கொண்டாட்டங்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன, உற்சாகத்தைக் கொடுக்கின்றன, கவலைகளை மறக்க வைக்கின்றன. நமக்குள்ளும் நம்மைச் சுற்றிலும் ஓர் இனம் புரியாத இன்பத்தைச் சேர்க்கின்றன. ஆனால், ஆன்மிக அர்த்தத்தில் இந்தக் கொண்டாட்டங்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது, அது சில சமயங்களில் சில உண்மைகளை நம் கவனத்தில் கொண்டுவராமல் தவிர்த்து விடுகின்றன. ஏனெனில், இந்த உண்மைகள் நம் மகிழ்ச்சியைப் பறித்துவிடுமோ அல்லது குந்தகம் ஏற்பட்டு விடுமோ என்று அச்சப்பட்டு, நம்மை ஆராயவிடாமல் அந்த மேலோட்டமான நிலையிலேயே இருக்கும்படிச் செய்கின்றன.
இங்குக்
கொண்டாட்டங்கள் வேண்டாமென்று கூறவில்லை; அதிலுள்ள ஏமாற்று வேலைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவது கடமையாயிருக்கிறது. ஏனெனில், உலகமயமாக்கலின் காரணமாக, பெருநிறுவனங்கள் (corporate) கடவுள், மனிதம், பொருள்கள் என்பதை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஒவ்வொன்றையும் விலைக்கு உரிய பொருளாகப் பார்க்க ஆரம்பித்து விட்டன. எதில்
வரவு அதிகம் என்பதை ஆராய்ந்து, அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகின்றன. அவர்களுக்குக் கிறிஸ்து பிறப்பும் ஒரு பொருள்தான். ஆகவே, இந்த நாளை மிகவும் வணிக நோக்கில் அறிமுகப்படுத்தி, அதில் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்திக்கொள்கின்றன.
இந்த
உலக மாயைக்குள்ளும், அதன் மாயக் கவர்ச்சிக்குள்ளும் சிக்கி நம் ஆன்மாவை இழந்து விடாமல் இருக்கவும், கிறிஸ்து பிறப்பை எவ்வாறு பொருள் உணர்ந்து கொண்டாடலாம் என்ற சிந்தனையை வழங்கவே இங்கு முயல்கிறோம்.
முதல்
கிறிஸ்துமசுக்கு முந்தைய நாள் அன்று, உலகம் இங்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறியாமல் இருந்தது. ஆனால், விண்ணுலகில் உள்ள எண்ணற்ற வானதூதர்கள், தூயவர்கள் அனைவரும் கடவுள் தம்முடைய மீட்பை அனுப்புவதைக் குறிக்கும் ஒரு குழந்தையின் பிறப்புக்கு, புகழ்ச்சி மற்றும் வழிபாடு ஆகியவற்றிற்காகக் காத்திருந்தனர். அன்று விண்ணகத்தில் ஒரு பிரியாவிடை நடந்து கொண்டிருந்தது. மகன் தந்தையிடம் விடைபெறும்பொழுது நடந்த உரையாடல், அதில் ஒரு பகுதி, எபிரேயர் 10-வது அதிகாரத்தில் நமக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசு தம் தந்தையிடம் பேசுகிறார்: “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல; எனவே, நான் கூறியது: ‘என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்’ (எபிரேயர்
10:5). அப்பா, நீங்கள் விலங்குகளின் இரத்தத்தில் நிறைவடையவில்லை என்பதை நான் உணர்கிறேன். நான் அந்த உலகத்திற்குச் சென்று நிறைவான தியாகமாக இருப்பதற்காக நீர் எனக்காக ஓர் உடலை அமைத்துத் தந்தீர், அதை நான் நிறைவேற்றுவேன். ஏனென்றால், உமது திருவுளத்தை நிறைவேற்ற திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளபடி நான் வருகிறேன்”
என்றார். எனவே, இயேசு கிறிஸ்து தமது தந்தையிடம் விடைபெற்று, முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிலுவையில் நிறைவடையும் ஒரு மீட்பின் பயணத்தைத் தொடங்கினார். கிறிஸ்துவின்
உடல் கடவுளை மனிதரிடம் கொண்டு வருவதற்கான கருவியாக இருக்க கடவுளால் தெய்வீகமாக ஆயத்தப்படுத்தப்பட்டது. மேலும், இது பாவத்திற்கான சரியான பலியாக இருந்தது. ஆகவே, இயேசு விண்ணகத்தின் ஆரவாரத்துடன் வந்தார். ஆனால், உலகில் எந்த ஆரவாரமும் இல்லை. உலகு மறதியாக இருந்தது. கடவுள் ஊனுடலில் வெளிப்பட்டார்; விண்ணகம் அதை அறிந்திருந்தது, ஆனால், உலகம் அறியவில்லை. தூய ஆவி தமது பணியை நிறைவேற்ற ஒன்பது மாதங்கள் எடுத்தார். அவர் அந்த ஒன்பது மாதங்களில் மரியாவின் வயிற்றில் ஓர் உடலை வடிவமைத்தார். அது மூவொரு இறைவனின் இரண்டாவது நபர் வசிக்கும் ஓர் உடலாயிற்று. மேலும், பிரசவிக்கப்படுவதற்கான நேரம் தயாராக இருந்தது. இயேசு என்கிற கருவின் காலத்தின் முழுமை வந்து, முழு உருப்பெற்றது,
ஒவ்வொரு
கிறிஸ்துமஸ் நிகழ்விலும், நாம் அனைவரும் கிறிஸ்துவின் பிறப்பின் முழுமையை உணராமல் மேம்போக்காக ஒப்புக்கொள்கிறோம். அவர்
இவ்வுலகில் பிறந்தார் என்பது பிரச்சினை அல்ல; ஏன் பிறந்தார் என்பதுதான் பிரச்சினை. அதில் ஒருவித மீட்பின் உண்மை உள்ளது என்ற உண்மையோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில் பலர் திருப்தி அடைகிறார்கள். அவர் உண்மையில் எதற்காக வந்தார் என்று ஒருபோதும் எண்ணிப் பார்ப்பதில்லை.
இயேசு
ஏன் பிறந்தார்? கடவுளை முன் வைக்கவா? ஆம்! உண்மையைக் கற்பிக்கவா? ஆம்! திருச்சட்டத்தை நிறைவேற்றவா? ஆம்! அவருடைய அரசை வழங்கவா? ஆம்! கடவுளைப் பற்றிப் புரியாதவர்களுக்குப் போதிக்கவா? ஆம்! அன்பை வெளிப்படுத்தவா? ஆம்! அமைதியை ஏற்படுத்தவா? ஆம்! நோயுற்றவர்களைக் குணப்படுத்தவா? ஆம்! மற்றும் பல. ஆனால், அவர் வந்ததற்கான இரண்டாம் காரணங்கள்தான் இவையெல்லாம். ஒரு முதன்மை நோக்கம் உள்ளது. இயேசு நம் பாவங்களுக்காகத் துன்பப்படவும் இறக்கவும் வந்தார்; அதற்காக மட்டுமே அவர் வந்தார். அவர் பிறந்து வளர்ந்த பிறகு கடவுளின் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் இறக்க வந்தவரல்ல. விண்ணகத்தில் இருக்கும்போதே இறைத்திட்டத்தில் இருந்ததை அறிந்தே வந்தார். அவர் வாழ்வில் பெத்லகேம் மட்டுமல்ல, கல்வாரியும் உண்டு. அவர் இறப்பதற்காக மட்டுமே வாழ்ந்தார்.
மனிதன்
மண்ணகத்தில் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கடவுள் படைத்தார். ஆனால், அவன் பாவத்தில் விழுந்து தன் ஆதிக்கத்தை இழந்தான். வீழ்ந்த அவன் தன் அரசாட்சியையும், நிலைவாழ்வையும் இழந்தான். ஆகவே, கடவுள் இந்த உலகத்தின் மனிதர்களைப் பார்த்தார். பாவத்தினால் இறக்கப் போகும் மனிதர்களைக் கண்டார்; மேலும், அவர் தமது அன்பின் காரணமாக, எல்லா மனிதர்களும் தங்கள் பாவத்தில் இறக்க அனுமதிக்கமாட்டேன்; அவர்களின் தண்டனையைச் சுமக்க, அவர்கள் மரணத்தை வெற்றிகொள்ள நான் என் மகனையே அனுப்புவேன் என்று தம் அன்பு மகனை அனுப்ப முன்வந்தார். இதற்காகத்தான் இயேசு வந்தார். நமக்கு மாற்றாக வந்தார். சிலுவையில் அறையப்பட்டபோது, நமக்காக இறந்தார்; நமக்கான தண்டனையை அவர் செலுத்தினார்.
ஆகவே,
தொழுவத்தை மற்றொரு முறை சென்று பாருங்கள்; மரியாவின் வயிற்றில் தூய ஆவியால் வடிவமைக்கப்பட்டு, தீவனத் தொட்டியில் கிடத்தியிருக்கும் விலைமதிப்பற்ற தெய்வீகக் குழந்தையின் அந்த மென்மையான பிஞ்சு கைகளையும், கால்களையும் தொட்டுப் பாருங்கள்; அவை சிலுவையில் ஆணிகளால் அடிக்கப்பட வேண்டும். பளபளக்கும் கண்களையும் கொழு கொழு கன்னத்தையும் தலையையும் தொட்டுப் பாருங்கள். அந்த இனிமையான தலை முள்முடியால் நசுக்கப்பட வேண்டும். அந்த மென்மையான உடல் காயங்களாலும் இரத்தக்கறை படிந்த ஆடைகளாலும் மூடப்பட்டிருக்க வேண்டும். ஒருநாள் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் இதயம் ஓர் ஈட்டியால் திறக்கப்பட வேண்டும். இந்த இனிய குட்டிக் குழந்தையிடம் ‘ஏன் இத்தகைய துயரங்களை ஏற்கப் பிறந்தாய்?’ என்று கேட்டுப் பாருங்கள். ‘நான் உனக்காகப் பலியாகவே வந்தேன்!’ என்பார். அவரின் கைகளைத் தொட்டு வணங்குங்கள்; அவரையே உற்றுநோக்குங்கள். அப்பொழுது அந்தத் தெய்வீகப் பாலகனின் மழலைச் சிரிப்பு உங்கள் உள்ளத்திற்கு அமைதியைக் கொண்டு வரும்.