news-details
சிறப்புக்கட்டுரை
ஆயர் அம்(ன்)புரோஸ்... ஒரு தனித்த அடையாளம்!

வேலூர் மறைமாவட்டத்தில் எல்லாரையும் அன்பு செய்து, அரவணைத்து இயேசுவின் விடுதலை விழுமியங்களை இம்மண்ணில் இன்னும் அதிகமாய்... ஆழமாய் விதைக்க... விடியலை நோக்கி என்றும் அனைவரையும் இணைக்க... இயக்க, ஆயராகச் சிறப்பு அழைப்புப் பெற்று திருநிலைப்படுத்தப்படவிருக்கும் அன்பு ஆயர் மேதகு அம்புரோஸ் அவர்களை மனமார வாழ்த்துகிறேன். ஆயர் பணி சிறக்க செபிக்கிறேன்.

என் மெய்யியல் பேராசிரியராகத் துவங்கிய எங்கள் அறிமுகம் இன்றும் என்னுடைய நல்லாசானாக, நல்வழிகாட்டியாகத் தொடர்வது மகிழ்ச்சியே. ஆயர் அம்புரோஸ் அவர்களின் அதிகமான அறிவு, அடர்த்தியான ஞானம்ஆழமான ஆன்ம தாகம், சமரசம் செய்துகொள்ளாத கொள்கைப் பிடிப்பு, அன்பும் உண்மையும் கலந்த நிர்வாகத்திறன், முடிவெடுப்பதில் நிதானம்... இவற்றையெல்லாம் நான் பார்த்து வியந்திருக்கிறேன், பின்பற்ற முயற்சித்திருக்கிறேன். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தன் இறை அழைப்பையும், அர்ப்பணத்தையும் மட்டுமே முன்னிலைப்படுத்திப் பயணிக்கும் அவரின் பக்குவம் மிகவும் போற்றுதற்குரியது. இதுவே அவரின் அடையாளமாகவும் திகழ்கின்றது.

மறைமாவட்டத்தின் ஒருங்கிணைந்த ஆன்மிக மையத்தின் அதிபராக நான் வேப்பூரில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, குருமாணவர்களுக்கு வகுப்பெடுக்க பகுதி நேர பேராசிரியராகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். அப்போதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் எங்கள் உரையாடலும், கலந்தாய்வும் இறையழைத்தல் பற்றியும், குருமாணவர்கள் அதை எப்படி உள்வாங்குகிறார்கள்? அதைக் குறித்தத் தேடலில் எப்படித் தங்களை உட்படுத்துகிறார்கள்? என்பதைப் பற்றியும் சற்று அழுத்தமாகவே பேசுவார். இது இறையழைத்தல் என்னும் மாபெரும் கொடையைக் குறித்து அவரின் புரிதலையும் எல்லாரும் அதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவரின் வேட்கையையும் நமக்கு விளக்கும்ஆயர் அம்புரோஸ் அவர்களின் இறையழைத்தல் வாழ்வை மூன்று பரிமாணங்களில் பார்க்கலாம். அதுவே அவரின் தனித்த அடையாளங்களாக இன்றளவும் இருக்கின்றன.

1. தனித்துவப் பாதை

இறை அழைப்பை அறிவுத்தளத்தில் தேடாமல் அதை இறைவனோடும், இயற்கையோடும், இணை மனிதனோடும் கொள்ளும் உண்மை உறவில் தொடர்ந்து உணர முனைவதும் அனுபவிப்பதும் தன் இறை அழைப்பை ஆண்டுக் கொண்டாட்டமாகச் சுருக்காமல் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அன்றாடம் கொண்டாடுவதும் வாழ்வதும் இறை அழைத்தலைத் தன்னை உயர்த்திக்கொள்ள அன்று; மாறாக, தன்னைத் தாழ்த்தி தகுதியாக்கிக் கொண்டு பணிவாழ்வில் அடுத்தவரை உயர்த்த நினைப்பதும்தான் அவரின் தனித்துவம், அடையாளம்.

2. தலைமைத்துவ நேர்மை

இயேசு கிறிஸ்துவின் தலைமைத்துவப் பண்புகளையும், ஆயர்த்துவ வாழ்வையும் உள்வாங்கிய வாழ்வு ஆயர் அம்புரோஸின் அழைத்தல் வாழ்வு. இலக்கு மக்களை அதிகாரப்படுத்துகிற, குருமாணவர்களை நெறிப்படுத்துகிற, ஆளுமைப்படுத்துகிற, குருக்களையும் துறவியரையும் - தன் முன்மாதிரி வாழ்வால் உந்தித்தள்ளுகிற, உறுதிப்படுத்துகிற தலைமை இவரின் தலைமை. அதில் ஒரு நேர்மையும் உண்டு. எந்தப் பொறுப்பையும் கடமையுணர்வோடு செய்வதுதான் அந்த நேர்மை. இதுதான் இவரின் அடையாளம். மறைமாவட்ட, மாநில, தேசிய அளவில் தன் தலைமைப் பண்பை நேர்மையோடும் நேர்த்தியோடும் வெளிப்படுத்தியவர் இவர்.

3. புனிதத்துவ வாழ்வு

தான் பெற்றுக்கொண்ட இறை அழைப்பைத் தன் சுயநலத்தினாலோ, மனித ஆசைகளினாலோ, மனித சூழ்ச்சிகளினாலோ மாசுபடாமல் காத்து, புனித வாழ்வு வாழ்பவர் ஆயர் அம்புரோஸ். இறை அழைப்பு கொண்டிருக்கும் புனிதத்தையும், அப்புனிதம் புரட்சிப் பணியால்தான் நிலைக்கும் என்ற நம்பிக்கையையும் ஆழமாகவே அறிந்திருப்பவர், நடைமுறைப்படுத்துபவர். அழைப்புக்கேற்ற புனித வாழ்வைத் தொடர்ந்து வாழ அழைப்பின் முழுமை அடைந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட தனி அடையாளங்களோடு தனக்கென்று சரியான பாதை ஒன்றை அமைத்துக் கொண்டு, தயங்காமல் தளராமல் துணிவோடு இயேசுவின் வழியில் பயணம் செய்யும் ஆயர் அம்புரோஸ் அவர்கள் இன்னும் பல உச்சங்களைத் தொட வாழ்த்துகிறேன்.