புத்தாண்டு சிறப்பு மறையுரை
அன்னையின் அரவணைப்பில்
ஆண்டின் முதல் நாள்!
உலகின் எல்லா மொழிகளின் சொற்களிலும் பேரழகான சொல் ‘அம்மா!’ கடவுளின் படைப்பில் தன்னலத்தின் நிழல்கூடப் படாதது தாயின் படைப்பு. தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு இந்த உலகில் வேறெதுவுமில்லை. குழந்தையை உலகில் உயிர்மெய்யாக்கி உலவ விடுபவர் தாய். அன்னை இல்லையெனில் இந்த உலகில் மனித இனமே இருந்திருக்காது! ‘தாயிற் சிறந்த கோவில் இல்லை’ என்று ஒளவையார் தாய்மையின் சிறப்பைப்பற்றி அன்றே பாடியுள்ளார்.
உலகின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள்கூட, எந்த நிலையிலும் துறக்க முடியாத உறவு தாயின் உறவு மட்டுமே. ‘தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது’ என்று நவில்கின்றார் நபிகள் நாயகம். அன்பின் இலக்கணம் தாய்! அன்புக்கு ஆதாரமும் தாயே! தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு வேறு எதுவும் இல்லை. ‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே, அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே’ என்று பாடினார் கவிஞர் வாலி. “என் அன்னையின் செல்வாக்கில்தான் என் பண்புகள் சிறந்தன. அவரால்தான் என் இலக்கிய இரசனையும் வளர்ந்தது” என்றார் ஜான் இரஸ்கின். ‘அன்னையிருக்கத் தோல்வியில்லை; அன்னையின்றி வெற்றியில்லை’ என்னும் கூற்று நம் நினைவுக்கு வருகிறது.
வரலாற்றை உருவாக்குபவர் தாய். முதல் ஆசிரியராய், செவிலியராய் நம்மைப் புடமிட்டு நமக்குப் பெரும் உந்துசக்தியாக, ஆற்றலின் இருப்பிடமாக, அன்பின் பெட்டகமாக இருப்பவர் நம் தாயே! தாயே உயிர் அனைத்திற்கும் ஆதாரம். உயிர் எழுத்தில் ‘அ’ எடுத்து, மெய் எழுத்தில் ‘ம்’ எடுத்து, உயிர்மெய் எழுத்தில் ‘மா’ எடுத்து, அழகுத் தமிழில் கோர்த்தெடுத்த முத்து ‘அம்மா!’
ஆண்டின் முதல் நாள் இன்று, அன்னையின் மகிமையை எண்ணிப் பார்த்து, அன்னை மரியாவை ‘ஆண்டவரின் தாய்’ என்று அறிக்கையிட்டுக் கொண்டாடத் திரு அவை நம்மை அழைக்கிறது. ஆண்டின் முதல் நாளில் பெற்றோரிடம் பிள்ளைகள் ஆசி பெறுவதுபோல, மரியன்னையின் பிள்ளைகளாகிய நாமும் நம் விண்ணக அன்னையிடம் ஆசி பெறுவோம். நமக்கென இருக்கும் ஒரே ஒரு மாதிரி அன்னை மரியா. அவரே நம்பிக்கையின் தாய்! அவர் பராமரிப்பின் தாய். மென்மையின் தாய். உதவி புரிய எப்போதும் தயார் நிலையில் இருக்கும் தாய். அத்தகைய தாய் இப்புதிய ஆண்டில் நமக்கு நல்வழி காட்டுவார் என்ற நம்பிக்கையோடு இவ்வாண்டை அன்னையின் கரம் பற்றித் துவங்குவோம்.
அன்னை மரியா பெண்களில் பேறுபெற்றவர் மட்டுமல்ல, மானிடர் அனைவரிலும் பேறுபெற்றவர். ஆண்டவர் தனக்குச் சொன்ன வார்த்தைகள் நிறைவேறும் என்று நம்பியதால் (லூக் 1:45), இறைவனின் தாயாகும் பேற்றினைப் பெற்றதால் (1:48), ஆண்டவர் இயேசுவைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்ததால் (11:27), இறைவார்த்தையைக்
கேட்டு அதைக் கடைப்பிடித்து வாழ்ந்ததால் (11:28), தன் மகனின் போதனைகளையும் செயல்களையும் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டதால் (7:23), இயேசு நிகழ்த்திய அரும் அடையாளங்களைக் கண்டதால் (10:23), உயிர்த்த
ஆண்டவரை முதன்முதலாகக் காணாமலேயே அவரது உயிர்ப்பை ஏற்றுக்கொள்ளும் கொடையை மரியா பெற்றிருந்ததால் (யோவா 20:29) அன்னை மரியா பேறுபெற்றவர் ஆகிறார். இவ்வாறு ஒரு முறை, இருமுறை அல்ல... பலமுறை பேறுபெற்ற கொடையைப் பெற்ற அன்னை மரியாவை ‘கடவுளின் தாய்’ என அழைத்து மகிழ்கிறது திரு அவை.
அன்னை மரியாவைக் குறித்து ‘கடவுளின் தாய்’ (கி.பி. 431), ‘மரியா எப்பொழுதும் கன்னி’ (கி.பி.553), ‘மரியா அமல உற்பவி’ (கி.பி.1854), ‘மரியா விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டார்’ (கி.பி.1950) என நான்கு மறைக்கோட்பாடுகளை (Dogma) அறிவித்துள்ளது திரு அவை. அவற்றுள் முதன்மையானதும் பழமையானதுமான பேருண்மை ‘மரியா கடவுளின் தாய்’ (Mary is
Theotokos) என்பதாகும். Theotokos எனும் கிரேக்கச் சொல்லுக்கு, ‘கடவுளைத் தாங்கியவர்’ என்று பொருள்.
கான்ஸ்டான்டிநோபிளின் பேராயராக இருந்த நெஸ்டோரியஸ் என்பவர் ‘மரியா கடவுளின் தாய்’ என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அவர், “இயேசு இரண்டு ஆள்களாக உள்ளார். அதாவது, இயேசு மனித இயல்பு (human nature) மற்றும் கடவுள் இயல்பு (divine nature) என்று இரண்டு இயல்புகளுடன் உள்ளார். அவர் மரியாவிடம் பிறக்கையில் சாதாரண மனிதர் என்றும், பின் வளர்ந்து வந்தபோது, அவர் கடவுளாக மாறினார்” என்றும் தவறான போதனையைப் போதித்தார். எனவே, ‘மரியா இயேசு என்ற மனிதனின் தாய் (Christokos) மட்டுமே; அவர் கடவுளின் தாய் (Theotokos) அல்லர்’ என்றார். இவரது இந்தக் கருத்தியல்தான் நெஸ்டோரியனிசம் (Nestorianism) என்று அழைக்கப்பட்டது.
இப்போதனையால் எழுந்த சிக்கலைத் தீர்க்க முற்பட்டது திரு அவை. கி.பி. 431 -ஆம் ஆண்டு எபேசு நகரில் அலெக்சாண்டிரியாவின் ஆயர் சிரில் தலைமையில் கூடிய திருச்சங்கம், தவறான கருத்துகளைக் கூறிய நெஸ்டோரியசையும் அவரது போதனைகளைப் பின்தொடர்ந்தவர்களையும் நீக்கியது. இயேசு இறை மற்றும் மனித இயல்புகளைக் கொண்ட ஒரே ஆள் என மறைக்கோட்பாடாக அறிவித்தது. இதன் அடிப்படையில் ‘மரியா கடவுளின் தாய்’ என்பதை வரையறுத்துக் கூறியது. 1974 -ஆம் ஆண்டில் புனித திருத்தந்தை 6 -ஆம் பவுல் அவர்கள், ‘Marialis
Cultus’ எனப்படும் திருத்தூதுக் கொள்கை வழியாக, சனவரி முதல் நாளில் இவ்விழா சிறப்பிக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார் (எண் 5). ஆகவேதான் நாம் இன்று இப்பேருண்மையை விழாவாக எழுச்சியுடன் கொண்டாடுகிறோம்.
திருவிவிலியத்தில் மரியா கடவுளின் தாயாக வானதூதர் கபிரியேல் மரியாவிடம் கூறிய, “இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; …உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்” (லூக் 1:31) என்பதிலிருந்தும் எலிசபெத் மரியாவிடம், “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” (1:43) என்று இறைவாக்கு உரைப்பதிலிருந்தும் ‘மரியா கடவுளின் தாய்’ என்பது திருவிவிலியத்தில் ஆதாரப் புள்ளியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. “மரியா உண்மையாகவே இறைவனும் மீட்பருமானவரின் தாய் என ஏற்றுக்கொள்ளப்பெற்றுப் போற்றப்பெறுகிறார்” என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கம் (திருச்சபை எண் 53). மேலும், “அன்னை மரியா இறைவனின் தாய் எனும் கொடையாலும், அலுவலாலும் மீட்பரான தன் மகனோடு ஒன்றித்திருக்கிறார்” என்கிறது (எண் 63). அன்னையின் மகிமையைக் குறிப்பிடுகின்ற திருத்தந்தை பிரான்சிஸ், “கடவுளும், மனித சமுதாயமும், ஒருவர் மற்றவரைவிட்டுப் பிரியாவண்ணம், பெண்ணின் வயிற்றில் ஒன்றிணைந்தன. நம் மனித சமுதாயம், கடவுளில் என்றென்றும் இருக்கின்றது. மரியா கடவுளின் அன்னையாக என்றென்றும் இருக்கிறார். அமைதியின் இளவரசரின் அன்னையும், இப்பூமியின் அனைத்து மக்களின் அன்னையுமாகிய மரியா, ஒப்புரவுப் பயணத்தின் ஒவ்வோர் அடியிலும் நம்மோடு இருந்து காக்கிறார்” என்று குறிப்பிடுகின்றார் (‘டுவிட்டர்’ செய்தி, சன 1, 2020).
மரியா உலகின் மீட்பராம் இயேசுவை நமக்குக் காட்டுகின்றார். அவர் ஓர் அன்னையாக நம்மை ஆசிர்வதிக்கின்றார். அன்னை மரியா அகிலத் திரு அவையையும் அகில உலகையும் ஆசிர்வதிக்கிறார். இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் மனித சமுதாயத்திற்கும் ஆசிராக விளங்குகிறார். அவரே அருளையும் இரக்கத்தையும் அமைதியையும் அளவில்லாமல் பொழிகிறார்.
இறைவனே ஆசியின் ஊற்று; அவரிடமிருந்தே அனைத்து ஆசிகளும் உண்டாயின. இந்த இயேசுவை நமக்கு வழங்குவதன் வழியாக, இறைவன் தரும் ஆசிரின் முழுமையைத் திரு அவை நமக்கு வழங்குகிறது. இந்த ஆசிரை மனிதர்களுக்குப் பகிர்ந்தளிப்பதே, கிறித்தவர்களாகிய நமது முக்கியப் பணி என்பதை இன்று உணர்வோம்.
ஆண்டின் முதல் நாளில், முதல் வாசகத்தில் இறைவன் மோசே வழியாக ஆரோனுக்கும், அவர் புதல்வர்களுக்கும் கொடுக்கக்கூடிய ‘குருத்துவ ஆசி’ இறைவனின் பிள்ளைகளாகிய நமக்கும் உரியதாக அமைகிறது. “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!”, “ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!”, “ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” (எண் 6:24-26) என்று எண்ணிக்கை நூலில் நாம் கேட்கும் சொற்கள், இஸ்ரயேல் மக்கள் ஒருவரையொருவர் எவ்வாறு ஆசிர்வதிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, இறைவனின் ஆசியை யாரும், எவருக்கும் பரிந்துரைக்கலாம் என்பது திருவிவிலியம் தரும் பாடம். புதிய ஆண்டில் இறைவனின் ஆசியை இரக்கத்தோடு பெற்றுக்கொண்டு, நாமும் அந்த ஆசியைப் பிறருக்கு வழங்குவோம்.
58-வது உலக அமைதி தினத்தைச் சிறப்பிக்கும் இந்நாளில், “ஆண்டவரே, எங்கள் குற்றங்களை மன்னியும்; உமது அமைதியை எங்களுக்கு அளித்தருளும்” (மத் 6:12) என வேண்டிக்கொள்வோம். வரலாற்றுப் பாதையில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நமக்குக் கவலைகளை உருவாக்கினாலும், அன்னை மரியா நம்மை எப்போதும் கவனித்து வருகிறார் என்ற எண்ணத்தில், நாம் இந்தப் புதிய ஆண்டைத் துவங்குவோம். நம் கரம்பிடித்து நமது தாயாக, நம் தந்தையாம் இறைவனின் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள நம்மை வழிநடத்தும் தாயிடம் சேயாய் நாடி வருவோம். இனிமையும், பராமரிக்கும் தன்மையும் கொண்ட நம் தாய், இறைவனிடமிருந்து மனிதகுலம் முழுமைக்கும் ஆசிரைப் பெற்றுத் தருவாராக! பிறக்கவிருக்கும் புத்தாண்டில் இறைவன் நம் அனைவரையும் நலன்களால் நிரப்பி வழிநடத்திக் காப்பாராக!
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!