news-details
சிறப்புக்கட்டுரை
நட்பின் இலக்கணம்!

இறைவன் தம் மக்களுக்காகப் பணி செய்ய நம்மிடமிருந்து அவரது பணியாளர்களாக  ஆயர்களை ஏற்படுத்துகிறார். இவ்வரிசையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் குருமட வாழ்விலும், குருத்துவப் பணியிலும் கைகோர்த்து நடந்த பாசமிகு நண்பர் பேரருள்திரு. அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் ஆயர் நிலைக்கு உயர்த்தப்பட்டது கண்டு பெருமகிழ்வோடு வியந்து பாராட்டுகிற இவ்வேளையில், அவரோடு பழகின மற்றும் அவரில் கண்ட நற்பண்புகளை உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

பங்குத்தளங்களில் சிறந்த மேய்ப்பனாய் விளங்கியவர் இவர். சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தில் உதவிப் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த போதும், செங்கை மறைமாவட்டத்தில் ஒரகடம், படப்பை மற்றும் மறைமாவட்டப் பேராலயப் பங்கில் பணிபுரிந்த போதும், நிர்வாகியாகவும் மனிதநேயமுள்ள தந்தையாகவும் பற்பல தேவையிலிருந்த மக்களைச் சந்தித்தும், பக்தசபை மற்றும் பொதுநிலையினர் இயக்கங்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் தனித்துவத்தை மதித்து வாழ்ந்தவர்.

பங்குகளில் வீடுகள் சந்திப்பு, பொதுநிலையினருக்கான பயிற்சி, அத்தோடு தியானங்கள், தவக்காலத்தில் ஆன்மிக எழுச்சிக்கான முயற்சிகள், உதாரணமாக, செங்கை புனித சூசையப்பர் பேராலயத்தில் தவக்காலத்தின் 40 நாள்களும் மாலையில் 8.00 மணி முதல் 9.00 மணி வரைஆண்டவரோடு ஒரு மணி நேரம்என்ற மௌன செபமுயற்சியை ஏற்படுத்தி, மக்கள் தங்களது வேலை முடித்து ஆலயத்திற்கு வந்து செலவிடவும், வீடுகளில் இருப்பவர்கள் தங்கள் குடும்பப் பணிகளையெல்லாம் முடித்துவிட்டு இறைவனில் இணையவும் பேராலயத்தில் இம்முயற்சியை உருவாக்கினார்.

நட்பிற்கும், உறவுகளுக்கும் கைகோர்ப்பவர் இவர். “நட்பிற்காக எந்தவிதமான நெருக்கடியையும் துன்பத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளலாம்...” (We can take any Risk for Friendship) என்பவர். இப்படி நட்பை மதிப்பதற்கும், அதற்கு நாம் எந்த அளவிற்குச் சென்று நேரம், பொருள் இவற்றையும், எந்தச் சுணக்கமும் இல்லாமல் கொடுக்கலாம் என வாழ்பவர் நண்பர் அம்புரோஸ். இதற்கு எடுத்துக்காட்டாக நட்பிற்காகக் கடைக்கோடிப் பகுதிகளில் பணி செய்தாலும், என்னை வந்து சந்தித்து, என்னோடு தங்கி எனது பணியில் என்றென்றும் துணை நின்றவர்.

உடன் பணிபுரியும் உதவித் தந்தையர்கள் மற்றும் அவர் வயதொத்த குருக்கள், அவரைவிட மூத்த குருக்கள், அவரிடம் பயின்ற இளம்குருக்கள், மறைமாவட்டம் அதையும் தாண்டி உள்ள மற்ற குருக்கள் எனக் குருக்களின் தோழமையைப் போற்றுகிறவரும், உற்சாகத்துடன் அவர்களுக்கு வழிகாட்டியாக, அதோடு பொருளாதார உதவிகள், உளவியல் வழிகாட்டுதலையும் செய்து, அவர்களின் பணி சிறக்க எப்போதும் இணைந்து நின்று செயல்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்

பெரியோர்களை மதிக்கும் பாங்கும், தனது ஒத்த வயது நண்பர் குருக்களுடன் இனிமையாகப் பழகுதலும், வயதில் இளையவரோடு நகைச்சுவை கலந்த நல்ல உறவுகளில் கைகோர்த்தும் சிறந்து விளங்குபவராகக் கண்ணியமான மனிதராகத் திகழ்கிறார்.

மென்மையும், எளிமையும் கொண்டவர் இவர்வட இந்தியாவில் பணிபுரிகின்ற ஓர் அருள்பணியாளர் கடந்த வாரம், இவர் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து, ‘இவர்தான் தகுதியான மனிதர்என்று தெரிவித்து, அவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் இது:

நான் வட மாநில மறைமாவட்டத்தில் மறைபரப்புப் பணியின் பொறுப்பாளராகப் பணிபுரிகிறபோது, அலுவலக ரீதியாகத் தொலைப்பேசியில் அவரைத் தொடர்புகொண்டேன். அவரது தொலைப்பேசி உரையாடலில் மிகவும் மென்மையாகவும், அதிகாரத் தொனி இல்லாமலும் நட்புறவுடன் பேசினார். அதைப் பார்த்து வியந்தேன். ஏனெனில், இப்படிப்பட்ட அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவில்லை. எப்படியும் இதுபோன்ற மனிதரை நேரில் பார்த்தாக வேண்டும் என்று முயற்சி செய்து பெங்களூருக்குச் சென்றபோது, அவரது அலுவலகம் மற்றும் அவருடனான தனிப்பட்ட உரையாடல் ஓர் எளிய மனிதரைச் சந்தித்த அனுபவத்தை எனக்குக் கொடுத்ததுஎன்று தெரிவித்திருந்தார்.

புதிய ஆயர் ஆடம்பரம் இல்லாத எளிய வாழ்வு வாழ்பவர். தன்னுடைய மேற்படிப்பு மற்றும் கற்றுத் தேர்ந்த கல்வி உயர்வில் பேராசிரியராக, நல்லதொரு தத்துவவியல் விளக்க உரையாளராகப் பல வருடங்கள் தத்துவவியல் மற்றும் இறையியல் பாடப்பிரிவுகளில் கல்வி அறிவை ஊட்டுகிறவர். குருமடம் மற்றும் மறைமாவட்டங்களில் பல்வேறு உயர் பொறுப்புகளும், பதவிகளும் இவரை அலங்கரித்தாலும், என்றைக்கும் ஆடம்பரமோ, தற்பெருமையோ எதையும் வெளிப்படுத்தாத எளிய வாழ்க்கை முறையைத் தனது ஆளுமையின் சாட்சியாகக் கொண்டவர். தனது பணி வாழ்வில் பலபேருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறவர். இப்பண்புகள்தாம் அவரை இந்நிலைக்கு உயர்த்தியது என நான் கருதுகிறேன்.

இவரது ஆன்மிக ஆழமும், நிர்வாக நேர்மையும் சிறப்பு மிக்கவை. தனது ஆன்மிக வாழ்வில் ஆழ்ந்த படிப்பு, கல்விப் பணி மற்றும் நிர்வாகப் பொறுப்புகள், அவற்றைச் சார்ந்த தொடர்புகளில் அதிகமான நேரம் ஈடுபட்டாலும், ஆன்மிகத்தில் தனக்கெனச் சிறந்த வழியைக் கைக்கொண்டு வாழ்கிறவர். தனிசெபம், குழுமச் செபங்கள் என அடுத்தவரை ஆன்மிகத்தில் கொண்டு செல்வதில் முனைப்பாய் இருப்பவர். குருமாணவர்களை நெறிப்படுத்தும் வழிகாட்டியாக இருந்து வளர்த்தெடுத்தவர். நிர்வாகம் மற்றும் மேய்ப்புப் பணியில் தன்னுடைய ஆளுமையினால் சிறந்த திட்டமிடுதலும் தெரிவிக்க வேண்டிய கருத்துகளில் தெளிவும் தனக்கே உரிய பாணியில் அதனை வெளிப்படுத்தும் விதமும் இவருக்கு நிகர் இவரே!

சமூக நீதி, சமூக அக்கறை மற்றும் சமுதாயத்தை மேம்படுத்துகிற முன்னேற்றப் பாதையில் அதிகம் கவனம் செலுத்துகிற பணியாளராக, இவற்றோடு தன்னை அர்ப்பணித்த குருத்துவத்தில் என்றும் மகிழ்ந்து எச்சூழ்நிலையிலும் அதிராமல், பதறாமல் சமநிலையோடு பணிசெய்கிற ஒருவராகத்தான் இவரை என் நட்புறவில் பார்த்து இருக்கிறேன்; வியந்திருக்கிறேன்!