அவரில் மகிழ... அயலாரை மகிழ்விக்க...
திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறை ‘Gaudete Sunday’ அதாவது ‘மகிழும் ஞாயிறு’ என்று கொண்டாடுகிறோம். ‘மெசியாவின் வருகைக்காக விழிப்போடு காத்திருப்போம்’, ‘நம் உள்ளங்களைப் பண்படுத்துவோம்’ என்று கடந்த இரு வாரங்களாய் திரு வருகைக்கால ஞாயிறு சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டோம். இன்று மகிழ்ச்சி என்பது என்ன? எவ்வாறு மகிழ்கிறோம்? எப்படி மகிழ்வைப் பகிர்ந்து கொள்கிறோம்? போன்ற கேள்விகளுக்கு விடைகள் தேடுவோம்.
‘மகிழ்ச்சி என்பது எது?’ எனக் கேட்டால், ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கூறுவர். மகிழ்ச்சிக்கான வரையறை என்பது, ஒவ்வொரு மனிதனின் தேவையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது.
மகிழ்ச்சி, மனிதராகப் பிறந்த அனைவருக்கும் பொதுவான ஓர் உணர்வு. மகிழ்ச்சியை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான் இருக்கிறது. மகிழ்ச்சியைப் பெறும் நோக்கத்துடன் செய்யும் எல்லாச் செயல்களும் மகிழ்ச்சியைத் தந்துவிடாது. பிறருக்குத் தீமை நேரிடக் கூடாது என்ற விழிப்புடன் செய்யும் செயல்களே மகிழ்ச்சியை அளிக்கும். ஒரு மனிதனின் மகிழ்ச்சி என்பது அவரை மட்டுமல்ல, அவரைச் சுற்றி உள்ளவர்களின் மனநிலையையும் மாற்றி, வாழ்க்கையை இனிமையாக்கும்.
‘மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பவர் இறைவனே.’ அவரே மகிழ்ச்சியைத் தருகிறார். “கிறிஸ்துவை இதயத்தில் ஏற்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியானவர்கள். உண்மையான மகிழ்ச்சி என்பது நாம் இயேசுவோடு கொண்டுள்ள உறவில் கிடைக்கிறது” என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
எருசலேம்
மக்கள் யாவே தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி வாழவில்லை; பிற தெய்வங்களை நாடினர்; சிலை வழிபாடு செய்து மகிழ்ந்தனர் (செப் 1:4); இறுமாப்பு உடையவர்களாக மாறினர்; தங்கள் இதயங்களில் ஆண்டவரைப் புறக்கணித்தனர்; ஆண்டவர் பலமுறை இஸ்ரயேல் மக்களை எச்சரித்தும் அவர்கள் ஆண்டவருடைய குரலினைக் கேட்கவில்லை. ஆண்டவர் எந்த அளவுக்கு அவர்களைத் தண்டித்தாரோ, அந்த அளவுக்கு அவர்கள் அதிகமாகப் பாவங்கள் செய்ய ஆவல் கொண்டனர். கடவுளின் கனிந்த அன்பைப் புறக்கணித்துப் பாவச் சேற்றில் மூழ்கியதால், எருசலேம் மக்கள் அந்நிய நாடுகளுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். பிற சமய மக்களைப்போல் பாவிகளாகி விட்டதால் கடவுளால் தண்டிக்கப்பட்டனர். எருசலேம் மக்கள் பாவங்கள் செய்தாலும் ஆண்டவர் அவர்களைக் கைவிடவில்லை. கடவுள் அவர்கள் நடுவில்தான்
இருந்தார் (செப் 3:15). தங்களின் பாவ நிலையை உணர்ந்து, ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை வைத்த ‘இஸ்ரயேலின் எஞ்சியோரை’
தம்முடன் மகிழ்ந்து பாட அழைக்கிறார் ஆண்டவர். இதுவே இன்றைய முதல் வாசகத்தின் பின்னணியாக அமைந்துள்ளது.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், மகிழ்ச்சி நிறைவாழ்வுக்கான வழியைப் பவுல் காட்டுகிறார். பவுல் உரோமைச் சிறையில் பல்வேறு துன்பங்களை அடைந்து வந்தபொழுது, “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்” (பிலி
4:4) என்று ஆண்டவர் இயேசுவின் உறவில் பிலிப்பியர் நிலைத்து நிற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.
ஒருவரால் எந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ந்திருக்க முடியும்; ஏனெனில், மகிழ்ச்சி என்பது ஒருவர் வாழும் சூழலிலிருந்து வருவதைக் காட்டிலும், அது அவரது மனநிலையிலிருந்து உருவாகிறது என்ற உயர்ந்த பாடத்தை அவர் நமக்குச் சொல்லித் தருகிறார். கனிந்த உள்ளம், கவலை கொள்ளாமை, நன்றியுடன்கூடிய இறைவேண்டல் முதலானவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்கிறார். “இயேசுவைச் சந்திக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அவர் தரும் மகிழ்ச்சி எந்நாளும் குடிகொண்டிருக்கும்” என்கிறார்
திருத்தந்தை.
இன்றைய
நற்செய்திப் பகுதியில், “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” (லூக்
3:4) என்ற திருமுழுக்கு யோவானின் அழைப்பைக் கேட்ட கூட்டத்தினர் அவரிடம் “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” (3:10) என்று கேட்பதாக நற்செய்தி தொடங்குகிறது. மக்கள் கூட்டத்தினர், வரிதண்டுவோர், படைவீரர் ஆகிய மூன்று நிலையினரும் யோவானிடம் முன்வைக்கும் கேள்விகளுக்கு அவரவர் வாழ்க்கை நிலைக்கேற்ப யோவான் பதில் அளிக்கிறார்.
முதலாவதாக,
யோவான் மக்களுக்குக் கூறிய பதிலில், ‘இரண்டு அங்கிகளை உடையவர்களும்’, அளவுக்கு
மிகுதியாய் ‘உணவு வைத்திருப்பவர்களும்’ பகிர்ந்துகொள்ளுங்கள்
(லூக் 3:11) என்கிறார். காரணம், பகிராத்தன்மையாலே யூதேயாவின் எளிய மக்கள் வறுமையில் வாடினர். செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகிக் கொண்டே போனார்கள். எனவே, சமூகத்தில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் போராடும் ஏழை மக்களோடு பகிர்ந்து வாழ்வதே இறைவனைச் சந்திப்பதற்கான முதல் வழி எனவும், பகிரும்போதுதான் இறைவனின் ஆசிரைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் யோவான் கற்றுத் தருகிறார். “நம் தேவைக்கு அதிகமாகச் சேமித்து வைக்கும் உணவு ஏழைகள் வாயிலிருந்து பிடுங்கப்பட்டது; அவை அவர்கள் இரத்தத்திலிருந்து உறிஞ்சப்பட்டது” எனக்
கூறுகிறார் புனித யோவான் கிறிஸ்சோஸ்தம்.
இரண்டாவதாக,
யோவான் வரி தண்டுவோருக்குக் கூறிய அறிவுரையில், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” (3:12) என்கிறார்.
பாலஸ்தீனத்தில் மக்களை அழுத்தும் பெரும் சுமையாக இருந்தது வரி. மக்கள் வாழ வழி இல்லாதபோதும் கோவிலுக்கும் அரசுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு ஏழைகள் தள்ளப்பட்டனர். மேலும், வரிதண்டுவோருக்குச் செலுத்தவேண்டிய அதிகப்படியான இலஞ்சம், வரி செலுத்த இயலாத மக்களிடம் அரசு பிடுங்கிக்கொண்ட நிலங்களால் அடிமைகளாகவும் அகதிகளாகவும் மாறிய ஏழை மக்களின் அவல நிலையின் பின்னணியில் யோவானின் பதில் அமைகிறது.
மூன்றாவதாக,
படைவீரர் கேட்ட கேள்விக்கு, “யார் மீதும் பொய்க்குற்றம் சுமத்தாதீர்கள்” (3:13) என்கிறார்
யோவான். உரோமைப் பேரரசில் வாழ்ந்த யூத மக்கள் பலர் தங்கள் விடுதலைக்காக அரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபோது, அவர்கள்மீது பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டனர். இந்நிலையில்தான் யோவான் இந்த அழைப்பைப் படைவீரருக்கு விடுக்கிறார். சுருங்கக்கூறின், ஒருவர் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனில் அ) பகிர்ந்துகொள், ஆ)
பணம் பறிக்காதே, இ) பகையை வளர்க்காதே
- இவையே யோவான் வழங்கும் போதனைகளாகும்.
ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் திருமுழுக்கு யோவான் கூறிய இந்த அறிவுரைகளைத் தழுவி, ஒரு நபர் அல்லது ஒரு நாடு மகிழ்ச்சியாக வாழ்வதற்குச் சில பட்டியலை வரையறுத்துள்ளது ஐ.நா. சபை.
மகிழ்ச்சியாக வாழ்வது ‘மனித உரிமைகளில் ஒன்று’ எனக் கூறும் ஐ.நா. சபை,
நீடித்த நிலையான மகிழ்ச்சி என்பது ‘சமூகத்தில் நம் உறவுகளிலிருந்தும் ஈடுபாட்டிலிருந்தும் பிறக்கிறது’ என
வலியுறுத்திச் சொல்கிறது. சமூகப் பாதுகாப்பு, வருமானம், நலவாழ்வு, சுதந்திரம், தாராள மனப்பான்மை, ஊழல் இல்லாமை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மகிழ்ச்சிப் பட்டியலில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா எந்த இடத்தில் வருகிறது என அறிவதற்கு நமக்கு
ஆர்வம் எழலாம். 136 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது. அதாவது உலகிலேயே மிகக் குறைவான மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.
ஒவ்வொரு
நாட்டிலிருந்தும் ஒன்று முதல் மூவாயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, ‘கடந்த ஒரு மாதத்தில் ஏதாவது தொண்டு நிறுவனத்திற்கு உதவி செய்தீர்களா?’ என்பதுதான். வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கும் ஒருவரே மற்றவர்களுக்கு உதவவும், தானம் செய்யவும் முன்வருவார். “உண்மையான மகிழ்ச்சி, நாம் வைத்திருக்கும் பொருள்களில் அல்ல; மாறாக, அவற்றைக் கொடுப்பதில்தான் பிறக்கிறது” என்கிறார்
திருத்தந்தை. உவகைப் பொங்க கொடுப்பவர்கள் தாங்களும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்கிறார்கள். கடவுள் தம்மை முழுவதுமாக இம்மனுக்குலத்திற்குக் கொடுத்தார். இந்தக் கொடுத்தலில்தான் அவர் மகிழ்ச்சியும் அடைந்தார். கிறிஸ்துமஸ்கூட இதுதானே! கடவுள் தம்மையே நமக்காகக் கொடுத்தார்.
“மண்ணுலகின் நலன்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானவை. அதாவது, தமது உடைமைகள் தமக்கு மட்டுமன்றி, பிறருக்கும் பயன்படுவதற்காகவே உள்ளன எனக் கொள்ளவேண்டும்” என
எடுத்துரைக்கின்றன வத்திக்கான் சங்க ஏடுகள் (இன்றைய உலகில் திருச்சபை, எண் 69).
அன்பானவர்களே!
வாழ்வின் அடிப்படை உண்மைகள் மிக மிக எளிமையானவை. அவற்றைப் பெரிய தத்துவங்களில் தேட வேண்டாம். பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல வேண்டாம். நாம் பாலர் பள்ளியில் படித்த பாடங்களையே நினைவூட்டுகிறேன். “யாரையும் ஏமாற்றாமல் விளையாடு; எவரையும் அடிக்காதே; பிறர் பொருள்மீது ஆசைப்படாதே; அடுத்தவரைக் காயப்படுத்தாதே; இருப்பதை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து கொடு; உணவை வீணாக்காதே; தவறு செய்தால் மன்னிப்புக் கேள்; உயிர்களைக் கொல்லாதே.” இவைதானே நாம் பாலர் பள்ளியில் படித்த பாடங்கள்!
கடவுள்
ஒரு பச்சிளம் குழந்தையாய் நம் மடியில் வந்து அமர விரும்புகிறார். எளிய வடிவில் நம் மத்தியில் வாழும் இறைவனைச் சந்திக்கத் தயாராவோம். அன்பான வார்த்தை, அமைதி நிறைந்த ஆறுதல், எளிய உடனிருப்பு, பரிவின் பார்வை, கனிந்த பகிர்வு, கரைகாணாக் கருணை... இவையே நம்மை மகிழ்விக்கும்; அயலாரையும் மகிழ்விக்கும்.