பதை மறுக்க இயலாது. அதிகாரம், அடக்குமுறை, ஆணவம், ஆதிக்கம், செல்வச்செருக்கு, பணபலம், எதேச்சதிகாரம், ஆணாதிக்கம், இனவெறி, சாதிய ஆதிக்க மனநிலை இவற்றைக் களைந்து விட்டு, செவிமடுத்தல், பிறரை மதித்துக் கலந்துரையாடுதல், பொதுக் குருத்துவத்தை உயர்வாக மதித்துப் பணி செய்வதே பணிக்குருத்துவம் என்பதைத் திரு அவைக்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது இந்த ஆயர் மாமன்றம்.

போராடும் திரு அவைக்கும் உலகுக்கும் கடவுளின் பதிலிறுப்பாக அமைவதே இந்த மானுடலேற்பு மற்றும் கடவுளின் பதிலிறுப்பு. இது இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்து பிறப்பின் செய்தியாகவும் கடவுளின் குரலாகவும் அழைப்பாகவும் அறைகூவலாகவும் பார்க்கப்படுதல் நலமானது. மிகக் குறிப்பாக, பங்குத் தளங்களிலும் பணித்தளங்களிலும் மறைமாவட்டங்களிலும் அருள்பணியாளர்களும் ஆயர்களும் தங்கள் ஆதிக்க எதேச்சதிகாரப் போக்குகளை விட்டுவிட்டு, செவிமடுத்து பொது நன்மையை முன்னிறுத்திப் பணியாற்றுவது மிகவும் தேவையானது.

பொறுப்பும் வெளிப்படத் தன்மையும் மிகுந்த பதிலிறுப்பு

இன்றைய திரு அவையில் பல்வேறு சவால்களை, கடினமான சூழல்களைத் திரு அவை சந்தித்திருக்கிறது. மிகக் குறிப்பாக நிதி மேலாண்மை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் பொறுப்புகளில் உண்மைத்தன்மை மற்றும் கடமை உணர்தல் எனும் பல நிலைகளில் அருள்பணியாளர்களும் ஆயர்களும் திரு அவையின் உயர் பொறுப்பில் உள்ளோரும் தவறிழைத்திருப்பதைப் பணிவுடனும், எதார்த்த மனநிலையுடனும் திரு அவை ஏற்றுக் கொண்டுள்ளது. நிதி முறைகேடு, பொதுப் பணத்தைக் கையாடல் செய்தல், முறையான கணக்குகளைப் பராமரிக்காமல் வீண் ஆடம்பரங்களுக்காகச் செலவிட்ட தவறுகள் என நிதி மேலாண்மையில் திரு அவையில் உயர்மட்ட நிலையில் தொடங்கி, சாதாரண அருள்பணித் தலங்கள் வரை மிகக் கடினமான சூழல்களைத் திரு அவை சந்தித்திருக்கிறது. அதிலிருந்து சீர்படவும், தன்னையே உண்மையும் நம்பிக்கைத்தன்மையும் கடமையுணர்வும் நிறைந்த அமைப்பாகப் புதுப்பித்துக் கொண்டு பல்வேறு முயற்சிகளையும் காணத்தக்க மாற்றங்களையும் திரு அவை செயல்படுத்த முனைந்துள்ளது.

சவால்களின் மத்தியிலும், நெருக்கடிகளின் மத்தியிலும் திருநிலையினர் வெளிப்படைத் தன்மையோடும் நம்பகத்தன்மையோடும் செயல்பட, திருத்தந்தையர்களின் அறிவுரைகளின் வழிகாட்டுதலில் திரு அவை தன்னையே புதுப்பித்துக்கொள்ள முன் வருவது பாராட்டுதற்குரியது.

நிதி மேலாண்மைக்கு அடுத்து திரு அவையை அண்மைக் காலங்களில் உலுக்கிய மற்றொரு நிகழ்வு கடந்த காலங்களில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள். குறிப்பாக, சிறார்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள். இதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டுள்ள திரு அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, அவர்களுக்கு ஆதரவும் உரிய மாண்பும் தர உறுதியேற்றிருப்பது கடவுளின் குரலாக, ஆவியானவரின் செயல்பாடாகக் காணப்படுகிறது. திரு அவையின் எல்லா நிலைகளிலும் பணித்தளங்களிலும் நிறுவனங்களிலும் வழிபாட்டுத் தளங்களிலும் சிறார் பாதுகாப்பும் மாண்பும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துமீறுதல் செயல்பாடுகளுக்கும், சிறார் பாதுகாப்புக்கு எதிரானச் செயல்பாடுகளுக்கும் கடுமையான நடவடிக்கைகளும் தண்டனைகளும் அறிவிக்கப்பட்டது. தொடர் உருவாக்கப் பயிற்சிகள் அனைத்து நிலையினருக்கும் இன்று வழங்கப்படுகிறது.

2022 -ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் உருவாக்கிய சிறார் பாதுகாப்பு மற்றும் நலன், மாண்பு ஆகியவற்றுக்கான ஆணையம் 2023-ஆம் ஆண்டுக்கான தன் முதல் அறிக்கையைத் திருத்தந்தையிடம் வழங்கி தன் பரிந்துரைகளையும் தொடர் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது

எதிர்நோக்கின் திருப்பயண யூபிலி பதிலிறுப்பு

2025-ஆம் ஆண்டு இரண்டாம் வத்திக்கான் சங்க நிறைவின் 60 -ஆம் ஆண்டு வைர விழாவும், கிறிஸ்து பிறப்பின் 2025 -ஆம் ஆண்டுகளில் மகிழ்ச்சியான யூபிலி விழாவாகவும் சிறப்புமிக்கஎதிர்நோக்கின் திருப்பயணிகள்நாம் என்ற அழைப்பை யூபிலிக்கான மையப்பொருள்களாக முன்மொழிந்துள்ளார் நம் திருத்தந்தை.

2024 டிசம்பர் 24-ஆம் தேதி மாலை உரோமை வத்திக்கானில் தூய பேதுரு பேராலயத்தில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா திருப்பலிக்கு முன்பாக, புனித கதவினைத் (Holy Door) திறந்து வைத்து யூபிலி ஆண்டாகத் தொடங்கி வைக்க உள்ளார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.

எதிர்நோக்கின் திருப்பயணிகளாகநம் பயணத்தைத் தொடர மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் திருத்தந்தை. ஆயிரம் நாள்களைக் கடந்துள்ள இரஷ்ய-உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாகத் தன் ஆதரவு நிலைப்பாட்டையும் இங்கு அவர் வெளிப்படுத்துகிறார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரினால் காசாவில் நிகழ்ந்துள்ளது இனப்படுகொலையா? என ஆய்வு செய்யப்பட வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்திருப்பது அனைவரின் எதிர்நோக்குடன் கூடிய இறைவாக்குப் பணியாக அமைந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புலம்பெயரும் மக்களுக்குப் புகலிடம், மூன்றாம் உலக ஏழை நாடுகளுக்கு வளர்ந்துள்ள நாடுகளின் கடமை என்பதை எல்லாம் திரு அவையின் குரலாக அவர் ஒலிப்பது, போராடும் உலகுக்குக் கடவுளின் பதிலிறுப்பாகவும் குரலாகவும் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்டுள்ள இந்தக் காலத்தின் அருங்குறிகள் மற்றும் எதார்த்த நிகழ்வுகள் வழியாகக் கடவுள் நமக்குக் கொடுக்கும் அழைப்பு, “வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14) எனும் உண்மையே!

இயேசுவின் பிறப்பு என்பது கொண்டாடப்பட வேண்டிய விழா மற்றும் ஆடம்பரக் கொண்டாட்டம் என்பதைக் கடந்து, போராட்டங்கள், சவால்கள், சறுக்கல்கள், இயலாமைகள் மத்தியிலும் மானிட குலத்துக்கு வழிகாட்டும் மற்றும் வழிநடத்தும் கடவுளாக, மண்ணையும் மக்களையும் தேடிவரும் கடவுளாக  ‘திருவிவிலியத்தின் கடவுள் என்றும் செயல்படுகிறார்என்பதே இந்த ஆண்டின் கிறிஸ்து பிறப்பு உணர்த்தும் செய்தி!