news-details
சிறப்புக்கட்டுரை
நம்மைத் தேடி வரும் விடியல்

இத்தாலி நாட்டில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில், 1955 -ஆம் ஆண்டு பிராங்கோ பிறந்தான். சிறுவனாக இருக்கும்போதே தன் பெற்றோரை இழந்து அநாதையானான். காலப்போக்கில் குடிபோதைக்கு அடிமையாகி திசைமாறிய பறவையானான். 30 ஆண்டுகள் பிச்சைக்காரனாக, உரோமைநகர் வீதிகளையே உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்தான். 2016 -ஆம் ஆண்டு நவ. 19 -ஆம் தேதி, புனித பேதுரு சதுக்கத்தில், போப் பிரான்சிஸ் நிறைவேற்றியஇரக்கத்தின் வெள்ளிவிழா’… திருப்பலியில் பங்கெடுத்தான். சோகமே உருவான பிராங்கோ, இரக்கம் ததும்பி வழியும் திருத்தந்தையின் கண்களில் படுகின்றான்.

திருப்பலி முடிந்தவுடனே திருத்தந்தை பிரான்சிஸ் பிராங்கோவைத் தேடிவந்து, தனிமரமாகக் கவலையுடன் நின்றவனின் கரங்களைப் பற்றிக்கொண்டு நலம் விசாரிக்கிறார். அவன் கண்ணீர் சிந்தியவனாக, “நான் ஓர் ஏழை, இவ்வுலகில் எனக்கென்று யாருமில்லைஎன்று கதறி அழுதவனை இறுக அரவணைத்து, அவனுக்கு உணவு, உறைவிடம், நிரந்தரப் பணியிடம் வழங்கி அவனது வாழ்க்கையில் விடியலாகத் திகழ்ந்தார்.

இந்த நிகழ்வு திருத்தந்தை அவர்களின் உள்ளத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே, ஏழைகளின் விடியலாக வரப்போகும் தெய்வீகக் குழந்தை இயேசுவின் திருவருகைக் காலத்திற்கு முன், 33 -ஆம் ஞாயிறை, ஏழைகளின் ஞாயிறு திருவிழாவாக 2017 -இல் திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்படுத்தி, உலகமெங்கும் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றும் வெள்ளி நிலவாகத் திகழ்கின்றார். நம்மை மீட்க வந்த மெசியாவின் வழித்தோன்றலாகவும் வாழ்ந்து வருகிறார்.

பொதுவாக உலகிலுள்ள பிற சமயங்களை நோக்கும் போது, மனிதனின் இதயத்தில் இறைவனைத் தேடும் ஓர் உந்துதல் இருக்கிறது. இறைவனைத் தேடும் மனிதன், அவரில் சங்கமம் ஆகும்வரை இது ஒரு தொடர் நிகழ்வே! இந்த வாழ்க்கையே ஒரு தேடலாக அமைகிறது.

தங்களின் முழுவிடுதலைக்காக மெசியா பிறப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களின் விடிவெள்ளியாக இயேசு கிறிஸ்து தோன்றினார்  (மத் 1:8-25, யோவா 1:1-14). இவரை நம்பும் யாவரும் மீட்கப்பட்டு கடவுளின் பிள்ளைகளாகிறோம் (கலா 4:4-5).

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு இம்மண்ணில் தோன்றினார் என்று இறை நம்பிக்கையற்ற வரலாற்று அறிஞர்கள்கூட ஏற்றுக்கொள்கின்றனர். அவரது பிறப்புப் பெருவிழாவை ஆண்டுதோறும் அகமும், முகமும் மலர சமூகக் கொண்டாட்டமாக நாம் கொண்டாடி மகிழவேண்டும். ஆனால், இன்று அது வணிகக் கொண்டாட்டமாக மாறிவிட்டது! திருவிவிலியக் கண்ணோட்டத்துடனும், திரு அவையின் பாரம்பரியத்தின் பார்வையிலும் நோக்குவோமென்றால், இப்புனித நிகழ்ச்சி நம் வழியாகத் தொடர்ந்து நிகழும் தொடர் நிகழ்வாகும்.

மனுவுரு எடுத்து வரலாற்றில் வாழும் கிறிஸ்துவை இறைவார்த்தை, அருளடையாளங்கள், திரு அவை வழியாக மட்டுமல்ல, தங்கள் சொந்த இறையனுபவத்திலும் பல புனிதர்கள் சந்தித்துள்ளனர். உதாரணம் புனித பிரான்சிஸ் அசிசியார். மனுவுரு எடுத்துள்ள இயேசுவின் பிரசன்னம், இறைவனை அதிகமாக அறிந்துகொள்ளும் வாயிலாகத் திகழ்கின்றது. இந்த மனித தெய்வமே, எளிமை, ஏழ்மை, எளியோரை அன்பு செய்யக் கற்றுக் கொடுக்கின்றார். அதேபோன்று புனித இஞ்ஞாசியார், “மனிதனாகப் பிறந்த மரிமகன் இயேசுவை ஆழமாக அன்புசெய்ய உமது அருளைத் தாரும் என்று இறைவேண்டல் செய்ததுடன், அவரே நம் அர்ப்பண வாழ்வுக்கு உன்னத மாதிரியாகவும் நமது பணிவாழ்வுக்கு முன்னோடியாகவும் விளங்குகின்றார்என்கிறார்.

தம்மையே தந்த விடிவெள்ளி, உலகிற்கு விடியலாக வந்த வெள்ளி நிலா இறைமகன் இயேசு, தமது திருப்பணியின் தொடக்கத்திலேயே தமது வாழ்வின் இலக்காக ஏழைகளுக்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோருக்கு விடுதலை அளிக்கவும், பார்வையற்றோருக்குப் பார்வை கொடுக்கவும் வந்ததாகக் கூறுகின்றார் (லூக் 4: 18-19).

திண்டுக்கல் அருகே பார்வையற்ற ஒரு பெண்மணி, 45 பார்வை இழந்தவர்களுக்காக ஓர் அறக்கட்டளை நடத்தி வருகிறார். ஒருமுறை நான் அவரைச் சந்தித்தபோது, “பார்வையற்ற நீங்கள் எதையும் செய்ய சிரமப்படுவீர்களா?” என்றதற்கு, “எங்கள் அன்றாடத் தேவைகளையும் வேலையையும் செய்யப் பயிற்சி எடுத்துக் கொள்கிறோம். அதற்கப்பால் வாசிப்பது, ஆள்களின் குரலைக் கொண்டு அவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்குச் சிரமமில்லை. ஆனால், ஒன்றே ஒன்றுதான் நீங்கள் செய்வதை என்னால் செய்ய முடியாதுஎன்று பேச்சை நிறுத்தினார். அவரது மனக்குறை என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்ளும் ஆவலில், “பார்வையற்றவர்களுக்காக இதை நடத்துவதில் சிரமமா?” என்றேன். அதற்கு அவர், “பார்வையற்றவர்களுக்குப் பார்வை கொடுத்த இயேசப்பா, உங்களைப்போல நல்மனம் கொண்டவர்கள் வழியாக இன்றும் வாழவைக்கிறார். ஆனால், உங்களைப்போல கண்தானம் செய்ய முடியாதே”… என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறிய போது, என்னையும் அறியாது கண்களில் கண்ணீர் கசிந்தது. ‘இருளும் ஒளியாகும்என்னும் சொல்லாட லுக்கேற்ப, அந்தப் பார்வை இல்லாத பெண் என் கண்களைத் திறந்தார். நானும் கண்தானம் செய்வதென்று அன்று முடிவு செய்தேன்.

மனுவுரு எடுத்து விடிவெள்ளியாகத் திகழும் (திவெ 22:16) இயேசுவின் வழியில் நாமும் நடந்து, புதிய உலகம் படைக்கும் விடியல்களாகத் திகழ்வோமாக!

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!