news-details
ஆன்மிகம்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 04

3. சிலுவையின் அடியில் இயேசுவோடு ஒன்றித்திருந்த மரியா (Mary was united to Jesus on the Cross)

பல நூற்றாண்டுகளாகவே திரு அவையினுடைய பாரம்பரியமானது, ‘மரியா அவருடைய மகனின் மீட்புப் பணியை மிகவும் நெருக்கமான வகையில் பகிர்ந்து கொண்டார்என்ற கருத்தைப் பெரிதும் பாராட்டியது.

1. “கன்னி மரியாஉண்மையில் கடவுளுடைய மற்றும் மீட்பருடைய தாயாகக் கௌரவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டார் (இறைத்திட்டத்தில் திருச்சபை எண். 53) என்று சொல்லி இரண்டாம் வத்திக்கான் சங்கமானது மரியாவினுடைய தாய்மைக்கும் மீட்பிற்கும் இடையேயுள்ள தொடர்பை நோக்கி நமது கவனத்தை ஈர்க்கின்றது.

திரு அவையினுடைய போதனையிலும், வழிபாட்டிலும் முதல் நூற்றாண்டிலிருந்தே இயேசு கிறிஸ்துவினுடைய தாயாக மற்றும் அதன் காரணமாக இறைவனின் தாயாகவும் வணங்கப்பட்ட மரியாவினுடைய தாய்மைப் பங்கு பற்றிய தெளிவிற்குப் பிறகு, இடைக்காலங்களில் திரு அவையினுடைய பக்தி மற்றும் இறையியல் சிந்தனையானது மீட்பருடைய பணியில் அவருடைய ஒத்துழைப்பை வெளிச்சமிட்டுக் காட்டியது.

இந்தக் காலதாமதம் ஏற்பட மிக முக்கியக் காரணம் - உண்மையில் திரு அவைத் தந்தையர்களுடைய மற்றும் தொடக்க கால திருச்சங்கங்களுடைய முயற்சியானது,  ‘கிறிஸ்து யார்?’ என்பது பற்றிய விவாதத்தின் மேல் மட்டுமே அதிக கவனம் செலுத்தியது. இதனால் மரியியல் கோட்பாடுகளினுடைய மற்றப் பண்புக்கூறுகளைப் பின்னுக்குத் தள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. திரு அவையின் தொடக்க காலத்திலிருந்தே மரியியலானது கிறித்தியத்திலிருந்தே அது பயணிக்க வேண்டிய திசையைத் தேர்ந்தெடுத்தது. இயேசு கிறிஸ்துதான் கடவுள் என்ற உண்மையை உறுதி செய்வதற்காகவேமரியா இறைவனின் தாய்என்ற கோட்பாடானது எபேசு திருச்சங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதேபோல, மீட்பின் வரலாற்றில் மரியாவினுடைய பங்கு பற்றிய அழுத்தமானதொரு புரிதலும் அன்றே இருந்தது.

2. ஏற்கெனவே, இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த, போலி கார்ப்புவினுடைய சீடராகிய புனித எரோணிமுஸ் மீட்புப் பணியில் மரியாவின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார். கன்னி மரியாவினுடைய  கீழ்ப்படிதலில் புனித எரோணிமுஸ், கடவுளுடைய மீட்புத் திட்டத்தில் மரியாவின்  பங்களிப்பிற்கான அவரின் சம்மதத்தைப் புரிந்துகொண்டார். அதாவது, மனுக்குலத்தினுடைய சாபத்தின் மீதான நன்மை பயக்கக்கூடிய தாக்கத்தோடு, நாசரேத்தூர் கன்னியின் கீழ்ப்படிதலானது, ஏவாளின் கீழ்ப்படியாமை மற்றும் நம்பிக்கையின்மைக்கு முற்றிலும் எதிராக, வானதூதருடைய செய்தியில் அவர் வைத்த நம்பிக்கையில் கடவுளுடைய மீட்புத் திட்டத்தில் மரியாவின் பங்களிப்பிற்கான அவருடைய ஒப்புதலைப் புனித எரோணிமுஸ் புரிந்துகொண்டார்உண்மையில், ஏவாள் வழியாக இவ்வுலகில் சாவு வந்ததைப் போலவே, மரியா தன்னுடையஆம்என்ற ஒப்புதலின் வழியாக அவருடைய மற்றும் மனுக்குலம் அனைத்தினுடையமீட்பின் காரணியானார் (ஒப்பிடுக. Adv.Haer., III, 22,4; SC 211). ஆனால், அவருக்குப் பிறகு இந்த நிலைப்பாடானது உறுதியான மற்றும் முறையான வகையில் திரு அவையினுடைய தந்தையர்களால் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

மரியா மனுக்குலம் அனைத்திற்குமான ஆன்மிகத் தாய்

இதற்கு மாறாக, இந்தக் கோட்பாடானது ஜான் ஜெயோமீட்டர் என்ற பைசாண்டைன் திரு அவையினுடைய துறவியால் 10-வது நூற்றாண்டில் எழுதப்பட்டமரியாவின் வாழ்வுஎன்ற  நூலில் முதன்முறையாக முறைப்படி விளக்கப்பட்டதுஇந்நூலில் கடவுளுடைய திட்டத்திற்கிணங்க மீட்புப் பணியினுடைய அனைத்து நிலைகளிலும் நம்முடைய மீட்பிற்காக, சிலுவைச்சாவு மற்றும் இயேசுவின் துன்பங்களில் பங்கெடுத்து மரியாவும் அவரோடு இணைந்திருந்தார் என்று அவர் விவரிக்கிறார். மரியா தன்னுடையஒவ்வொரு செயல், உளப்பாங்கு மற்றும் விருப்பத்தில்அவருடைய மகனோடு இணைந்திருந்தார் (ஒப்பிடுக. Life of Mary, Bol. 196, f. 122 v). இயேசுவின் மீட்புச் செயலோடு மரியாவுக்குள்ள தொடர்பானது அவருடைய தாய்மைநிறை அன்பினால் வந்ததாகும். அதாவது, கடவுளுடைய அருளினால் தூண்டப்பட்ட அந்த அன்பானது அவ்வருளின்மீது ஒருவகையான உயர்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. உணர்ச்சியிலிருந்து விடுபட்ட அன்பு மிகவும் இரக்கமானது என்பதை நிரூபிக்கிறது (ஒப்பிடுக. (Life of Mary., Bol. 196, f. 123v).

3. மேற்கத்தியத் திரு அவையில் கி.பி. 1153- இல் இறந்த புனித பெர்னார்து என்பவர் இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்விற்கு மரியியல் பார்வையில் பின்வருமானதொரு விளக்கத்தைக் கொடுக்கிறார்: “புனிதத்திற்கெல்லாம் புனிதமான கன்னியே, உம்முடைய மகனை அர்ப்பணி; உம்முடைய கனியை ஆண்டவருக்குக் கொடு; எல்லோருடனுமான எங்களுடைய அமைதிக்காகக் கடவுளுக்கு உகந்த வானகப் பலியைக் கொடு (Serm. 3 in Purif., 2: PL 183, 370).

புனித பெர்னார்தினுடைய நண்பரும் சீடருமான ஜார்த்ரெஸ் நகரத்து அர்னால்டு (Arnold of Chartresஎன்பவர் கல்வாரிப் பலியில் மரியாவினுடைய  காணிக்கை பற்றிய சிறப்பானதொரு விளக்கத்தைத் தருகின்றார். இவர் சிலுவையில் இருந்தஇரண்டு பலிபீடங்களை அதாவது மரியாவினுடைய  இதயம் ஒரு பலிபீடம்; மற்றொன்று இயேசுவினுடைய உடல். இயேசு தம்முடைய சதையைப் பலியாக்கினார்; மரியா அவருடைய ஆன்மாவைப் பலியாக்கினார்என்று வேறுபடுத்திக் காட்டுகிறார். கிறிஸ்துவோடுள்ள ஆழமானதோர் உறவில் ஆன்மிக வழியில் மரியா தன்னையே கையளித்தார் மற்றும் உலக மீட்பிற்காக வேண்டினார்: “தாய் எதைக் கேட்கிறாரோ, அதை மகனும் உறுதிசெய்கிறார் மற்றும் அதையே தந்தையும் தருகிறார்  (De septem verbis Domini in cruce, 3: PL 189, 1694). 

இந்தக் காலகட்டத்தில் மற்ற ஆசிரியர்களும் மீட்புப் பலியில் மரியாவினுடைய  சிறப்பான ஒத்துழைப்பு பற்றிய கோட்பாட்டை விவரிக்கின்றனர்.

4. அதேநேரத்தில், கிறித்தவ பக்தி முயற்சி மற்றும் வழிபாட்டில் மரியாவினுடையகருணைபற்றிய தியானச் சிந்தனையும் வியாகுல அன்னையினுடைய உருவமைப்பில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கல்வாரி நிகழ்விலும் மரியாவினுடைய  பங்கானது மிகவும் மனிதாபிமானமிக்கதொன்றாகச் செய்கிறது மற்றும் நம்பிக்கையாளர்களை அந்த மறைபொருளுக்குள் நுழைவதற்கு உதவுகின்றது. தாயினுடைய இரக்கம் மிகத் தெளிவாக அவருடைய மகனுடைய விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது.

கிறிஸ்துவினுடைய மீட்புப் பணியைப் பகிர்வதன் வழியாக, மரியாவினுடைய  ஆன்மிகமும் தாய்மையும் அங்கீகரிக்கப்படுகின்றது. கிழக்கத்திய திரு அவையில் மரியா பற்றி ஜான் ஜெயோமீட்டர், ‘நீர் எங்கள் தாய்என்று கூறுகின்றார். ‘நமக்காக அவர் தாங்கிய துன்ப துயரங்களுக்காகமரியாவுக்கு நன்றி தெரிவித்து, மீட்பைப் பெற்றுக்கொண்ட அனைவர் சார்பாகவும் மரியாவினுடைய  தாய்மைநிறை பாசத்தையும் மரியாதையையும் அவர் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார் (ஒப்பிடுக. Farewell Discourse on the Dormition of Our Most Glorious Lady, Mother of God, in A. Wenger, L’Assomption de la Très Sainte Vierge dans la tradition byzantine, p. 407).

மேற்கத்தியத் திரு அவையிலும் மரியாவினுடைய ஆன்மிகத் தாய்மை பற்றிய கோட்பாடானது வளர்ச்சிபெற்று புனித அன்செல்மோவால் இவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது: “நீ ஒப்புரவு மற்றும் ஒப்புரவாக்கப்பட்டவர்களுடைய மீட்பின் மற்றும் மீட்கப்பட்டவர்களுடையதாயாக இருக்கின்றாய் (ஒப்பிடுக. Oratio 52, 8: PL 158, 957 A).

மரியா இறைவனுடைய தாயாக வணக்கம் செலுத்தப்படுவது நிற்கப்போவதில்லை. மாறாக, அவர் நம்முடைய தாய் என்ற உண்மையானது அவருடனான நெருங்கியதோர் உறவிற்கான வழியை நமக்குள் ஏற்படுத்தி, அவருடைய இறைத்தாய்மைக்கான புதியதொரு பார்வையையும் மரியன்னை வணக்கமானது நமக்குத் தருகிறது.

5. நம்மைப் பொருத்தவரை, மரியாவினுடைய தாய்மையானது பாசப்பிணைப்பை மட்டும் கொண்டதல்ல: ஏனெனில், அவருடைய நற்செயல்கள் மற்றும் பரிந்துரையின் காரணமாக மரியா சிறப்பான வகையில் நம்முடைய ஆன்மிகப் பிறப்பிற்கும், நம்மில் அருள் வாழ்வினுடைய வளர்ச்சிக்கும் உதவுகின்றார். இதன் காரணமாகவே, மரியாஅருளின் தாய்மற்றும்வாழ்வின் தாய்என்றும் அழைக்கப்படுகிறார்.

வாழ்வின் தாயிடமிருந்து நாம் அனைவரும் வாழ்வைப் பெறுகிறோம்!

வாழ்வின் தாய்என்ற பெயரானது ஏற்கெனவே நீசா நகரத்துப் புனித கிரகோரி அவர்களால் அன்னை மரியாவுக்கு வழங்கப்பட்டது. மேலும், இது குறித்து கி.பி. 1157-இல் இறந்த அருளாளர் இக்னி நகரத்து குவேரிக் என்பவரால் பின்வருமாறு விளக்கப்பட்டது: “மனிதர் அனைவரும் வாழ்வைப் பெறும் வாழ்வின் தாய் அவரே; இந்த வாழ்விற்கு அவரே  வாழ்வு கொடுத்து, அந்த வாழ்வை வாழ்ந்த அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் அவர் மறுபிறப்பைக் கொடுக்கின்றார். ஒரே ஒரு நபருடைய பிறப்பில், நாம் அனைவருமே மறுபடியும் பிறந்தோம் (In Assumpt. I, 2: PL 185,188).

13-வது நூற்றாண்டில் எழுதப்பட்டமரியாளே (The Mariale) என்ற ஏடானது கல்வாரியினுடையவேதனையின் வலிபற்றியதோர் உயிரோட்டமான படத்தைப் பயன்படுத்தி இந்த மறுபிறப்புப் பற்றிய பண்பை விவரித்தது. உண்மையில், “அவருடைய புனிதத் திருவயிற்றில், அவர்  திரு அவையின் பிள்ளைகளை இரக்கத்தினால் கருத்தரித்தார் (Q. 29, par. 3) என்கின்றது அந்நூல்.

6. இரண்டாம் வத்திக்கான் சங்கமானது, “மரியா முற்றிலும் தனிப்பட்ட வகையில் மீட்பருடைய பணியில் ஒத்துழைத்தார்என்ற முடிவுக்கு வருகிறது. “இதன் காரணமாகவே அருளின் அடிப்படையில் அவர் நமக்கொரு தாய் (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 61) என்று கூறி, மனுக்குலம் அனைத்திற்குமானதோர் ஆன்மிகத் தாயாக அவருடைய மகனுக்கு அருகில் மரியா இருக்கின்றார் என்பதைத் திரு அவையானது உறுதிசெய்கின்றது.

மரியா நம் தாய்: திரு அவையினுடைய அன்பு மற்றும் நம்பிக்கையினால் இன்னும் மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் விளக்கப்பட்ட ஆறுதல் தரும் இந்த உண்மை, நம் அனைவருடைய ஆன்மிக வாழ்வையும் தாங்கிப்பிடித்தது. மேலும், அது இன்னும் நம் வாழ்வைத் தாங்கிப்பிடிப்பதோடு, நம்முடைய துன்ப நேரத்திலும் நாம் இறைவனில் விசுவாசமும் நம்பிக்கையும் வைக்க நம்மைத் தூண்டுகின்றது.

மூலம்: John Paul II, Mary was united to Jesus on the Cross, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 1 November 1995, p. 11.