news-details
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 25, 2024 ஆண்டவருடைய பிறப்புப் பெருவிழா - எசா 9:2-4,6-7; தீத் 2:11-14; லூக் 2:1-14

ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்!

கடவுள் விண்ணகத்தில் நம் கண்களுக்குத் தோன்றாத வகையில் தங்கிவிடவில்லை; மாறாக, மண்ணகத்தில் மனிதராக இறங்கி வந்துள்ளார். கிறிஸ்துமஸ் - இறைவனின் நெருக்கத்தைக் கொண்டாடவும், அவரது உண்மையான அன்பைக் கண்டுகொள்ளவும் அழைப்பு விடுக்கும் விழா! ஆண்டவரின் நெருக்கமும் அவரது அன்பும் மகிழ்ச்சியும் அமைதியும் உங்கள் உள்ளங்கள், இல்லங்கள், உறவுகள் அனைத்திலும் நிறைந்திருக்க வேண்டுகிறேன்.

கிறிஸ்து பிறப்பு விழா - மகிழ்ச்சியின் விழா; நம்பிக்கையின் விழா; கடவுளின் பேரன்பை உணர்த்தும் விழா. மனுக்குலத்தின்மீது இறைவன் கொண்ட அன்பின் மேன்மையால் விளைந்த அற்புதமான வரலாறு!

இந்த நள்ளிரவு வேளையில், “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார் (எசா 9:6) என்ற எசாயா இறைவாக்கினரின் சொற்கள் இன்று நம் உள்ளத்தை நிரப்புகின்றன. பிறப்பு எப்போதும் நம்பிக்கையின் ஊற்றாக, எதிர்காலத்தின் வாக்குறுதியாகத் திகழ்கிறது. ஒரு குழந்தையின் பிறப்பு விவரிக்க முடியாத ஒரு மகிழ்வை நமக்குத் தருகிறது. ஒரு குழந்தை பிறப்பதால் கிடைக்கும் மகிழ்வு, பெற்றுக்கொள்ளும் அனைத்திலும் மிகப்பெரிய ஒன்றாக அமைகிறது.

குளிர் நிறைந்த இவ்விரவில், ஒளிர்விடும் சிறு விளக்குப்போல் இறைமகன் பிறந்துள்ளார். இயேசு எனும் இக்குழந்தை நம்மோடு உரையாடும் வண்ணம் மனுவுரு எடுத்துள்ளார். கடவுள் தமக்குத்தாமே பேசிக்கொள்ள விரும்புவதில்லை; ஏனெனில், தந்தை, மகன் மற்றும் தூய ஆவியாராக இருக்கின்ற கடவுளே உரையாடல்தான். எனவே, மனித உடலெடுத்த இறைவார்த்தையாம் இயேசுவின் பிறப்பால் கடவுளே நம்மோடு உரையாடுவதற்கான பாதையைக் காட்டியுள்ளார். அவரின் பிறப்பால் நாம் அனைவருமே கடவுளைநம் தந்தைஎன்றழைக்கிறோம்; அவருடன் பேசுகிறோம். எனவே, நாம் அனைவரும் சகோதரர்கள், சகோதரிகள் என்பது கடவுள் வழங்கும் செய்தி. நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், நாம் ஒருவர் மற்றவரை மதித்துச் செவிமடுக்கும் உடன் பிறந்த உணர்வை வளர்க்கும் நேரமாக இந்த இரவு நேரம் அமையட்டும்.

முதலாவது, “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார் (எசா 9:6) என்ற செய்தி அவர் நம்மை அன்பு கூருகிறார் என்பதைக் காட்டுகிறது. இறைவன் நம்மை அருளின் குழந்தைகளாக, இறைவனின் பிள்ளைகளாக மாற்றுவதற்கு, அவரே இறங்கி வருகிறார். இது ஒரு வியத்தகு கொடை! “கடவுள் நம்முடன் இருக்கிறார் (மத் 1:23) என்ற உறுதியை நமக்கு வழங்குகிறார். நமக்கென இறைவன் தம் சொந்த மகனையே தந்துள்ளார். வார்த்தையாம் இறைவன், வார்த்தைகளற்ற ஒரு குழந்தையாகத் தம் வாழ்வையே நமக்கு வழங்க வந்துள்ளார்.

கிறிஸ்துவின் பிறப்பு எந்த ஒரு துயரையும், துணிவுடன் கடந்து செல்லும் ஆற்றலை நமக்குத் தருகிறது. ஆனால், நாம் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வற்ற செயல்களையும், நம் சகோதர சகோதரிகளுக்கு எதிராகச் செய்யும் அநீதிகளையும் பார்க்கும்போது, இறைவன் நம்மை உயர்வாக மதித்து இத்தகைய கொடையை அளிப்பதற்கு நாம் தகுதியுடையவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது. அமைதியான, வன்முறையற்ற உலகை உருவாக்குவதில் நாம் தோற்றுப்போனோம். திருவிவிலியத்தை வாழ்வாக்கத் தவறிவிட்டோம். பசப்பு வார்த்தைகளால் பிறரை ஏமாற்றிவிட்டோம். கடவுளின் விருப்பத்திற்கு எதிராக எதிர் திசையில் சென்றுகொண்டிருக்கிறோம். நம் வாழ்வின் ஆதாரமாகிய இறைவனை அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நிறையப் பேசுகிறோம்; அதேவேளை நன்மைத்தனம் குறித்து அறியாதவராகச் செயல்படுகிறோம். ஆதிக்கமும் சுரண்டலும் வன்முறையும் பன்மடங்கு பெருகியுள்ளன. வாழ்வின் அடிப்படைகளை நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. “அனைவரையும் அன்பு செய்வாயாக (மாற் 12:31) எனும் இயேசுவின் உயர்ந்த நெறியைப்பற்றி அறிந்த பிறகும் கடைப்பிடிக்கத் தடுமாறுகிறோம். ஒருவரையொருவர் அன்பு செய்வதற்குப் பதிலாக வெறுக்கிறோம், பகையை வளர்க்கிறோம்.

கடவுள் நமக்கு உயரிய ஓர் இடத்தைக் கொடுத்திருக்கிறார். ஏனெனில், அவரின் அன்பு அத்தகையது. நம்மை அன்புகூருவதன் வழியாக, நம் உள்மனக் காயங்களைக் குணப்படுத்தவும், நம்மை மீட்கவும் செய்கிறார். “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்எனும் செய்தி இறைவன் நம்மை அன்புகூருகிறார் என்பதையும், நாமும் மற்றவரை அன்புகூர வேண்டும் என்பதையும் கற்றுத்தருகின்றது.

இரண்டாவது, “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்என்ற செய்தி, அக்குழந்தை எவ்விடத்தில் பிறந்துள்ளார் என்ற கேள்வியை எழுப்புகிறது. அவர் அரசர்களின் மாளிகையில் பிறக்கும் தகுதியுடைய ஒரு குழந்தை. ஆனால், மாடடைத் தொழுவத்தில், இருள் சூழ்ந்த ஓர் இடத்தில் பிறக்க வேண்டிய காரணம் என்ன? ஏழ்மை, எளிமை, தனிமை, துன்பம், ஒதுக்கப்பட்ட நிலை, ஒடுக்கப்பட்ட நிலை இவற்றில்தான் ஏழையாகப் பிறந்த இயேசுவைக் காணமுடிகிறது. அவர் நம் ஏழ்மையான, எளிய நிலைகளில் இறங்கி வந்து, நம்மை எவ்வளவு தூரம் அன்புகூருகிறார் என்பதைக் காட்ட, அவரும் எளிய வகையில் பிறப்பெடுத்தார். எனவே, ஆடம்பரம் இல்லாத எளிமையான ஓரிடத்தில் மட்டுமே இறைவனைக் காண முடியும் என்பதுதான் நமக்குத் தரும் மற்றுமொரு செய்தி. கடவுள் எப்போதும் நம்மிடம் நெருக்கமாக வரவும், நம் இதயங்களைத் தொடவும், நம்மை மீட்கவும் அவர் சிறிய வழியையே தேர்ந்து கொள்கிறார்.

கடவுளின் இந்த வெளிப்பாட்டை நாம் புரிந்துகொள்ள மறுக்கிறோம். இவ்வாறு கடவுள் தம்மை வெளிப்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்வதில் தோற்றுப்போகிறோம். இவ்வுலகின் பார்வையில் கடவுள் தம்மை எளியவராக வெளிப்படுத்தினார். நாமோ இன்னமும் அவரைப் பிரமாண்டமான பெரிய காரியங்களில், ஆடம்பர விளக்கு அலங்காரங்களில் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறோம். பகைமை என்ற கத்தியால் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டவர்கள் இறைவனை எப்போதும் தரிசிக்க முடியாது. இறைவன் பணிவிடை புரிபவராக நம் நடுவிலே மனிதராகப் பிறக்கிறார் (லூக் 22:27). நாமோ, பணிவிடை ஏற்பவராக இருக்கிறோம். அவர் பதவியையும் புகழையும் தேடவில்லை. நாமோ பதவியையும் புகழையும் மட்டுமே தேடுகிறோம். எனவே, எளிமையை ஏற்றுக்கொள்வதற்கான அருளைக் கேட்போம். ஏழ்மை நிலையில் பிறந்த இயேசுவை ஏற்றுக்கொள்வது என்பது அவரைப்போல ஏழ்மை நிலையிலும் ஆதரவற்ற நிலையிலும் இருக்கும் அனைவரையும் அரவணைத்துக்கொள்வதாகும்.

மூன்றாவது, “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்என்ற செய்தி, நமக்காகத் தரப்பட்டுள்ள இந்த ஆண் மகவு ஏன் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் (லூக் 2:12) என இடையர்களிடம் வானதூதர் சொல்வதைக் காண்கிறோம். ‘அப்பத்தின் இல்லம்என்று பொருள்படும் பெத்லகேமில், ஒரு தீவனத் தொட்டியில் இறைவன் பிறக்கிறார். மனிதர் வாழ்வதற்கு உணவு தேவை என்பதை உணர்ந்த இறைவன், “இதோ நான் உங்கள் உணவாக உள்ளேன் (யோவா 6:35) என்று சொல்வதுபோல், இயேசுவின் பிறப்பு அமைகிறது. இந்நேரத்தில் பசியால் வாடும் அனைவரையும் குறிப்பாக, சிறார்களை நினைத்துப் பார்ப்போம்.

இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல் (மத் 26:26) என்று தம் பிறப்பு முதல் சொன்னவர் இயேசு. சேர்த்து வைப்பதில் வாழ்வு அடங்குவதில்லை; மாறாக, பகிர்வதிலும், தருவதிலுமே அது அடங்கியுள்ளது என்பதை பெத்லகேமில் பிறந்த இக்குழந்தை நம்மிடம் சொல்கிறது.

இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவில், ஒன்றுமில்லாதவர்களுடன் நான் என்னையே அப்பமாகப் பகிர்ந்துகொள்கிறேனா? என்ற கேள்விகளைக் கேட்டுப் பார்ப்போம். வலுவற்றோர், நோயுற்றோர், கைவிடப்பட்டோர், வயது முதிர்ந்தோர், விளிம்புநிலையில் இருப்போர், தனிமையில் வாழ்வோர், கைதிகள், வேலை இழந்தோர், பொருளாதார நெருக்கடியில் துன்புறுவோர், புலம்பெயர்ந்தோர், புதுமை பாலினத்தோர் ஆகியோர் நம் இல்லக் கதவுகளை வந்து தட்டும்போது அவர்களை மறவாதிருப்போம்.

நிறைவாக, “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்என்ற செய்தி சொல்வது: அவர் நம்மைக் காக்க வந்துள்ளார்! இந்த இரவிலே தம்மையே ஒரு கொடையாக, எவ்வித நிபந்தனையுமின்றி  வழங்குகிறார். இயேசு என்ற கொடையை நாம் வரவேற்று, அவரைப்போல் நாமும் ஒரு கொடையாக மாறுவோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், வேதனையில் வெந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் நடுவே, இறைவன், ‘இம்மானுவேலாகவாழ பிறந்ததைப்போல், இன்றும், வேதனையில் இருப்போர் நடுவில் அவர் மீண்டும் பிறக்க மன்றாடுவோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி (லூக் 2:10) என இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல, அதே மகிழ்ச்சியைக் கடவுள் நமக்கும் இன்று தருவாராக! “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள் (எசா 9:2) என்று எசாயா குறிப்பிடுவதுபோல, நம் உள்ளங்களும் இல்லங்களும் கிறிஸ்து எனும் பேரொளியால் நிரப்பப்பட வேண்டுவோம். நாம் வாழ்கின்ற இடங்களில், குடும்பங்களில் ஒரு சிறிய புன்னகையாகக் கிறிஸ்துவின் ஒளியை வழங்குவோம். கடவுளின் அன்பால் ஆழமாக இயக்கப்பட நம்மையே அனுமதிப்போம். ஒவ்வொரு நாளும் நாம் ஆற்றுகின்ற சாதாரண செயல்கள் வழியாக, நம் வாழ்வை மிகச் சிறந்த படைப்பாக மாற்றுவோம்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!