இயேசுவின் பிறப்பு மனுகுலத்திற்கு மாபெரும் நற்செய்தியாக விளங்குகிறது. இயேசுவின் பிறப்பு ஒட்டுமொத்த மானுடத்திற்கும் இறைவன் அளித்த கொடை. இதனை வெறுமனே மதம் சார்ந்த விழாவாகக் குறுகிய வட்டத்திற்குள் சுருக்குதல் நீதியாகாது. இயேசு மதங்களுக்குள் கட்டுப்பட்டு பிறந்தவர் அல்லர். கிறிஸ்து சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட அனைவருக்குமான மீட்பாகப் பிறந்தார்.
தெருத்தெருவாகப்
பஜனைகள், திருவருகைக் காலத் தியானம், ஒப்புரவு அடையாளம், கிறிஸ்து பிறப்புக்கு முன் அலங்காரங்கள், குடில்கள், பரிசுப் பொருள்கள், பட்டாசுகள், பலகாரங்கள் என எத்தனையோ செயல்கள்
கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி இயல்பாக வருடந்தோறும் நடைபெறுகின்றன. ஆனால், கிறிஸ்து பிறப்பு விழா இப்படிக் கொண்டாடப்படுவதை இயேசு விரும்புவாரா? மனமாற்றமில்லாத கொண்டாட்டங்களை இயேசு விரும்பவில்லை. மனமாற்றத்தைத்தான் இயேசு விழாவாகக் கொண்டாட விரும்புவார்.
இயேசுவின்
உடனிருப்பால் சக்கேயு மனம்மாறி அதைத் தன் செயலின் வழியாக வெளிக்காட்டினார். அதன் விளைவாக, சக்கேயுவுக்குப் புதுவாழ்வு கிடைத்தது. நாம்
கொண்டாடும் கொண்டாட்டம் இயேசுவை நம்மில் பிறக்கச் செய்கிறது என்றால், நம்மில் இன்னும் ஏன் எந்த மாற்றமும் ஏற்படவில்லை? நமது பக்தி முயற்சிகள், திருப்பலிக் கொண்டாட்டங்கள் எல்லாம் அடுத்திருக்கின்றவரோடு நல்லுறவில் வாழ இயலவில்லையென்றால் பயனற்றதே.
சமுதாயத்தில்
சுதந்திரமாக வாழமுடியாமல் குறிப்பிட்ட இன வரையறைகளுக்குள் சிக்கித் தவிக்கும்
மக்கள் இருக்கின்றனர். தங்களின் அடிமை நிலையைக் கூட உணர இயலாமல், தொடர்ந்து தங்களுக்கான
உரிமைகளைக் கேட்கத் துணிவின்றி காலம் நகர்த்துகின்றனர். ஒருவர் பயன்படுத்தித் தூக்கி எறிந்த குப்பையைப் புதையலெனச் சேகரித்து அதை விற்று வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தும் மனிதரும் வாழ்கின்றனர். ஆதரவற்ற இல்லங்கள், இது போக வீட்டில் வைத்துக் கவனிக்க இயலாத தொற்றும் நோய் தாக்குதல் உள்ளவர்களைக் கவனிக்கும் இல்லங்களில் வசிப்போர், சிறைகளில் வாழ்வோர், தொடர் இழப்புகள், போர்கள், இயற்கைப் பேரிடர்கள் இவற்றினால் வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்போர் என இயல்பாக வாழ
இயலாத பலரும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு நினைத்ததுபோல் வாழும் வசதி கிடையாது. இச்சூழலில், குறிப்பிட்ட மக்கள் மட்டும் கொண்டாடுவதும், மற்றவர்கள் ஏக்கத்தில் வருந்துவதும் கிறிஸ்து
பிறப்பு விழாக் கொண்டாட்டமாகுமா?
நம்
இதயம்தான் இயேசு விரும்பும் கோவில். இவ்விதயக் கோவிலை அழகுப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்து செயல்பட வேண்டும். அதைச் செய்யாமல், வெறுமனே வெளியிடங்களில் அழகான, அலங்காரச் செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறந்த கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டமாக அமையாது.
இயேசுவின்
பிறப்பு அனைவருக்குமான நற்செய்தியாகும். ஆனால், நமது பாரம்பரியமான செயல்பாடுகளால் இயேசுவின் பிறப்பை ஒருசில வரையறைகளுக்குள் குறுகச் செய்துவிட்டோம். அனைத்து மக்களும் இணைந்து சகோதர உணர்வோடு விழாக்களைக் கொண்டாடும்போதுதான் விழா அர்த்தம் பெறுகிறது.
இணைந்து
வாழும் மனிதரிடையேதான் இறைவன் பிறக்கின்றார். இதயம் இணைந்து மகிழும்போதுதான் அவர் நம்மில் நிறைகின்றார். வெற்று ஆடம்பரங்களைத் தவிர்த்து அர்த்தமுள்ள விதத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட முயல்வோம். கிறிஸ்துவை நம் இதயக்குடிலில் ஏற்றுத் தாலாட்டி மகிழ்வோம்.