பள்ளங்களைப் பண்படுத்தும் பாலைநிலக் குரலாய்!
நம்
உள்ளங்களில் பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவுக்காக நம்மையே தயார் செய்யும் காலம் திருவருகைக் காலம். திருவருகைக்கால முதல் ஞாயிறன்று ‘ஆண்டவரின் வருகைக்காய் விழிப்புடன் காத்திருப்போம்’ என்னும்
மையச் சிந்தனையில் சிந்தித்தோம். இரண்டாம் ஞாயிறு நம் உள்ளக் குடிலில் பிறக்கவிருக்கும் மெசியாவின் வருகைக்காக நம் உள்ளங்களின் பள்ளங்களைப் பண்படுத்த நாம் அழைக்கப்படுகின்றோம்.
கிறிஸ்து
பிறப்புப் பெருவிழாவை நாம் கொண்டாடத் தொடங்குவதற்கு முன்னதாகவே வர்த்தக உலகம் அதற்கான தயாரிப்பை முன்னெடுக்கத் தொடங்கிவிடுகிறது. இவ்விழாவை நாம் எவ்விதம் கொண்டாட வேண்டும் என்பதையே இந்த வர்த்தக உலகம்தான் தீர்மானிக்கின்றது. இவை பல எண்ணங்களை நம்மீது
திணிக்க முயன்று, அதில் வெற்றியும் பெறுகின்றது. வர்த்தக உலகம் வைத்திருக்கும் எண்ணங்களுக்குப் பின்னால் சுயநலம் மட்டுமே ஒளிந்திருப்பதை எளிதில் உணரலாம். கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு, பொங்கல் என்று வரிசையாக வரும் திருவிழாக்களுக்கு வர்த்தக உலகமும், விளம்பர உலகமும் வகுத்துள்ள கண்ணிகளில் நாமும் விழுந்துவிடுகிறோம்.
ஒவ்வொரு
விழாவுக்கும் வர்த்தக உலகமும், விளம்பர உலகமும் கண்ணும் கருத்துமாக ஏற்பாடுகள் செய்கின்றன. பட்டாசு முதல் பட்டாடை வரை புதிய புதிய அணுகுமுறைகளைக் கையாள்கின்றன. விளம்பர உலகம் தேவையற்ற பொருள்களையெல்லாம் கவர்ச்சியுடன் விளம்பரம் செய்து நம்மை அவற்றிற்கு அடிமையாக்குகின்றது. தேவைகளைப் பெருக்குவதால் மன அமைதியை இழக்கிறோமே
தவிர, அவற்றால் நிம்மதியை அடைய முடியவில்லை என்பதுதான் உண்மை. வியாபாரிகளும், விளம்பரதாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் நேரத்தில் விழாக்களைக் கொண்டாடும் நாம் ஒரு சிறிய பங்கை நமது திருநாள்களுக்குத் தயாரிக்க ஆர்வம் காட்டினால் உண்மையிலேயே நாம் கொண்டாடும் விழாக்கள் மிகுந்த பொருளுள்ளதாக அமையும்.
இன்றைய
ஞாயிறு நம்மை மெசியாவின் வருகைக்காய் தயார் செய்ய அழைப்பதோடு மட்டுமல்லாது, நம் உள்ளங்களின் பள்ளங்களைப் பண்படுத்தவும் அழைக்கின்றது. இன்றைய நாளில் திருமுழுக்கு யோவானின் போதனைகளைப் பின்பற்றி வாழ அவரையே ஓர் எடுத்துக்காட்டாகத் தருகிறது நம் திரு அவை.
திருமுழுக்கு
யோவான் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்; ‘தனக்குப் பின்வருபவரின் மிதியடி வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவராய்’ (யோவா
1:27) தாழ்மையின் நிலையை ஏற்றவர்; மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தவர்; பொதுவாக இருக்க வேண்டிய எருசலேம் கோவிலின் இடம் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், உயர்குடியினர், ஆண்கள், பெண்கள், சிறார், பிற இனத்தவர் என வரையறுக்கப்பட்ட சூழலில், அதை
எதிர்த்து, பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தவர் (லூக் 3:2); யூதத் தலைவர்கள் பகட்டான ஆடை அணிந்து, மறை நூல் வாசகப் பட்டைகளை அகலமாக்கி, குஞ்சங்களைப் பெரிதாக்கியபோது (மத் 23:5) அவற்றை எதிர்த்து, ஒட்டக முடியிலான ஆடை அணிந்து, தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தவர் (மாற் 1:6); கோவிலின் குருக்கள் பலியினால் பாவ மன்னிப்புப் பெற மக்களை வலியுறுத்தியபோது, மனம்மாற மக்களை அழைத்து நீரினால் திருமுழுக்கு அளித்தவர் (1:8); பாலைநிலக் குரலாய் ஏரோதின் அநீதச் செயலை எதிர்த்தவர்; தான் கொலை செய்யப்படப்போவதைப் பற்றித் துளியளவேனும் கவலைகொள்ளாது, கடவுளின் குரலாய் முழங்கியவர்; அரச மாளிகையைக் கண்டித்து இறைவாக்கு உரைத்தவர்; இறையாட்சி மதிப்பீடுகளை அஞ்சா நெஞ்சுடன் போதித்தவர். இவ்வாறு பாலைநிலக் குரலாய்ப் புதிய சமுதாய உருவாக்கத்திற்கான அழைப்பைக் கொடுத்ததினால், “மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிட பெரியவர் எவரும் தோன்றியதில்லை” (மத்
11:11) என இயேசுவால் வியந்து பாராட்டப் பெற்றவர்.
கடவுளின்
வாக்கைப் பெற்று இறைவார்த்தைக்குச் சாட்சியாக வாழ்ந்த திருமுழுக்கு யோவான், இன்றைய நற்செய்தியில் மக்களை மெசியாவின் வருகைக்கான தயாரிப்பாக இரண்டு அழைப்புகளைக் கொடுக்கிறார்.
1) “பாவமன்னிப்புப் பெற
மனம்மாறித் திருழுழுக்குப் பெறுங்கள்”
(3:3); 2) “ஆண்டவருக்காக
வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” (3:4).
ஏறத்தாழ
400 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவாக்கினர்கள் முழங்கிய நற்செய்தி முழக்கத்தையே யோவான் பின்பற்றிப் போதிக்கிறார். அவர்களைப் போன்று வரவிருக்கும் தீர்ப்புப் பற்றியும் அறிவிக்கிறார்; எசாயா 40:3-5 வார்த்தைகளை எடுத்துக்கூறி, ஆண்டவரின் வருகைக்காகவும், அவரது தீர்ப்புக்காகவும் மக்களைத் தயார் செய்கிறார்; ஆண்டவரது தீர்ப்பு நீதியின் அடித்தளத்திலே கட்டப்பட்டது என்பதால் அநீதியும் நேர்மையும் மக்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த வேண்டும் என்று கற்பிக்கிறார்; அநீத வாழ்விலிருந்து மனம் திரும்பினால்தான் இறைவனின் கோபத்திலிருந்து விடுதலை அடைய முடியும் என்று எடுத்துக்கூறுகிறார் (3:7).
இதற்கு அடிப்படையாக ‘மனமாற்றம் தேவை’ எனப் போதிக்கிறார்.
‘மனமாற்றம்’
என்பது நமது வாழ்வில் மாபெரும் செயல்களை நிகழ்த்திக் காட்டும். கடவுளை நோக்கித் திரும்பி வருதலே மனமாற்றம். இஸ்ரயேல் மக்களின் மனமாற்றம் அவர்களைப் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தது. இத்தகைய வியத்தகு செயல்களை இன்றைய பதிலுரைப்பாடல் மற்றும் முதல் வாசகத்தில் காண்கிறோம்.
இன்றைய
பதிலுரைப்பாடலில் “ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்” (திபா
126) என்று அக்களிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர். இது ஒருவகை சீயோன் மலைப் பாடல். இதை ஒரு குழு புலம்பல் பாடலாகவும் காணலாம். பாபிலோனிய நாடு கடத்தலின் பின்புலத்தில் பாடப்பட்ட இத்திருப்பாடலில் ஆசிரியர் தன் குழு அனுபவித்த ஒட்டுமொத்த வலியைப் பதிவு செய்கின்றார். தங்களுடைய நகரம், ஆலயம் என எல்லாம் அழிந்து
தாங்கள் வேற்று நாட்டுக்கு அடிமைகளாக நடத்திச் சென்றதை ஓர் இறப்பு அனுபவமாக, உறக்க அனுபவமாக நினைக்கின்ற ஆசிரியர், ஆண்டவர் தங்களை மீண்டும் தங்களின் சொந்த நாட்டிற்கு அழைத்து வந்ததை ஒரு கனவு போல நினைத்துப் பார்க்கிறார்.
இந்த
நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். பாரூக் 5:1-9) வாசிக்கின்றோம். பாரூக்கு எரேமியா இறைவாக்கினரின் செயலராக இருந்தவர் (எரே 32:36:43:45). பாபிலோனியாவுக்கு இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக நாடு கடத்தப்பட்டபோது இவரும் உடன் சென்றவர். பாரூக்கு அடிமைத்தனத்தின் கோரத்தை நேருக்கு நேர் கண்டவர். அவர் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறார். அந்த அழைப்பில், இஸ்ரயேலின் அழிவிற்கு மக்களின் பாவம்தான் காரணம் எனவும், அனைவருக்கும் பாவத்தை விட்டு விலக வேண்டிய தேவையுள்ளதையும் காட்டுகிறார்.
துன்பமும்
வெறுமையும் நம்பிக்கையின்மையும் நிறைந்த எருசலேமிற்கு, பாரூக்கினுடைய ஐந்தாம் அதிகாரம் நம்பிக்கை ஒளியை வீசுகின்றது. அகதியாகப் போன எருசலேம் மகள், அரசியாக முடியுடனும் ஆடம்பர உடைகளுடனும் வருவாள் என்பது எத்துணை அழகு! மகிழ்ச்சி, மாட்சி, ஒளி, நீதி, அமைதி, இரக்கம் இவற்றைத் தருபவர் மனிதரல்லர், கடவுள் என்கிறார் பாரூக்கு. மனமாற்றத்தின் வழியாகவே இஸ்ரயேல் மக்கள் கடவுளின் மாபெரும் செயல்களைக் கண்டுணர முடிந்தது.
இஸ்ரயேல்
மக்கள் நெபுகத்னேசர் மன்னன் காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டு பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சூழ்நிலையில், கடவுள் இறைவாக்கினர்களை அனுப்பி நம்பிக்கை தரும் விடுதலைச் செய்தியை வழங்குகின்றார். கடவுள் தம் மக்களை விடுவித்து, அவர்களது சொந்த வீடான எருசலேமில் புதுவாழ்வு வாழ அழைத்துச் செல்வார் என்ற எசாயாவின் இறைவாக்கைக் கோடிட்டு, ‘இயேசுவே மெசியா, அவராலே அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். புதுவாழ்வைப் பெறவேண்டுமெனில், நமது உள்ளத்தின் பள்ளங்களைச் சரிசெய்ய வேண்டும்’
என அழைப்பு விடுக்கிறார்.
குறுக்கு
வழியில் நடந்து, குறுகலான சிந்தனைக்கு ஆட்பட்டு, சுயநலங்களான பல்வேறு விருப்பங்களுக்கு உடன்பட்டு, மனித நலன்களை மேம்படுத்தாமல் சுயநலத்தையே மேம்படுத்துகிற கோணலான பாதையை, உண்மை, நீதி, நேர்மை, சமத்துவம், இரக்கம் போன்ற இறைவனுடைய மதிப்பீடுகளால் சரிசெய்யப்பட வேண்டும். கடவுளின் பாதை நேரானதாகவும் சமமானதாகவும் தடைகள் இல்லாததாகவும் இருக்கவேண்டும் என்பதே கடவுளை உள்ளங்களில் வரவேற்பதற்கான முன்தயாரிப்புகள்.
எனவே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் வேண்டுவதுபோல, அனைத்தையும் உய்த்துணரும் பண்பில் வளர, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்பட இறைவனை நாடுவோம்.
“அக்கறையற்ற நிலையால், இவ்வுலகில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகியுள்ளன” என்பதை
எடுத்துரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அயலவரின் தேவைகளை உணரும்போதுதான், நாம் உருவாக்கியுள்ள பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும்” என்று
கூறுகிறார் (மூவேளைச் செப உரை, 9.12.2018). ஆண்டவர் தம் மக்களைக் கனிவுடன் கண்காணித்து வழிநடத்துவது போல, சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை, எளியவர்களைப் பாதுகாக்கின்றவர்களாக, பராமரிக்கின்றவர்களாக, அவர்களது குரலாக நாம் ஒலிக்க வேண்டும். அன்பற்ற, அக்கறையற்ற வாழ்க்கையால், நம் உள்ளங்களில் ஓட்டைகள் உருவாகியிருந்தால், அவற்றை நிரப்புவதற்கு இந்தத் திருவருகைக்காலம் நல்லதொரு வாய்ப்பாக அமையட்டும்.
இறைவன்
நம்மைத் தேடி வருகிற புனிதக் காலத்தில் நம் வாழ்வைச் சீர்படுத்தி, பாதைகளைச் செம்மையாக்கி, இறைவனைச் சந்திக்கப் புறப்படுவோம். அன்பு, நீதி, தாழ்ச்சி, நம்பிக்கை இவற்றைக் கொண்டு நமது மனத்தைப் பண்படுத்துவோம். உண்மையை எடுத்துரைப்பதில் சிறிதும் தயங்காமல் வாழ்ந்த புனித திருமுழுக்கு யோவானைப் போல வாழ்வோம். இறை அருளோடு இணைந்து வாழ்ந்ததினால் ‘அருள் நிறைந்தவர்’ என
இறைவனால் வாழ்த்துப் பெற்ற அமல உற்பவ அன்னையின் துணை வேண்டி, நம் உள்ளங்களின் பள்ளங்களை இறைவனே பண்படுத்த சிறப்பாக மன்றாடுவோம்.