news-details
சிறப்புக்கட்டுரை
பெற்றோர் இருந்தும் அநாதைகளாய்...

மகிழ்வான குழந்தை வருங்கால தேசத்தின் பெருமைஎன்றார் காந்தியடிகள். ஒரு சிறு விதைக்குள் மிகப்பெரிய மரம் ஒளிந்திருப்பது போல், சிறு குழந்தை உலகை அசைக்கும் மிகப்பெரிய தலைவராக உருவாக முடியும். கலீல் ஜிப் ரான் கூறுவதுபோல, “நாம் அவர்களுக்கு உடலைத் தரலாம்; ஆனால், அவர்களிள் ஆன்மாக்களை அல்ல. ஏனென்றால், அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வசிக்கின்றன; அதை நீங்கள் இப்போது பார்க்க முடியாது, உங்கள் கனவில் கூட இல்லை.”

ஆம், அவர்கள் எதிர்காலத்தில் எப்படி உயர்வார்கள் என்பதை நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அவர்கள் உயர்ந்து நிற்கும்போது, அதைப் பார்த்து மகிழக்கூட, கனவு கண்டு உருவாக்கிய உள்ளங்கள் இல்லாமல் போகலாம். ஆனால், குழந்தைகளின் வளர்ச்சியில் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், அவர்களோடு தொடர்புடையோர் அனைவருக்கும் மிகப்பெரிய கடமையும் பொறுப்பும் உண்டு என்றாலும் பெற்றோர்கள், குழந்தைகளின் வளர்ச்சியில் முழு தார்மீகப் பொறுப்பை ஏற்பவர்களாக உள்ளனர்.

கரு உருவானதிலிருந்து தொடங்கி, சமுதாயத்திற்குப் பங்களிப்பவர்களாய் குழந்தைகளின் வாழ்வு மலர்ந்திட, மணம் பரப்பிட முழுமுதற் காரணம் பெற்றோர்களே. இக்காலத்தில் பெற்றோர்கள் இருந்தும் அநாதைகள் பெருகி வருவது, நமது மனத்தை வருத்துவதாய் அமைகிறது. இந்நூற்றாண்டில் நாம்  இழைக்கும் சமூக அநீதிகளில் இதுவும் ஒன்றாய் இருக்கிறது.

உண்மையில் பெற்றோரை இழந்த குழந்தைகள் காப்பகங்களில், உற்றார்-உறவினர்கள் மூலம் ஓரளவு அவர்களின் உடல் உளவியல் தேவைகள் கவனிக்கப்படுகின்றது. பல குழந்தைகள் அதை நன்றாகப் பயன்படுத்தி, வாழ்வை எதிர்கொண்டு வெற்றியடைகின்றனர். ஆனால், பெற்றோர்கள் இருந்தும் குழந்தைகள் தற்கொலைக்கும், தவறான வாழ்க்கைமுறைக்கும், போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகி வாழ்வை இளம் வயதிலேயே இழந்து போகின்றனர். பெற்றோர்கள் தங்கள் ஆன்ம-உளவியல் கடமைகளை உணர்ந்து மகிழ்வான குழந்தைகளை உருவாக்கி, இச்சமுதாயத்தை வளமாக்கிட வேண்டும்.

உடல் தேவைகளை நிறைவு செய்தால் போதுமா? பணவசதி படைத்த பெற்றோர்கள் பணம், பதவி, புகழ், பட்டம் போன்றவற்றை முதன்மைப்படுத்தி, அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற தேவைகளை மட்டும் மிகச் சிறப்பாக நிறைவேற்றி விட்டுக் குழந்தைகளின் ஆன்மிக-உளவியல் தேவைகளில் அக்கறை இல்லாத காரணத்தால் தற்கொலையின் விளிம்பிற்குச் செல்கின்றன குழந்தைகள்.

தகாத உறவுகளால் உடைந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகள், தாய் தந்தையின் அன்பும் பாதுகாப்புமின்றி அன்பிற்காய், அரவணைப்பிற்காய், ஏங்கி ஆதரவின்றி இளம் வயதில் கவர்ச்சிவசப்பட்டு, காதல் என்ற பெயர் சொல்லி கடைசியில்  மடியும் குழந்தைகள்... அவர்கள் அனுபவிக்கும் மனவேதனைக்கு அளவே இல்லை.

தங்களது இலட்சியத்தைப் பிள்ளைகளின் மேல் திணிப்பதால், பெற்றோர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது, பெற்றோர்கள் இருந்தும் தேர்வு முடிவு வந்தவுடன் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் தற்கொலைக்குச் செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது மிகவும் கொடுமையாக உள்ளது.

கண்டும் காணாமல், கடமைகளைச் செய்யாதிருக்கும் பெற்றோர்கள் அதாவது, தொலைக்காட்சி மோகம், அலைப்பேசி தொடர்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், குடிவெறி போன்றவைகளால், குழந்தைகளுக்குத் தேவையான நேரத்தில் அவர்களின் உடல், உள்ள, ஆன்மிக, கலாச்சாரத் தேவைகளைக் கண்டும் காணாமல் அவர்களின் வளமான எதிர்காலத்தை நாசமாக்கும் பெற்றோர்கள்.

பிறருடன் ஒப்புமைப் பாராட்டி தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி குழந்தைகளின் முழு வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதும், அவர்களின் திறமைகள் பலவீனங்கள், பலங்களைக் குறை நிறைகளோடு ஏற்றுக் கொள்ளாது அவமதித்து பிஞ்சிலே கருகச் செய்யும் பெற்றோர்களும் உண்டு.

இவ்வாறு பெற்றோர்கள் இருந்தும் அநாதைகளாய் ஆகும் குழந்தைகள் ஏராளம். ஆன்மிக- உளவியல் ரீதியில் சிந்தித்து நமது சிந்தனைகளில் தெளிவடைவதும், அதற்கு ஏற்றபடி நமது செயல் திட்டங்களை அமைத்துக்கொள்வதும் காலத்தின் கட்டாயம்.

உங்கள் குழந்தைகள் உங்கள் வழியாக வந்தவர்களே அன்றி, உங்களுடையவர்கள் அல்லர்என்கிறார் கலீல் ஜிப்ரான். அவர்களிடம் நமது எதிர்பார்ப்பைத் திணிப்பது மிகப்பெரிய பாவம். ஆகவே, சிந்தனையில் மாற்றம் கொள்வோம்.

குழந்தைகளை வாழ்விக்கும் சில பரிந்துரைகள்  

குடும்பச் செபமே ஆன்மிக உளவியல் மருந்து. அனுதினமும் முடிந்தால் வாரத்திற்கு மூன்று நாள்களாவது இரவில் ஒன்றாய் உணவருந்தி, அமர்ந்து செபிக்க வேண்டும். அதன்பின் குடும்பத்தில் உள்ளோரின் தேவைகள், எதிர்பார்ப்புகள், கவலைகள், பிரச்சினைகளைக் கலந்துரையாடுவது மிக மிக அவசியம். அதுவே ஆன்மிக-உளவியல் மருந்து.

அன்பு அதிர்வுகள் உண்மையானவை, ஆழமானவை, ஆன்மிகமானவை. உடலளவில் உடன் இருக்க இயலாத பெற்றோர்கள் அன்பால், செபத்தால், தியானத்தால் உளவியல் ரீதியாக ஆழமான உறவும், உடனிருப்பும் செய்திட முடியும். வழியின்றித் தொலைதூரத்தில் உள்ள பெற்றோர்கள் செபத்தின் மூலம், தியானத்தின் மூலம் அன்பு அதிர்வுகளை அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு நாம் தரும் அற்புதமான உளவியல் ஊக்கமருந்தாகும்.

உற்றுநோக்குதலும், உள்ளம் கலந்துரையாடல் போன்றவையே தீர்வுகள். தங்களது பொழுதுபோக்கு அம்சங்கள், தொலைப்பேசி, அலைப்பேசி தொடர்புகள், திரைப்பட மோகம் ஆகியவற்றைத் தியாகம் செய்துவிட்டு குழந்தைகளோடு உடனிருப்பு அவசியம். ‘உடனிருப்புஉடலளவில் இருப்பது அல்ல; மாறாக, அவர்களின் ஆன்மிக உளவியல், கலாச்சாரச் சமுதாயத் தேவைகளை உற்றுநோக்கி அதை நிறைவேற்றுவது!

பெற்றோர் இருந்தும் குழந்தைகள் அநாதைகளாவதைத் தவிர்த்திடுவோம்! இறைவன் கொடுத்த  தெய்வங்களை வாழவைப்போம்!