1. அருள்பணி. தாமஸ் கவான் டஃபி (நிறுவுநர் - திண்டிவனம் முப்பணி நிலையம்)
(22.01.1989)
அருள்பணி.
தாமஸ் கவான் டஃபி சுவாமிகளின் பிறப்பு நூற்றாண்டு விழா 1989 ஜனவரி 5, 6 ஆகிய இரு நாள்களில் திண்டிவனம் கத்தோலிக்க நடுநிலையத்தில் எல்லா நிறுவனங்கள், பங்குகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழாவின் தொடக்க நாளான ஜனவரி 5-ஆம் தேதி பிற்பகல், 1000 ஆசிரியருக்கும் 300 வேதியருக்கும் கருத்தரங்கு முப்பணி
நடுநிலையத்தில் (TNBCLC) தொடங்கியது.
தொடக்க
உரையில் மேதகு ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்கள், அயர்லாந்து நாட்டில் பிறந்த தாமஸ் கவான் டஃபி உண்மையை நேசித்தவர் என்றும், அதற்கு அடுத்தபடியாகத் தமிழகக் குழந்தைகளை நேசித்தார் என்றும் கூறினார். ஆசிரியர் பணியும் வேதியர் பணியும் இணைந்த விதத்தில் கல்வித்திட்டத்தை அமைக்கவும், அதற்கென ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தவும் அவர் பாடுபட்டார் என்றும் தெரிவித்தார். அவருடைய திட்டங்களை நிறைவேற்றுவதில் அருள்பணி. மைக்கேல் கர்ட்டின் சுவாமிகளும், அருள்பணி. மரிய குழந்தை சுவாமிகளும் டஃபியின் வலது கரம்போல் விளங்கினர் என நன்றியுடன் நினைவு
கூர்ந்தார்.
இந்த
விழாவில் கலந்துகொள்வதற்காகவே அயர்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த அருள்பணி. தாமஸ் கவான் டஃபியின் அண்ணன் மகள் மோரா கவான் டஃபி பேசுகையில் விழாவில் தான் கலந்துகொள்வது பற்றி அளவற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்தார். வேதியர் கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற தாமஸ் கவான் டஃபியின் எண்ணத்தைப் பிரதிபலித்தார். அருளாளர் டஃபி காலத்தில் ஆசிரியப்பணி செய்தவர்களும், அப்போது மாணவர்களாக இருந்தவர்களும் டஃபி அடிகளுடன் தங்களுக்கு இருந்த அன்பின் உறவை, அவருடைய பண்புகளை இனிமையாகப் பசுமை உணர்வுடன் பகிர்ந்துகொண்டனர்.
மாலை
5.30 மணிக்கு ஆசிரியர்கள், வேதியர்கள், மாணவர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர், அருள்சகோதரர்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள்
அனைவரும் கையில் எரியும் மெழுகுதிரியுடன் பங்கு கோவிலிலிருந்து புறப்பட்டு புனித அன்னாள் உள்விடுதி வளாகத்திற்கு வந்து நற்கருணைப் பவனியில் கலந்துகொண்டனர்.
நற்கருணைப்
பவனியில் முன்னரே மதியத்தில் அருள்பணி. தாமஸ் கவான் டஃபியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கண்காட்சி ஆர்.சி. ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் திறந்து வைக்கப்பட்டது. டஃபியின் மிஷனரி பணி, கல்விப் பணி, சாரண இயக்கத்தில் ஈடுபாடு, ஆசிரியர்-வேதியர் பணி, அவர் ஏற்படுத்திய நிறுவனங்களின் மாதிரி அமைப்புகள், அவர் எழுதி வெளியிட்ட நூல்கள், பொன்மொழிகள் ஆகிய அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற்றன. அத்துடன் பூவிருந்தவல்லி விவிலிய நடுநிலையத்தினர் அமைத்த திருவிவிலியக் கண்காட்சியும் விழாவில் இடம் பெற்றது.
அடுத்த
நாள் ஜனவரி 6-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4.30 வரை முப்பணி நடுநிலையத்தில் தியானமும் கருத்தரங்கும் நடைபெற்றன. கருத்தரங்கில் அருள்திரு. மு. வல்தாரிஸ், இன்றைய நடைமுறை வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளையும், அவற்றை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் கூறினார்.
மாலை
ஐந்து மணிக்கு புனித அன்னாள் உள் விடுதி வளாகத்தில் மேதகு கர்தினால் சைமன் லூர்துசாமி ஆண்டகை அவர்கள் தலைமையில் ஒரு பேராயர், ஐந்து ஆயர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்கள். திருப்பலியில் சேலம் ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்கள் மறையுரை நிகழ்த்தினார். திருப்பலிக்குப் பின்னர் இரவு 7 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவின் சிகரமாய் ‘டஃபி முன்னோடி’
என்ற ஒலி - ஒளிக்காட்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் என நூற்றுக்கும் அதிகமான
நிறுவனங்களைச் சார்ந்த நடிகர்களும் கலைஞர்களும் பங்கேற்றனர். இறைவன் இயேசுவின் மீட்புப்பணியுடன் அருள்பணி. தாமஸ் கவான் டஃபியின் வாழ்வைப் பின்னிப் பிணைக்கப்பட்டது அருமையான கலைவிருந்தாக இருந்தது.
- குழந்தைசாமி
2. தந்தை காண்டிடோ வல்லோஜியா
மானுடத்தை
நேசித்த மாண்புமிக்கவர்!
(05.06.1988)
1988 - ஆம் ஆண்டு
பிப்ரவரி திங்கள் 20-ஆம் நாள் மதியம் சுமார் 1.40 மணியளில் ஒரு வரலாறு வீழ்ந்தது! பூவிருந்தவல்லி திரு இருதயக் குருமடத்தில் ஏறக்குறைய 46 வருடங்கள் அல்லும் பகலும் அயராது உழைத்து, தாய்த் திரு அவைக்கு நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்களை உருவாக்கிக் கொடுத்த இதயத்தந்தை காண்டிடோ வல்லோஜியாவின் கரங்கள் இறுதியாக அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்தது அந்தக் கணத்தில்தான். அவரது இறுதிச்சடங்கிலே அவர் உருவாக்கிய குரு செல்வங்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்களில் நீர் மல்க கல்லறையில் அவருக்கு இறுதிவிடை கொடுத்தார்கள். அவர் நேசித்த ஏழைகள், ஒரு நாள் முழுவதும் அவரது பூதவுடலைச் சந்திக்கக் கொண்டு வந்த பூமாலைகள் அவரது கல்லறையை நிறைத்துவிட்டன. அவர் “மானுடத்தை நேசித்தார்; மனித மாண்பைப் போற்றினார்.”
இத்தாலி
நாட்டிலே பிறந்து, சொந்தபந்தங்களையெல்லாம் துறந்து, இந்திய நாட்டில் புகுந்து பூவிருந்தவல்லி திரு இருதயக் குருமடத்தைத் தனது பணிவீடாகக் கொண்டு, மருத்துவமனைப் படுக்கையில் இருந்துகொண்டே ‘என்னை எனது குருமடத்திற்கு அழைத்துப் போங்கள்’ என்று இறுதி மூச்சுவரை, நொடிக்கு மூன்று தடவை ஒரு மனிதர் சொன்னார் என்றால், அவர் தனது இதயத்தையே அந்த நிறுவனத்தில்தான் வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.
இருக்கின்ற
இடத்தில் இயன்றதை, இயன்ற வரைக்கும் செய்ய வேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவமே அவரை வாழும் வரை வளர விட்டது!
குருகுலம்
என்ற நிறுவனத்தோடு மட்டும் தனது பாசப்பிணைப்பை நிறுத்திக் கொண்டவரல்லர் அவர். அந்த நிறுவனத்தில் உருவான ஒவ்வொரு குருவின்மேலும் அதே பாசத்தை வைத்திருந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட சில நூற்றுக்கணக்கான குருக்களும், ஐந்து ஆயர்களுமே அதற்கு இறுதி சாட்சியம் தந்தனர். தான் பேராசிரியராக, அதிபராக, பொறுப்புகள் பலவற்றில் இருந்தபொழுதும் அவற்றையெல்லாம் ‘அதிகாரங்களாக’ பார்த்து
ஆட்டிப் படைத்தவர் அல்லர்; மாறாக அன்பால் அரவணைத்து, அழைத்து வழிநடத்திச் சென்ற ஓர் அன்னையைப் போன்றவர்.
திரு
இருதயக் குருமடத்தின் ஒவ்வொரு கல்லும், மரமும் அவரது கடின உழைப்புக்கு, அவை அழியும் வரைக்கும் அத்தாட்சிப் பத்திரங்கள்!
அவர்
குருமடத்திற்கு மட்டுமே குலவிளக்காய் திகழ்ந்து, தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் குறுக்கிக்கொள்ளவில்லை. அவரின் பார்வை பாமர மக்களின் பாடுகளை நோக்கித் திரும்பியது! சுற்றியுள்ள கிராமங்களில் வீடின்றித் தவித்தவர்களுக்காய் தந்தையின் கரங்களே குடிசை போட ஆரம்பித்தன! சமுதாயத்திலே ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்ட தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி அவர்களுக்காகவே ஒரு காலனி! ஏழை மக்களின் உடல் பிணி போக்க இலவச மருந்தகம்! வேலை வாய்ப்பற்ற இளம்பெண்களுக்காக அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற சீரிய சிந்தனையில் தையல்பயிற்சி நிலையமும், தட்டெழுத்துப் பயிற்சி நிலையமும்! வருடா வருடம் மும்மாரி தவறினாலும் ஏழைக் குழந்தைகளுக்குத் தவறாமல் சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள்! ஆலயமின்றி தவித்த இடங்களிலெல்லாம் அழகிய ஆலயங்கள்! குற்றவாளிகளையும், குற்றவாளிகளாக்கப்பட்டவர்களையும்
சிறையில் சென்று அணைத்துக் கொண்ட அவரது சிறை சந்திப்புகள்! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!
ஆக,
மனிதர்கள் பிறந்து கொண்டேயிருப்பார்கள்! சந்ததிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும்! இறந்த பிறகு பலரின் வாழ்க்கை வரலாறாக எழுதப் படும். ஆனால், வாழும் பொழுதே வரலாறு படைப்பவர்கள் ஒருசிலரே! அந்த ஒருசிலரில் இந்த மாமனிதர் முதல் மனிதர்!
- வில்லியம்
சந்தானம்