news-details
சிறப்புக்கட்டுரை
அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்!

டிசம்பர் மாதம் - கத்தோலிக்கத் திரு அவை வரலாற்றில், ஏன் உலக வரலாற்றில்கூட முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், உலக வரலாற்றைக் கிறிஸ்து பிறப்பிற்கு முன் (கி.மு.), கிறிஸ்து பிறப்பிற்குப் பின் (கி.பி.) என்று கணிக்கிறார்கள், கூர்ந்தாய்வு செய்கிறார்கள்.

டிசம்பர் மாதம் இருபத்தைந்தாம் நாள் இறைமகன் இயேசு அவனியில் அவதரித்த நாள். ‘அருள் நிறைந்த மரியே வாழ்க  என்ற பொருள் பொதிந்த வாழ்த்துகளைக் கூறிய தேவதூதரின் வார்த்தைகளை மெய்ப்பிக்க வந்த சிசுபாலன் பிறந்த நாள்!

தச்சன் சூசையும், தாய் மரியாவும் ஈன்றெடுத்த பச்சை மரம் துளிர்விட்ட நாள்! சுத்துகின்ற உலகில் சத்தமேதுமில்லாமல் சூசை-மேரியிடம் சுதன் இயேசு பிறந்த நாள்!

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றிய நாள்! மார்கழிக் குளிரில் மாடடைக் குடிலில் பிதாமகன் பிறந்த நாள்!

போட்ட விதை முளைக்கும் பொன்னான பூமியிலே வாட்டமில்லாப் பயிராக முள்வேந்தன் முளைத்த நாள்! மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம் ஆநிரைத் தொழுவினுக்குப் பெருமை சேர்த்த நாள்!

வானளந்த திருக்குமரன், மனிதகுல மருத்துவன், தேனமுதத் திருவாயில் சித்திரங்கள் தீட்டிய சத்திய மகன் பிறந்த நாள்! மாளிகைச் செல்வம் தோற்கும், மாணிக்கத் தொட்டில் தோற்கும், தூளி இல்லாதபோதும் தூயமரியிடம் தூயவர் துயிலெழுந்த நாள்!

மாளிகையும் இல்லை, மஞ்சமுமில்லை என்றாலும், ஏழைத் தொழுவில் வந்த இறைமகன் பிறந்த நாள்! மனிதரைப் புனிதராய் ஆக்கிடவே புனிதராம் கடவுள் மனிதரான நாள்! எத்தனையோ பாவிகளின் பாவத்தைத் தம் தோளில் ஏற்றுக்கொள்ள உத்தமர் உதித்த நாள்!

இந்த நாளை அர்த்தமுள்ள நாளாகக் கொண்டாடுகின்றோமா? கிறிஸ்துவின் பிறப்பு மண்ணுலகை உவகை அடையச் செய்தது; உயர்வடையச் செய்தது; மானுடத்தைத் தம்முயிர் கொடுத்து மீட்டது; ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வைக் கொடுத்தது; பசித்தோரைப் புசிக்கச் செய்தது; ஆணவம் கொண்டோரை அரியணையிலிருந்து அகற்றியது; பாவங்களையும் சாபங்களையும் அகற்றி, மனித வாழ்வில் தீபங்கள் ஏற்றியது; அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்க வைத்து உயர்த்தியது; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப் போரைச் சிதறடித்தது; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்தியது; செல்வரை வெறுங்கையராய்ச் செல்வோராக மாற்றியது. இத்தகைய மகிமை கொண்ட, புனிதம் கண்ட கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுகிறோமா?

விழாக்காலம் வந்துவிட்டால் சிலருக்குக் கொண்டாட்டம்; பலருக்குத் திண்டாட்டம்; இன்னும் ஒரு சிலருக்குத் திண்டாட்டமும் கொண்டாட்டமும் இல்லாத போராட்டம்!

மனைவி, மக்களுக்குத் துணிகள் வாங்க வேண்டுமே, அதற்கு யாரிடம் கடன் வாங்குவது? கடன் வாங்கினால் எப்படித் திருப்பிக் கொடுப்பது? மற்ற பிள்ளைகளைப்போல் என் பிள்ளைகளும் அலங்காரமாக, ஆடம்பரமாகத் தெரிய வேண்டுமே! மனைவிக்குப் பட்டுச் சேலை வாங்கவேண்டுமே...’ என்கின்ற குடும்பத் தலைவர்களின் எண்ண ஓட்டம்.

என் கணவர் உயர்ந்த விலைக்குப் பட்டுச் சேலை எடுத்துத் தருவாரோ இல்லையோ?’ என்ற ஏக்கமும், ‘பக்கத்து வீட்டுக்காரப் பெண் பத்துப் பவுனுக்குக் காசுமாலை வாங்கி வந்துவிட்டாள்... அதேபோல் நாமும் என்ன பாடுபட்டாவது, கணவரை என்ன பாடுபடுத்தியாவது காசுமாலையை வாங்கிவிட வேண்டும்?’ - குடும்பத் தலைவிகளின் போட்டியும் பொறாமையும் ஆசையும் அங்கலாய்ப்பும் கலந்த பரிதாப பதைபதைப்பு!

நண்பர்களை அழைத்து ஓட்டலில் கறி விருந்து, மதுவிருந்து வைக்க வேண்டும்; அதற்கு அம்மா-அப்பாவிடம் தந்திரமாகக் காசு பறிக்க வேண்டும்என்கிற இளைஞர்களின் படபடப்பு!

பகட்டான பட்டாடைகள் அணிந்து, ஆடம்பர அணிகலன்கள் சூடி கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஆலயங்களுக்குச் செல்கிறோமே... ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அரசர்க்கெல்லாம் அரசர் கிறிஸ்து அரசர் இதற்காகவா ஏழையின் கோலத்தில் பிறந்தார்?

குடும்பப் பொருளாதாரத்தை நிரூபிப்பதற்கும், ஆடைகளின் அணிவகுப்பை நடத்துவதற்கும், அணிகலன்களின் ஆடம்பரத்தைக் காட்டுவதற்குமா கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்? அடுத்த வேளை உணவில்லாமல் அடுத்த வீட்டு ஏழை ஏங்குகையில், நமக்கெதற்கு ஆடம்பரக் கொண்டாட்டம்?

பெற்றெடுத்தத் தாயை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு நாம் மட்டும் கிறிஸ்துமஸ் விழாவை ஆடம்பரமாய்க் கொண்டாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பக்தியோடு மறைநிகழ்வுகளில் பங்கெடுப்பதில்லை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு? தன்னைப்போல் தன் அயலானையும் நேசித்து அன்பாக வாழ விருப்பமில்லை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு? கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்கின்றபோது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு? ஆலயங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மனமில்லையெனில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு? வீட்டில் மது பாட்டில்களை அடுக்கி வைத்தும், மது அருந்தியும் கிறிஸ்துமஸ் திருப்பலிக்குச் செல்கிறோமே... கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு?

ஆயிரக்கணக்கில் செலவு செய்து உணவு தயாரித்து, ஓர் அநாதைக்குக் கூட, ஓர் ஆதரவற்றோருக்குக் கூட, ஓர் ஏழைக்குக் கூட உணவளிக்க மறுத்து, எஞ்சியவற்றை, மிஞ்சியவற்றைத் தெருவில் கொட்டுகிறோமே! கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு?

உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா? வீடுகளில், விழாக்காலங்களில், நல்ல நிகழ்ச்சிகளில் மிஞ்சிய உணவுப் பதார்த்தங்களைச் சேகரித்தால், தமிழ்நாட்டில்... ஏன் இந்தியாவில் இல்லாமை இல்லாமையாகிவிடும்! ஆகவே, அன்பில் நனைவோம்ஆன்மிகத்தில் இணைவோம்இழந்தோரிடத்தில் இரக்கம் கொள்வோம். ஈகை உதவி இதயம் மலர்வோம். உறவோரிடத்து உள்ளன்பு வைப்போம்ஊரார் புகழப் பணிவுடன் நடப்போம்என்றும் எதிலும் உண்மையாய் வாழ்வோம். ஏழைகளுக்கு உதவி செய்வோம்.

கன்னித் தாயின் காலடி வணங்குவோம். காலம் அறிந்து கணக்குற வாழ்வோம். கிட்டாதாயின் வெட்டென மறப்போம். கீழோர் மேலோர் பேதம் துறப்போம். கெட்ட பழக்கம் இல்லாமல் வாழ்வோம். கேடுகள் எதையும் நாடாதிருப்போம். கொடுஞ் செயல்களை அழித்துக் காட்டி, கோமகனின் பிறப்பு விழாவை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகள்!