இறைவனுக்கு இடமளிக்கும் இல்லமாக...
கிறிஸ்துமஸ் காலம் குடும்ப உறவைக் கொண்டாடி மகிழும் ஓர் அழகிய காலம். இக்காலத்தில் வரும் இந்த ஞாயிறன்று நாம் திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். குடும்பம் மானிட சமூகத்தின் அடிப்படைக் கூறு; மனித உறவின் நிறைவு; நாகரிகத்தின் தொடக்கக் கல்வியைக் கற்றுத்தரும் முதல் பள்ளிக்கூடம். ஒருவர் மற்றவருடைய உள்ளத்து உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களுடன் நல்லுறவுகொள்ளவும், அவரின் ஆளுமை வளர்ச்சியின் முதல் படிநிலையை அமைத்துக்கொடுப்பதும் குடும்பமே! குடும்பம் இல்லாமல் மனிதகுலக் கலாச்சாரம், பண்பாடு என்பது சாத்தியமற்றது. குடும்பம்தான் சமூகத்தின் அடித்தளம்!
ஒரு சமூகத்தின் நலமும் வளமும் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் செழுமையும் சீர்மையும் அச்சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பங்களிப்பினால் உருவாகிறது. சமூகத்தினுடைய உறவுப் பிணைப்பின் அடிப்படை அமைப்பாக இருப்பதும் குடும்பம். நமக்கு முகவரியாய், அடையாளமாய் இருப்பதும் குடும்பமே. பாசத்தின் உறைவிடமாகவும் நெருக்கத்தின் இருப்பிடமாகவும் இருப்பது குடும்பம். திருத்தந்தை பிரான்சிஸ் கிறித்தவக் குடும்பங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “குடும்பம் என்பது ஒரு கருத்தியல் அல்ல; மாறாக, அதையும் தாண்டிய ஒரு வாழ்க்கை நெறி. இது அன்றாட வாழ்க்கையின் அணிகலன். அன்பிலும் ஒழுக்கநெறியிலும் கட்டமைக்கப்பட்ட இறைநம்பிக்கையை அடுத்தத் தலைமுறையினருக்கு வழங்கும் வாழ்வியல் பயணம்” என்கிறார் (செப்டம்பர் 11, 2013). தாராளக்
குணம், பகிர்தல், பொறுப்புணர்வு, அன்பு, அமைதி, இரக்கம், நல்லறிவு, நல்லொழுக்கம், தூய்மை, ஒற்றுமை, பொறுமை, தியாகம், கடின உழைப்பு, சகிப்புத்தன்மை போன்ற அறம் சார்ந்த பண்புகளை நாம் கற்றுக்கொள்ளும் பல்கலைக்கழகம் குடும்பம்.
நல்ல குடும்பத்திற்கு ஒரு சிறந்த மாதிரியாகத் திருக்குடும்பத்தையே திரு அவை காட்டுகிறது. ஆண்டவர் இயேசுவை முதன்மையாகவும் மையமாகவும் கொண்டு உருவாகிய அழகிய குடும்பம் திருக்குடும்பம். கடவுளின் வார்த்தையைத் தாழ்ச்சியுடன் நம்பி உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து, உதரத்தில் தாங்கி அடிமையாய் வாழ்ந்த மரியாவும் பிறக்கப்போகும் குழந்தை இறைமகன் என அறிந்ததும், நம்பித்துணிந்த மரியாவின் வழிநின்று, இறைமகனை ஏற்றுப் பாதுகாப்புத் தந்த நேர்மையாளர் யோசேப்பும் தெய்வீகப் பிறவிகள்தாமே! இதை உணர்ந்ததால்தான் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால், “நாசரேத்தூரில் வாழ்ந்த திருக்குடும்பம் உலகோரின் உன்னதமான பல்கலைக்கழகம்” என்றார். எனவே, மரியா-யோசேப்பு-இயேசு என்னும் இத்திருக்குடும்பத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளன.
அன்னை மரியா தனது வயிற்றில் மட்டுமல்ல, வாழ்வு முழுவதுமாக இறைவார்த்தைக்கு இடம் கொடுத்தார். தன் வாழ்வில் நிகழ்ந்த அனைத்தையும் தனது உள்ளத்தில் பதித்துச் சிந்தித்தார். ஆண்டவர் கூறியவை நிறைவேறும் என நம்பினார். “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று முழு ஈடுபாட்டோடு கூறினார். தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடந்தராமல், ஆண்டவருக்குத் தன் வாழ்வில் முழு இடம் தந்தார். எதிர்பாராத துன்பங்கள் வாழ்வில் பின்தொடர்ந்து வந்தாலும் நிலைகுலையாது, இறைவார்த்தையில் நிலைத்து நின்றார்.
மரியாவின் கணவர் யோசேப்பு ஒரு நேர்மையாளர். யோசேப்பின் அமைதி வாழ்வில் அன்பும் தியாகமும் உரக்க வெளிப்பட்டன. கடவுளின் குரலுக்கு எப்போதும் செவிமடுக்கும் ஒரு நபராகவே யோசேப்பு தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். அவர் வாழ்க்கைக்கான தனது சொந்தத் திட்டங்களை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டவர் அல்லர். எப்போதும் தன்னைக் கடவுளுக்காக வாழக்கூடியவராகவும், அவர் திட்டத்திற்காக எப்போதும் தயாராக இருக்கக்கூடியவராகவுமே இருந்தார். ஆகவேதான் யோசேப்பைப் பற்றிக் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ், “தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, தனது உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்வதற்குப் பதிலாக யோசேப்பு தேர்ந்துகொண்ட வாழ்க்கை நெறி மிகப்பெரிய அர்ப்பணம்!” என்றார் (மூவேளைச் செபவுரை, டிசம்பர் 22, 2013).
நாசரேத்தூர் திருக்குடும்பத்தின் மையமும் மகிழ்ச்சியும் இயேசுவே. நற்பண்புகளைத் தம் தாய் தந்தையிடமிருந்தே கற்றார். மற்ற குழந்தைகள் போலவே அவர் அறிவிலும் உணர்விலும் அனுபவங்களிலும் வளர்ந்தார். ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக் 2:52). 12 வயதிலே
இயேசு தம் தந்தையோடு கொண்டிருந்த ஆன்மிக உறவை வெளிப்படுத்தினார்; தாம் யார் என்பதைக் கண்டுகொண்டார். தந்தையின் பணிக்காகத் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்தார். ஆக, திருக்குடும்பம் அ) ஓர் இயல்பான, ஆ) இறைப்பக்தி நிறைந்த, இ) இறைத்திட்டத்தை ஏற்ற ஒரு குடும்பமாக இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.
முதலில், திருக்குடும்பம் ஓர் இயல்பான குடும்பம். இந்தக் குடும்பம் எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்காமல் இல்லை. இவர்கள் மத்தியிலும் பிரச்சினைகள் இருந்தன. திருவிழாவின்போது காணாமற்போன தன் மகனைக் கண்டுபிடிக்கப் பெற்றோர் எடுக்கின்ற முயற்சிகள், மகனைக் காணாத பதைபதைப்பு, மகனைக் கண்டதும் அடைகின்ற மகிழ்ச்சி, தங்கள் மகன் மறைநூல் வல்லுநர் மத்தியில் அமர்ந்து அவர்களுக்குப் போதனை செய்ததைப் பார்த்த வியப்பு, அதே நேரத்தில் ஏற்பட்ட அச்ச உணர்வு, பெற்றோரின் கண்டிப்பு, இயேசுவின் பதில், மகனின் தனித்து முடிவெடுக்கும் நிலை, மரியாவின் அமைதி என மற்ற குடும்பங்களிலும் நடக்கின்ற நிகழ்வுகள், உரையாடல்கள், உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற இயல்பான குடும்பமே திருக்குடும்பம்.
இரண்டாவது, திருக்குடும்பம் இறைபக்தியில் நிறைந்த ஒரு குடும்பம். இயேசுவின் பெற்றோர் யூதச் சமயச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமாய் இருந்தனர் (2:41). ஆண்டுதோறும் பாஸ்கா எனும் சமய விழாவைக் கொண்டாட யூதர்களின் சமயத் தலைநகரமான எருசலேமுக்குத் திருப்பயணம் செல்வது ஒவ்வொரு யூதரின் தவிர்க்க முடியாத கடமையாகும். 12 வயதிலிருந்து ஒவ்வொரு யூத இளைஞனும் சமய வழிபாட்டுச் சடங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டியது முக்கியக் கடமையாகும். இக்கடமையைத் தமது மகன் நிறைவேற்ற பெற்றோர் உதவி செய்கின்றனர். மேலும், இயேசு ஆலயத்தில் பெரியவர்கள் நடுவில் இருப்பதும் உரையாடுவதும் இறைத்தந்தையைப் பற்றிக் குறிப்பிடுவதும் அவர் ஒரு நல்ல யூதச் சிறுவனாக, சமயப் பற்றுமிக்கவராக இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மூன்றாவது, மரியா, யோசேப்பு, இயேசு ஆகிய மூவரும் அனைத்தையும் உள்ளத்திலிருத்திச் செபித்து, இறைத்திட்டத்திற்கு அனைத்திலும் பணிகின்றனர். இறைத்திட்டத்தை ஏற்று இறுதிவரைக் கடைப்பிடிக்கின்றனர். இன்றைய நற்செய்தியில் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” எனும் இயேசுவின் பதில்மொழி, அவர் பன்னிரண்டு வயதிலேயே தம் வாழ்வின் இலக்கு, இலட்சியம், பணி என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்திருந்தார் என்பதை விளக்குகிறது.
இவ்வாறு, இயேசு மரியா-யோசேப்பு அமைத்த திருக்குடும்பம் தன்னலமற்ற அன்பை, தன்னிகரற்ற அமைதியை உலகில் வாழ்ந்து காட்டியது. துன்பங்களையும் பாடுகளையும் சுமந்து இல்லறத்தில் புனிதம் காத்தது. புனிதமிகு வாழ்வு முறையாலும் மதிப்பீட்டு வாழ்வாலும் சாட்சிய வாழ்வாலும் உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் திருக்குடும்பம் மாதிரியாகத் திகழ்கின்றது. ஆகவேதான் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், “திரு அவையின் முதல் மாதிரி இந்த நாசரேத்தூர் திருக்குடும்பம்” என்கிறார்.
குடும்பம்தான் உலகையும் வரலாற்றையும் இயக்குகின்ற ஆற்றல். குடும்பத்தில்தான் மற்றவர்களுக்குச் செவிசாய்க்கவும், அவர்களை அங்கீகரிக்கவும், மதிக்கவும், அவர்களுக்கு உதவவும், ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழவும் கற்றுக்கொள்கிறோம். ஆனால், பிறரன்பும் இறையன்பும் இரண்டறக் கலந்து சங்கமிக்கும் குடும்பம் என்கின்ற அமைப்பு இன்று வளர்ச்சி, நாகரிகம், தனிமனிதச் சுதந்திரம் என்கின்ற சிந்தனைக்குள் சிக்குண்டு, சீரழிந்து வருவது வேதனையான உண்மை. மனிதர்கள் இன்று நுகர்வு கலாச்சாரத்தில் சந்தைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு புறந்தள்ளப்படுகின்றனர். அதாவது, தூக்கி எறியப்படுகின்றனர். “பயன்படுத்தி, தூக்கி எறி” எனும் கலாச்சாரத்தை நாம் உருவாக்கிவிட்டோம். இன்று குடும்பங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடிமைப்படுத்தியுள்ளனர்; பிள்ளைகள் தங்கள் பெற்றோரை அடிமைகளாக்கியுள்ளனர். தம்பதியர் தங்கள் திருமண வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றனர்.
ஒரு குடும்பம் என்பது ஒற்றுமை, ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பண்புகளைப் போதிக்கும் ஆசானாக இருக்கவேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “குடும்ப உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனில், ‘நன்றி’, ‘மன்னித்துக்கொள்ளுங்கள்’, ‘தயவுசெய்து’ என்ற வார்த்தைகளைச் சொல்லிப் பழகுவோம்”. கடினமான நேரங்களில் கடவுளை ‘அப்பா’ என்னும் அழகான பெயரில் அழைக்கக் கற்றுக்கொள்வோம். எகிப்தில் அடைக்கலம் தேடி, நாடு கடந்து செல்லும் துயரமான சூழலைத் திருக்குடும்பம் எதிர்கொண்டபோது, கடவுள் அவர்களைக் கைவிடவில்லை.
கடவுள் நமது போராட்டங்களை அறிவார். அவர் அனைத்தையும் அறிந்தவர்! கடவுளின் அன்பிலிருந்தும் நெருக்கத்திலிருந்தும் புறக்கணிக்கப்படுவதாக, கைவிடப்படுவதாக எவரும் நினைக்கக்கூடாது. கடினங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கின்ற குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே இயேசு இருக்க விரும்புகிறார். மனந்தளராமல் எப்போதும் இறைவனிடம் மன்றாடுவோம். இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் சாமுவேலின் தாய் அன்னாவைப்போல அல்லும் பகலும் கடவுளை நோக்கி வேண்டுவோம். இதயத்தில் இறைவார்த்தையைச் சுமந்து, இல்லங்களுக்கு இயேசுவை அழைத்துச்செல்வோம். நம் குடும்பங்கள் எப்போதும் இறைவனுக்கு இடமளிக்கும் இல்லமாகட்டும்!