ஊனாகி உயிராகி ஒளியானவர், வானாகி வளியாகி வழியுமானவர்! ‘நானே உலகின் ஒளி’ என்றவர், கோனாகி தாவீதின் குடிப்பிறந்தார். விண்ணுக்கு ஒளியாகி வழிகாட்டிட, வாக்கு மனு உருவாக மாபரன் இயேசு மண்ணுக்கு வந்தார். மனிதன் தெய்வமாக, தெய்வமே மனிதனாகப் பிறந்த நாள். மரியன்னை பெற்றெடுத்த மனிதநேயம் இப்பூமியில் பிறந்த நாள்தான் கிறிஸ்துமஸ் பெருவிழா!
இயேசுவின்
பிறப்பு நேரத்தில் அவர் சம்பந்தப்பட்ட ஆள்கள், பொருள்கள், உரையாடல்களில் பொதிந்திருக்கும் சில உண்மைகளைப் பற்றி காண்போம்.
இயேசு பிறந்த
இடம்
“விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை” (லூக்
2:7). வேறு யாருக்கு விடுதியில் இடம் இருந்தது? சீசரின் ஆள்களுக்கும் அதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் பணக்காரர்களுக்கு மட்டும்தான். ஆனால், இந்த சூசை, மரியா ஏழைக் குடும்பத்திற்கு இடமில்லை. இடமில்லை என்று சொல்லிவிட்டால், இறைவாக்கினர்கள் இயேசு பிறப்புப் பற்றி முன்னறிவித்த செய்திகள் வரலாற்றில் இடம் பெறாமல் போய்விடுமா என்ன?
அங்கு
மாடடையும் தொழுவத்தில் இடம் கிடைக்க, வந்து விடுகிறார் இயேசு. ஒரு தொழுவம் தொழுகை பெற்ற வரலாறு இங்குதான் நடந்தேறியது. பாருங்கள், நாம் அவருக்கு இடம் இல்லை என்று சொன்னாலும், இயேசு தாம் மிகவும் நேசித்த தம் அன்புச் சீடர்களிடம், “நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்”
(யோவா 14:2-3) என்கிறார். மேலும், “நான் போய் இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்” என்றும்
கூறுகிறார். என்னே இறைப்பேரன்பு!
குழந்தை இயேசுவைச்
சுற்றிய
துணி
“குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்” (லூக்
2:12) என்று வானதூதர்கள் இடையர்களுக்கு அறிவித்தார்கள். இந்தத் துணி கிறிஸ்து இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்ட மீட்பையும், வல்லமையையும் குறிக்கிறது. 1. பிறந்தபோது வல்லமையின் துணியாகவும், 2. இயேசு வளர்ந்தபின் வல்லமையின் துணியாகவும், 3. சிலுவைப் பாடுகளின்போது உரிந்துகொள்ளப்பட்டு பகிர்ந்துகொள்ளப்படும் துணியாகவும் இருந்தது.
குழந்தையின்
மீது சுற்றப்பட்ட சாதாரண துணி, இரட்சிப்பும் வல்லமையும் நிறைந்த குழந்தையின் மீது சுற்றப்பட்டதால் அதுவும் வல்லமை மிக்கதாக மாறுகிறது. அதனால்தான் 12 ஆண்டுகளாக இரத்தப்போக்குடன் போராடிய பெண் (லூக் 8:44-46) இயேசு அணிந்திருந்த ஆடையின் ஓரத்தைத் தொட்டவுடன் குணமடைகிறாள். இங்கு வல்லமையின் துணியாகக் காட்டப்படுகிறது. மேலும், சிலுவையடியில் மீட்பின் ஆடையை நாம் அணிந்துகொள்ள, தம் ஆடை அகற்றப்பட்டு ஆடையில்லாத கோலத்தில் நிற்கிறார். போர்வீரர்கள் இயேசுவின் ஆடையின் மேல் சீட்டுப் போட்டு பகிர்ந்துகொள்ள பகிர்வின் ஆடையாகவும் மாறுகிறது.
தீவனத் தொட்டி
தீவனத்
தொட்டி என்பது கால்நடைகள் (மிருகங்கள்) தீனி பெற இருக்கும் தொட்டி. மனிதன் தன் பாவத்தால் தரம் தாழ்ந்து, மிருகக்குணம் பெற்றதால், மனுகுலம் சீரடைய, மனிதனின் உணவாக (நற்கருணையாக) வந்ததன் அடையாளத்தையே தீவனத் தொட்டி உணர்த்துகிறது. “வாழ்வு தரும் உணவு நானே”
(யோவா 6:35) என்றவர் தீவனத் தொட்டியில் உணவாகக் கிடத்தப்பட்டார்.
இயேசுவின் பாதங்களும்,
காலடிகளும்
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பாக, பெத்லகேம் மாடடையும் குடிலில் தம் பிஞ்சுப் பாதங்களைப் பதித்தார் இயேசு. இறைவனின் பாதப்பதிவுகள் மனுகுலத்திற்குச் சொந்தமான நாள். காலங்களையும் நேரங்களையும் கடந்த இறைவன், மனித நேரங்களுக்குள் நுழைந்த இரவு இந்தக் கிறிஸ்துமஸ் இரவு. பெயர்களை எல்லாம் கடந்த இறைவன் ‘இம்மானுவேல்’ என்ற
பெயர் பெற்ற நாள். கி.மு., கி.பி. என்று காலங்களைப் பிரித்து, சரித்திரமே வியந்த சரித்திரம் படைக்கப்பட்ட நாள். சரித்திரத்தையே மாற்றிப்போட்ட நிகழ்வுதான் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு.
மேலும்,
பாவியான பெண் இயேசுவின் காலடிகளைக் கண்ணீரால் நனைக்கிறார் (லூக் 7:35). அதிக மீன்பாட்டைக் கண்டவுடன் சீடர்கள் இயேசுவின் காலடிகளில் விழுகின்றனர் (மாற் 5:22). திருமுழுக்கு யோவான் இயேசுவின் காலடிகளைத் தொடக்கூட தனக்குத் தகுதியில்லை எனத் தன் தாழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார். தொழுகைக் கூடத் தலைவன் யாயீர் இயேசுவின் காலடிகளில் பணிகிறார் (மாற்கு 5:33). “நமது கால்கள் அமைதி வழியில் நடக்க, விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது”
(லூக் 1:79) என்கிறார் லூக்கா. இறுதி உணவின்போது இயேசு தம் சீடர்களின் கால்களைக் கழுவி “நான் உங்களுக்குச் செய்தது போல், நீங்களும் செய்யுங்கள்” என்று
(யோவா 13:14) சொல்கிறார். ஒருவர் ஒருவருடன் பணிவோடும் தாழ்ச்சியோடும் நடந்துகொள்ள வேண்டுமென்பதையே இங்குக் குறித்துக் காட்டப்படுகிறது.
இவ்வாறு
ஏழை, எளிய மக்களின் வாழ்வில் தினமும் மகிழ்ச்சியைக் காண நாமும் இயேசுவைப் போல் அன்பு, அரவணைப்பு, எளிமை, இரக்கம், பணிவு, பாசம், தாழ்ச்சி, பகிர்வு போன்ற குணங்களைக் கடைப்பிடித்து வாழ்வோம். இவ்வாறு இயேசுவோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்வும், பொருள்களும், சொற்களும் அன்பு என்ற நுண்ணிய பொருளை உள்ளடக்கியதாகவே காணப்படுகின்றது. நாமும் ஏழை, எளிய மக்களோடு இணக்கமாக வாழ முயல்வோம். நம்மிடம் உள்ளவற்றை இல்லாதவர்களோடு பகிர்வோம்.
எதைக்
கொண்டு வந்தோம் இவ்வுலகிற்கு? போகும்போது எடுத்துக் கொண்டு போக! அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்ந்து, ஆர்ப்பரிப்போடு இக்கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவோம்.