பலரும் முதலில் சிறிது அதிர்ச்சியுடனே இதனைக் கேட்கிறார்கள். “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்; அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களே தவிர, உங்களிடமிருந்து வருவதில்லை” என்ற கலீல் ஜிப்ரானின் சொற்களைச் சிறிது அதிர்ச்சியில்லாமல் யாரால் கேட்க இயலும்?
‘என் குழந்தை, என் பிள்ளை’ என்று பெருமிதமும் பூரிப்பும் பொங்கக் கொஞ்சும் தாயிடம், “இத பாரும்மா, இது
உன் பிள்ளை இல்ல” என்று யாராவது சொன்னால், அவரது உணர்வுகள் என்னவாக இருக்கும்?
சரி.
அப்படியானால் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் யாருடைய குழந்தைகள்? அவர்கள் யாரிடமிருந்து வருகிறார்கள்? குழந்தைகள் எல்லாம் கடவுளின் குழந்தைகளே! அவர்கள் அனைவரும் கடவுளிடமிருந்தே வருகிறார்கள்.
கடவுள்
தம் குழந்தை ஒன்றைப் பத்திரமாய்ப் பாதுகாத்து, தகுந்த முறையில் வளர்த்தெடுப்பதற்காகச் சிறிது காலம் ஒரு கணவன்-மனைவியிடம் தருகின்ற தருணத்தில் அவர்கள் பெற்றோர்களாகிறார்கள். ஆனால், அவர்கள் கையில் பச்சிளங்குழந்தை ஒன்று தரப்படும்போதுதான் விழித்துக் கொண்டு, ‘கணவன்-மனைவி’ எனும் நிலையிலிருந்து ‘பெற்றோர்’
நிலைக்கு உயர்ந்து விட்டோம் என்பதைப் புரிந்துகொள்கின்றனர்.
குழந்தை
நல்ல முறையில் வளரச் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? என்பது மிகப் பலருக்குப் புரியாத புதிராகவே உள்ளது. எந்தவிதமான திட்டமிடலும், தயாரிப்புமின்றி குழந்தையைப் பெற்றெடுத்த பின்பு, தங்களுக்குத் தெரிந்ததை, தாங்கள் பார்த்ததை, தாங்கள் கேள்விப்பட்டதைச் செய்கிறார்கள். இதில் உள்ள ஒரு பேராபத்து என்ன? தங்கள் பெற்றோரால் தாங்கள் வளர்க்கப்பட்ட பாணியிலேயே மிகப்பலர் தங்கள் பிள்ளைகளை வளர்க்க முயல்கிறார்கள். தான் சிறுவனாக இருந்தபோது தன் தந்தையால் கொடூரமாய் அடித்து உதைக்கப்பட்ட ஆண் ஒரு தந்தையாய் ஆகும்போது அறிந்தும் அறியாமலும் தன் பிள்ளையை அடித்து, உதைத்துக் கொடுமைப்படுத்துகிறான். மிகச்சிலரே தாங்கள் வளர்க்கப்பட்ட விதம் சரியானதே அல்ல; அது கொடுமையானது. எனவே என் குழந்தைகள் யாரும் அவ்விதத்தில் வளர்க்கப்படக் கூடாது என்று புரிந்துகொண்டு மாறுகின்றனர்.
உளவியலாளர்கள்
மூன்று விதமான பிள்ளை வளர்க்கும் பாணிகளைக் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு பாணியில் வளர்க்கப்படும் குழந்தைக்குப் பின்னாளில் என்ன நேர்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
இம்மூன்றில்
மிகவும் ஆபத்தானது முதலாவது பாணிதான். இதனை ‘சர்வாதிகாரப் பாணி’ அல்லது ‘கொடுங்கோலன் பாணி’ என்று அழைக்கலாம். இந்தப் பாணியைப் பின்பற்றும் பெற்றோர் சிறைக் காவலர் போலவும் அவர்களின் பிள்ளைகள் தினமும் அவர்களால் அடித்து உதைக்கப்படும் கைதிகள் போலவும் ஆகிவிடுகின்றனர்.
பிள்ளைகள்
சிறிய தவறு செய்தாலும் கூட இவர்கள் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கிறார்கள். பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைத் தாங்களே தீர்மானித்து அறிவிக்கின்றனர். இவர்கள் அறிவிக்கும் ஒழுங்குகளைப் பிள்ளைகள் ஏன் பின்பற்ற வேண்டும் என்று ஒருநாளும் இவர்கள் பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்வதே இல்லை. “சொன்னா செய்டா. ஏன், எதுக்குன்னு கேட்கக் கூடாது. அப்படியே நான் சொன்னாலும் உனக்குப் புரியுமாடா? சின்னப் பய நீ. உனக்கென்னடா
தெரியும்?” என்று தங்கள் பிள்ளைகளை மிரட்டுகிறார்கள்.
இவர்கள்
தங்கள் பிள்ளைகளிடம் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்வதைப் பார்த்து யாராவது “பெத்த பிள்ளைய எப்படிக் காட்டடி அடிக்கிறான் பாரு! இவனெல்லாம் ஒரு மனுஷனா?” என்பது போல பேசினால் இவர்கள் என்ன சொல்வார்கள்? “நீ உன் வேலையைப்
பாத்துட்டு போ. என் பிள்ளைய எப்படி வளர்க்கிறதுன்னு எனக்குத் தெரியும். அடிச்சு வளர்க்காத பிள்ளை படிக்காது, பணியாது. அது உனக்குத் தெரியுமா? இப்போ கண்டிப்பா, கடுமையா இருந்தாதான் பிள்ளை ஒழுக்கமான, கட்டுப்பாடுள்ள குழந்தையா வளரும்” என்பார்கள்.
ஆனால்,
அது நிகழ்வதே இல்லை. இந்தப் பாணியில் வளர்க்கப்படும் குழந்தைகள் அந்தச் சிறு வயதில் மிகுந்த வலி, வேதனை, பயம், அவமானம் போன்ற எதிர்மறை உணர்வுகளை அனுபவிக்க நேர்கிறது. இத்தகைய தந்தையிடமிருந்து முடிந்தபோதெல்லாம் ஓடித் தப்பிப்பது, முடியாதபோது பல்லைக் கடித்துக்கொண்டு அடி, உதையை வாங்கிக்கொள்வது என்றே வளர்கிறார்கள். தன்னை இப்படி நடத்தும் தந்தை அல்லது தாய்மீது மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் பகையையும் வளர்த்துக்கொண்டே வளர்கிறார்கள்.
கொஞ்சம்
வளர்ந்து வயதுக்கு வந்து, உடலில் வலிமை ஏறியதும், இத்தனை நாளும் அடித்து, உதைத்த தந்தையின் கையைப் பிடித்துத் தடுப்பார்கள், திருப்பி அடிப்பார்கள். வன்முறைக்கு மீண்டும் மீண்டும் பலியாகி உடலும் மனமும் மரத்துப் போவதால் எளிதில் வன்முறையைக் கையில் எடுப்பார்கள். குற்றவாளிகளாய் மாறுவார்கள். எனவே, இது எந்த விதத்திலும் நன்மை விளைவிக்காத, முற்றிலும் தவறான வளர்ப்பு முறை.
பிள்ளை
வளர்ப்பதில் இரண்டாவது பாணி இதற்கு முற்றிலும் மாறானது. பிள்ளைகளை ஆணையிடும் அரசர்களாக்கி, அவர்கள் முன் கைகட்டிச் சேவகம் செய்யும் அடிமைகள் போல பெற்றோர் ஆகிவிடும் பாணி. இத்தகைய பெற்றோர் பிள்ளை என்ன கேட்டாலும் வாங்கித் தருவார்கள். “பிள்ளை கேட்கிறதை வாங்கித் தர முடியாட்டி நான்
ஏன் சம்பாதிக்கணும்? ஆசைப்பட்டு பிள்ளை கேட்கிறதை வாங்கிக் கொடுக்கத்தானே நாங்க இருக்கோம்?” இதைப் புரிந்துகொள்ளும் பிள்ளை, தான் கேட்டதை வாங்கித் தராவிட்டால் அழுது, அடம்பிடித்து எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிடும்.
இந்த
முறையில் வளர்க்கப்படும் பிள்ளை, சிறு வயதிலேயே தந்தையை, தாயைக் கடுமையாகத் தாக்குவதைப் பார்க்கலாம். இத்தகைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வசவுகளையும் வன்முறைகளையும் தாங்கிக்கொண்டு என்ன சொல்வார்கள்? “பிள்ளை தானேங்க? இந்த வயசுல எது சரி, எது தவறுன்னு அதுக்குத் தெரியுமா என்ன? நாமதான் பொறுத்துப் போகணும். வளர்ந்த பிறகு எல்லாம் சரியாயிடும்” என்பார்கள்.
சரியாகுமா?
இல்லவே இல்லை. வீட்டில் எந்த ஒழுங்குகளும் எல்லைகளும் இல்லாதது போல் வெளி உலகிலும் இருக்கும் என்று நினைக்கும் இந்தக் குழந்தைகள், வீட்டில் செய்யும் அராஜகங்களை வெளியிலும் செய்து வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். தான் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்ட பெற்றோரைப் போல ஏன் மற்றவர்கள் இல்லை என்று குழம்புவார்கள். ‘வெளி உலகில் தான் நினைத்ததை எல்லாம் செய்ய இயலாது. கேட்டதை எல்லாம் பெற இயலாது’ என்பதைப் புரிந்துகொள்ளவே வெகுகாலம் ஆகலாம். அதற்குள் தங்கள் பிடிவாதத்தின் விளைவுகளைச் சந்தித்துச் சோர்ந்து போவார்கள். எந்த வேலையிலும் நிலைக்க மாட்டார்கள். அதற்கு அதிகாரிகளையும் உடன் பணியாற்றுவோரையும் குறை சொல்லிக் குற்றம் சாட்டுவார்கள். எனவே, இதுவும் ஆபத்தானதுதான்.
மூன்றாவது
பாணியே பிள்ளைகளைச் சரியாக வளர்க்க உதவுகிறது. இதைப் பின்பற்றும் பெற்றோர் பிள்ளைகள்மீது தங்களுக்குள்ள அன்பைச் சொல்லிலும் செயலிலும் காட்டுவார்கள். ஆபத்துகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பார்கள். ஆனால், முக்கியமான காரியங்களில் இவர்கள் தெளிவான ஒழுங்குகளை ஏற்படுத்துவார்கள். இந்த ஒழுங்குகளுக்கான காரணங்களைப் பிள்ளைகள் புரிந்துகொள்ளும் வண்ணம் தெளிவாய், பொறுமையாய் குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்வார்கள். பிள்ளைகள்
இந்த ஒழுங்குகளை மீறினால் கண்டிப்பார்கள். கண்டனத்திற்கும் பயனில்லை என்றால் தண்டிப்பார்கள். ஆனால், ‘அந்த மூலையில் போய் நிற்க வேண்டும்’,
‘இன்று உனக்கு ஐஸ்கிரீம் இல்லை’,
‘அறையை விட்டு அரை மணி நேரம் வெளியே வரக்கூடாது’ என்பது
போன்ற சின்னச் சின்ன தண்டனைகளைத்தான் தருவார்கள். இவற்றையும் கூட என் பிள்ளையைத் தண்டிக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் தருவார்கள். தண்டனையே இல்லையென்றால் தொடர்ந்தும் தயக்கமின்றியும் தவறுகளைச் செய்யும் தறுதலையாகத் தன் பிள்ளை மாறிவிடக் கூடாது என்ற புரிதலில்தான் இதனைச் செய்வார்கள்.
எனவே,
சரியான இந்த மூன்றாம் பாணியில் நிறைய பாசமும், அக்கறையும் உள்ளது போல், தவறுகள் செய்யும்போது தண்டனைகளும் உள்ளன. இந்தப் பாணியில் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து, குற்றங்களைத் தவிர்க்கும் நல்ல மனிதர்களாக வளர்கிறார்கள்.
இந்தச்
சரியான வளர்ப்பு முறை பற்றிய புரிதலும், ‘இதை மட்டுமே நாம் கடைப்பிடிப்போம்’ என்ற
உறுதியும் கணவன்-மனைவி இருவருக்கும் வேண்டும். தாயின் வயிற்றில் பிள்ளை இருக்கும்போதே இருவரும் இது பற்றிப் பேசித் தீர்மானிக்க வேண்டும். இது போன்ற புரிதலும், உறுதியான தீர்மானமும் இல்லையென்றால், கணவன்-மனைவி இருவரும் எந்தெந்த முறையில் வளர்க்கப்பட்டார்களோ அதையே பின்பற்றத் தொடங்கி விடுவார்கள். பிள்ளைப்பேறு தரும் மகிழ்ச்சியை மழுங்கடிக்கும் விதத்தில் பிள்ளை வளர்க்கும் முறை பற்றிய விவாதங்களும் சண்டைகளும் நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.
ப்ரெனீ
ப்ரவுன் என்ற அமெரிக்கப் பெண்மணி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
உளவியல் கற்பிக்கும் பேராசிரியர், ஆய்வாளர், பேச்சாளர். அவருடைய நூல்கள் ஒன்றில் இதனைக் காணலாம். “த ஹோல்ஹார்ட்டட் பேரன்ட்டிங்
மேனிஃ பெஸ்ட்டோ”
(The Wholehearted Parenting Manifesto) என்று அவர் அழைக்கும் இது பெற்றோர் தன் பிள்ளையிடம் தெரிவிக்கும் ஒரு பிரகடனம் போல் அமைந்துள்ளது. அதில் உள்ள முக்கியமான வரிகள் இவை:
“என் மகனே / மகளே, எல்லாவற்றிற்கும் மேலாக நீ புரிந்துகொள்ள வேண்டுமென்று
நான் விரும்புவது என்ன தெரியுமா? அன்பை நிறையப் பெறுவதற்கு உனக்குத் தகுதியிருக்கிறது. நான் உன்னைப் பெரிதும் அன்பு செய்கிறேன்.”
“என்மீது நானே இரக்கத்தோடு நடந்துகொள்வதை நீ பார்க்கும்போது அன்பு,
சொந்த உணர்வு, மகிழ்ச்சி மூன்றையும் நிறையப் பெற உனக்குத் தகுதி உள்ளது என்பதை நீ புரிந்துகொள்வாய். வாழ்வில் நல்லவை
யாவையும் பெற உனக்கு முழுத் தகுதியுள்ளது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே நீ அனைவரையும் அணுக
வேண்டும் என நான் விரும்புகிறேன்.”
“நம் குடும்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும், என்ன பிரச்சினை என்றாலும் மற்ற அனைவரும் உடனிருப்போம். நமது மகிழ்ச்சிகளையும் போராட்டங்களையும் தயக்கமின்றி நமக்குள் பகிர்ந்து கொள்வோம். பெற்றோர் நாங்களும், எங்கள் குழந்தையாகிய நீயும் ஒருநாளும் தாண்டக்கூடாத எல்லைகளை நாம் வகுத்துக் கொள்வோம். இவற்றை எப்போதும் மதித்து நடப்போம். கடினமாக உழைப்போம். நம்பிக்கையோடு எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். விடாமுயற்சியோடு செயல்படுவோம். அதேவேளையில், ஓய்வும் விளையாட்டும் உல்லாசமும் குடும்பத்தில் நம் அனைவருக்கும் முக்கியம் என்பதை ஏற்றுக் கொள்வோம்.”
“நான் தவறுகள் செய்தால் உடனே எப்படி மன்னிப்பு வேண்டுகிறேன், செய்த தவறுக்கு எப்படிப் பரிகாரம் செய்கிறேன் என்பதை நீ பார்ப்பாய். எனக்கு
என்ன தேவை என்பது பற்றியும், என் மனத்தில் உள்ள உணர்வுகள் பற்றியும் தடையின்றி மனம் திறந்து நான் பேசுவதை நீ பார்ப்பாய். உன்
செயல்களுக்கு நீதான் பொறுப்பு என்பதைக் கற்றுக்கொள்வாய்.”
“நீ மகிழ்ந்திருக்க வேண்டும்
என்பதே எப்போதும் என் விருப்பம். நமக்கு மகிழ்வூட்டும் காரியங்களுக்காக நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம். என்ன நடக்கும் என்று தெரியாத வேளைகளிலும், நமக்குத் தேவையானவை கிடைக்காத தருணங்களிலும் நாம் துணிவோடும் நம்பிக்கையோடும் செயல்படுவோம். நமக்குத் துயரம் தருபவை நம் வாழ்வில் நிகழும்போது நாம் சேர்ந்து அழுவோம். நமக்கு அச்சமூட்டும் காரியங்களைச் சேர்ந்து எதிர்கொள்வோம். வலிக்கிறது என்று நீ அழும்போதெல்லாம் உன் வலியை
என்னால் அகற்ற இயலாவிட்டாலும், உன்னோடிருந்து உன் வலியை உணர முயல்வேன்.”
“நாம் சேர்ந்து சிரிப்போம்; பாடுவோம்; ஆடுவோம். நாம் நாமாக இருக்க நம் குடும்பத்தில் அனைவருக்கும் உரிமை உண்டு. என்ன நேர்ந்தாலும் நாங்கள் உன் பெற்றோர். இது எப்போதும் உன் வீடு, உன் குடும்பம்.”
(உங்கள்
கருத்துகளை +91
9445006852 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெசெஜ் வடிவிலோ அனுப்புங்கள்.)