இறைவேண்டல் பற்றிய நமது பார்வையை விரிவுபடுத்த அழைப்பு விடுக்கிறது திருவிவிலியம். நமது மரபார்ந்த பார்வையையும் கடந்து, நம் வாழ்வின் அனைத்துத் தளங்களையும் இறைவேண்டல் ஊடுருவ வேண்டும் என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இறையியல் பாடம். அந்த வகையில் நாம் செய்கிற பணியை நன்றாக, நேர்மையாக, நேர்த்தியாகச் செய்து முடிக்கும்போது, அதுவே ஒரு சிறந்த இறைவேண்டல் என்பதை இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது.
“என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” (யோவா 4:34) என்று சொல்லித் தம் சீடரை வியக்க வைத்தார் இயேசு. அது மட்டுமல்ல, தமது பணி வாழ்வின் இறுதியில், “நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்” (யோவா 17:4) என்று சொன்னதன் வழியாகக் கடவுள் தந்த வேலையை நன்கு செய்து முடிக்கும்போது நாம் கடவுளை மாட்சிப்படுத்துகிறோம் என்னும் வியப்பான இறையியல் செய்தியையும் நமக்குத் தந்துள்ளார்.
நாம் செய்யும் வேலைகள், பணிகள் கடவுள் தந்தவை என்பது நல்ல பார்வை அல்லவா! பணி பற்றிய இயேசுவின் இந்தப் பார்வையை உள்வாங்கியவர் பவுலடியார். எனவேதான், “ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி, என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்” (திப 20:24) என்று பெருமிதத்துடன் கூறினார். இறைவனோடு நேரடித் தொடர்பு கொண்ட வேலைகள் மட்டுமல்ல, யார் என்ன வேலை செய்தாலும், அந்த வேலையை நன்கு ஆற்றும்போது, அவர்கள் கடவுளைப் பெருமைப்படுத்துகிறார்கள் என்பது நம் உள்ளத்தில் நன்கு பதிய வேண்டும். உரோமை அரசில் பணியாற்றிய அதிகாரிகளைப் பற்றி எழுதும் பவுல், “அவர்கள் தங்கள் பணியை ஆற்றும்போது கடவுளுக்கே ஊழியம் செய்கிறார்கள்” (உரோ 13:6) என்று சொல்லி நம்மை வியக்க வைக்கிறார்.
இதன் காரணமாகவே, “நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல; ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்” (கொலோ 3:23-24) என்று அறிவுறுத்தினார்.
எனவே, நல்ல மனத்தோடு, நேர்மையாகப் பணியாற்ற வேண்டும் என்னும் போதனையைத் திருவிவிலியத்தின் பல இடங்களில் காண்கிறோம். “மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக்கொள்பவர்களாயிராமல், கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். மனிதருக்காக அன்றி, கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள்” (எபே 6:6-7) என்பது எபேசியர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரை.
“மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு வேலை செய்வதாகக் காட்டிக்கொள்ளாமல், ஆண்டவருக்கு அஞ்சி முழுமனத்தோடு வேலை செய்யுங்கள்” (கொலோ 3:22) என்பது அடிமைகளுக்கு வழங்கப்பட்ட போதனை.
வேலையின்போது நேர மேலாண்மை பற்றிக் கூட திருவிவிலியத்தில் வாசித்து வியக்கிறோம். “குறித்த காலத்திற்கு முன்பே உங்கள் பணிகளைச் செய்துமுடியுங்கள். அவ்வாறாயின் குறித்த காலத்தில் கடவுள் உங்களுக்குப் பரிசு வழங்குவார்” (சீஞா 51:30) என்னும் சீராக்கின் ஞானநூலின் அறிவுரை நம் அனைவருக்கும் பொருந்தும்.
வேலையும், இறைவேண்டலும் இணைந்தே செல்கின்றன என்பதே நம் திரு அவையின் மரபாக இருந்து வருகிறது. கிறித்தவ வாழ்வின் முன்னோடியான புனித பெனடிக்ட், ‘மன்றாடு, உழை’ என்பதையே துறவிகளின் இலக்காக முன்வைத்தார். ஆறாம் நூற்றாண்டிலிருந்து பெனடிக்டைன் துறவியர் எட்டு மணி நேரம் இறைவேண்டல், எட்டு மணி நேரம் வேலை என்பதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்தப் பார்வையையே கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வியும் முன்வைக்கிறது. கடவுளின் கொடைகளைப் பயன்படுத்துவதால், உழைப்பு மீட்பின் வழியாகவும் இருக்கிறது. மானிட வேலையின் இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இயேசுவின் பாடுகளில் நாம் பங்கேற்று அவரது மீட்புப் பணியில் ஒன்றிக்கிறோம் (கதிம 2427) எனச் சொல்லி மனிதரின் வேலையை அருள் வாழ்வுத் தளத்திற்கு உயர்த்துகிறது.
‘கடவுளின் பணி’ (Opus Dei) என்னும் பொது நிலையினருக்கான இயக்கத்தைத் தோற்றுவித்த புனித ஜோஸ் மரிய எஸ்க்ரிவா அதன் உறுப்பினர்களுக்குத் தந்த அறிவுரை: “உங்களது அன்றாட வேலைகளோடு விண்ணக நோக்கத்தையும் இணைத்துக்கொள்ளுங்கள்” என்பதுதான். எந்த வேலையைச் செய்தாலும், உள்ளார்ந்த அன்புடன் செய்யும்போது, அது புனிதமாகிறது என்பதே புனித குழந்தை தெரேசாவின் பார்வையாக அமைந்திருந்தது.
நாம் செய்கிற அனைத்து வேலைகளையும் ஆண்டவருக்காக, தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் செய்யும்போது, நமது வேலையே இறைவேண்டலாக மாறுகிறது. “ஆண்டவரின் விருப்பதிற்கு ஏற்றவாறு பணி செய்வோர் ஏற்றுக்கொள்ளப்படுவர். அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும்” (சீஞா 35:16) என்னும் இறைமொழிக்கேற்ப, நமது பணிகளை இறைத் திருவுளத்திற்கு ஏற்றவாறு ஆற்றுவோம். அப்போது நமது பணிகளே நம் இறைவேண்டலாக மாறும்!