news-details
சிறப்புக்கட்டுரை
கிறிஸ்து பிறப்பு தருகிற அமைதி!

பொதுவாக அமைதி இருவகைகளில் வெளிப்படுகிறது.  புயலுக்குப் பின் ஏற்படுவது முதல் வகை அமைதி. ஒருவிதத்  துடிப்போ, துயரமோ எதுவும் இன்றி அப்படியே சலனமற்று இருப்பது மறுவகை அமைதி. இதில் இயேசுவின் பிறப்பு எந்த வகை அமைதியை அளித்தது?

இயேசுவின் பிறப்பு இருவகை அமைதியையும் கொண்டு வந்ததுஒருவர்  கொண்டிருந்த மன நிலையைப் பொருத்தே அந்த இருவகை மனநிலைகளில் ஒன்று அவருக்குக் கிட்டியது. அங்ஙனமே அவை இரண்டும் இருவேறு விளைவுகளையும் உலகில் ஏற்படுத்தியது.

புயலுக்கு பின் அமைதி

புயலுக்கு பின் அமைதி என்கிற முதல்வகை அமைதியை இயேசு பிறப்பு தந்தது என்றால், பிறந்த  பாலன் இயேசு முதலில் புயலாக அமைந்திருப்பாரோ? அதன் பின்பு அமைதியைத் தந்திருப்பாரோ? என்கிற கேள்விகள் எழுகின்றன. ஆம்! அவருடைய பிறப்பு பலருக்குப் பல தருணங்களில் புயலாகவே இருந்தது. சில தருணங்களில் சிலருக்கு மட்டுமே அமைதியைத் தந்தது. உதாரணமாக, கடவுளின் தூதர் கன்னியான மரியா முன் தோன்றிஇதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்  என்று கூறியபோது மரியா அமைதி பெறவில்லை; மாறாக கலக்கமடைந்து, “இது எப்படி நிகழும்? நான் கன்னியாயிற்றே!”  என்று குழம்பி நின்றார். புயலை விட அழுத்தமான பாதிப்புக்குள்ளானது அவர் மனது. அந்த நேரத்தில் அவருக்கு அதே வானதூதரால் முறையான விளக்கம் கொடுக்கப்படஅதை ஏற்றுக்கொண்டு அதன் பின்பு அவர் மனம் அமைதியானது. அமைதியான அவர் அந்த அமைதியை, தான் மட்டும் அனுபவித்து அயர்ந்து விடவில்லை; மாறாக, அடுத்திருப்பவரிடமும் குறிப்பாக, தேவையிலிருப்போரிடம் வழங்குவதற்காக எலிசபெத்  இல்லத்திற்கு  ஓடிச்சென்று அவரை வாழ்த்துகிறார். மரியாவின்  வாழ்த்து கேட்டு எலிசபெத் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ந்து  துள்ளியது. இப்படியாக மரியா பெற்ற அமைதி தேவையிலுள்ள அடுத்தவருக்கும் பகிரப்பட்டு ஆனந்தத்தை அளித்து மகிழ்ந்தது.

அதேபோல் மரியாவோடு மண ஒப்பந்தமாயிருந்த யோசேப்பு மரியா கருவுற்றிருப்பதை அறிந்து அமைதியோ ஆனந்தமோ அடையவில்லை; மாறாக, மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி, மரியாவை மறைவாக  விலக்கிவிடவே திட்டமிடுகிறார். பின்பு இறைவனின் திட்டம் அவருக்குக் கனவில் வெளிப்படுத்தப்பட, முறையான விளக்கம் பெற்ற யோசேப்பு அமைதி அடைகிறார். அதன்பின் மரியாவை மிகுந்த அன்போடு கவனிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அதுவே அவர் பெற்ற அமைதியின் விளைவாக வெளிப்படுகிறது.

அதேவேளையில்கீழ்த்திசை அறிஞர்களின் வாயிலாக இயேசுவின் பிறப்பை அறிந்துகொண்ட ஏரோது மன அமைதி பெறவில்லைமாறாக, மனக் குழப்பமும் எரிச்சலும் பெற்று அவரைக் கொன்றுவிடத் துடிக்கிறான், சதித்திட்டம் போடுகிறான்.

ஆக, இயேசுவின் பிறப்பு குறித்து அறிந்த நேரத்தில் மரியா, யோசேப்பு, ஏரோது போன்றோர் முதலில் குழப்பமும் கலக்கமும் பெற்று, ஒரு புயலின் தாக்கத்தையே தங்கள் மனங்களில் பெறுகின்றனர். பின்பு மரியாவும், யோசேப்பும் அமைதியைப் பெற, ஏரோதோ எரிச்சலை அடைகின்றான். அதற்குக் காரணம் அவனின் மனநிலையே.

உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக (லூக் 2:14) எனும் வானவர் செய்தி  மரியா, யோசேப்பு இருவரிடமும் அமைதியைத் தந்தது. காரணம், அவர்களிடம் ஆண்டவருக்கு உகந்த நல்மனநிலை இருந்தது. எனவே, இயேசுவின் பிறப்பு முதலில் அவர்களுக்குக் கலக்கத்தை, குழப்பத்தை ஒரு புயல் போல உண்டாக்கினாலும், தெளிவு பெற்றபின் அவர்களுக்கு அமைதியைக் கொடுத்தது.

அப்படி அவர்கள் பெற்ற அமைதி அவர்களுக்குள் மட்டுமே முடங்கி விடாமல் அடுத்தவருக்கும் எட்ட துடிப்பைக் கொடுத்தது. புயல்போலச் செயல்படும் தொடர் ஆற்றலையும் அளித்தது. அவர்களிடமிருந்த ஆண்டவருக்குகந்த  நல்மனமே அதற்குக் காரணமாகவும் இருந்தது. ஆனால், ஏரோதிடம் நல்மனம் இருக்கவில்லை. தன் பதவியின் மேல் கொண்ட அதீத ஆசையால் தனக்கு எதிராக மற்றொருவர் வந்துவிடுவாரோ என்கிற பயத்தால் இயேசுவின் பிறப்பு குறித்து கேள்விப்பட்டு, கலக்கமுற்று எரிச்சல் அடைகிறான்; அமைதி இழக்கிறான். அந்த எரிச்சல் மனநிலையும் புயல் போல செயல்பட்டு அந்நாட்டில் இருந்த அத்தனை ஆண் குழந்தைகளையும் கொல்வதற்கு உத்தரவிடுகிறது.

ஆக, இயேசுவின் பிறப்பு நல்ல மனம் கொண்டவர்களுக்கு அமைதியை அளித்ததுடன், அது அடுத்தவருக்கும் தொடர்ந்து கிடைக்க ஆற்றலைக் கொடுக்கிறது. அங்ஙனமே, தீய மனம் கொண்டவர்களுக்கு அமைதியை இழக்கச் செய்வதுடன் அந்த அமைதி அடுத்தவருக்கும் எட்டி விடாமல் அழிவைத் தருகிறது.

சலனமற்று உறைந்து கிடக்கும் அமைதி

இயேசுவின் பிறப்பு அறிவிப்பு இடையர்கள், கீழ்த்திசை அறிஞர்கள் போன்றவர்களுக்குச் சலனமற்று உறைந்து கிடக்கும் இரண்டாம் வகை அமைதியைத் தருகின்றது. இவர்களுக்கு இயேசுவின் பிறப்பு அறிவிப்பு எவ்விதக் குழப்பத்தையும் கொடுக்கவில்லை, புயலையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, பிறந்த இயேசுவைத் தேடிச்செல்லும் ஆர்வத்தைக் கொடுத்தது என்பதை நாம் பார்க்கிறோம். அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த எளிய மனமே.

எவ்வித முன் தீர்மானமும் இன்றி தாங்கள் கேள்விப்பட்டதை என்ன? ஏதுஎன்று அறிந்து கொள்ளத் துடிக்கும் ஒருவிதத் தேடுதல் உள்ள எளிய மனம் அவர்களிடம் இருந்தது. எனவே, அவர்கள் அவரைக் காண ஓடோடி வருகின்றனர். எளிய மனம் கொண்ட இவர்கள் இயேசுவைக் கண்டதும் தங்கள் மனத்தில் அமைதி பெறுகின்றனர். ஆனந்தம் அடைகின்றனர். ஆனால் அந்த அமைதியை, ஆனந்தத்தை அடுத்து இருப்பவருக்குக் கொடுக்கவில்லை. மாறாக, தங்களுக்குள்ளேயே அனுபவித்துக் கொள்கிறார்கள்.

இறுதியாக, இயேசுவின் பிறப்புச் செய்தி கேட்கின்ற எல்லாருக்கும் அமைதியாக அமையவில்லை, அமைதியைத் தரவில்லை. மாறாகநல்ல மனமும், எளிய மனமும் உடையவர்கள் மாத்திரமே அந்த அமைதியைப் பெற்றார்கள் என அறிகிறோம். எனவே, இயேசுவின் பிறப்பு நமக்கு அமைதியைத் தர வேண்டும் என்றால், முதலில் அதற்கு நாம் எளிய மனத்தையோ அல்லது நல்ல உள்ளத்தையோ பெற்றவர்களாக இருக்க வேண்டும். நல் மனத்தால் விளைந்த அமைதிதான் பெற்றதைப் பிறருக்கு அளித்து மகிழ்வதில் ஆர்வம் காட்டும். எளிய மனத்தோடு இயேசுவைக் காணத் தேடுவோர் அவரை அமைதியில் கண்டு மகிழ்வர்.

பிறக்கும் பாலன் நம்மில் பிறக்க அதன் வழி நாமும் புதிதாய் பிறக்க வாழ்த்துகள்!