news-details
சிறப்புக்கட்டுரை
‘இரக்கமும் எதிர்நோக்கும்’

திருவிவிலியத்தின் போதனைகளிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிந்தனைகளிலும் அடிப்படையாக இருக்கிறஇரக்கமும் எதிர்நோக்கும்என்னும் சொற்களைத் தன் ஆயர் பணியின் இலக்கு வாக்கியமாக ஏற்கிறார் வேலூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள்.

இரக்கம்கடவுளின் முகமாகத் திகழ்கிறது. இதையே இயேசு தம் இறையாட்சிப் பணியாலும் போதனையாலும் வல்ல செயல்களாலும் வெளிப்படுத்தினார். இறையியல் மதிப்பீடுகளில் ஒன்றாகத் திகழும் எதிர்நோக்கு நாம் பொறுமை, நேர்முக எண்ணம் கொண்டு ஒருவர் மற்றவரை வலுப்படுத்தவும் நலப்படுத்தவும் தூண்டுகிறது. இதயத்துடன் கூடிய மும்முனை இணைக்கோடு மூவொரு கடவுள், கிறிஸ்துவின் முப்பணி, மானிடரின் முப்பரிமாண உறவுகளையும் குறிக்கிறது. ‘ஆவே மரியாமற்றும் திருவிவிலியம் மரியாவின் பரிந்துரையையும், ஆயருக்குரிய இறைவார்த்தைப் பணியையும் பிரதிபலிக்கிறது. மூவொரு கடவுளுடைய இரக்கத்தை அடித்தளமாகக் கொண்டு தன் ஆயர் பணியைக் கட்டியெழுப்பும் மேதகு அம்புரோஸ் அவர்கள் மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்றி இறைவார்த்தையை அறிவித்து எதிர்நோக்கை வழங்குகிறார்.

பொருள் விளக்கம்

மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களின்இரக்கமும் எதிர்நோக்கும்என்னும் ஆயர்பணி இலக்குவாக்கியம் திருவிவிலியப் போதனைகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிந்தனையையும் பின்புலமாகக் கொண்டுள்ளது.

இரக்கம்: திருவிவிலியத்தில் இரக்கம் என்பது கடவுளை முதன்மையாக வரையறுக்கும் ஒரு பண்பு. நற்செய்தி நூல்களில் நாம் காணும் இயேசுவின் பணி, மனித நொறுங்கு நிலைக்கான கடவுளின் பதிலிறுப்பே இரக்கம் என முன்மொழிகிறது. கடவுளின் இரக்கத்தை அனுபவிக்க அனைவரையும் அழைக்கிறார் இயேசு. “இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத் 5:7). ‘கிறித்தவ நம்பிக்கையின் மையம் இரக்கம்என்று வலியுறுத்துகிற திருத்தந்தை பிரான்சிஸ், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை (2015-16) அறிவித்து, “தந்தையுடைய இரக்கத்தின் முகமே இயேசு கிறிஸ்து (‘இரக்கத்தின் முகம், 1) என மொழிந்தார். மேலும், “அன்பு மற்றும் மன்னிப்பின் வெளிப்பாடாகத் தெரிகிற இரக்கம் என்னும் குணமே தேவையிலிருப்பவர்களையும் சமூகத்தின் விளிம்புநிலையில் இருப்பவர்களையும் நோக்கி நம்மை நகர்த்தி, அவர்களுக்கு ஒப்புரவை வழங்கத் திரு அவையைத் தூண்டுகிறதுஎன்கிறார்.

எதிர்நோக்கு: இறையியல் மதிப்பீடுகளில் (1கொரி 13:13) இரண்டாவதாகவும் மையமாகவும் திகழ்கிறஎதிர்நோக்குநம்பிக்கையையும் அன்பையும் இணைக்கிறது. “எதிர்நோக்கு ஒரு போதும் ஏமாற்றம் தராது (உரோ 5:5) என்று எழுதுகிற பவுல், கிறித்தவர்களாகிய நமக்கு எதிர்நோக்கு என்பது வெறும் எதிர்பார்ப்பு அல்ல; மாறாக, கடவுளின் பிரமாணிக்கத்திலும் வாக்குறுதியிலும் நாம் கொண்டிருக்க வேண்டிய பற்றுறுதி. குறிப்பாக, துன்பம் அல்லது சவால்கள் நடுவே நாம் கொண்டிருக்க வேண்டிய பொறுமை என்கிறார். ‘அனைவரும் உடன்பிறந்தோர்என்னும் தன் சுற்றுமடலில், “கடவுளின் கொடையாகத் திகழ்கிற எதிர்நோக்கு, எதிர்காலம் நோக்கி நம் இதயத்தைத் திறப்பதுடன் நிகழ்காலத்தின் துன்பங்களைத் தாண்டிய பார்வையை நமக்குத் தருகிறது (எண். 55) என்கிறார்.

இந்த எதிர்நோக்கு வெறும் தனிப்பட்ட பண்பாக அல்லாமல் குழும உணர்வாக இருப்பதால், கூட்டியக்கத்துக்கான பாதையில் திரு அவையை வழிநடத்துவதோடு அனைவரோடும் ஒன்றிப்பை ஏற்படுத்த வழிவகுக்கிறது. எதிர்வரும் புனித ஆண்டு யூபிலி 2025, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்என நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்து பயணிக்க அழைக்கிறது.

இரக்கம், எதிர்நோக்கு என்னும் மதிப்பீடுகள் நம் தனிப்பட்ட மற்றும் குழும ஆன்மிக வாழ்வுக்கான அடித்தளமாகத் திகழ்வதுடன், திரு அவையின் கூட்டியக்கப் பயணத்தில் ஒருமைப்பாடு, பங்கேற்பு, பணி ஆர்வம் ஆகியவற்றை வளமையடையச் செய்கிறது. ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்என இணைந்து பயணிக்கும் திரு அவையோடு தன்னை இணைத்து, வேலூர் தலத்திரு அவையின் ஆயராகப் பணியாற்றி, இரக்கத்தில் வேரூன்றி எதிர்நோக்கில் கனிதர விரும்புகிறார்.

மும்முனை இணைக்கோடு: தொடக்கமும் முடிவும் இல்லாமல் ஒன்று மற்றொன்றோடு கொண்டுள்ள பிணைப்பைக் குறித்துக்காட்டும் பழம்பெரும் இந்த அடையாளம் - தந்தை, மகன், தூய ஆவியார் எனும் மூவொரு கடவுளையும், இறைவாக்கினர், குரு, அரசர் எனும் இயேசுவின் முப்பெரும் பணிகளையும் குறிக்கிறது. இப்பணிகளில் கடவுளின் இரக்கத்தை எடுத்துக்காட்டி, கடவுளின் நலத்தையும் மன்னிப்பையும் நமக்குப் பெற்றுத் தந்த இயேசு, வாழ்வின் போராட்டங்களையும் தாண்டிய எதிர்நோக்கை வழங்குகிறார். மேலும், இந்த அடையாளம் ஒவ்வொரு கிறித்தவரின் முப்பரிமாணப் பிணைப்பை, அதாவது கடவுளோடும் தன்னோடும் தன்னைச் சுற்றியுள்ள இயற்கை மற்றும் மனிதர்களோடும் உள்ள பிணைப்பையும் நினைவூட்டுகிறது.

இதயம்: மும்முனை இணைக்கோட்டு உருவத்தின் மையமாகத் திகழ்கிற இதயம் இரக்கத்தை வலியுறுத்துகிறது. ‘இந்த இரக்கத்தையே இயேசுவின் திரு இருதயம் பிரதிபலிக்கிறதுஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (‘அவர் நம்மேல் அன்பு கூர்ந்தார், எண் 77). கடவுளின் இரக்கத்தைத் தழுவிக்கொண்டு நிலைவாழ்வு பற்றிய எதிர்நோக்குடன் நாம் வாழும்போது, நாம் பெறுகிற உள்ளார்ந்த மாற்றத்தை இது குறிக்கிறது. தன்னாய்வு, மனமாற்றம், கடவுளின் அருளுக்கான திறந்த உள்ளம் ஆகியவற்றால்தான் இரக்கத்தையும் எதிர்நோக்கையும் நாம் இணைக்க முடிகிறது.

மரியே வாழ்க: ஆவே மரியா (மரியே வாழ்க!) அடையாளம், வேலூர் மறைமாவட்டத்தின் பாதுகாவலியாம் கிறித்தவர்களின் சகாயம் என்னும் அன்னை கன்னி மரியாவைக் குறிக்கிறது. ‘ஆம்என்னும் ஒற்றைச் சொல்லால் இறைத்திருவுளம் நிறைவேற்றத் தன்னையே முன்மொழிந்த மரியாவின் தயார்நிலையைக் கொண்டிருக்கிறார் ஆயர் அம்புரோஸ். எதிர்நோக்கு என்பது வெறும் உள்ளத்து விருப்பம் அல்ல; மாறாக, கடவுளின் தொடர் பிரமாணிக்கத்தில் ஊன்றி, பொறுமையோடு காத்திருக்கும் மனப்பக்குவம் எனச் சொல்லும் மரியா, கூட்டியக்கத்தின் பண்புகளான செவிமடுத்தல், வரவேற்றல், புரிந்துகொள்ளுதல், உடன்நடத்தல் ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

திருவிவிலியம்: இலச்சினையின் மையமாகத் திகழ்கிற திறக்கப்பட்ட திருவிவிலியம் மேற்காணும் அடையாளங்கள் திருவிவிலிய வெளிப்பாட்டில் ஊன்றியிருக்கின்றன எனக் குறித்துக்காட்டுவதுடன், இரக்கமும் எதிர்நோக்கும் திருவிவிலியத்தில் நாம் காணும் அடிப்படையான மனித அனுபவங்கள் என்று எடுத்துரைக்கின்றன. மேலும், ஆயருக்குரிய முதன்மைப் பணியான நற்செய்தி அறிவிப்புப் பணியையும், திரு அவை நம்பிக்கையின் பாதுகாவலராக அவர் திகழ வேண்டிய பொறுப்புணர்வையும் (காண். 2திமொ 4:5) இது குறிக்கிறது.

மேற்காணும் நான்கு அடையாளங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்கள், ‘இரக்கமும் எதிர்நோக்கும்நிரம்பி வழிகிற இதயம் மூவொரு கடவுளில் நிலை நிற்க வேண்டும் என விரும்புகிறார். கிறித்தவர்களின் சகாயமும் வேலூர் மறைமாவட்டத்தின் பாதுகாவலியாகவும் திகழ்கிற அன்னை கன்னி மரியாவால் தூண்டப்பெற்று, மரியாவின் நம்பிக்கை மற்றும் சீடத்துவத்தைப் பின்பற்றும் நம் ஆயர் இறைவார்த்தைக்குச் செவிமடுப்பவராக, அதைப் பின்பற்றி அறிவிப்பவராக முன்வருகிறார்.